இரண்டு குரோனா லொக்டவ்ன் காலங்கள், விபத்து, சுகவீனம், மற்றும் பல இடர்பாடுகளைக் கடந்து, இந்த வருடம் சுமார் 8 மாத காலப் பகுதிக்குள் 2000 கிலோமீற்றர் தூரத்தை சைக்கிளோட்டத்தில் கடந்திருக்கிறேன் என எனது தொலைபேசி செயலி சொல்கின்றது. எனது இதயத் துடிப்பிலிருந்து, நான் உள்ளெடுத்த ஒக்சிஜன், தூரம், வேகம், நேரம், போன்ற பல விடயங்களை அது பதிந்து வைத்திப்பதைக் காட்டுகின்றது. ஆனால் உண்மையாக நான் ஓடிய தூரம் இதனைவிட மிக அதிகம். இதனைச் சாத்தியப்படுத்த உதவிய Rider’s Hub Cycling Club நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
இந்த அதிகாலைச் சைக்கிளோட்டத்தை வெறுமனே உடல்நலத்தை ஊக்குவிக்கும் ஒரு செயற்பாடாக மட்டும் நான் கருதவில்லை. இந்த 2000 கிலோமீற்றர் அதிகாலைப் பயணத்தில், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து, அந்த நாளை மகிழ்வுடன் ஆரம்பித்தது மட்டுமல்லாது, பல்வேறு பிரதேசங்கள், அதன் மனிதர்கள், அவர்களின் கலாசாசரம், அங்கிருக்கின்ற விலங்குகள், தாவரங்கள், வாழிடங்கள், சூழற்றொகுதி பற்றியெல்லாம் இந்த அதிகாலைப் பயணங்களில் அறிந்திருக்கின்றேன். இதனை நான் எனக்கு கிடைத்த வரப்பிரசாதமாகத்தான் இந்த வாய்ப்புக்களையெல்லாம் உபயோகப்படுத்திக் கொண்டேன். அவற்றில் பல விடயங்களை பதிந்தும் வந்திருக்கின்றேன். இன்று சொல்லப்போவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
விலங்குகளின் வீதிச் சாவுகள் அல்லது கொலைகள்:
மனிதனின் அசிரத்தை காரணமாக ஒவ்வொரு வருடமும் பல மில்லியன் கணக்கான உயிரினங்கள் வீதிகளில் வாகனங்களினால் மோதுப்பட்டு இறக்கின்றன. சில விலங்குகள் தெரியாமலும், பல வேண்டுமென்றும் மோதப்பட்டு கொல்லப்படுகின்றன. விலங்குகளுக்கு பேரழிவை ஏற்படுத்தும் செயற்பாடுகளில், இந்த வீதிக் கொலைகள் இரண்டாவது இடத்தை வகிக்கின்றன. ஓவ்வொரு வருடமும் ஐக்கிய அமரிக்காவில் மில்லியனுக்கு மேற்பட்ட முள்ளந்தண்டுளி விலங்குகள் வீதிகளில் கொல்லப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
விலங்குகள், உணவுக்காகவும், இனப்பெருக்க இணையைத் தேடியும், பல்வேறு காரணங்களுக்காக தனது இடத்தைவிட்டு இடம்பெயரும்போதும், மற்றைய சில காரணங்களுக்காகவும் வீதியை குறுக்கறுக்கும்போதும் கொல்லப்படுகின்றன. இந்த இடம்யெர்வுகள் அந்த விலங்குகளின் நடத்தைகளுடனும், உயிரிலுடனும் நேரடியாக சம்பந்தப்பட்டவை. காலநிலையுடனும், பருவங்களுடனும் தொடர்புபட்டவை. 2050ம் ஆண்டளவில் வீதிகளின் நீளம் 60 சதவீதத்தால் அதிகரிக்கப்பட இருக்கின்றன. எனவே இந்தக் கொலைகள் நிற்கப் போவதில்லை. எனவே எதிர் காலத்தில், விலங்குகள் அழிதலின் சாத்தியம் மிக அதிகமாகவே இருக்கப் போகின்றன. இதற்குக் காரணம் வீதிப் பொறியாளர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் வீதிச் சூழலியல் (Road Ecology) பற்றிய அடிப்படை அறிவின்மையும், சாரதிகளின் அசிரத்தையுமேயாகும். எனவே மேற்கூறிய விடயங்களை கருத்திற்கொண்டு வீதிகளை அமைக்கும்போது, வீதியில் வாகனத்தில் மோதுண்டு கொல்லப்படும் விலங்கினங்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கலாம். அது எங்களது உயிரினப் பல்வகைமையை பாதுகாத்து, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை அடுத்த சந்ததிக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மிக முக்கியமானதுமாகும்.
No comments:
Post a Comment