Saturday, July 31, 2021

தொலைதலின் இனிமை – 09


 -ஏ.எம். றியாஸ் அகமட்

பரப்பி வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நைல் முதலையின் மேற்புறத்தைநோக்கி சிறு கறுப்பு பூச்சியொன்று முன்னங்கால் வழியாக முதுகு நோக்கி மெதுவாக நகவர்வது போன்று, வாகனம் சிவப்பும், மஞ்சளும் கலந்த செம்மஞ்கள் மலைகளில் தொடர்ச்சியாக ஏறிக்கொண்டே இருந்தது.

இவ்வாறே பல வழிகளைக் கடந்து மென்மையான சரிவுள்ள ஒரு சிறிய சமநிலத்தை அடைந்தது. அங்கே பாதையின் அருகில் ஒரு சிறிய கட்டடம். அதனைக் கடந்தால் பாதை இரண்டாகக் கிளைக்கின்றது. இடது பக்கம் ஒரு பாதை. மற்றது நேராகச் செல்லும் பாதை. எதைத் தேர்ந்தெடுப்பது. கூகிள் நேராக போகச் செல்கின்றது. நேராகப் போகத் தொடங்கியபோது ஒரு இடத்தில் தகரத்தால் மறைத்த, கட்டட வேலைகள் நடந்துவிட்டிருந்த, இன்னும் கூரைகள் போடப்படாத, கம்பிகள் மட்டும் நீட்டிக் கொண்டிருப்பது தெரிந்த ஒரு இடம் வந்தது. அங்கே அறபியிலும், ஆங்கிலத்திலும் ஒரு பலகையை மாட்டியிருந்தார்கள்;. ஆங்கிலத்தில் கல்வி அமைச்சு என்றிருந்தது. யாருமற்ற இந்த மலைப் பாலையில் யாருக்கு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே இந்த மலைப் பாலையில் சிதறுண்டு கிடக்கும் மலைக் கிராமங்களின் பிள்ளைகளுக்கான ஒரு பாடசாலையாக அல்லது தொழில்நுட்பக் கல்லூரியாகவும் இருக்கலாம்.

அப்போது இடது பக்கமிருந்து, அந்தக் கட்டடத் தொகுதியிலிருந்து வில்லிலிருந்து ஏவிவிடப்பட்ட அம்புபோல வெள்ளைநிற ரொயாற்றா பிக்கப் ட்றக், எங்களை நோக்கி புழுதியைக் கிளப்பி பறந்து வந்தது. கட்டடத்திற்கும் எங்களுக்கும் 150 மீற்றர் தூரம் இருக்கும். எங்களுக்கு கொஞ்சம் கலவரமாகத் தொடங்கியது. வாகனத்தை நிறுத்தினார்கள். அறபி உடுப்பில் இருவர். அதற்குள் இருந்தவாறே எங்களைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் பிழையான பாதையில் செல்லுகின்றோம் என்றும் மீண்டும் வந்த வழியே திரும்பி பாதை இரண்டாகக் கிளைக்கும் இடது பக்கம் செல்லுமாறும், அந்தச் சிறிய கட்டடம் பள்ளிவாசல் என்றும் கூறினார்கள். பின்னர் அவர்கள் கோரிக்கைகள் அல்லது உதவிகள் ஒன்றை முன்வைத்தார்கள். முதலாவது தங்களது இருவரை நாங்கள் செல்லும் பாதையிலுள்ள மலைக்கிராமத்தில் விடவேண்டும் என்றார்கள். இரண்டாவதைக் கேட்ட எங்களுக்கு தூக்கிவாரிப் போட்டது.

'பசிக்கிறது. ஏதாவது இருந்தால் தாருங்கள்' என்று கேட்டார்கள். எங்களை விளங்கப்படுத்தினோம். ஒன்றரை மணிப் பயணத்திற்கு தயாராகி வந்து, நான்கரை மணித்தியாலமாக தத்தளித்துக்கொண்டிருப்பதை. எங்களிடம் நொறுக்குத் தீனிகள்தான் இருந்தன. இருந்ததைக் கொடுத்தோம். உண்மையில் இந்தப் பக்கம் வருபவர்கள் ஐந்து ஆறு நாட்களுக்கு தேவையான உணவு, நீர், மருந்து, உடை, அரசாங்க அனுமதி, வழிகாட்டிகள் போன்றவைகளுடன்தான் வருவது வழக்கம். அதனை மனதில் வைத்துத்தான் ஒருவேளை கேட்டிருப்பார்களோ தெரியாது.

