Tuesday, January 12, 2021

மியவாக்கி அடர்வனம்

 - ஏ.எம். றியாஸ் அகமட்

இன்று மிக நீண்ட நாள் கனவு நனவாகத் தொடங்கிய நாள். எனது மதிப்பிற்குரிய மாணவரும், பிரபல தொழில்நுட்ப பாட ஆசிரியருமான நண்பர் ரமேஸ் சிவஞானம் அவர்களுடைய களுதாவளை இல்லத்தில் 225 சதுர அடியில் மியவாக்கி காடு ஒன்றை உருவாக்குவதற்காக இன்று வேலைகளைத் தொடங்கினோம். இதற்கு அவருடைய மாணவர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். பரீட்சார்த்த முறையில் நாங்கள் உருவாக்கும் மியவாக்கி காட்டில், முயன்று, தவறிக் கற்று, எதிர்காலத்தில் அதனை மேலும் விரிவாக்கத் திட்டமிட்டிருக்கின்றோம்.
ஜப்பானிய தாவரவியல், சூழலியல் அறிஞர், யோக்கஹோமா பல்கலைக்கழக பேராசிரியர் அகிரா மியவாக்கி கண்டுபிடித்த குறைவான இடத்தில் அடர் வனத்தை உருவாக்கும் இந்த முறையில் (1000 சதுரஅடிகளில் சுமார் 400 மரங்கள்), ஒரு முழுமையான காட்டை சுமார் மூன்று வருடங்களுக்குள் உருவாக்கிவிடலாம். அதாவது ஒரு மரத்திற்கு பத்து வருடத்திற்கு கிடைக்கும் வளர்ச்சியை இந்த மியவாக்கி முறையில் இரண்டு வருடங்களுக்குள் கிடைக்கச் செய்துவிடலாம். மியவாக்கி காட்டின் மரங்களின் வேர்கள், நிலத்தடி நீரைச் சேமிக்கக்கூடியன. மியவாக்கி பரிந்துரைத்ததன்படி, இடங்களைத் தயார் செய்து, மரங்களை நெருக்கமாக நடும்போது, ஒளித்தொகுப்பு செய்வதற்கான, அதாவது தங்களுக்குரிய உணவைத் தாங்களே தயாரிப்பதற்கான சூரியஒளியைப் பெறுவதற்காக அல்லது தேடி போட்டிபோட்டு மரங்கள் மேல்நோக்கி வளருகின்றன. அதாவது டார்வின் கூறிய வாழ்க்கைப் போராட்டம் (சர்வைவல் ஒப் த எக்சிஸ்ரன்ஸ்) இங்கு நடக்கிறது. அதே நேரம் வேர்களும் கீழ்நோக்கி வளர்ந்து மரங்கள் உறுதியாகின்றன. சுமார் மூன்று வருடங்களுக்கு கடுமையான பராமரிப்பும், நீர்ப்பாசனமும் அவசியம். அதற்குப் பிறகு அவைகளே தங்களை வனமாக தகவமைத்துக் கொள்ளும். ரமேசுக்கும், அவரின் மாணவர்களுக்கும், வேர்கள் அமைப்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்.





மியவாக்கி அடர்வனம் - பகுதி 1
ரமேஸ் சிவஞானம் ஆசிரியரின் வீடு இருக்கும் வளவின் முன் பகுதியில், அவரின் மாணவர்களின் உதவியுடன் சுமார் 250 சதுர அடி பரப்பும், 3 அடி ஆளமுமான மடு அகழப்பட்டது.


மியவாக்கி அடர்வனம் - பகுதி 2
அகழப்பட்ட சுமார் 250 சதுர அடி பரப்பும், 3 அடி ஆளமுமான மடுவில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு, அந்த மடுவின் 1.5 அடி ஆழத்தை நிரப்பல்.

மியவாக்கி அடர்வனம் - பகுதி 3
அந்த மடுவின் 1.5 அடி ஆழத்தை நிரப்பிய பின், எஞ்சிய வெளியே அகழப்பட்ட மண்ணுடன், அந்த மண்ணின் கனவளவுக்கு சமனாக மாட்டெரு, கூட்டெரு, சேதனப்பசளை, பசுந்தாட்பசளை, உக்கிய குப்பை, தென்னை மட்டைகள், உமி, மரத்துாள், தும்பு போன்றவை கலக்கப்பட்டன.


