Monday, January 11, 2021

சூழலியல் அல்லது பசுமைத் திறனாய்வு – 02: ஒலுவில் ஜே. வஹாப்தீனின் தோறாப்பாடு – மகா சொப்பனத்தின் கொடுங்கனவுகளை வெளியே கொண்டுவரும் முதன்மை இலக்கிய முயற்சி

அறிமுகம்:


ஒலுவில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கரையோரக் கிராமமாகும். இது அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில், கல்முனைக்கு தெற்கே 20 கிலோமீற்றர் தொலைவில் பாலமுனைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு 60 சதவீதத்திற்கு மேலானவர்கள் மீன்பிடியையே நம்பியிருக்கின்றார்கள். சேனநாயக்கா நீர்த்தேக்கத்திலிருந்து இருந்து வெளியேறுகின்ற நீர் இறுதியாக கடலுடன் சங்கமிக்கின்ற 'கழியோடை' என்கின்ற நீரோடை இங்கு காணப்படுகின்றது. இந்த நீரோடைக்கு சமாந்தரமாகவே தென்கிழக்கு பல்கலைக்கழகமும் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இரண்டாயிரமாண்டுகளின் ஆரம்பத்தில், பல்கலைக்கழக இறுதி வருடப் பரீட்சை முடிந்த மறு தினமே அமைக்கப்படப்போகின்ற ஒலுவில் துறைமுகத்தின் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைள் சம்பந்தமான ஆய்வில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பமும், அழைப்பும் கிடைத்தது.
அதனை மிக ஆவலுடன் ஏற்றுக்கொண்டேன். அதற்குப் பல காரணங்கள் அந்தக் காரணிகளில் ஒன்று ஆய்வு செய்யப் போகும் பாலமுனை-ஒலுவில்-அட்டாளைச்சேனை பிரதேசங்கள் என் மனதுக்கு நெருக்கமான பிரதேசங்களாகும். அத்துடன் அந்த இடங்களிலிருந்த கண்டல் காடுகள் என்றும் எனக்கு இனியவையாக இருந்தன. பாடசாலைக் காலங்களிலும் அந்த இடங்களுடன் எனக்கு பெரு விருப்பு இருந்தது. 1990களின் ஆரம்பங்களில் இனப்பிரச்சினையின் நெருக்கடி காரணமாக, ஆய்வுக்காகவும், கற்றலுக்காகவும் எங்களால் அணுகமுடிந்த நன்றாக செழித்த வளர்ந்த கண்டல்காடுகள் இருந்த பிரதேசம் ஒலுவிலாகும்.
இந்த ஆய்வுகளுக்காக இரவும், பகலும், கடலிலும், தலையிலும் மிகவும் விருப்பத்துடனும், கடினமாகவும் வேலை செய்தேன். ஒவ்வொரு நாளும் பல மைல்கள் நடந்தேன். இங்கு துறைமுகவும் அமைக்கப்படப் போவதால், கடல், தரை. சூழல் தொகுதிகளில் தாவரங்கள், விலங்குகள், சுற்றுச்சூழல், நீர், மண், வளி மற்றும் அந்தப் பிரதேசங்களிலுள்ள மனிதர்களுக்கு சமூகங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பாதிப்புக்கள், அதற்கான மாற்றுத் தீர்வுகள், பிரதேசத்தின் புவியியில், அதன் அமைப்பு போன்றவைகளுக்கான தரவுகளைத் திரட்டுவதும், ஆய்வு செய்வதும் எனது பணியாக இருந்தது.
இந்த ஆய்வுகளின்போது நான் சேகரித்த ஆயிரக்கணக்கான தாவர, விலங்கு மாதிரிகளை அப்போது ஆரம்ப நிலையில் இருந்த, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின், உயிரியல் விஞ்ஞான ஆய்வுகூடங்களுக்கு கொடுத்திருந்தேன்.
