- ஏ.எம். றியாஸ் அகமட்
இந்த வசந்த காலம் (நான்காம், ஐந்தாம் மாதம்) பழங்களின் மாதம். பாலை, வீரை, முந்திரி என வீதியெங்கும் பழங்களை விற்பவர்களால் நிறைந்திருக்கும். இந்தக் குரோனா இவையெல்லாவற்றையும் தடுத்துவிட்டது. இந்த வருடம் பாலையில் சில விடயங்கள் செய்யவிருந்த முக்கிய வருடம். ஆனால் குரோனா காரணமாக பாலைப் பழங்களையே காண முடியாமல் போய்விட்டது. (இதற்குள் அதனை நம்பியிருப்பவர்களின் சமூகப், பொருளாதார அவலங்களும் இருக்கின்றன. அது ஆய்வுகளிற்குரிய இன்னொரு விடயம்). இன்றுதான் தற்செயலாக மாவடிப் பள்ளியில் கண்டேன். வாங்கினேன்.
மனில்காறா ஹெக்ஸ்ஸாண்ட்ரா என தாவரவியல் பெயர் கொண்ட பாலைப்பழத்திற்கு சிங்களத்தில் பலு. ஆங்கிலத்தில் சிலோன் அயன் வூட். இந்தியத் தமிழில் உலக்கைப் பாலை அல்லது கணுப்பாலை. மிக அதிகமான மருத்துவ குணங்களும், மருந்து இரசாயனப் பொருட்களும் கொண்ட மரம்.
பூச்சிகளினால் அயன் மகரந்தச் சேர்க்கையும், புறவைகள், வெளவால்கள் போன்றவற்றின் மூலம் பரம்பலும் செய்யப்படுகின்றன. இயற்கையான நிலைமைகளில் பறவைகளின், சிறிய முலையூட்டிகளின் சமிபாட்டுத் தொகுதியூடாக பயணம் செய்யும்போது, சமிபாட்டுத் தொகுதிகளிலுள்ள நொதியங்கள் வித்து முளைத்தலை நிரோதிக்கும் காரணிகளை இல்லாமற் செய்து, வித்துக்களை இலகுவாக முளைக்கச் செய்கின்றன.
ஆனால் பழங்களிலிருந்து பெறப்படகின்ற விதைகளின் மூலம் இனம்பெருக்குவது கடினமான ஒன்று. வித்துக்களை சேகரித்து வைக்கும் போது அதன் முழைதிறன் வேகமாக இழக்கப்படுகின்றது.
ஜிபரலிக் அமிலம், இந்தொல் அசற்றிக் அமிலம், நப்தொல் அசற்றிக் அமிலம், தயோயூரியா, பொட்டாசியம் நைத்திரேற்று போன்ற தாவர வளர்ச்சி அமிலங்கள், ஊக்கிகள் போன்றவைகளுடன் பரிகரித்து 14 நாட்களுக்குள் முழைக்கச் செய்யலாம். இந்தியா போன்ற நாடுகளில், ஜேம்பிளாசம் மூலம் விருத்தி செய்யும் முறையும், பதிய முறையும் வெற்றிபெற்றிருக்கின்றன.
இந்த வருடம் இந்த விதைகளிலிருந்து எப்படியாவது நிறைய பாலைக் கன்றுகளை உருவாக்க வேண்டும். இந்த பாலைகளை நினைக்கும்போது கவிஞர் கருணாகரனே மனமெங்கும் நிறைந்து கொள்கின்றார். பாலைக்கு திணையிருக்கிறதோ தெரியாது. உலர் வலய குறிஞ்சியின் துணையே பாலை. உயிரே பாலை. பாலை கலாச்சாரத்தின் அடையாளம். பாலையை போற்றுவோம். பாலையை பாதுகாப்போம்.
No comments:
Post a Comment