-ஏ.எம். றியாஸ் அகமட்
அறிமுகம்;
மசனோபு புக்காக்கா


1913ம் ஆண்டு பெப்ரவரி 02ம் திகதி, ஜப்பானின் சிக்கோகு தீவின் இயோ என்ற பகுதியில் எஹிம் என்ற இடத்தில் ஒரு கற்ற, செல்வச் செழிப்புள்ள, பெரிய நிலச் சுவான்தாருக்கு மகனாக பிறந்தார். பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலாளராகவும், விவசாய விஞ்ஞானியாகவும் பயிற்றப்பட்டு, யோக்கஹோமாவில் சுங்கப் பரிசோதகராக வேலைக்குச் சேர்ந்து, தான் கற்றதற்கும், செய்ததற்கும் நடைமுறைச் சாத்தியமில்லா தன்மை கண்டு, 1938ம் ஆண்டு, அந்த வேலையிலிருந்து விலகி தனது சொந்த இடமான சிகோக்கு தீவிற்கு திரும்பி தனது சொந்த நிலத்தில் பயிர் செய்யத் தொடங்கினார். 1940ம் ஆண்டு, அயாகோ என்ற பெண்ணை திருமணம் செய்து அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன.
உலகின் மிக அதிக நாடுகளுக்கு விஜயம் செய்து, கல உரைகளையும் ஆற்றி, வறண்டு போய்க்கிடந்த பல பாலைநிலங்களில் மீண்டும், பயிர்களையும், தாவரங்களையும் உருவாக்கினார். இன்று உலகின் பல நாடுகள் இவரது விவசாய முறையை பின்பற்றுகின்றன. இரசாயன உரத்திற்கும், களை, பூச்சி நாசினிகளுக்கு இவர் எதிராக இருந்ததனால் வெகுஜன ஊடகங்களும், பல்தேசியக் கம்பனிகளும், நிதி நிறுவனங்களும், பல பல்கலைக்கழகங்களும் இவருக்கெதிராகவே உள்ளன. இவர் பல நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எமக்குத் தந்துள்ளார்.
இயற்கை ஒரு புதிர். மலைகளையும், காடுகளையும், கடந்த பாகுபாடற்ற சமத்துவ மனம் பெறுவது இயற்கை வேளாண்மையை எவ்வாறு புரிய உதவும் என்பதை தெளிவுபடுத்திய புகோகா நவீன கல்வி, அரசியல், பொருளாதாரம், அறிவியல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு இயற்கை வேளாண்மையை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பதையும் கூறினார்.

“கமி நொ காகிமெய்” அல்லது “தி வன் ஸ்ட்ரோ றிவொலுசன்” “ஒற்றை வைக்கோல் புரட்சி”

இந்நூல் வேளாண்மையை மட்டும் பேசவில்லை. மாறாக இயற்கை, சுற்றுச்சூழல், மனிதர்கள், மற்றமைகள், வாழ்க்கை, அரசியல், தத்துவம், காலநிலை, உயிரியல் பல்வகைமை போன்ற பலவிடயங்களை பேசுகின்றது.