இங்கு அமைக்கப்படப் போகும் துறைமுகம் எதிர்காலத்தில் ஒரு மகா சொப்பனத்தின் கொடுங்கனவாக இருந்தால் என்ன செய்வது? நமக்கு ஏன் வீண் வம்பு என்று சும்மா இருந்துவிடலாமா? அல்லது எனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு எதுவும் தெரியாத மாதிரி நடப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்து விடலாமா? அல்லது எனக்கு செய்வதற்கு பணிக்கப்பட்ட விடயங்களுக்கப்பால் இருபது வருடங்களுக்கு பின்னர் உதவப் போகும் ஏதாவது ஒரு கருமத்தை செய்யலாமா என்று அப்போதே யோசித்தேன்.
அதற்காக, மிகப் பெரிய வினாக்கொத்தை உருவாக்கி, எழுந்தமானமாக நூறு மீனவர்களைத் தெரிவு செய்து, அவர்களிடம் ஆழமாக உரையாடி தரவுகளைச் சேகரித்தேன். அவை பின்வரும் விடயங்களைக் கொண்டிருந்தன:
இனம், மதம், வயதுத் தொகுதி, சராசரி குடும்பத்தின் அளவு, பெண்கள் பங்கு கொள்ளும் தொழில்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் கல்வி நிலை, தொழில் (சொந்தமானதா, முதலாளிகளிடமா), மீனவர்கள் பயன்படுத்தும் மீன் பிடிமுறைகள், பயன்படுத்தும் வள்ளங்களின் வகைகள், மீன்பிடி முறைகள், வலைகளின் கண்களின் அளவு, ஈடுபடும் தொழிலாளர்களின் அளவு, எந்த நேரங்களில் ஈடுபடுகிறார்கள்?, எந்த ஆழங்களில் ஈடுபடுகின்றார்கள்? வீடுகளுக்கும் படகு நிறுத்தும் இடங்களுக்கும் இடையிலான தூரம், பிடிக்கப்படும் மீனின் அளவு, சட்டவிரோத முறைகள், அலங்கார மீன்பிடி முறைகள், கடல் மாசுக்கள், பிடிக்கப்படும் மீன்களின் இன அடிப்படையிலான வகுதி, ஒவ்வொரு மீன்பிடி முறைகளுக்கான பிடிக்கப்படும் மீனின் அளவு, இனங்களின் வகைகள், அதன் உயிரியல் பல்வகைமை, கண்டல் காடுகளின் இனப் பல்வகைமை, விலங்குகள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், மாதாந்த வருமானம் போன்ற பல விடயங்கள்.
இவ்வாறு சேகரித்து வைத்திருந்த தரவுகளை ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு பிறகு அதனை தற்போது நான் கற்பிக்கும் பல்கலைக்கழகத்தின்; பீடம் நடாத்தும், அதன் வருடாந்த விஞ்ஞான ஆய்வு மாநாட்டுக்கு சமர்ப்பித்தேன். (இருபது வருடங்களுக்குப் பிறகு அந்தத் தரவுகள் பெரும் பொக்கிசமாக எனக்குத் தெரிந்தன). ஆனால், அந்த ஆய்வில் பொருளாதாரம், சமூகம், இனம் என்ற வார்த்தைகள் இருந்த காரணத்தால் அது கலைத்துறை சம்பந்தப்பட்ட விடயங்களை கொண்டிருப்பதாக நிராகரிக்கப்பட்டு, பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுவாக இயற்கை விஞ்ஞானம் சார்ந்த பெரும்பாலானவர்களுக்கு பரந்த வாசிப்பு இருப்பதுமில்லை. தங்களுக்கு எவை தெரியாதவை என்று தெரிவதும் இல்லை. அத்துடன் இயற்கை விஞ்ஞானமும், அதனைக் கற்றவர்களும் மிக்குயர் நிலையிலுள்ளவைகள் என்ற இறுமாப்பும் இயல்பாகவே இருப்பதுமுண்டு. இருந்தும் இந்த ஆய்வை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அங்கு இடைப்பட்ட காலத்தில் நிறைய ஆய்வுகள் மற்றையவர்களினால் செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களில் யாருக்கேனும் நான் செய்தவைகள் பற்றித் தெரியுமாவென்று கூடத் தெரியாது. நண்பர் சிறாஜ் மஸ்ஹுர் ஒரு விரிவுரையாளரின் ஒலுவில் சம்பந்தப்பட்ட பட்டமேற்படிப்புக்கு ஒத்தாசையாக இருக்குமாறு வேண்டிக்கொண்டார். இயலுமானவைகளைச் செய்தேன்.
