Sunday, January 10, 2021

அல் பலாஜ் - ஓமான்

 ஓமானின் கிராமங்களையும், நகரங்களையும், மாநகரங்களையும், குறுக்கறுக்கும்போது ஆழமும், நீளமும் கொண்ட ஒரு நீர்ப்பாதை வீடுகளையும், வீதிகளையும், பண்ணைகளையும் ஊடறுத்துச் சென்று கொண்டே இருப்பதையும் காணலாம். இது உள்ளுரில் “பலாஜ்” என அறியப்படும் மிகப் பழமை வாய்ந்த நாட்டின் பிரதான நீர்ப்பாசனத் திட்டமாகும். இது கி;.மு. 500 வருடங்களுக்கு முந்தையது. ஓமானில் 11000 க்கு மேற்பட்ட பலாஜ்கள் காணப்படுகின்றன. இந்த பலாஜ்கள் ஓமானின் அல் டக்லியா, அல் சர்க்கியா, அல் பற்றினா பகுதிகளிலேயே அதிகமாக காணப்படுகின்றன. எந்தவித பாரிய கட்டுமானங்களையோ, சக்திகளையோ உபயோகிக்காமல் நிலத்தின் உயரங்களுக்கு ஏற்ப புவியீர்ப்பு விசையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட உலகின் அதிசயமே இந்த பலாஜ் என்னும் வற்றாத நீர்ப்பாசனத் திட்டமாகும். இது ஓமானிகளின் கலாசாரம், பாரம்பரியம், வரலாறு போன்றவைகளுடன் ஆழத் தொடர்புகொண்டுள்ளது.

பலாஜ்களானது நீரை தரைக்கீழ் கிணறுகளிலிருந்தும், வாதி என அறபியில் அழைக்கப்படும் பள்ளத்தாக்குகளிலிருந்தும் பெறுகின்றன. நீரானது எந்த ஒரு இயந்திரத்தினாலும் கால்வாய்களுக்கு ஊட்டப்படாமல், நிலத்தின் ஏற்ற இறக்க அடிப்படையில் புவியீர்ப்பு விசையின் உதவியுடன் நீர் ஊட்டப்படுகின்றது. இதன் காரணமாக வருடம் முழுவதும் சமமாக நீரை எல்லாத் தரப்பினருக்கும் இயற்கை பிரித்துக் கொடுத்துக்கொண்டே இருப்பதும் அதிசயமாகும். அத்துடன் நட்சத்திரக் கூட்டங்களுக்கும், பூமியின் தரைக்கும் இடையிலுள்ள கோணங்கள், அளவுகள் போன்ற புரிந்துகொள்ள முடியாத பல கணித வகையறாக்கள் இதன் அமைப்பில் தொடர்புபட்டுக் காணப்படுகின்றன.
பலாஜானது, 1) தாய்க்கிணறு, 2) கிணற்றிலிருந்து நீரைக் கொண்ட செல்லும் கால்வாய், 3) தரையின் கீழ் பலமீற்றர் ஆழத்தில் குகைபோன்ற கால்வாயினூடாக செல்லும்போது நிலத்தின் மேற்பகுதியிலிலிருந்து ஒவ்வொரு 20 மீற்றருக்கும் சிறிய துழைகளை குகைக் கால்வாய்க்கு அமைத்திருக்கின்றார்கள். இதன் காரணமாக நீர் நன்றாக வளியூட்டப்படுவதுடன், நீரிலுள்ள திண்ம மாசுக்களையும் அகற்றுகின்றது. இந்த துழையின் வாய்ப்பகுதியின் வட்டம் சுட்ட களிமண்ணினால் செய்யப்பட்டிருக்கின்றது. இது வெள்ளநீர் பலாஜ் கால்வாய்க்குள் நுழைவதைத் தடுப்பதுடன், உறுதியையும் கொடுக்கின்றது. மனிதர்களும். விலங்குகளும் குகைக் கால்வாய்க்குள் விழுந்துவிடாமலும் பாதுகாக்கின்றது. குகைக் கால்வாய், நிலப் பகுதிக்கு வரும்போது திறந்த கால்வாயாக மாறுகின்றது.
ஓமானில் மூன்று வகையான பலாஜ்கள் காணப்படுகின்றன. முதலாவது தாவூதி பலாஜ் 10 மீற்றர் ஆழத்தில் காணப்படும் இவை, பல கிலோமீற்றர்களுக்கு நீரைக்கொண்டு செல்லும் தகவுடையவை. வருடம் முழுக்க நீர் நிறைந்து காணப்படும். உதாரணம் பலாஜ் அல் கற்மைன், பலாஜ் டாரிஸ். இரண்டாவது வகை கைலி பலாஜ்கள், 3 தொடக்கம் 4 மீற்றர் ஆழத்தில் காணப்படும் இவைகள் குளங்களிலிருந்தும், ஓடும் நீர்களிலிருந்தும் நீரைப் பெறுகின்றன. மழை காலத்தில் நீரை அதிகமாகவும், நீண்ட வறட்சியின்போது வறண்டும் காணப்படும். மூன்றாவது வகை அய்னி பலாஜ்கள். இவை நீரை ஊற்றுக்களிலிருந்து பெறுகின்றன. இதனால் இந்த நீர் சுடுநீராகவும் அல்லது குளிராகவும், குடிநீராகவும் இருக்கின்றது. உதாரணம் - பலாஜ் அல் அய்ன் கஸ்பா, பலாஜ் அல் ஜய்லா. பல ஆயிரக்கணக்கான வருடங்களாக இயற்கையை புரிந்த அதன் போக்கில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பலாஜ்கள் அந்த தேசத்தை இரத்த குழாய்கள் போன்று இணைத்து அந்த பாலைவன தேசத்தை இன்றும் பசுமையாக்கி வைத்திருப்பது அதிசயமாகும்.


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...