1) மண் உழதலோ அல்லது புரட்டலோ தேவையில்லை.
2) உரங்களோ அல்லது தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களோ தேவையில்லை.
3) களை கட்டுப்படுத்தல் தேவையில்லை.
4) பூச்சி, பீடை கட்டுப்படுத்தல் தேவையில்லை.
(இன்னும் சிலர் ஐந்தாவது அடிப்படை, மரங்களை கத்தரிக்காமல், அதன் இயற்கையான போக்கில் விடுவது என்கின்றனர்).
உழவு, செயற்கை, சேதன உரம், களை நாசினி, பூச்சி, பீடை நாசினி இல்லாத ஒரு முறையை தொடர்சியாக முப்பது வருடங்களாக மேற்கொண்டு அதிக விளைச்சலைக் கொடுக்க முடியும் என்பதை நிருபித்தார்.
இந்நூலில் தன்னுடைய வாழ்க்கையை ஒரு பாடமாக எடுத்துக் கூறும்; புக்காக்கோ, இயற்கை வேளாண்மையில் இலாபத்தை அதிகரிக்கும் வழிகள், அதிக விளைச்சலைப் பெருக்கும் நுட்பங்கள், பல்வேறுவிதமான வேளாண்மை சம்பந்தப்பட்ட விடயங்கள் போன்றவைகளையும் தருகிறார். அது மட்டுமல்லாமல் தத்துவம், ஆன்மீகம், அறிவியல் போன்ற விடயங்களைத் தந்துகொண்டே செல்கின்றார்.
களைகளுடே பயிர்ச் செய்கை, வைக்கலினூடே பயிர்ச் செய்கை, நிலத்தில் நீர்த்தேக்காமல் பயிர்ச் செய்கை, பழ மரங்கள் செய்கை, இயற்கை இரையினங்களைக் கொல்லாதிருத்தல், காட்டுச் செடிகளைப்போல காய்கறி வளர்த்தல், இரசாயனப் பொருட்களை பாவிக்காதிருத்தல், விஞ்ஞானமுறைகளின் எல்லை, கடின உழைப்பின் அறுவடை, இயற்கை உணவின் விநியோகம், வர்த்தக பயிர்களின் ஏமாற்றம், யாருடைய நன்மைக்காக ஆய்வுகள் செய்யப்படுகின்றன?, மனிதனுக்கான உணவு என்பது எது?, இயற்கைக்கு உதவி, அனைவரும் நலமுடன் வாழலாம், இயற்கை வேளாண்மை செய்ய பல வழிமுறைகள், இயற்கை உணவுச் சக்கரம், உணவுக் கலாச்சாரம், உணவே வாழ்க்கையா?, பல வகையான உணவுப் பழக்கங்கள், உணவும் வேளாண்மையும், அறிவியலின் மாயை, சார்புக் கொள்கை, போரும் அமைதியுமற்ற ஒரு கிராமம், ஒற்றை வைக்கோல் புரட்சி போன்ற பல தலையங்களில் ஆற்றொழுக்காக நூல் எளிமையான மொழியில் நகருகின்றது. அதற்கு மொழிபெயர்த்த பூவுலகின் நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.
புக்காகோ ஒற்றை வைக்கோல் புரட்சியில் பேசும் சில விடயங்களைப் பார்ப்போம்.
அன்பானவர்களே,

இதோ... என் வயலில் இருக்கும் இந்த பார்லி மற்றும் ரை தானியங்களின் கதிர்களைப் பாருங்கள். முதிர்ந்த இக்கதிர்கள், கால் ஏக்கர் நிலத்திலிருந்த (22 மரக்கால் அல்லது 1300 இறாத்தல் (600 கிலோகிராம்) தானியங்களைத் தருகின்றன. இது, இந்த வட்டாரத்தில் இரசாயன உரத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட அதிகபட்ச அறுவடைக்குச் சமம் என நம்புகிறேன். ஏனெனில், இப்பகுதி ஜப்பானின் சிறந்த விவசாயப் பகுதிகளில் ஒன்று. ஆனால், என்னுடய நிலம் இருபத்தைந்து ஆண்டுகளாக உழவு செய்யப்படவே இல்லை... உரம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.
மழைக் காலத்தில், நெற்கதிர்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும்போதே... ரை, மற்றும் பார்லி விதைகளை அங்கே தூவி விடுவேன். சில வாரங்களுக்கு நெல் அறுவடை முடிந்ததும், அவற்றின் வைக்கோலை நிலத்தின் மீதே போட்டுப் பரப்பி விடுவேன்.

இப்படி ரை, பார்லி, நெல் ஆகியவற்றை மாற்றி மாற்றிப் பயிரிடும் இந்த முறையானது, உழவு தேவையில்லாத வேளாண்மை முறைக்கே உரித்தான தனித்துவம் வாய்ந்தது. இதைவிட இன்னும் ஒரு எளிய வழியும் இருக்கிறது. அதை, அடுத்த வயலுக்குப் போகும்போது காட்டுகிறேன்.