எனது ஆய்வானது, இருபது வருடங்களுக்கு முன்னருள்ள நிலைமையை, தற்போதுள்ள நிலைமையுடன் ஒப்பீடு செய்வதற்கு மிக முக்கியமானது. ஆனால் இங்கு யாருமே அதனைக் கண்டுகொள்ளவுமில்லை, கவனத்திலெடுக்கவுமில்லை என்பதே மிகக் கவலையான விடயமாக இருந்தது. ஆனால் இந்த ஆய்வுகளையும், களஅனுபவங்களையும், இந்தத் தேசத்தின் தூரத்திலுள்ள சில இடங்களில் கவனத்திலெடுத்தார்கள்;. இவைகளினால் அங்குள்ள நிலைமைகளில் ஏற்படப்போகும் மாற்றங்களை மாற்றுவதற்கு முயற்சித்தார்கள்.
அரசியலுக்கு சூழலியல் தெரியாது
சூழலியலுக்கு அரசியல் தெரியாது
என்றோ புள்ளிகளாகத் தெரிந்த
இன்றைய மகா சொப்பனத்தின் கொடுங்கனவு
எம் பணி முன்னே செல்வது
முன்னேறிச் செல்வது
களங்கள் மாறும்
சமர்கள் மாறப்போவதில்லை
இந்தச் சூழலில்தான் ஒலுவில் ஜே. வஹாப்தீனின் தோறாப்பாடு நாவல் வாசிப்பதற்கு எனக்கு கிடைத்தது.

தோறாப்பாடு:
1990களின் இறுதியில் அந்த மக்களையும், அந்தப் பிரதேசங்களையும் சிங்கப்பூர்; ஆக்கும் முயற்சியொன்றுக்கு, முன்னோடியாகவே துறைமுகம் அமைக்கும் வேலைகள் அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டன. அந்தக் கிராமத்து மக்கள் அதற்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். ஏனெனில் தங்கள் வருமானம் உயரும், தொழில் வாய்ப்புக்கள் பெருகும், தங்கள் அசையும், அசையாச் சொத்துக்களின் விலைகள் அதிகரிக்கும், வசதிகள் உயரும், தங்கள் வாழ்க்கைத் தரமும் உயரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் அதாவது சிங்கப்பூர் பெருங்கனவுடன் இருந்தார்கள். அந்தக் கனவுகள் நிறைவேறியதா என்பதே தோறாப்பாடு.
தங்கள் அரசியல் பிரபல்யத்துக்காக, அரசியல்வாதிகள் பல உறுதிகளையும் கொடுக்கிறார்கள். கனவுகளையும் விதைக்கிறார்கள். அந்தக் கனவுகளில் ஒன்றே துறைமுகம். 1990களின் இறுதிகளில் விதைக்கப்பட்ட இந்தக் கனவை பெரும்பாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகின்றார்கள். இருந்தும் கபூர், உதுமான், ஈசா, காதர்சா போன்ற மீனவர்களுக்கு இந்தத் துறைமுகத்தின் நிலைபேறான சாத்தியத்தன்மை பற்றி பற்றிய சந்தேகம் எழ, அவர்களின் வாய்கள் இஸ்மாயில் ஹாஜியார், காதர் ஹாஜியார், மக்கீன் முதலாளி போன்ற அரசியல்வாதிகளின் கொந்தராத்துக்காரர்களினால் வெற்றிகரமாக அடைக்கப்படுகின்றன.