மியவாக்கி அடர்வனம் - பகுதி 4
மாட்டெரு, கூட்டெரு, சேதனப்பசளை, பசுந்தாட்பசளை, உக்கிய குப்பை, தென்னை மட்டைகள், உமி, மரத்துாள், தும்பு போன்றவை கலக்கப்பட்டு, அகழப்பட்ட மடு மூடப்பட்டது.


மியவாக்கி அடர்வனம் - பகுதி 5
அதன் பின்னர், நீர்ப்பாசன வசதி செய்யப்பட்டது.



மியவாக்கி அடர்வனம் - பகுதி 6
அதன் பின்னர் வெட்டு மரங்கள், பழ மரங்கள், மருத்துவ மரங்கள், பூ மரங்கள், செடிகள், சுதேசிய தாவரங்கள் போன்றவை, நடுவதற்காக உயரங்களின் அடிப்படையிலும், விதானங்களின் அடிப்படையிலும் நடுவதற்கான திட்டம் மாதிரியுருவாக செய்யப்பட்டது.


மியவாக்கி அடர்வனம் - பகுதி 7
அந்த திட்டத்தின் அடிப்படையில் மரங்கள் நடுவதற்காக அதற்குரிய நிலையங்களில் வைக்கப்பட்டன.




மியவாக்கி அடர்வனம் - பகுதி 8
பின்னர் அந்த நிலையங்களில் 2 அடிக்கு 2 அடி இடைவெளியில் மரங்கள் நடப்பட்டன.



மியவாக்கி அடர்வனம் - பகுதி 9
மரக்கன்றுகளுக்கு ஆதாரம் வழங்க மூங்கில் கம்புகள் அருகில் நடப்பட்டு கன்றுகளுடன் கட்டப்பட்டன.


மியவாக்கி அடர்வனம் - பகுதி 10
பின்னர் நடுகைசெய்யப்பட்ட நிலப்பரப்பிலிருந்து நீரிழப்பைத் தடுப்பதற்கு சுமார் 5 சென்ரிமீற்றர் கனத்திற்கு மூங்கில் இலைகள் மூடுபடையாக போடப்பட்டு, அவை நடுகைப் பரப்புடன் சேர்த்து கயிற்றினால் நன்கு கட்டப்பட்டன.


மியவாக்கி அடர்வனம் - பகுதி 11
பின்னர் நீர்ப் பாய்ச்சப்பட்டது. முதல் தடவை, சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும், பின்னர் ஒரு நாளைக்கு ஒரு சதுர மீற்றருக்கு 5 லீற்றர் என்ற அளவிலும் நீர் பாய்ச்ச வேண்டும்.



மியவாக்கி அடர்வனம் - இன்று


சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர் (21.07.2020) தொடங்கப்பட்ட மியவாக்கி காடு நன்றாக வளர்ந்துகொண்டிருக்கின்றது. சில மரங்கள் இறந்துபோக அவைகள் மீள நடப்பட்டிருக்கின்றன. மிகவும் நம்பிக்கை தரும் முயற்சி. இதற்கான முழுப் பராமரிப்பையும் செய்துகொண்டிருக்கும் ஆசிரியர் ரமேஸ் சிவஞானத்திற்கும், அவரது மாணவர்களுக்கும், வேர்கள் அமைப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.



களுதாவளையில் ஆசிரியர் ரமேஸ் சிவஞானம் வளவில் எங்களது மியவாக்கி காடு நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கின்றது. நாங்கள் சரியான பாதையில் பயணிப்பதை நினைத்து மகிழ்கின்ற தருணம்.
(படங்கள்- திரு. ரமேஸ் சிவஞானம்).



நம்பினால் நம்புங்கள்
நான்கு மாத காலங்களுக்குள் மியவாக்கி மரங்கள் தோளுக்கு மிஞ்சி தோழனாகி, தலையை மிஞ்சி தலைவனாகி, எட்டாத துாரத்தில் வளர்ந்துவிட்டன. இன்று (19,11,2020) அதிகாலை றமேஸ் சிவஞாயகத்தின், களுதாவளை வளவில் எடுத்த படம்.
மியவாக்கியை நம்புங்கள்



No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...