அவர்கள் கூறியபடி திரும்பிச் சென்று இடது பக்கம் திரும்புவதற்கு முன்வாகனத்தை நிறுத்தி பள்ளிவாசலுக்கு சென்றோம். அங்கே பள்ளிவாசலெனப்பட்டது ஒரு மிகச் சிறிய ஒரு கட்டடம். (படத்தில் உள்ளது). ஒரு ஐந்து அல்லது ஆறு பேர்தான் ஒரே நேரத்தில் தொழலாம். எங்களைப் போன்ற ஏதிலிப் பயணிகளுக்காக ஆண்களுக்கு வேறு, பெண்களுக்கு வேறாக கழுவல் அறைகளையும் வைத்திருந்தார்கள். டிஸ்பன்சரில் குளிர்ந்த நீரையும் வைத்திருந்தார்கள். எங்கள் தேவைகளை நாங்கள் முடித்துக்கொண்டோம்.

அப்போது உரப் பையொன்றுடன் அறபி உடை அணிந்து இருந்த ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒருவர் எங்களை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தார். எங்களுக்கு கொஞ்சம் கலவரமாகிவிட்டது. உடனே என்னையும், சகலனையும் தவிர மற்ற எல்லோரும் வாகனத்திற்குள் ஏறிக்கொண்டனர். எங்களிடம் இரு கோரிக்கைகள் அல்லது உதவிகளை முன்வைத்தார். (முன்னைய அதே கோரிக்கைகள். அவர்கள் சொன்னது இவர்களைத்தார்). ஒன்று 'தாங்கள் இருவர் இருக்கிறோம். செல்லும் வழியிலுள்ள ஒரு கிராமத்தில் எங்களை விட வேண்டும்';, மற்றது 'பசிக்கிறது. சாப்பிட ஏதாவது தாருங்கள்' என்றார். கவர்ச்சியான சிவந்த அறபி போல் இருந்தாலும், அவர் முகம் பசியால் வாடியிருந்தது. அவர் ஒரு ஓமானியாக இருக்கலாம் அல்லது வேலைக்கு வந்த வெளிநாட்டவராகவும் இருக்கலாம். எங்களிடம் இருந்த முறுக்குகளையும், குளிர்பானத்தையும் கொடுத்தோம். பசிக்காக சாப்பிட்டார். ஆனால் அவருக்கு அவைகள் ஒன்றும் பிடிக்கவில்லை என்று புரிந்தது. வாகனத்தில் அவர்களை ஏற்றிச் செல்வதற்கு இடமில்லை என்றோம். மீண்டும், மீண்டும் வற்புறுத்தினார். இறுதியில் எங்கள் முடிவை ஏற்றுக்கொண்டார். அவரும் நாங்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்ற வழியைக் காட்டித் தந்தார். இந்தக் களேபரத்தில் அந்த ஊரின் பெயர் விபரங்களை திரட்டிக்கொள்ள முடியவில்லை. எடுத்த புகைப்படங்களும் ஒன்றைத்தவிர மற்றையவை எல்லாம் அழிந்துவிட்டன. படத்தில் இருக்கும் கட்டடத்தில் உள்ள அறபி எழுத்துக்களில் ஊரின் பெயர் விபரங்கள் ஏதாவது இருக்குமென்ற நம்பிக்கையில் நண்பன் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பீ.எம்.எம். இர்பானுக்கு படத்தை அனுப்பி விபரத்தை கேட்டேன். சிரிப்பு வந்தது. 'தயவுசெய்து கதவைத் திறந்து வைக்க வேண்டாம்' .