இருந்தும் மக்களின் காணிகளும், நிலங்களும் மிகக் குறைந்த விலைக்கு கையப்படுத்தப்பட்டு, துறைமுகம் சுமார் 2 கிலோமீற்றர் நீளத்திற்கு கட்டப்படுகின்றது. அதற்குப் பிறகே பிரச்சினைகள் பூதாகாரமாகின்றன. துறைமுகம் நோக்கிய கடலின் அலைத்தாக்கத்ததை குறைப்பதற்காக கடலுக்குள் கட்டப்பட்ட அலை வேகத்தடைகளும் (பிறேக் வோற்றர்ஸ்), துறைமுகக் கட்டுமானங்களும் கடலின் நீரோட்டத்தில் மாறுதலை ஏற்படுத்த, அந்தக் கிராமத்தின் கடற்கரையோரங்கள் அரிப்புக்குள்ளாகத் தொடங்குகின்றன. இதனைக் கட்டுப்படுத்த கடலுக்குள்ளும், கரைகளிலம் இராட்சத பாறாங்கல்லைக் கொட்டுகின்றார்கள். இதனால் நிலைமைகள் மேலும் சிக்கலாகின்றன. மேலும் கடல் கரைகளை அரித்து மேலும் ஊருக்குள்ளே வந்து நில புலன்கள், வீடுகள், மரங்கள், என எல்லாவற்றையும் கபளீகரம் செய்கின்றது.
கரைவலை:
மிக அதிக பரப்பில் வளைந்து, மிக ஆயிரக்கணக்கான மீன்களைப் பிடிக்கும் ஒரு மீன்பிடி முறையே கரைவலை முறையாகும். இந்தக் கரைவலை மீன்பிடி முறையே இவர்களின் பாரம்பரியமான மீன்பிடி முறைகளில் மிக முக்கியமானதாகும். அந்த முறையிலேயே தோறா எனப்படும் மிக உயர்ந்த விலைபோகும்;, மீனவர்களை செல்வந்தர்களாக்கும் மீன்கள் வருடத்தின் சில காலகட்டங்களில் பிடிக்கப்படுவது உண்டு. கொட்டப்பட்ட கற்கள் காரணமாக, கரைவலை பாவித்து மீன்பிடிக்க முடியாமல் போகின்றது. அப்படியும் முயற்சி செய்தால் வலைகள் கற்களில் சிக்கி கிழிந்து விடுகின்றன. மீன்களும் தப்பிவிடுகின்றன.
தோறா மீன்:
Narrow-barred Spanish mackerel என்ற பொதுப்பெயரையும் Scomberomorus commerson என்ற விஞ்ஙானப் பெயரையும் கொண்ட மெக்கரல் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மீன் இனம் இலங்கையில் சிங்களத்திலும், தமிழிலும் தோறா என அழைக்கப்படுகின்றது. தென்கிழக்காசியா, ஆபிரிக்காவின் கிழக்கு கரைப் பகுதிகள், மத்திய கிழக்கு, இந்து சமுத்திரத்தின் வட கரைப் பகுதிகள், தென்மேற்கு பசுபிக் சமுத்திர பகுதிகளில் காணப்படும் இவை, உடம்பின் முதுகுப்புறப் பகுதியில் பிரகாசமான நீல நிறம் தொடக்கம் நரை நிறத்தையும், வயிற்றுப் பகுதிகளில் வெள்ளி, நீல நரை நிறம் கொண்டபட்டைகளையும் கொண்டு காணப்படும். சுமார் 2 மீற்றர் வரை வளரும் இந்த மீன்கள், சுமார் 70 கிலோகிராம் நிறையுடையவையாக இருக்கும்.
துறைமுக அரசியலினால் உருவான சிக்கல்:
ஒரே தடவையில் வருடத்தின் சில காலங்களில் ஆயிரக்கணக்கான தோறா மீன்களை பிடித்து பெரும் வசதியுடன் இருந்தவர்கள் இந்த மீனவர்கள். கடலில் போடப்பட்ட கற்களும், துறைமுக கட்டுமானங்களும் நூற்றுக்கணக்கான வருடங்களாக மீன்பிடியை நம்பி வாழ்ந்த குடும்பங்களில் மேலும் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்தன. மிகவும் வளமான மீன்கள் செழித்துக் கிடக்கும் வாழிடங்களில் கொட்டப்பட்ட கற்களினாலும், துறைமுக பாதுகாப்பு வலயங்களினாலும் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் காலநிலையின் சீற்றம் காரணமாக காணமலும், இறந்தும் போனார்கள். மீன்களும் குறைவாகப் பிடிபட்டன. தோணிகளை தள்ளிவைக்கும் இடங்களும் (லாண்டிங் சென்ரர்); இல்லாமற் போயின.
