””மரங்களும், கதைகளும் பிரிக்கமுடியாதன.
மரங்களில்லாமல் கதைகள் இல்லை.
கதைகள் இல்லாமல் மரங்கள் இல்லை.
மரங்களுக்கு பல கதைகள் இருக்கின்றன.
இது ஒரு கதை.
அற்பாயுளில் மரித்துப்போனவன்
மரமாய் வாழும்
சல்மான் மரத்தின் கதை”
வீட்டிலிருந்து பணிக்குச் செல்வதற்கு பிரதான பெருந்தெருக்களைப் பாவிப்பதனைவிட அமைதியான குறுந்துாரம் எடுக்கும் பாதைகளையே, அந்தப் பாதைகளில் ஆபத்துக்களும், வசதியீனங்களும் இருந்தாலும், தெரிவு செய்கிறேன். வழுக்கமடு-சொறிக்கல்முனை-வீரமுனை பாதையின் வயலோரத்தில் இருந்த மரம் மாடுகளுக்கு இளைப்பாறுவதற்கு அடைக்கலம் கொடுத்திருந்ததை பதிவு செய்திருந்தேன்.
இந்தப் பதிவைப் பார்த்த பல்கலைக்கழகத்தில் நீண்ட காலத்திற்கு முன்னர் என்னிடம் மாணவராய் இருந்த ஏசிஏ. மாஹிர் நற்பிட்டிமுனையை சேர்ந்தவர். தற்போது ஆசிரியராய் இருப்பவர், சட்டக் கல்லுாரியில் சட்டமும் பயின்று வருபவர், இயற்கையை நேசிப்பவர். அது தன்னுடைய வயலடி என்றும், அந்த மரத்தை 1990களின் ஆரம்பப் பகுதியில் இனவன்முறை ஒன்றில் காணாமல் போன தனது தாயின் சகோதரர் சல்மான் என்பவர் நாட்டிய மரமும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வம்மி அல்லது கடம்ப அல்லது சல்மான் மரத்தை பல பேர் மாஹிரிடம் வெட்டுமாறு அறிவுரைகூறியும், வற்புறுத்தியுமிருக்கிறார்கள். ஆனால் ஆஜானுபாகுவான, எதற்கும் வளைந்துகொடுக்காத அவர் அந்த மரத்தை வெட்டாமல். பாதுகாத்து வந்திருக்கின்றார்.
அந்த மரத்தில் நுாற்றுக் கணக்கான பறவைகள் அடைக்கலமாயிருந்தததைக் கண்டிருக்கின்றேன். ஆயிரக்கணக்கான பூச்சிகள், மற்றும் முள்ளந்தண்டிலிகளும். விலங்குகளும் அவற்றை அண்டியிருக்கின்றன. அதன் நிழலில் மாடுகள், எருமைகள், ஆடுகள். சில சமயங்களில் யானைகள் நின்றதையும் கண்டிருக்கின்றேன். கீழுள்ள படங்கள், வாகனத்தில் செல்லும்போது சல்மான் மரத்தை ஒரு மாத காலத்துள் நான் பிடித்த படங்களாகும். அவைகளை விபரிக்கத் தேவையில்லை. படங்களே பேசும்.
ஒரு மனிதன் இறந்து போனதும் அவனது நல்ல மற்றும் கெட்ட செயல்களும் அதன் மூலமான நன்மை மற்றும் பாவங்களும் நின்று போய்விடுகின்றன. ஆனால் அந்த மனிதன் உயிரோடு இருக்கும் போது வெட்டிய கிணறு , ஏற்படுத்திய கல்வி நிறுவனம், நட்டு வைத்த மரங்கள் போன்றவை அவை மக்களுக்குப் பயன்படும் காலமெல்லாம் அவன் உலகைவிட்டு மறைந்தாலும் அவனுக்கு நன்மையை சேர்த்துக் கொண்டே இருக்கும். இதனை இஸ்லாம் ‘சதக்கத்துல் ஜாரியா’ (நிரந்தர தர்மம்) என வகைப்படுத்துகிறது.
இஸ்லாமிய மதம் பாலைவனப் பிரதேசத்தில் தோன்றியதாகையால், அது மரங்களிற்கும், நீரிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றது. மரங்களின் அவசியம் பற்றி முகம்மத் நபி (ஸல்) அவர்கள் பல விடயங்களைக் கூறியிருக்கின்றார்கள். அவற்றில் சில நபி வாக்கியங்கள் இவை.
1) ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும். (புஹாரி : 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி)).
2) "இறுதித் தீர்ப்பு நாள் வருகையில் கூட, ஒரு மரக்கன்றை ஒருவர் கையில் வைத்திருந்தால் அவர் விரைந்து அதனை மண்ணில் ஊன்றட்டும்" என்று இறைதூதர் (ஸல்) கூறினார்கள்.
3) “எவரேனும் மரம் நடுவாரேனால் அம்மரத்திலிருந்து எவ்வளவு உண்ணப்படுமோ அவ்வளவு தர்மம் செய்த நன்மை மரம் நட்டவருக்கு கிடைக்கும். அதிலிருந்து திருடப்பட்டதும் தர்மாகிவிடும். பிராணிகள் உண்டதும் தர்மமாகிவிடும் “ அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) ( முஸ்லிம் )
4) “ஒருவர் மரம் நாட்டினால் அம்மரத்தின் மூலம் எத்தனை பழங்கள் உற்பத்தியாகுமோ அவற்றின் அளவுக்கு மரத்தை நட்டவருக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடைக்கும்" அறிவிப்பாளர்: அபூ அய்யூப் (ரலி) (முஸ்னத் அஹ்மத்)
எல்லாப் புகழும் நிறைந்த இறைவனே! சல்மான் நாட்டிய இந்த மரத்தில் இன்றுவரை இலட்சக்கணக்கான பறவைகளும், விலங்குகளும், மனிதர்களும், வாகனங்களும், தொழிலாளிகளும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், வழிப்போக்கர்களும், புத்தியுள்ளோர்களும், புத்திசுவாதீனமானோர்களும் களைப்பாறி, இளைப்பாறிச் சென்றிருக்கின்றார்கள். இந்த மரம், உணவும், இடமும் கொடுத்து, ஒளித்தொகுப்பும் செய்திருக்கின்றது. மரங்களின் எல்லா பிரயோசனங்களையும் கொடுத்திருக்கின்றது. இதன் எல்லா நன்மைகளையும், சல்மானுக்குச் சேர்ப்பாயாக. ஒரு பங்கை மாஹிருக்கும் சேர்ப்பாயாக.
மரங்களும், கதைகளும் பிரிக்கமுடியாதன. மரங்களில்லாமல் கதைகள் இல்லை. கதைகள் இல்லாமல் மரங்கள் இல்லை. மரங்களுக்கு பல கதைகள் இருக்கின்றன. இது ஒரு கதை. அற்ப ஆயுளில் மரித்துப் போனவன், மரமாய் வாழும் சல்மான் மரத்தின் கதை. இது போன்ற கதைகள் இந்த வெளியெங்கும் பரந்துகிடக்கின்றன.
No comments:
Post a Comment