Monday, January 11, 2021

நம்மாழ்வார் ஆயிரங்காலத்துப் பயிர் - பூவுலகின் நண்பர்கள் வெளியீடு (2015)

 - ஏ.எம். றியாஸ் அகமட்

தொண்டு செய்து பழுத்த பழம் (பாமயன்), நம்மாழ்வார் என்ற சட்ட ஆய்வாளர் (வழக்குரைஞர் சுந்தரராஜன்), நம்மாழ்வார் ஆயிரங்காலத்துப் பயிர் (சி.மா.பிரித்விராஜ்), நம்மாழ்வார் (மருத்துவர் கு.சிவராமன்), நம்மாழ்வார் தொடுத்த போர் (ஆர்.ஆர்.சீனிவாசன்), நானும் நம்மாழ்வாரும் 1, நானும் நம்மாழ்வாரும் 11, மீத்தேன் வாயுத்திட்டத்தை எதிர்த்து நம்மாழ்வாரின் இறுதி உரை போன்ற மிகவும் பெறுமதியான கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
கோ. நம்மாழ்வார். 1938 ஏப்ரல் 6ம் திகதி தஞ்சாவூர் மாவட்டம் இளங்காடு என்னும் கிராமத்தில் பிறந்து 2013 டிசம்பர் 30ம் திகதி பட்டுக்கோட்டை அருகேயுள்ள அத்திவெட்டி என்னும் இடத்தில் மெதேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு மறைந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், விவசாயத்தில் இளமானி பட்டத்தைப் பெற்று, 1960ம் ஆண்டு கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சி உதவியாளராக சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முரண்பட்டு அங்கிருந்து வெளியேறி, 1963 தொடக்கம் 1969 வரை, மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலைசெய்து பின்னர் அந்த வேலையை உதறிவிட்டு தனது கொள்கைசார்ந்த இயற்கை விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
நம்மாழ்வாருக்கு ஞானத் தந்தை மசானபு புக்காக்கா. இவர்தான் விதைப்பந்தையும் மீளுருவாக்கியவர். அத்துடன் பெர்னார்ட் டி கிளார்க், அல்பர்ட்ட ஒலார்ட், பில் மெல்லிசன், மசானபு புக்காக்கோ போன்றவ இயற்கை விவசாய முன்னோடிகளின் கொள்கை, கோட்பாடுகள், நெறிமுறைகள் போன்றவைகளை உள்வாங்கி, தனது வெளிக்கள அனுபவங்களுடன் தனக்கும், இந்த மண்ணுக்கும் பொருத்தமான இயற்கை விவசாய முறைகளை உருவாக்கினார்.
திருத்துறைப்பூண்டி ஜெயராமன் 152 தொடக்கம் 158 வரையான பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாத்து வந்ததில் நம்மாழ்வாரின் தாக்கம் அதிகமானது.
நம்மாழ்வார் பின்வரும் செயற்பாடுகளை மிக முக்கியமானவைகளை கருதி செயற்பட்டார்.
1) இயற்கை விவசாயமும், அது பற்றிய பிரசாரமும்
2) பரம்பரை உருமாற்றப்பட்ட விதைகள், பயிர்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கல்
3) மழைநீர் சேகரிப்பு
4) சிறுதானியங்களை பாதுகாப்பதும், அது பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும்.
5) நகரக் கழிவுகளை பயனுள்ளதாக மாற்றி, மீள்சுழற்சி செய்வது.
6) நீர் வளங்களைப் பாதுகாப்பது.
7) விதைகளுக்கான சான்றிதழ் முறையை ஒழுங்குபடுத்தவது.
8) கால்நடை இனங்களைப் பாதுகாப்பது.
9) மேலே கூறப்பட்ட செயற்பாடுகளுக்காக, அதிகளவான பயிற்றப்பட்டவர்களை உருவாக்குவதும், அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதும்.
10) பயிற்றப்பட்டவர்கள் மூலம் அடித்தட்டு மக்களுக்கு இயற்கை விவசாயம், பயிர்ச்செய்கை, விற்பனை, பராமரிப்பு தொழில்நுட்பம் போன்றவைகளை கொண்டுசெல்வதும், இவைகளை ஒருங்கிணைக்க விவசாயிகளின் நாடு தழுவிய வலைப்பின்னலை உருவாக்குவது.
பசுமைப் புரட்சி, கைத்தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பான காரசாரமான விமர்சனங்களையும், அதற்குரிய ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் முன்வைத்தார். தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை முன்வைத்து அதனை ஊக்குவித்தார்.
வானகம், குடும்பம், லிசா, மழைக்கான எக்கொலொஜிக்கல் நிறுவனம், இந்திய சேதன விவசாய அமைப்பு, நம்மாழ்வார் உயிர் சூழல் நிலையம், தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம் போன்ற அரசுசாரா அமைப்புக்களின் அமைப்பாளராக இருந்தார்.
பூச்சிகொல்லிகள், மெதேன் வாயு திட்டம், பரம்பரை உருமாற்றல் விதைகள், பயிர்கள் பரிசோதனைகள், பீ.ரி. கத்தரிக்காய் அனுமதி, வெளிநாடுகளிலிருந்து உணவு தானியங்கள் இறக்குமதி, விவசாய நிலங்களை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தல், பனை அலட்சியம் செய்தல், அணு உலைகள், ஆறுகள், ஏரிகள், நீர்நிலைகள் சுரண்டல், தமிழ் மருத்துவம் (சித்த மருத்துவம்) அலட்சியம் போன்றவற்றிற்கு எதிராக போராடியும், அவைகளுக்காக நீண்ட நடைப்பயணங்களை மேற்கொண்ட சூழலியல் போராளியான நம்மாழ்வார், பெண்களின் விடுதலையை முன்னிறுத்தியவருமாவார்.
பசுமைப் பேராளியான பழந்தமிழ் இலக்கியங்களுடனான அறிவும், சிறந்த பேச்சாற்றலும் கொண்ட நம்மாழ்வார், அவர் படித்துப்பெற்ற கல்வியும், ஆய்வுசெய்து பெற்ற அறிவும், அனுபவத்தில் பெற்ற ஞானமும் பசுமைப் போராளியான நம்மாழ்வாரை அவர் முன்னெடுத்த செல்ல நினைத்த விடயங்களை சாத்தியப்படுத்த வைத்தது. அவரின் வாழ்வு இந்த உலகிற்கு தவிர்க்க முடியாத ஒரு பாடமாகும்.





















No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...