ஒலுவில் தென்னை மரங்களுக்கும் தெங்குப் பொருட்களுக்கும் ஒரு காலத்தில் மிகவும் பிரபல்யமாகவிருந்தது. அங்குள்ள தேங்காய்கள், அதனை நம்பிய எண்ணெய் உற்பத்தி, கயிறு, தும்புக் கைத்தொழில் என்பன ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தன. இந்த துறைமுகத்தின் பேரால் சுமார் 6000 க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் காவுகொள்ளப்பட்டதன் காரணமாக அந்தத் தொழில்களும் முடிவுக்கு வந்தன.
துறைமுகம் அமைந்திருக்கும் பிரதேசம் நெடுக, பன் கிழங்கு நட்டு, பாத்தி கட்டி, நீர் பாய்ச்சி, பசளையிட்டு, வளர்த்து, அறுவடைசெய்து, காயவைத்து, சாயமிட்டு, வாட்டி பன்னினால் பாய்கள் இழைப்பார்கள். பாலமுனை, ஒலுவில் பாய்கள் ஒரு காலத்தில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை. அவையும் இழக்கப்பட்டுவிட்டன. இவ்வாறான பலவிடயங்களை, சமூக, பொருளாதார, கலாசார இழப்புக்களை இந்த ஒலுவில் துறைமுகம் அரசியலின் பெயரினால் காவுகொண்டுள்ளது.
இந்த இழப்புக்களினதும் வலிகளையும். துறைமுகக் கனவினால் வந்த சமூக, பொருளாதார, கலாசார, தொன்மங்களின் இழப்புக்களின் வலிகளை கண்ணீரும் கம்பலையுமாக கூறுவதே தோறாப்பாடு.


தோறாப்பாடு நாவல்:
தோறாப்பாடு நாவல் (xiv + 189 பக்கங்கள், கல்முனை தென்கிழக்கு அஷ்ரப் சமூகசேவைகள் நிறுவன வெளியீடு, 2018) தந்த ஒலுவிலைச் சேர்ந்த ஜே. வஹாப்தீன் பட்டதாரி ஆசிரியரும், பகுதிநேர வானொலி அறிவிப்பாளருமாவார். இதற்கு முன்னர் கலவங்கட்டி (பெயார்வே பரிசு பெற்றது), குலைமுறிசல் என்னும் இரு நாவல்களைத் தந்தவர். இந்த ஆண்டு வெயிலில் ஒரு வீரப்பழம் என்னும் கவிதைத் தொகுதியையும் தந்திருக்கின்றார்.
அரசியற்-சூழலியல் சிக்கல்:
தொன்மையாக தொழில்செய்து வாழ்ந்துவந்த ஒரு பிரதேசத்தில் இயற்கைக்கு முரணாக, இயற்கையைக் கவனத்திற்கொள்ளாது அபிவிருத்தி என்ற லேபலுடன் அரசியலின் பெயரில் நிலைபேறில்லாத திட்டங்கள் கொண்டுவந்தால், அதன் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதே தோறாப்பாடு.

