Thursday, June 2, 2016

சமீபகாலமாக இலங்கையிலும், மற்றும் சில நாடுகளிலும் இடம் பெறும் அனர்த்தங்கள் மனிதனால் தூண்டப்பட்டவையாக இருக்குமா?



சமீபகாலமாக இலங்கையிலும், மற்றும் சில நாடுகளிலும் இடம் பெறும் அனர்த்தங்கள் மனிதனால் தூண்டப்பட்டவையாக இருக்குமா?

-.எம் றியாஸ் அகமட், சிரேஸ்ட விரிவுரையாயளர், கிழக்குப் பல்கலைக்கழகம்



1.            அறிமுகம்:
அயன்மண்டலம்:
வளி மண்டலமானது மாறன்மண்டலம், படைமண்டலம், இடைமண்டலம், வெப்பமண்டலம், மேன்மண்டலம் போன்ற படைகளை கீழிருந்து மேலாக கொண்டிருக்கின்றது. அயன் மண்டலமானது வளிமண்டலத்திற்கு மேல் காணப்படுகின்றது. இந்த அயன்மண்டலமானது காந்தமண்டலத்திற்கும் வளிமண்டலத்திற்கும் இடையில் அமைந்துள்ளது என்று பொதுவாகக் கொள்ளலாம். இங்கு அதிக செறிவுகளில் அயன்களும் சுயாதீன இலத்திரன்களும் காணப்படுகின்றன. அயன் எனப்படுவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இலத்திரன்களை ஏற்பதன் மூலம் அல்லது இழப்பதன் மூலம் தோன்றுகின்ற ஏற்றம் பெற்ற அணுவாகும். அயன்மண்டலத்தில் காணப்படும் மின்துணிக்கைகளுக்க மின்னைக் கடத்தும் ஆற்றலுண்டு. இந்த அயன்மண்டலமே வானொலி தொலைத்தொடர்பில் பாரிய பங்கை வகிக்கின்றது. அயன்மண்டலமானது வானொலி அலைகளை மீண்டும் பூமிக்கு தெறிப்படையச் செய்கின்றது.


படம்.1. வளிமண்டலத்தின் படைகளும், அயன் மண்டலமும்



ஹார்ப் (HAARP) திட்டம்;
ஹார்ப் திட்டம் (HAARP =The High Frequency Active Auroral Research Program ) (உயர்வலு மீடிறன் ஒளிமுகில் ஆய்வுத் திட்டம் என்று அண்ணளவாக மொழி பெயர்க்கலாம்) என்பது அயன்மண்டலத்துடன் சம்பந்தப்பட்ட ஆய்வுத் திட்டமாகும். இது 1990களின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு ஐக்கிய அமரிக்க நாடுகளின் விமானப் படையும், கடற்படையும், அலாஸ்கா பல்கலைக்கழகமும் (மேலும் 15க்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களையும் உள்வாங்கிய நிலையில்), பாதுகாப்பு உயர் ஆய்வுகள் நிறுவனமும் இதற்கு நிதி வழங்குகின்றன. இதன் பிரதான நிலையம் அலாஸ்காவிலுள்ள ககோனா என்னும் பிரதேசத்தில் விமானப் படைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. அயன்மண்டலத்தை வெப்பமாக்கும் கட்டமைப்புக்கள்; வட நோர்வேயிலும், போடொறிகோவிலும்;, ரஷ்யாவிலும் உள்ளன
வளிமண்டலத்திற்கு அப்பாலுள்ள அயன் மண்டலத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளுதலே ஹார்ப் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அத்துடன் வானொலி தொலைத்தொடர்பு மற்றும் கண்காணிப்பு சேவைகள் போன்றவற்றோடு தொடர்புபட்ட தொழிநுட்பங்களை விருத்தி செய்வதற்கு அதனை ஆராய்வதும் இன்னொரு நோக்கமாகும்.

மிகப்பெரிய அன்ரனாக்கள், கோபுரங்களோடு (180 அன்ரனாக்கள் (12 x 15 அலகுகள்) செவ்வக வடிவில் 33 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளன), கூடிய இந்த பெரிய அமைப்பில், அயன்மண்டல ஆய்வுக்கான உபகரணம், உயர்மீடிறன் பட்டையை உருவாக்கத் தேவையான உயர்வலு மீடிறன் கொண்ட வானொலி ரான்ஸ்மிட்டர் கருவி, வீஎச்எப்-யுஎச்எப் ராடார் கருவிகள், போன்ற பல கருவிகளைக் கொண்ட  பல்வேறு அமைப்புக்களும், தொழில்நுட்பங்களும் ஹார்ப் ஆராய்ச்சி நிலையத்தில் காணப்படுகின்றது. இதன் மூலம் அயன்மண்டலத்தின் குறிப்பிட்ட பகுதியை தற்காலிக அருட்டி, சக்தியேற்றி, பின் அந்த அருட்டப்பட்ட பிரதேசத்தின் பௌதீக செயற்பாடுகளை ஆராய்வதற்கு இந்த கருவிகளைப் பயன்படுத்துகின்றார்கள்.


