Shared with P-அம்ரிதா ஏயெம்
- அம்ரிதா ஏயெம்
சமீபத்தில் எஸ்எல்எம். ஹனிபா அவர்களின் “அவளும் ஒரு பாற்கடல்” பார்க்கக் கிடைத்தது. 1992ம் ஆண்டு வெளியீடான “மக்கத்துச் சால்வைகள்” சிறுகதைத் தொகுப்பின் 15 சிறுகதைகளோடு மேலும் புதிதாக 9 கதைகளுடன் மொத்தமாக 24 கதைகளைக்கொண்டு 2007ம் ஆண்டு காலச்சுவடு வெளியீடாக வெளிவந்திருக்கின்றது. மக்கத்துச் சால்வை ஆரம்ப காலங்களில் படித்தபோது ஆர்.கே. நாராயணின் மால்குடி தினங்களுக்குள் உள்நுழைந்து போய் வருவதைத் தவிர்க்க முடியாமல் இருந்தது. அந்தக் கதை அவ்வளவு செய்நேர்த்தி. எளிய மனிதர்கள், அவர்களின் விருப்பு வெறுப்புக்கள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், பண்பாடு, சமூகவியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் போன்ற பலவிடயங்களை எளிய நடையில், இழைந்தோடும் நகைச்சுவையுடனும் ஒரு கல்விண்ணாங்கு, ஒரு முனைகளிரண்டும் வெள்ளிப்பூண் போட்ட மூங்கில் தடிகளுடன கொடுத்துவிட்டிருப்பார். அந்த இரண்டு தடிகளும் மூன்று தசாப்த காலத்திற்கு அந்தக் கதையை நகர்த்திச் சென்றிருக்கும். அந்தக் கதைபற்றி நிறையக் கதைக்கலாம். அது பற்றியும் நான் இப்போது கதைக்கப் போவதில்லை. “அவளும் ஒரு பாற்கடல்” பற்றியும் விமர்சனம் செய்யப் போவதுமில்லை. வேறொரு விடயத்தை முன்வைக்கலாமென்று நினைக்கின்றேன்.
மனிதனின் பல்வேறு சுயநல நடவடிக்கைகள் காரணமாக சுற்றுச் சூழல் தற்போது பாரிய அழிவை எதிர்நோக்கியுள்ளது. சுற்றுச் சூழல் அழிவுக்கு காரணமான காரணிகளை இனங்கண்டு, அவைகளை தடுத்து நிறுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். இவைகளையும் தாண்டி சுற்றுச்சூழல் அழிந்துவிட்டால் அவைகளை மீளுருவாக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு சூழற்றொகுதிகளை மீளுருவாக்கம் செய்தலை ஆங்கிலத்தில் றெஸ்றோறேசன் ஒப் எகொலொஜி என்பார்கள். அவற்றில் பல முறைகள் இருக்கின்றன.
அழிந்துபோன ஒரு சூழற்றொகுதியை, அது கடந்தகாலத்தில் இருந்தது போன்று மீளமைப்பதற்கு, எந்த இடத்தில் அல்லது இடங்களில் சூழற்றொகுதிகள் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்?, அந்த இடங்களின் சூழலியல் விபரிப்புகள், தாவர, விலங்கு இனங்களின் பட்டியல், உயிரற்றவைகளின் பட்டியல், அந்த இடங்களின் மண்ணின், நிலத்தின் அமைப்பு, அதன் வரலாறு, அரசியல், அந்த இடங்கள் பற்றிய பழைய புகைப்படங்கள், கட்டுரைகள், புத்தகங்கள், இலக்கியங்கள் (கவிதை, சிறுகதை, நாவல்), வாய்மொழி வரலாறுகள், இலக்கியங்கள் போன்ற பல விடயங்களும், தரவுகளும், தகவல்களும் தேவைப்படுகின்றன. இவை ஆங்கிலத்தில் றெபறன்ஸ் சிஸ்டம் எனப்படுகின்றன. இந்த றெபறன்ஸ் சிஸ்டத்திலிருந்து கடந்த காலங்களில் எவ்வாறு அந்த சூழற்றொகுதி இருந்திருக்கும் என்று ஒரு மாதிரி உருவை உருவாக்கலாம். பின்னர் அழிந்துபோன சூழற்றொகுதியை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்ததுபோல உருவாக்கலாம். இந்த றெபறன்ஸ் சிஸ்டத்திற்கு எஸ்எல்எம். ஹனிபாவின் மக்கத்துச்சால்வையும், அவளும் ஒரு பாற்கடலும் சிறந்த உதாரணங்களாகும். இந்த படைப்புகளிற்குள் மிகவும் ஏராளமான சூழலியற் குறிப்புக்களை அறிந்தும், அறியாமலும் விட்டுச்செல்கின்றார்.