நான் சொல்லும் புதுமையான இந்த வேளாண்மை முறை, நவீன வேளாண்மை முறையிலிருந்து ஒட்டுமொத்தமாக முரண்படுகிறது. அறிவியல் பூர்வமான வேளாண் அறிவை மட்டுமல்ல... 'பாரம்பரிய வேளாண்மை' என்று சொல்லப்படும், நீண்டகாலமாக நாம் பயன்படுத்தி வரும் வேளாண் அறிவையும் ஒரு சேரத் தூக்கி ஜன்னல் வழியே வெளியே எறிகிறது.
இயந்திரங்களை உபயோகப்படுத்தாத, தயாரிக்கப்பட்ட எரு உரங்களையும், வேதியல் பொருட்களையும் பயன்படுத்தாதது நான் சொல்லும் வேளாண்மை.
அதேசமயம்... இரசாயன வேளாண்மை செய்யப்படும் ஜப்பானியப் பண்ணைகளில் விளைவதற்கு ஈடாகவோ அல்லது அதிகமாகவோ என்னால் விளைவிக்க முடிகிறது என்பதில் துளியும் சந்தேகமே இல்லை!
“எதுவுமே செய்யத் தேவையற்ற வேளாண்மை குறித்துப் பேசும்போது, பலரும் படுக்கையில் இருந்துகூட எழுந்திருக்காமல் வாழ்க்கையை நடத்தும் ஒரு மாய உலகத்தைக் கண்டுவிடலாம் என்றே என்னை நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு மாபெரும் ஆச்சரியம் காத்திருக்கிறது.
“என்னுடைய விவாதம் உழைப்பை எதிர்க்கும் ஒன்றல்ல, தேவையற்ற உழைப்பை எதிர்த்தே. மக்கள் பல நேரம் தாங்கள் ஆசைப்படும் பொருட்களைப் பெறுவதற்குத் தேவைக்கு அதிகமான உழைப்பையும், தேவையற்ற பொருட்களைப் பெற சில அவசியமற்ற வேலைகளையும் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.”
“அறிவியல் புரிந்து வைத்துள்ள இயற்கை என்பது முழுமையாக நாசம் செய்யப்பட்ட இயற்கை. அது எலும்புக் கூட்டுடன் உலவும் ஒரு பிசாசு. அதற்கு ஆத்மா கிடையாது”.
“முழுமையின் உணர்வை நமக்குத் தருவது அறிவு அல்ல, மகிழ்ச்சிதான். ஒன்றைத் தனதாக்கிக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் ஒருவன் ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் இழக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டால், இயற்கை வேளாண்மையின் அடிப்படை புரிந்துவிடும்.”
மனிதர்கள் ‘அதிகத் உற்பத்தி’, அதிக தரம்’ ஆகியவற்றுக்காக உழைக்காமல், ஒட்டுமொத்த மனித குல நன்மைக்காக உழைக்கும்போது, அவர்களுடைய உழைப்பு சிறந்து விளங்கும். ஆனால் தொழில்மயப்படுத்தப்பட்ட வேளாண்மையின் தாரக மந்திரமோ, ‘அதிக உற்பத்தி’யில்தானே அடங்கியுள்ளது.
வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல, மனிதர்களை வளர்த்து முழுமை பெறச் செய்வதுதான்” என்று இந்த நூல் முழுக்க புக்காகோ கூறிச் செல்கின்றார்.
இந்த நூலுக்கு முன்னுரை வழங்கிய வெண்டல் பெர்ரி, “புக்காகோ வேளாண்மையை ஒரு வாழ்க்கை முறையாகவே பார்க்கிறார். ஒரு சிறிய வயலைக் கவனித்துக்கொண்டு, ஒவ்வொரு தினத்தின் ஏகாந்தத்தையும் சுதந்திரத்தையும் முழுமையாகத் தனதாக்கிக்கொண்டு இருப்பதுதான் வேளாண்மையின் ஆதி வழியாக இருந்திருக்க வேண்டும்”.
“வாழ்க்கையின் ஒரு பகுதியை மற்றொன்றிலிருந்து தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது என்பதை ஃபுகோகா நன்கு புரிந்து வைத்திருக்கிறார்’.