படம்.2. ஹார்ப் திட்டம்


படம்.3. ஹார்ப் திட்டம்


இந்த திட்டத்தின் நன்மைகளாக தொலைத்தொடர்பு, ஜீபிஎஸ் தொடர்பாடல் போன்றவற்றை பாதுகாப்புதுறைக்காகவும், மனித பாவனைக்காகவும் வினைத்திறனுள்ளதாக விருத்தி செய்தல், அதில் தற்போதுள்ள பிரச்சினைகளைக் களைதல், நீருக்கடியிலும், நிலத்துக்கடியிலும் உள்ளவற்றை ஆய்வு செய்தலும், அதனை பிரயோகித்தலும், கடலுக்குள்ளான தொலைத் தொடர்பு, நிலத்துக்கு அடியிலுள்ள கனிப்பொருள்களை கண்டுபிடித்தல் போன்றவற்றைக் கூறலாம்.
இத்திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலேயே இதற்கு பல்வேறு விமர்சனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பிவிட்டிருந்தன. ஆனால் இதற்கு எதிராக தோன்றிய சர்ச்சைகள் அனைத்தையும்                 ஹார்ப் நிர்வாகம் இது கற்பனைக்;கு எட்டாத கட்டுக்கதை என்று நிராகரிப்பதுடன், அவர்களுடைய ஆய்வுகள், திட்டங்கள் வெளிப்படைத் தன்மையானது என்றும், ஆய்வின் முடிவுகள் காலத்திற்கு காலம் நியமமான விஞ்ஞான சஞ்சிகைககளில் கட்டுரைகளாக வெளவிடப்படுகின்றனவென்றும்யாரும் எந்தநேரத்திலும், எப்போதும் அதன் உண்மைத் தன்மையை அறிவதற்கான வாய்ப்புக்கள் கொடுக்கபடுமென்றும் கூறுகின்றது.
2.            ஹார்ப் திட்டத்திற்கு எதிரான சர்ச்சைகள்:
ஹார்ப் திட்டம் என்பது அயன்மண்டல, மின்காந்த, மற்றும் புவி போன்றனவற்றின் மின்காந்தப் புலங்களில் மாறுதல்களை ஏற்படுத்தி அதன் மூலம் சூழலில் மாறுதல்களை தோற்றுவித்து அதனை ஒரு ஆயுதமாகப் பாவிக்கும் திட்டமே என்று இதற்கு எதிரானவர்கள் கூறுகின்றாhர்கள்.
அதாவது இது ஒரு சதித்திட்டம் என்று வாதிடுகின்றார்கள். இந்த திட்டத்திற்கு மறைமுகமான நோக்கம் ஒன்று இருக்க வேண்டும் என்றும், அந்த நோக்கம் வெள்ளப்பெருக்கு, வறட்சி, புயல், சூறாவளி, இடி, மின்னல், புவிநடுக்கம் போன்ற அனர்த்தங்களை தமக்குப் பிடிக்காத நாடுகளில் ஏவிவிடுதல் (உதாரணம்: பாக்கிஸ்தான், ஹைட்டி, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள்), மின்சாரத் தடையை உருவாக்கி ஒரு நாட்டை ஸ்த்தம்பிக்கச் செய்தல், விமானங்களுக்கு காந்தப் புலத்தினால் தடைகளை ஏற்படுத்தி அவைகளை கீழே விழச் செய்தல், விண்ணில் மற்ற நாடுகளினால் ஏவப்பட்டுள்ள செய்மதிகளை செயலிழக்கச் செய்தல், ஒரு நாட்டின் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் மக்களின் மனநிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், உயிருக்கு ஆபத்தான நோய்களையும் மற்றும், மன நோய்களையும் ஏற்படுத்தல் போன்றவற்றைக் கூறலாம்.
இதற்கு எதிராக சூழல் ஆரோக்கிய அல்லது நலன் ஆய்வாளரும் செயற்பாட்டாளரும், Planet Earth: The Latest Weapon of War-A Critical Study into the Military and the Environment என்ற நூலின் ஆசிரியருமான கலாநிதி பெட்றல் றொசாலி பல்வேறு காரணங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கிறார். இரகசியமாக செய்யப்படும் இராணுவச் சோதனைகள் புவியின் கட்டுமானங்களை சீர்குலைக்கம் சாத்தியங்கள் இருப்பதாகவும், இந்த ஆய்வுகளின் காரணமாக நில நடுக்கங்கள் அதிகரித்துள்ளனவென்றும் கூறுகிறார். மேலும் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் பாதுகாப்பு துறையானது பூமியையும், அதன் அமைப்புக்களையும் போர் ஆயுதங்களாக உபயோகித்துக் கொண்டிருக்கின்றது. இந்தப் பரிசோதனைகளின் காரணமாக பூமியின் வளிமண்டலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் காரணமாக  பூமியின் சமநிலையில் பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஹார்ப் திட்டத்தின் பிரதான இலக்காக உள்ள அயன்மண்டலம்தான் விண்வெளியிலிருந்து வருகின்ற துணிக்கைகளிலிருந்தும், அபாயகரமான கதிர்வீச்சுக்களிலிருந்தும்  பூமியைப் பாதுகாக்கின்றது. ஹார்ப் திட்டத்தின் குறிக்கோள்களில் இன்னும் ஒன்று, அதி குறைந்த மீடிறன் அலைகளை (Extremely Low Frequency Waves (ELF)) உருவாக்குவதும் ஒன்றாகும். இந்த அலைகள் கடினமான பூமியையும், கடல்களையும் ஊடுருவிச் செல்லக்கூடிய ஆற்றலுள்ளவையாகும். கடலின் ஆழமான பகுதிகளிலுள்ள நீர்மூழ்கிக் கப்பல்களோடு தொடர்பு கொள்வதற்கு இந்த அலைகள் உதவுகின்றன. அலை பரப்பிகளினுர்டாக அனுப்பப்படும் இந்த அலைகள் அயன்மண்டலத்தை வெப்பமாக்கி குவிவாடி விளைவொன்றை ஒன்றை உருவாக்கும் சக்திகொண்டவை. இந்த ஆடியானது சக்தியை மீண்டும் பூமிக்கு அனுப்பக்கூடிய திறனைக் கொண்டதாகையால்;, இதனைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இலக்குகளை அழிக்க முடியும்.
ஹார்ப் ஆய்பு அமைப்புக்கள் பூமியையும், வளிமண்டலத்தையும் அதிர்வடையச் செய்யும் சக்தியைக் கொண்டிருப்பதற்கான சாத்தியத்தைக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் புவிநடுக்கங்களை ஏற்படுத்த முடியும் என்று கருதப்படுகின்றது. எனவே தற்போது ஏற்படும் அதிர்வுகளிலும், நிலநடுக்கங்களும் இயற்கையாக நிகழ்கின்றனவா அல்லது வேறுவகையில் செயற்கையா தூண்டப்பட்டனவாக இருக்கமான என்ற வாதங்கள் தற்போது உலகில் சென்று கொண்டிருக்கின்றன. தற்போது உலகில் நடக்கின்ற அதிர்வுகள் பலவற்றிற்கு ஹார்ப் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அதி குறைவான மீடிறன் அலைகளை உருவாக்கும் போதும், அவைகளை பரம்பச் செய்யும் போதும் நில நடுக்கங்களையும், இயற்கைக்குப் புறம்பான வானிலைகளையும் தவிர, நேரடியான வானிலை விளைவுகளை ஏற்படுத்தும் சக்தி கொண்டவையாயும் இருக்கும் சாத்தியத்தையும் கொண்டிருக்கின்றன.
ஹார்ப் ஆய்வு அமைப்புகளினால் வறட்சியான பிரதேசங்களில் பெருமழையை பொழியச் செய்ய முடியும். வெள்ளப்பெருக்கால் அதிகமாக பாதிக்கப்படும் பிரதேசங்களில் மழையைக் குறைக்க முடியும். புயற் காற்றுக்களையும், சூறாவளிக் காற்றுக்களையும் விரும்பிய இடங்களுக்கு திருப்பிவிட முடியும். பெரும் புயல்களையும், மழைவீழ்ச்சிகளையும் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளிலிருந்து திசை திருப்பிவிட முடியும்.
இன்னொரு வகையில் கூறப்போனால், ஹார்ப் என்ற இந்த அமெரிக்காவின் உயர்தொழிநுட்பத்தினால் செயற்கையாக நிலநடுக்கங்களையும், அதிக வெப்பநிலையையும், புயல், வெள்ளம், மழைவீழ்ச்சி போன்றவைகளை உருவாக்கி எதிரிநாடுகள் மீது அல்லது ஏதோவொரு இலாபத்திற்காக சில நாடுகளின் மீது ஏவி விட முடியுமா என்ற கேள்விக்கு, பல விஞ்ஞானிகள் இதன் சாத்தியப்பாட்டை ஆமோதித்திருக்கின்றார்கள். ஆனால் இந்த செயற்கையாக சாட்டுதல் செய்யப்பட்ட காலநிலை அனர்த்தங்கள் இயற்கையாக நடந்த ஒரு தோற்றத்தை கொடுக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள மக்களின் மனநிலையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்ற சாத்தியத்தையும் கூறுகின்றனர்.
ஹார்ப் ஆய்வுத்திட்ட நிறுவனத்தினர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் எல்லாம் மனித மனத்தின் கற்பனைக்கு எட்டாத கட்டுக்கதைகள் என்று கூறி ஒரே வரியில் நிராகரித்து விடுகின்றனர். ஆனால் இதற்கெதிரானவர்களோ இதற்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை திரட்டியிருப்பதாக கூறுகின்றனர்.
இராணுவ ஆய்வுகளாலும், பரிசோதனைகளாலும் காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதும், பாதிப்பை ஏற்படுத்துவதும் இன்று நேற்றல்ல (1990 களின் ஆரம்பத்திலிருந்தல்ல) உருவானது. கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்தே அணுகுண்டின் கண்டுபிடிப்புடன் தொடங்கிவிட்டிருந்தது. உதாரணமாக, 1956 வரை அமெரிக்கா (86 தடவைகளும்), ரஷ்யா (15 தடவைகளும்), இங்கிலாந்து (9 தடவைகளும்) நடாத்திய அணுகுண்டுச் சோதனைகள் பூமியைச் சுற்றியுள்ள வென் அலன் கதிர்த் தொழிற்பாட்டு பட்டியை நிரந்தரமாக பாதித்திருக்கின்றன. இன்று வரை அவைகள் பழைய நிலைக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகின்றது. அவைகள் பழைய நிலைக்கு மீண்டும் வர மேலும் பல ஆண்டுகள் எடுக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. மேலும் 1945க்கும் 1970க்கும் இடையில் இடம்பெற்ற அணுகுண்டு பரிசோதனைகளால் 4 சதவீத ஓசோன் படை முற்றாக அழிக்கப்பட்டுள்ளது என்று 1972களின் ஒரு கணக்கீடு சொல்கிறது.

