சாற்றி அல் குறம் கடற்கரை பகுதியானது, ஓமானின் தலை நகரான மஸ்கட்டின் கரையோரப் பகுதியில் கிழக்கில் குறம் பகுதியையும், மேற்கில் அமைச்சுக்கள், தூதரகங்களையும், தெற்கில் மதினத்துல் அல் காபூஸ் பகுதியையும் எல்லையாகக் கொண்டு 4 கிலோமீற்றர் நீளத்தில் காணப்படுகின்றது. மிகவும் விலைகூடிய சொகுசு வீடுகளும், பல அமைச்சுக்களும், வெளிநாட்டுத் தூதரகங்களும், பல சொகுசு ஹோட்டல்களும் உள்ள இடமாகவும் காணப்படுகின்றது. இந்தக் கடற்கரை அதிகமான உள்ளுர், வெளிநாட்டு பயணிகள் விஜயம் செய்யுமிடமாகவும் காணப்படுகின்றது.
கடல் நீர் வற்றுப் பெருக்கு காரணமாக கரையிலிருந்து சுமார் 1 கிலோமீற்றர் தூரம் அளவிற்கு உள்வாங்கிக் காணப்படும். அப்போது கடலின் தரை தெளிவாகத் தெரியும் அந்த நேரத்தில் அதனை பொழுதுபோக்குமிடமாகவும், விளையாட்டுத் திடலாகவும் (பட்டம் விட்டு, பந்து விளையாடி, ஓடிப் பிடித்து, நீந்தி, வாகனங்கள் செலுத்தி), கூடி, சமைத்து, சாப்பிட்டு, மகிழுமிடமாகவும் மக்கள் பயன்படுத்துகின்றனர். தாழ் வற்றுப் பெருக்கின்போது கிழக்கு மேற்காக சுமார் 2 கிலோமீற்றர் வரை நடந்து செல்லலாம் எனக் கூறப்படுகின்றது.
வற்றுப்பெருக்கானது சந்திர, சூரியர்களின் ஈர்ப்பு விசைகளின் காரணமாக கடல்நீர் இழுக்கப்படுவதால் கடல் நீர் மட்டம் சில இடங்களில் கூடியும் குறைகின்றது. வற்றுப் பெருக்கானது சூழலியலில் மிகவும் முக்கியமானது. கடல்வாழ் உயிரினங்களான தாவர, விலங்குகளின் இனப்பெருக்கம் போன்ற பல்வேறு அம்சங்களுக்கு வற்றுப்பெருக்கு உதவி செய்கின்றது. மிதக்கின்ற தாவரங்களும், விலங்குகளும் தங்களுடைய இனம்பெருக்குகின்ற இடங்களுக்கும், ஆழ்கடலுக்கும் இடையே நகர்வதற்கு வற்றுப் பெருக்கு உதவுகின்றது. அத்துடன் மாசாக்கிகளை அகற்றுவதற்கும், தாவர, விலங்குகள் உயிர்வாழ்வதற்குத் தேவையான போசணைகளை வட்டத்திற்குள்ளாக்குவதற்கும் அவசியமாகும்.
சந்திரனும், சூரியனும் ஒரே நேர்கோட்டில் அமையும் போது (0 பாகையில்), மற்றும் 90 பாகையில், 180 பாகையில், 270 பாகையில் அமையும்போது உயர்,தாழ், உயர் வற்றுப் பெருக்குகள் முறையே ஏற்படுகின்றன. இதுவே கடல் உள்வாங்கி கடல் அடித்தளம் விளையாட்டுத் தளமாவதற்குக் காரணமாகும்.
ஓமான் அரசும் ஒவ்வொரு நாளும் ஏற்படும் இரு உயர், இரு தாழ் வற்றுப் பெருக்குகளின் ஆழத்தின் அளவுகளை முன்கூட்டியே மக்களுக்கு அறியத் தருகின்றது. உயர் வற்றுப் பெருக்கு சில வேளை 10 அடிக்கு மேலாகவும் காணப்படும். கடல் உள்வாங்குவதும், அதன் அடித்தளத்தை மக்கள் பாவிப்பதும், பின்னர் கடல் 10 அடிக்கு மேலாக நிரம்புவதும் மிகவும் புதுமையான அனுபவமாகும்.
No comments:
Post a Comment