இந்த படைப்புக்களில் உள்ள:
மரங்கள்: மா, பலா, வாழை, மருதை, பாக்கு, பூசணி, வாழை, கரையாக்கன், ஆலை, புளி, கொச்சி, பூவரசு, பறங்கி வாழை, கருங்காலி, கல்விண்ணாங்கு, மூங்கில், முருங்கை, வேம்பு, பாலை, மருங்கை, கஞ்சா, நெருப்பு வாகை, முந்திரி, அத்தி, மர முந்திரிகை, இத்தி, மல்லிகை. தேத்தா, புல், வெற்றிலை, புடோல்.
விலங்குகள்: யானை, சாமக்கோழி, செண்பகம், மாடு, பசு, பசுக் கன்று, கோழி, பாம்பு, கருவளலை பாம்பு, பன்றி, முதலை, காட்டெருமை, மயிலமாடு, சிட்டுக்குருவி, காகம், கிளி. வேளவால், மான், ஆமை, ஆலா, புறா, வெள்ளைப் புறா, சிவப்பு புறா, ஆடு, கிளிக் குஞ்சு, கொக்கு, மீன்கள், சுங்கான், ஒட்டிமீன், விரால், வாள மீன், விலாங்கு மீன்.
இடங்கள்: மாந்தராறு, கங்கை, புளியடித்துறை, மயிலவட்டவான், ஆலையடி, கிண்ணயடி, வாழைச்சேனை, தம்மன்கடுவை, மதுரங்குண்டி, காத்தான்குடி, உன்னிச்சை, உறுகாமம், திருகோணமலை, அக்குறாணை, ஆறாம் கட்டை, புணானை, பாலையடி, மருங்கை கேணி, குளனி, காரையடிப்பிட்டி, கறுவாக்கேணி. குசவைக் குளம், மருதஞ்சோலை, வில்லு, புலிபாய்ஞ்சகல், மீயான்குளம், கும்புறுமூலை, பாசிக்குடா, தேத்தாவடி, பங்கிளாவடித்துறை.
உணவுகள்: கஞ்சி, உலைக் கஞ்சி, தண்ணிச்சோறும், எருமைத் தயிரும், சீனிமுட்டாசும், தேத்தண்ணியும், அகப்பைச் சோறும், அகப்பைத் தயிரும், மஸ்கெற், நோநா மார்க் கட்டிப்பால் ரீ, பால், மா டின், பச்சரிசிச் சோறு, மாங்காய் வெச்சி ஓட மீன் பாலாணம், பிழிந்த தேங்காய்ப் பூவும், தவிடு கலந்த குழையலும் (கோழிக்கு), குருணல் சோறு, திராய்ச் சுண்டல், கருவாட்டுக்கறி, மயிறுக்கிழங்கு ஆணம், கோப்பியும், அப்பமும், புளிபோட்டுக் காய்ச்சிய மான் எலும்பு, நெய்ச்சோறு, இறைச்சிக்கறி.
அணிபவைகள்: பழையகாட் சாரன், முழங்கால் மறைந்த சிறுவாலும் கை வைத்த பனியனும், மக்கத்துச் சால்வை, தாவணி, சேட், பம் ஆஸ் சூஸ், காப்பு, கொடி, பண்டுருட்டி சோமன், மோகினி பட்டுச் சேலை, சுங்க வாடிச்சேலை, லங்கா நீலப்புடவை.
வாகனங்கள்: மாட்டு வண்டி, வண்டில் பட்டம், ஓடம், தோணி, போட்டு, டிரக்டர்
தொழில்கள்: களத்தடி, முல்லைக்காரன், போடியார், குருவிக்கார பெடியன், கலப்பை, பட்டை, வாடி, அகப்பை, வெள்ளாம வெட்டல், உழவு, மீன்பிடி, வீச்சுக்காரர், சட்டிபானை செய்து விற்றல், வாடி, மண் பினைதல், குருவிக்காரன், தோட்டக்காரன், நகைக்காரன், மண் ஏற்றுதல், வண்டிக்காரன், மீன்காரன், வீச்சுக்காரன், வேட்டையாடல், பண்டி சுடல், மான் சுடல், ஓல மட்ட இழைத்தல், கோழிக்காலை, தேங்காய் ஏற்றுதல்.