மீன்பிடிகுறைல், வருமானம் குறைதல், பசி கூடுதல், உணவு குறைதல், பிள்ளைகளின் கல்வியில் பாதிப்பு ஏற்படல், காணிகள் போதல், அதனை நம்பிய பெண் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படல், பெண்கள் சீதனத்தால் மேலும் பாதிக்கப்படுதல், செய்கை நிலங்கள் இழக்கப்படல், பாயிழைக்கும் பெண்கள் பாதிக்கப்படல், தென்னந் தோட்டங்கள், அதனை சார்ந்த கைத்தொழில்கள், நீர்நிலைகள், காடுகள், பல வகையான சுதேசிய மரங்கள் இழக்கப்படல், அதன் காரணமாக இவைகளை நம்பிய பறவைகள், விலங்குகள் இல்லாமற் போதல், அருகிலிருந்த நீரோடைகளில் மீன்களும் இல்லாமற் போதல், தேங்காய், தும்பு, கிடுகு, விறகு சார்ந்த கைத்தொழில்கள் இழக்கப்படல், வருமானம் இழக்கப்படல், மீன்கள் குறைவாகப் பிடிக்கப்படல், அந்த மீன்களையும் இடைத்தரகர்கள் அடாத்தாக அடிமாட்டு விலைக்கு வாங்கி சுரண்டல், கடன், வறுமை, தென்கிழக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு இந்தக் கிராமத்தின் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் இழக்கப்படல், பொன்னன்வெளி, மறுக்குளம், பள்ளக்காடு, ஆலிம்சேனை, விளாங்காடு பூர்வீகக் காணிகளின் பிரச்சினை, துறைமுகத்தின் வலது பக்க கிராமங்களின் கடலின் கரைகள் வளர, இடது பக்கம் தேய்தல்;, மணற்பிட்டிகள் தோன்றல், வசதிபடைத்தவர்கள் துறைமுகத்தில் தங்களது பெரிய படகுகளை நிறுத்தி வைத்தல், அவைகள் மணலினால் சூழப்படல், அவைகளினால் ஏற்படும் பிரச்சினைகள், மீன்பிடி முறைகள், மீன்கள், மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி கலன்கள், வாய்மொழி மரபு அம்பாப் பாடல்கள் போன்ற பல சமூக, பொருளாதார, கலாச்சார, சுற்றுச்சூழல், அறிவியல் விடயங்களை இந் நாவல் பேசும் அதேவேளை, கபூர், உதுமான், ஈசா, காதர்சா போன்ற மீனவர்களிடம் இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டால் ஏற்படப் போகும் பிரச்சினைகள் சம்பந்தமாக உள்ள இயற்கையான அறிவு அவர்களின் சுதேசிய அறிவின் திறனையும், அவர்களின் அறிவும், பங்குபற்றுகையும் அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தலில் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை என்றும், அது நிலைபேறான அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதாகும் என்பதையும் தோறாப்பாடு உரக்கச் சொல்கின்றது.
இஸ்மாயில் ஹாஜியார், காதர் ஹாஜியார், மக்கீன் முதலாளி போன்ற அரசியல்வாதிகளின் கொந்தராத்துக்காரர்களின் பாத்திரங்கள் உலகத்திற்கு மிகப் பொதுவானவை. அவர்களை வென்றாலே போதும் காலநிலை மாற்றத்தையும், இந்தப் பூமியின் பல பிரச்சினைகளும் வெற்றிகொள்வதற்கு முடியும். இவர்கள் போன்றவர்களின் கைகளிலேயே இந்த உலகின் நித்திய நிலவுகை இன்னும் இருக்கிறது.
பெரிய கனவொன்றைக் கண்ணுக்கு முன்னே காட்டி தங்களை நட்டாற்றில் கைவிட்ட இந்த துறைமுகப் பிரச்சினைகளுக்கு, மக்கள் ஒரு தீர்வு வேண்டுமென்று அதற்கான பல முயற்விகளை மெற்கொள்ளுகின்றார்கள். அரசாங்கத்திற்கு எழுதுகிறார்கள். அதிகாரத்திலள்ள பலருடன் தொடர்புகொள்ளுகின்றார்கள். கடைசியில் ஆன பலன் ஒன்றுமில்லை. மீனவர்களும், கிராமத்தவர்களும், இளைஞர்களும் கிளர்ந்தெழுகின்றார்கள், ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றார்கள். உண்ணாவிதரம் இருக்கின்றார்கள். அதனை அரசியல் கொந்தராத்துக்கார்கள் அடக்க கடும் முயற்சி செய்கின்றார்கள். அவர்களால் அது முடியமல் போகின்றது. இந்த ஆர்ப்பாட்டங்களையும், உண்ணாவிரதங்களையும் இவர்கள் மதிக்கும் அரசியல்வாதிகளும் விரும்புகிறார்களில்லை.