ஓமான் 4.4 மில்லியன் மக்கள் சனத்தொகையைக் கொண்டது. அவற்றில் 58.8 சதவீதம் ஓமானிகளும், 44.2 சதவீதமானோர் அவர்களுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட வெளிநாட்டவர்களுமாகும். ஓமானின் தனிநபர் தலாவருமானம் 46584 அமெரிக்க டொலர்களாகும். இலங்கையைவிட ஐந்து மடங்கு பரப்பளவும், 12 மடங்கு தனிநபர் வருமானமும், ஐந்தில் ஒரு பங்கு சனத்தொகையையும் கொண்ட ஓமானின் வருடாந்த மொத்தத் தேசிய உற்பத்தி 200 பில்லியன் அமரிக்க டொலர்களாகும். பொருளாதார வளர்ச்சி வேகம் 2.1 சதவீதமாகும். மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு, திரவ பெற்றோலிய எரிவாயு, கட்டடத் தொழில்கள், சீமெந்து உற்பத்தி, செம்பு, உருக்கு, இரசாயனப் பொருட்கள், கண்ணாடிஇழைநார் போன்றவைகளின் உற்பத்திகள் வருமானங்களுக்கான பிரதான இடங்களைப் பிடிக்கின்றன.

குடிமக்களின் நலன்புரித் தேவைகளுக்கு, அதிகளவு செலவு செய்யும் உலகிலுள்ள நாடுகளில் ஓமானும் ஒன்றாகும். உலகிலுள்ள முதல் ஐந்த சதவீத நாடுகளில். தங்கள் குடிமக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை அளிக்கும் நாடுகளில் இந்த நாடும் ஒன்றாகும். இங்கு வேலையற்றோர் வீதம் 3.1 சதவீதமாகும்.

உலகின் 38வது அதிக வருமானமுள்ள, 59 வது அதிக பொருட்களையும், சேவைகளையும் நுகர்வு செய்கின்ற ஒரு நாடு. சிறுவர் நலன், மக்கள் வலூவூட்டல் சுட்டி (82.08) அதிகமுள்ள ஒரு நாடு.

இவ்வாறுள்ள ஒரு நாட்டில் உள்ளவர்களுக்கு பசியா?. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இந்த யாருமற்ற வசதிகளிலிருந்து அதிக தூரமுள்ள மலைப் பாலையில் இரு வாரங்களுக்கு ஒரு தடவை அல்லது மாத்திற்கு ஒரு தடவை அவர்களின் வேலைகொள்வோர்களினால் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கலாம். அவை உரிய காலத்திற்கு முன் தீர்ந்திருக்கலாம.; அல்லது உரிய காலத்திற்கு வருவதற்கு கொஞ்சம் தாமதமாயிருக்கலாம்.

சமூகவியலில் ஒரு விடயம் இருக்கிறது. அதனை ஆங்கிலத்தில் றிலேசன்ஸ்-இன்-பிளேஸ் என்பார்கள். மற்றவர்களை விருந்தோம்புவதற்கும், பொருட்களை கொடுத்து, கதைத்து பேசி அனுசரணை செய்வதற்கும் ஓமானிக்கு நிகர் அவர்களே. அது அவர்களின் ஆயிரம் வருடங்களான பழக்கம். மண்ணின் மைந்தர்களின் மனம். அந்த வகையில் தூரத்திலிருந்து எந்த வாகனம் வந்தாலும் இப்படிப்பட்ட நிலையிலுள்ள வெளிநாட்டிலிருந்து வேலைக்கு வந்தவர்கள் கேட்பதும் வழக்கம். அப்படி அவர்கள் கேட்பார்கள் என்று நினைத்து அதிக பொருட்களை எடுத்து வந்து கொடுப்பதும் வழக்கம். இங்கே வெட்கம் இல்லை. ஏதிலிகளுக்கான தர்மம் அதிக நன்மை என்று நினைக்கின்றார்கள்.

ஆனால் ஒரு விடயம் விளங்கியது. உணவு என்பது எப்போதும் பணத்துடனோ, அல்லது வசதிகளுடனோ சம்பந்தப்பட்டது அல்ல. அவையெல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. பணத்தினாலோ அல்லது வசதிகளினாலோ எல்லாவற்றையும், எப்போதும் வாங்க முடியாது என்று புரிந்தது.

அவர்கள் வழிகாட்டியது போல், பாதை இரண்டாகக் கிளைத்த இடது பக்கத்தில் வாகனம் திரும்பிச் சென்று, மெல்ல மெல்ல ஏறிக்கொண்டிருந்தது.

 







No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...