எரிநட்சத்திரத்தின் ஏரி
ஹவியத் நஜ்ம் என்று அறபியில் அறியப்படும் – அதன் பொருள் நட்சத்திரத்தின் (வீழ்ந்த) கிணறு- Bimmah Sinkhole - பிம்மா ஆழ்துளையானது, மஸ்கட் மாகாணத்தில் அல் சர்கியா பிராந்தியத்தில் டிபாப், பம்மா என்ற கரையோர நகரங்களுக்கிடையே காணப்படுகின்றது. 50 மீற்றர் அகலமும் 70 மீற்றர் அகலமும், 20 மீற்றர் ஆழமும் கொண்ட இந்த இராட்சத ஆழ்துளை ஏரியைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அப்பிரதேசத்தை ஹவியத் நஜ்ம் பாதுகாக்கப்பட்ட பூங்கா என்ற இடமாக மாற்றியுள்ளது.
இந்த ஆழ்துளை ஏரியானது, குகையின் அடிப்பகுதியிலிருந்து ஊற்றெடுக்கும் நன்நீரும், சுமார் 600 மீற்றர் தொலைவிலுள்ள கடற்பிரதேசத்திலிருந்து பல மீற்றர்கள் நிலத்திற்குள் கீழுள்ள சிறு ஓடைகளினால் தொடர்புறும் கடல் நீரும் கலப்பதனால் இந்த ஏரி சவர்நீரைக் கொண்டமைந்து காணப்படுகின்றது. ஏரியானது கரைகளில் சில அடி ஆழத்திலிருந்து, 300 அடிக்கும் அதிகமான ஆழம் வரை செல்கின்றது. வெளிச்சத்தை நன்கு ஊடுபுகவிடக்கூடிய நீரானது, ஆழங்களின் அளவுகளிற்கு ஏற்ப நிறங்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றது. வெள்ளை, கறுப்பு, இளம் நீலம், கடும் நீலம், பச்சை என நிறங்கள் மாறுபட்டுக் காணப்டுகின்றது. இந்த ஆழ்துளை ஏரியில் காணப்படும் பல இன சிறிய மீன்கள் நீந்துபவர்களின் உடலிலுள்ள தேவையில்லாத, இறந்த திசுக்களை அகற்றி அவர்களுக்கு புத்துணர்ச்சியும் அளிக்கின்றன. இந்த ஆழ்துளை கிணற்றின் மேல் தரைப் பகுதியைச் சுற்றி தடுப்புச் சுவர் ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள். அங்கு உருவாக்கப்பட்ட ஹவியத் நஜ்ம் பாதுகாக்கப்பட்ட பூங்காவில் எங்களது நாட்டுக்குரிய முருங்கை, புங்கை, வேம்பு, வாகை, அலறி போன்ற பல்வேறு மரங்களையும் பேரீச்சை மரங்களையும் நட்டு அழகாக மாற்றியிருக்கிறார்கள்.
அடிப்பகுதியிலுள்ள சுண்ணாம்புக் கற்கள் மில்லியன் கணக்கான வருடங்களாக அமிலத்தில் கரைவதால், பாரிய பிரதேசமொன்று நிலத்திற்குக் கீழ் உள்ளீர்க்கப்படுவதால் இந்த ஏரிகள் தோன்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், அதனைச் சுற்றியுள்ள மக்களும், அவர்களது வாய்மொழி மரபுகளும் எரிநட்சத்திரம் (விண்கல்) வீழ்ந்து உருவான கிணறு என்றே இன்றும் உறுதியாக நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கையை மதிப்போமாக.
No comments:
Post a Comment