இந்த நாவலில் வரும் கபூர், உதுமான், ஈசா, காதர்சா போன்றவர்களுக்கு இந்த துறைமுகம் எதிர்காலத்தில் தீங்குகள் விளைவிக்கும் என்று தெரிந்தாலும் அவர்களும் ஊமையாகவிருந்தே துறைமுகத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள். பொதுவாக ஒலுவிலைச் சேர்ந்தவர்கள் அரசியலில் மிகுந்த கூருணர்ச்சியுடையவர்கள். அங்குள்ளவர்களில் பல பிரிவினர்களும் ஒரு தரப்பாருக்கே ஆதரவு தெரிவிப்பார்கள். இது பன்மைத்தன்மை அன்று. ஒருமைத் தன்மை. எங்கு ஒருமைத் தன்மை இருக்கின்றதோ, அங்கே கேள்விகள் இருக்காது. பதில்களும் இருக்காது. மாற்றுத் தீர்வுகளும் இருக்காது. கேள்விகள் பிறந்தால்தான் மாற்றுச் சிந்தனைகள் பிறக்கும். ஒருமைத்துவம் வேண்டத்தகாத நிகழ்வுகளுக்குத்தான் வழி நடாத்தும்; என்பது, வரலாறு காட்டித் தந்த உண்மை. அது கலை, கலாச்சாரம், சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், அரசியல் போன்ற எல்லாவற்றுக்கும் பொருந்தும். அவை எல்லாமே பன்மைத்துவத்தை அவைகளின் நிலைபேறிற்கு பன்மைத்துவத்தை வேண்டி நிற்கின்றன.
நாவலின் மொழி மீதான செப்பம், பாத்திரங்கள் அவைகளாகவே வளர்தல், இயல்பாக சம்பவங்கள் நகர்தல் போன்றவற்றின் மீதான அக்கறை நாவலை இன்னும் ஒரு கட்டத்திற்கு நகர்த்தும்.
வசதியாக அமர்ந்துள்ள மேட்டுக்குடியினர், கல்வியினால் சமூகப் படையாக்கத்தில் மேல்நிலைக்கு நகர்ந்து சென்று வசதியான வலயத்தில் இருக்கும் சமூக அக்கறையற்றவர்கள் அல்லது திராணி இல்லாதவர்கள், சுயநலமுள்ள அரசியல் கொந்தராத்துக்காரர்கள், அரசியல்வாதிகள், சமூகத்தின்மீதும், சுற்றுச்சூழலின்மீதும், தமது பாரம்பரிய தொன்மங்களின்மீதும் அக்கறைகொண்ட மீனவர்கள், கிராமத்தவர்கள், இளைஞர்கள் போன்றவர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள கோடைநெடுந் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து முகத்தை அறைந்து கிழிக்கத் தயார்நிலையிலுள்ள கரடி அல்லது கொன்றுண்ணுவதற்கு எந்த நேரமும் பாய்வதற்கு தயாராகவுள்ள கொலைகார முதலையைப் போல அந்தத் துறைமுகம் கிடக்கின்றது. அது எப்போது பாயுமோ? எப்போது கிழிக்குமோ?
மொத்தமாக பார்க்கப் போனால் ஒலுவில் ஜே. வஹாப்தீனின் தோறாப்பாடுகள் நாவல் ஒரு மண்ணின் மைந்தர்களின்மீதும், அவர்களின் தொன்மங்களின்மீதும் நடாத்தப்பட்ட சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பாதிப்புக்களையும், தாக்குதல்களையும். திணிக்கப்பட்ட கொடுங்கனவுகளையும் உரத்துச் சொல்லி தோலுரித்துக்காட்டிய முதன்மை இலக்கிய முயற்சி என்றால் மிகையாது. இவ்வாறான முயற்சிகள் எல்லாவழிகளிலும் தொடர வேண்டும். நிலங்கள் மீட்கப்பட வேண்டும்.
மகா சொப்பனத்தின் கொடுங்கனவுகள்
இன்றும் தொடர்கின்றன....
இனியும் தொடரப் போகின்றன....No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...