“ஒரு மனிதனின் உடலையும் ஆன்மாவையும் முழுமையாகச் செழுமைப்படுத்தும் வேளாண்மை அது.’
“எதுவுமே செய்யத் தேவையற்ற” வேளாண் முறைகளை ஃபுகோகா பேசுவதன் அடிப்படை நோக்கம், உலகில் உள்ள பொருள் கூட்டத்துக்கு இடையே மனிதர்களின் முறையான இடம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். இந்த உலகத்தையோ, நம்மையோ நாம் உருவாக்கிக்கொள்ளவில்லை. வாழ்க்கையை நமக்கு உகந்த வழிகளில் வடிவமைத்துக்கொண்டு உயிர் வாழ்கிறோம், நாமே உருவாக்கி வாழவில்லை.”
“ஆனால், எப்படி ஒரு பறவை அலைந்து திரியாமல் தனக்குத் தேவையான உணவைக் கண்டுபிடிக்க முடியாதோ, அதைப் போலவே ஒரு விவசாயி உழைப்பைச் செலவிடாமல் வேளாண்மை செய்வதும் சாத்தியமில்லை’.
“இப்படியாக ஃபுகோகா அறிவியலை அல்லது அறிவியல் என்று பல நேரம் கூறப்படும் விஷயங்களைச் சந்தேகக் கண்ணுடன் நோக்கும் ஒரு அறிவியலறிஞராக இருந்தார். அதனால் அவர் நடைமுறைக்கு ஒவ்வாதவர் என்றோ, அறிவை எள்ளி நகையாடுபவர் என்றோ அர்த்தமல்ல. அவரது சந்தேகங்கள் அறிந்துவைத்துள்ள விஷயங்களில் இருந்தும், அதை அவர் நடைமுறைப்படுத்தும் முறைகளில் இருந்தும் உதித்துள்ளன. நிபுணத்துவம் என்ற பெயரில் அறிவுத் துறைகளைச் சிறுசிறு பிரிவுகளாகச் சிதறடிப்பதை அவர் எதிர்க்கிறார்”.
‘தனது ஆய்வுக்கான பொருளை முழுமையின் ஒரு பகுதியாகப் பார்க்கவே ஃபுகோகா விரும்புகிறார். முழுமை என்பது அவர் அறிந்தது, அறியாதது ஆகிய இரண்டும் உள்ளடங்கியதுதான் என்பதை அவர் மறுக்கவில்லை. தனக்குத் தெரிந்த விஷயங்களுக்குள்ளாகவே குறுகிப் போய்விடும் அறிவியல், தனக்குத் தெரியாத விஷயங்களை ஒதுக்கித் தள்ளிவிடக்கூடியவை என்று நம்பும் அதன் அடிப்படை போக்கு ஆகியவற்றின் மீதான பயம்தான், நவீனப் பயன்பாட்டு அறிவியல் பற்றிய அவரது பயத்துக்குக் காரணம்”.
முடிவுரை:
இறுதியாகக் கூறப்போனால் ஒரு விவசாய அறிஞராக, ஆய்வாளராக, விவசாயியாக, ஆசிரியராக, அடைக்கலம்கொடுக்கும் ஆபத்பாந்தவனாக, ஓவியராக, சிற்பியாக. இசை ஞானமுள்ளவராக, வர்த்தகராக, பாடகராக, போராளியாக, அரசியல் செயற்பாட்டாளராக புக்கோகாவுக்கு பல முகங்கள் தெரிந்தாலும், நூலை படித்து முடிக்கையில், புக்கோகா மாபெரும் தத்தவஞானி (சென் தத்துவஞானி என்றும் அறியப்படுகின்றார்0 என்ற அந்த விடயமே மற்றைய எல்லாவற்றையும் விட மனதில் ரீங்காரமிட்டு நிலைத்துநிற்கின்றது.
இயற்கை வழி வேளாண்மை செய்யும் சாதாரண விவசாயிகளுக்கு உற்சாகப்படுத்த ‘ஒற்றை வைக்கோல் புரட்சி” மலிவு விலையில் வெளியிடப்பட்டு, பல விவசாய சங்கக் கூட்டங்களில் விற்கப்பட்டு பல விவசாயிகளை இந்த நூல் சென்றடைந்திருக்கின்றது. அந்த வகையில் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் பாராட்டுதல்களுக்குரியது. இவ்வாறான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment