- அம்ரிதா
ஏயெம்
“அப்புவுக்கு
நன்றாகவே தெரியும் கடலையும் அலைகளையும் லூர்துராசனால் விடமுடியாது என்பது. ஏனெனில் அப்பு
அதிகமாய் போராடியது அவனோடும் கடலோடும்தான்.”
1) சிலர்
மூன்றாம் நிலை அனுபவங்களை அதாவது
ஒருவர் இன்னொருவருக்கும், அவர் அதை இன்னொருவருக்கு
கூறியவற்றை, அனுபவித்தவற்றை பதிவு செய்வார்கள். அல்லது
இரண்டாம் நிலை அனுபவங்களை தங்களுக்கு
இன்னொருவர் கூறிய, அனுபவித்தவைகளை பதிவு
செய்வார்கள். அடுத்தது முதலாம்நிலை அனுபவங்கள், தாங்கள் நேரடியாக ஈடுபட்ட,
கண்டுகளித்த, உணர்ந்த விடயங்களை பதிவு
செய்வார்கள். இந்தக் கடைசி நிலைதான்
உணர்வுபூர்வமானதாகவும் அனுபவபூர்வமானதாகவும் அறிவுபூர்வமானதாகவும் இருக்கும். தமயந்தியின் ஏழு கடற்கன்னிகளும் முதலாம்
நிலை அனுபவங்கள்போல்தான் தெரிகிறது.
2) தமயந்தியின்
ஏழு கடற்கன்னிகளை வாசிக்கத் தொடங்கியபோது அது எனது இதயத்திற்கு
அணித்தாக இருந்தததை உணர்ந்தேன். அத்துடன் அது எனக்கு மிகுந்த
வாசக ஈர்ப்புள்ளதாய் இருந்ததாயும், கவிதைக்கும், உரைநடைக்கும் இடையில் ஒரு மொழி
ஊடாடுவதாயும், உணர்ந்தேன்.
3) நான்
இரு வெவ்வேறு பல்லைக்கழகங்களில் விசேட கற்கை மாணவர்களுக்கு
ஒன்றில் கடல்சார் உயிரியல் (Marine Biology), இன்னொன்றில் கடல்சார்
உயிர்வளங்களின் முகாமைத்துவம் (Marine
Bioresource Management), கடல்சார்
உயிரியலின் பொருளியல் (Economics of Marine
Biology) போன்ற பாடங்களைக் கற்பித்துக் கொடுத்துக் கொண்டும் இதற்கு மெனக்கெட்டுக் கொண்டும்
இருந்த காலையில், ஏழு கடற்கன்னிகள் எனது
கைக்கு கிடைத்தபோது, நான் கற்பித்துக் கொடுக்கும்
பாடங்களின் பிரதிகள் - முற்று முழுதாக – தமயந்தியின்
ஏழு கடற்கன்னிகள் பிரதிதான் என்றும் உணர்ந்து கொண்டேன்.
அதன் காரணமாக அதற்குள் பொதிந்திருந்த
உள்ளடக்கம், மொழி என்பவற்றின் காரணமாகவும்
ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
4) 112 பக்கங்களைக்
கொண்ட (105 பக்கத்தில்) ஆறு சிறிய கன்னிகளையும்,
ஒரு பெரிய கன்னியையும் கொண்ட
ஒரு நேர்கோடற்ற நாவல் என்று சொல்லக்கூடியதுதான்
தமயந்தியின் ஏழு கடற்கன்னிகள் சிறுகதைத்
தொகுதி.
5) முதலாவது
கிற்றார் கிழவன் கன்னி: தொய்ந்து
போயிருக்கும் கம்பிகளைக் கொண்ட கிற்றாரை மீட்டி
இசைக்கும், கிழவனினதும், வாழ்நாளெல்லாம் தன் ஆச்சியை கஸ்டப்படுத்திய
நண்டுச் சம்பல் பாடகனான தனது
அப்புவினதும் அனுபவங்கள் பற்றிய கதை. அப்புவிடம்
ரசிக்க முடியாமல்போன பாடல்களை கிற்றார் கிழவனிடம் ரசித்தான். கிற்றார் இசைக்கும் கிழவனினதும், கதை சொல்லிக்குமான உறவு
மனிதநேய அவலச் சுவை கொண்டதாக
காணப்படுகின்றது. புலம்பெயர்வில் வந்தேறிகள் தேசிய வாதத்தினால் அனுபவிக்கும்
பிரச்சினைகளையும் பேசுகிறாள்.
6) இரண்டாவது
ஏழாற்றுக் கன்னிகள்: கடல் என்பது கடலாருக்கு
ஒரு ஊர் போன்றது. அங்கே
வீதிகள் இருக்கும். குறுக்குச் சந்துக்கள் இருக்கும். அவைகளுக்கு பெயர்களும் இருக்கும். வளமில்லா பாழ்வளவுகள் இருக்கும். வளம் கொண்ட நிலங்களும்
இருக்கும். பள்ளங்கள் இருக்கும், மேடுகளும் இருக்கும். நஞ்சு நிலமும் இருக்கும்,
நல்ல நிலமும் இருக்கும். அவர்கள்
கடலை நிலம் போன்று சிறுசிறு
பிரிவுகளாக பிரித்து அவற்றுக்கு பெயர்களும் வைத்து சிலவேளை பாத்தியதை
கொண்டாடி அவைகளைப் பாவிப்பார்கள். எங்கே பார்த்தாலும் நீலம்
விரவிக் கிடக்கும் என்று எண்ணுகின்ற எமக்கோ
இவைகள் மலைப்பாக இருக்கும்.
இந்த கன்னியில் துல்லியமான கடற்புவியமைப்பு சொல்லப்படுகின்றது. வடக்காள், வடமேற்காள், மேற்காள், தென்மேற்காள், தெற்காள், தென்கிழக்காள், கிழக்காள் என்று கன்னிகளுக்கு பெயரும்
வைத்திருக்கிறார். தங்கிச் செல்லல் மீ;ன்பிடி விளக்கப்படுகிறது மீன்பிடிக்கான
கடல்வளங்கள் அந்நிய நாட்டவர்களால் மனிதாபிமானமின்றி,
கருணையின்றி சிதைக்கப்படுவதை ஒவ்வொரு கடல்கன்னிகளின் சிதைவையும்
வைத்து சிறப்பாக கதை கொண்டுசெல்லப்படுகின்றது.
இந்த ஏழு கடற்கன்னிகளையும் சிதைத்தது,
பின்வரும் ஏழு அரக்கர்களாகத்தான் இருக்க
வேண்டும். 1) இழுவை படகும் இழுவை
வலையும் (Trawling and
trawler), 2) அடித்தளவலை
(Bottom
set net), 3) அதீத அறுவடை (Over exploitation), 4) சிறியகண் வலைகள் பாவித்தல் (Nonselective gears), 5) மொக்சி வலை (Moxy net) 6) வெடிவைத்தலும்
நச்சாக்கலும் (Blasting and
poisoning), 7) கட்டுப்பாடற்ற,
அதீததமான கடல் உயிரிகளை பிடித்தல்.
7) மூன்றாவது
நாச்சிக்குடா எழுபத்தேழு கன்னி: அந்தக் காலத்தில்,
இரத்தமும், சதையுமாக இனங்களுக்கிடையே இருந்த சகவாழ்வு, ஒற்றுமை,
உழைப்பு மீதான சுரண்டல்கள் போன்றவைகளை
பேசுகின்றன. மீன்வளங்கள் குறைந்து, மீன்பிடி குறைந்ததற்கான காரணங்களும் சொல்லப்படுகின்றன. ஒரு வகையில் மாணவர்களுக்கு
மீன்வளமும், மீன்பிடியும் சம்பந்தமாக கற்பித்துக் கொடுக்கக்கூடிய எளிமையான பிரதியோ என்று எனக்கு
எண்ணத் தோன்றுகின்றது. இது கட்டாயம் மொழி
பெயர்க்கப்பட வேண்டும் என்பது திண்ணமான எண்ணமாகும்.
8) நாலாவது
அப்புக் கன்னி: சொந்தங்களுடனும், உறவுகளுடனுமான
வாழ்வின் சிக்கல்கள், தீவு வாழ்வியலின் மாற்றமுடியாத
சாதியக் கட்டடைமைப்புகள், இலங்கைத்தீவின் இனத்துவப் பிரச்சினைகள் பற்றி பேசுகின்றாள். இறந்து
போன அப்புவை நிகழ்காலத்திற்கு அழைத்துவந்து,
இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒப்பீடு செய்கிறார். அதில்
கதை சொல்லி வாழும் நிகழ்காலத்தின்
போதாமைகள் தெரிகின்றன.
9) ஐந்தாவது
கன்னி தொள்ளாயிரத்துக்கு அதிகமான சரிகளும், இரண்டாயிரத்திற்கு
அதிகமான காயங்களும்: எப்போதோ நடக்கவிருந்த பெரும்பிரளயத்தை
அப்போதே சரியாக சொன்னமாதிரி திருவிவிலிய
திருப்பாடல்களை சரியான இடத்தில் கோர்த்துவிட்டு,
2009 பெரும்பிரளயக்காரர்களையம்
அதனுடன் கோர்த்துவிட்டிருக்கிறார். மாஸ்டர்மார் ஒன்றரைக் கட்டைகளுக்கு அப்பாலுள்ள வெள்ளாள வீட்டில்தான் தங்களுக்கு
குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வரவேண்டும்
என்று மாணவர்களை பணிப்பது கொடுமையென்றால், அதை மாணவர்கள் எழுத்து
வரும்போது, அதில் கொஞ்சத்தை குடித்து
அதற்குள் எச்சில் துப்பி, மழை
நீரை நிறைத்து வருவது அடாவடி குசும்பாக
இருக்கிறது. யுத்த அலைந்துழல்வு வாழ்க்கையும்,
கடைசி யுத்த அரசியலும், இயக்கங்களின்
பம்மாத்து, இடப்பயெர்வின் கொடுமைகள், நிறைவேறாத மெல்லிய சோகம் கப்பிய
ஒரு காதல் போன்றவைகள் மனதை
நெருக்குகின்றன.
10) ஆறாவது
மண்டா கன்னி.: தனது தகப்பனின்
ஏழு நண்பர்களினூடாக தீவு வாழ்வியலின் சாதிக்கட்டமைப்பு,
சாதிக்கலவரம், சாதி அரசியல், கலை
கலாச்சாரம், மத ஸ்தாபன சுரண்டல்கள்,
இயக்கங்கள் செய்த அடாவடிகள், அப்போது
இனங்களுக்கடையே நிலவிய இனசௌஜன்யம்;, தந்தையின்
நண்பர்கள் ஏழு பேரையும் ஒவ்வொருவராக
தின்ற போரின் அவலங்கள் போன்றனவற்றை
பதிவுசெய்துகொண்டு அல்லது போரின் கதையை
தந்தையின் நண்பர்கள் ஒவ்வொருவரினதும் பலிகொடுப்புகளுடன் பதிவுசெய்து கொண்டு இந்தக் கன்னி
நகருகிறாள்.
11) ஏழாவது
எட்டாம் பிரசங்க கன்னி, பெரிய
கன்னி: மீண்டும் கற்பனைக்கும். நிஜத்திற்கும் இடையில் தனது இறந்து
போன அப்பாவையும், பவுல் புரூனோவையும் அழைத்து
உரையாடல்கள் நடாத்தி நிகழ்காலத்திற்கும், இறந்த
காலத்திற்குமான மாறிப் போயிருந்தவைகள், மாறிக்கொண்டிருப்பவைகள்
பற்றி ஒரு தத்துவ விசாரனை
செய்கிறாள். கலவா மீன் வேட்டை
மிகுந்த திறத்துடனும், அதன் வேட்டைக் கருவி
மிகுந்த நுட்பத்துடனும் இங்கு தொய்வின்றி விளக்கப்படுகின்றன.
ஆண்டாண்டு காலமாக தாங்கள் வாழ்ந்து
வந்த தங்கள் சொந்த மண்ணிலிருந்து
துரத்தப்பட்ட முஸ்லிம்கள் மீதான பச்சாதாபம், முஸ்லிம்
மக்களின் வெளியேற்றம், முபாரக் அலி நாநாவின்
கதை, விநாயகமூர்த்திpயன் கதை, கடலார்
வாழ்வியல், தொழில்முறைகள், மதத்தின் பெயரால் நடந்தேறும் வாதைகள்,
சுரண்டல்கள், சாதியின் பெயரால் நடந்தேறும் அடாத்துகள்;,
நன்னீர் உவநீராதல் போன்ற சுற்றுச்கூழல் பிரச்சினைகள்
போன்றவைகளையும் பதிவு செய்து கொண்டு
போகிறாள் இந்தக் கன்னி.
12) தமயந்தியின்
ஏழு கடற்கன்னிகள் மொத்தத்திலே; நான் ஏற்கனவே கூறியது
போன்று ஏழு அத்தியாயங்களைக் கொண்ட
ஒரு நாவல் போன்றுதான் தெரிகிறது.
ஏனெனில் அத்தியாயங்களுக்கிடையே தருக்க ரீதியான தொடர்புகளும்
பாத்திரங்களுக்கிடையேயான பனுவலிடைத் தொடர்புகளும் அவதானிக்கப்படுகின்றன.
13) இந்த
“நாவலில்” என்னை மிகவும் கவர்ந்த
முக்கிய விடயம், இந்தக கன்னிகள்
பயன்படுத்தியிருக்கும், கொப்பர்பெட்டி, சமா வைக்க, களங்கண்டி
வலைகள், பணிவு கடல், சிறு
முருகைக் கொத்தை, ஆனித்தூக்க பருவம்,
தாணையம், அடி சோளகக் காலம்,
அறக்கொட்டியான் வலைகள், அள்ளுக்கொள்ளை, பெரிய
முனங்கு, குறண்டியபடி, அடியடினடித்தல், அமாவாசை அவதி, கடிப்பிழுப்பது,
கட்டாகட்டியாக, ஒண்டடி மண்டடி, கடிப்பு
தட்டி, பறியெடுத்துப் போதல், தாலியறயும், புருவத்தோரியும்,
அணியம், கடையால், வாரி, தும்புக் கண்ணாடி,
கலப்பத்துக்குள்ளாதல், தறப்பாழ், களிகம்பு, நுபை;பு, கிணாய்வச்சுக்கொண்டு,
நெத்திமுட்டாக, மாலைவெள்ளி, கப்பல் வெள்ளி, மூவிராசாக்கள்
வெள்ளி, ஆறாம் மீன் கூட்டம்,
செட்டியை கொன்ற வெள்ளி, அடிவெள்ளி,
பொந்துபொட்டு, வங்கு, தோட்டுப்பறி, அன்னியக்கெட்ட,
அள்ளுக்கொள்ளு, வேகரங் கொண்டு, புடுங்குப்பாடு,
உறண்டையன் போன்ற கடலமணக்கும் நூற்றுக்கணக்கான
சொற்கள் எனக்க புதிதாக இருந்தன.
14) அத்துடன்
விளை, காடன் சிறையா, கருங்கண்ணிப்பாரை,
சுறா, பாற்சுறா, கொடிவாழை, செங்கடாப்பாரை, கணவாய், குஞ்சுக் கணவாய்,
வெள்ளோரா, பொடிவெள்ளொட்டி, பாட்டோரா, கொய், காரற்குஞ்சுகள், திருக்கை,
கும்புளாபாரை, கடலட்டை, சுடுகீளி, முத்து, பவளம், நெடுமுரல்,
கலவாய், சங்கு, வடம், நாவடம்,
சிங்க இறால், ஆஞ்சாளை, அதழ்,
நண்டு, குட்டுறூ, தாமரை காத்தான் போன்ற
கடல் மீன்கள், விலங்குகளையும் பதிவு செய்திருக்கின்றார்.
15) தென்னை,
பனை, கிழுவை, பூவரசு, சாதாளை,
ஈச்சை, ஊல்நெல்லி, கறுவா, மா, இலந்தை,
வெங்காயம், மிழகாங், சாதாளை, வாட்டாளை, முள்ளிக்கொடி,
இசங்கு, கிளாச்சி, கண்ணா, குண்டுமணி, வீளி,
வீச்சுழாத்தி, புங்கை, ஆக்கிரமிப்பாளர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட முள்மரப்பறுகு போன்றவைகளும்
பதியப்பட்டுள்ளன.
16) இதனை
விடுத்து, மீன்பிடித் தொழிலோடும், மீன்பிடி உபகரணங்களோடும், தீவகத்தினதும், கடலின் குறும் பிராந்தியங்களினதும்
புவியியலோடும், கடலார் வாழ்வியலோடும் சார்ந்த
பன் நூற்றுக் கணக்கான சொற்களை கடற்கன்னிகள்
கொண்டிருக்கிறார்கள். இவைகள் ஆய்வு செய்யப்பட
வேண்டியவைகளும், ஆய்வுக்குட்படுத்த வேண்டியவைகளுமாகும்.
17) மொத்தத்தில்
மீன் இனங்களின் வகை (Species composition), மீன்பிடி முறைகள் (fishing), மீன்பிடிக் கலகங்கள் (fishing craft), கடற் சுற்றுச்சூழல் (Marine environment), நீரோட்டம் (Current), கடல் மாசடைதல் (Marine pollution), கடல்சார் உயிர் வளங்களின் முகாமைத்துவம்
(Marine
Bioresource Management), உயிரினபல்வகைமை
பாதுகாப்பு பற்றிய சுதேச அறிவ
(Indigenous
knowledge on conservation of Biological diversity conservation), மற்றும்
கடலார் சமூக, பொருளாதார, தத்துவ,
கலை, இலக்கிய, மொழி போன்ற விடயங்களை
ஏழு கடற்கன்னிகள் பொதிந்து வைத்திருந்ததற்காகவும், ஏழு கடற்கன்னிகள் மிகவும்
ஆழமாக ஆய்வு செய்யப்படவேண்டும், அது
மொழிமாற்றம் செய்யப்பட்டு யாமறிந்த இன்பத்தை மற்றையோரும் அறிய வேண்டும். பாத்திரங்களுக்கிடையேயான
பனுவலிடைத் தொடர்புகளும், அத்தியாயங்களுக்கிடையே தருக்க ரீதியான தொடர்புகளும்,
நிலத்திடை தொடர்புகளும், தேவையானபோது காலம் தேவையான இடத்தில்
சுருங்கி பின் விரிதலும் ஏழு
கடற்கன்னிகள் நேர்கோடற்ற நாவல் என்பதை மேலும்
நிறுவ முயற்சிக்கின்றன என்பது எனது தனிப்பட்ட
கருத்தென்றால் அது மிகையல்ல.