வழக்கங்கள்: கதிர்காம ஹயாத்து நபி அப்பாட தறஜாக்கு நேர்த்தி வேண்டி பயணம், அவுலியாக்கள் கட்டிய ஆசாரங்கள் மீது நம்பிக்கை, ஹயாத்துநபி காவலோட கண்ணுறங்கல், நேர்ச்சை, காணிக்கை, பலிப்பொருள் காளைகள், கன்றுகள், கோழிகள், ஓடக் கரையில பூலாமீர் சாய்வுடைய கோடு கச்சேரி, வலிகாமத்து மௌலானா சிலம்படிக்கு குருவாதல், சிலம்படி, இந்தியக்கார ஆலங்குடி முகம்மதுக் கனி நானா சிலம்படிக்கு குருவாதல், பொண்டுகளின் குலவை, சலவாத் ஒலியிடுதல், நாயகங்கள் பெயரில் சலவாத்திடுதல், பேய், பேய் ஓட்டுதல், ஆவி, கல் கிணறு, படிக்கம், தண்ணீர்க்கோப்பை, கம்பு விளையாட்டு, சீனடிக்கு குருவாதல், சீழ்க்கையொலி, “மு.சு.” குறியடையாளம், முகைதீன் ஆண்டவரே, கஸ்ஸா மருத்துவச்சி, நவலடி தைக்கா, கத்தம், பாத்திஹா, மௌலீது, ஆயத்துக் குரூஸ், மன்சில் துஆ, கஞ்சா, கஞ்சா சிலிம்பி, களு கம்பு நாட்டி மாங்கு பிடித்தல், வெள்ளை விரித்தல், பாய் விரித்தல், பந்தக்கால், தாயத்து, அட்சரக்கூடு, கற்பூரச் சட்டியும், வேப்பங்குழையும், கிளிபொம்மை, அரிசிப்பானை, சில்லறைக் காசி ரின், தேயிலை வைக்க முட்டி, குப்பி விளக்கு.
தமிழில் தற்போது றெப் இசை அல்லது றெப் பாடல்கள் அல்லது சொல்லிசை என்பது வேகமாகப் பரவி வருகின்ற ஒரு கலாச்சாரம். 1970 களில் அமரிக்காவின் கறுப்பின மக்களின் ஆக்க இசையாக உருவாகி, பின்னர் உலகெங்கும் ஆட்கொண்டுவிட்டது. இதன் ஒரு வடிவமே தமிழ் சொல்லிசைப் பாடல்கள். அது உருவாகிய மொழியைப் போலவே தமிழிலும் மொழித் தொடர்களை அல்லது சொற் தொடர்களை தொடர்ச்சியாகக் கொண்டு காணப்படுகின்றன. இந்தத் தொடர்ச்சியான சொற்கள் இசையுடன் சேரும் போது பாடல் உருவாகின்றது.
இதனைப் போலவே மக்கத்துச் சால்வையினதும், அவள் ஒரு பாற் கடலினதும் நான் மேலே குறிப்பிட்ட மரங்கள், விலங்குகள், இடங்கள், உணவுகள், அணிபவைகள், வாகனங்கள், தொழில்கள், வழக்கங்கள் போன்றவற்றின் சொற்களை அல்லது சொற்தொடர்களை சரியான இடங்களில் தற்போது அடுக்கும் போது ஒரு சிறந்த சூழற்றொகுதியையும், அதற்குரிய தாவர, விலங்கினங்களையும், மக்களையும், அவர்களின் மொழி, காலநிலை, புவியியல், பொருளாதாரம், வரலாறு, பழக்க வழக்கம், அரசியல் போன்ற அம்சங்களுடன் பெற்றுக்கொள்ளலாம். இழந்துபோன சுற்றுச்சூழலையும், அதன் கலாசார பண்பாண்டு அம்சங்களுடன் பெற்றுக்கொள்ளலாம். இன்னொரு வகையில் சொல்லப் போனால் ஆர்.கே. நாராயணன் கற்பனையான மால்குடி நகரை உருவாக்கி உலகத்தை அதை நோக்கி திரும்பச் செய்ததுபோல, இந்தப் புள்ளிகளையும், சொற்களையும் வைத்துக்கொண்டு எஸ்எல்எம் அவருக்குரிய மக்கத்துச் சால்வை என்ற ஒரு நகரை உருவாக்கலாம். அந்த நகருக்கு அழிவும் இல்லை. அங்குள்ளவைகளுக்கு மரணமும் இல்லை. சாகாவரம் பெற்ற, நித்தியமான ஒரு நகர் அது.
அந்த மக்கத்துச் சால்வை நகரில் எஸ்எல்எம் தொடர்ச்சியாக ஒரு போர் வீரனுக்கு கொஞ்சமும் குறைவில்லாது மனரீதியான பாலியல் சுரண்டல், உடல்ரீதியான பாலியல் சுரண்டல், மத சுரண்டல், ஆண்செருக்குச் சுரண்டல், கிழவன் குமரியைச் பாலியல்ரீதியாக சுரண்டல், உடுத்தாடையில்லா வறுமைக்கு காரணமான சுரண்டல், பாடசாலைச் சுரண்டல், பொருளாதார-பாலியல் சுரண்டல், களவொழுக்கத்தில் பிறந்த அனாதைகளைச் சுரண்டல், சிறுவர் துஸ்பிரயோக சுரண்டல், மனைவிகளின் பாலியல் களவொழுக்கச் சுரண்டல், அரசியல் சுரண்டல், ஆயுதததாரிகளின் சுரண்டல், ஆயுத தாரிகளின் பாலியல் சுரண்டல்கள் போன்றவைகளிற்கு எதிராக அவர் போராடிக் கொண்டே இருப்பார்.
No comments:
Post a Comment