கடந்த 60 ஆண்டுகளாக, சில்வர் அயடைட்டைப் பாவித்து அமரிக்கா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்தரேலியா போன்றவை செயற்கை மழையை உருவாக்கி வருகின்றன. இவர்களிடம் புயல்களை வேறு திசைகளுக்கு மாற்றிவிடும் திட்டமும்  இருந்திருக்கிறது. அமெரிக்கா 1960, 1972 களில் வியட்னாம், லாவோஸ் போன்ற நாடுகளில் தனது இராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக செயற்கை மழையை பொழிவித்ததாக 1971, மார்ச் 18ம் திகதிய வொஷிங்டன் போஸ்ட் குற்றம் சாட்டுகிறது.

தற்போது சீனா, ரஸ்யா போன்ற நாடுகளும் காலநிலையை செயற்கையாக மாற்றி அதனை ஆயுதமாக மாற்றலாமா என்று சிந்திக்கத் தலைப்பட்டுவிட்டதாகத் தோன்றுகின்றது. அண்மையில் அமரிக்காவில் வீசி, பாரியசேதத்தை உண்டுபண்ணிய சாண்டி சூறாவளியானது ஹார்ப் திட்டத்தினால் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகின்றது.

3.            சமீபகாலமாக இலங்கை போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களையும், அனர்த்தங்களையும், பதுமைகளையும் முன்வைத்து:
சமீப காலமாக அதீத மழை, அதீத வெப்பநிலை, அதீத வறட்சி, கரையோரங்களைச் சுற்றி ஆயிரக் கணக்கான கடலுயிரிகள் இறந்தும் உயிருடனும் கரையொதுங்கியமை, அதீத கடல் அரிப்புஅதீத கடற்கொந்தளிப்புகள், பனிப்புகார், விலாங்குகள் படையெடுத்தமை, மீன் மழை, இறால் மழை, தவளை மழை, முருகைக் கல் மழை, சிவப்பு மழை, மஞ்சள் மழை, பச்சை மழை, கறுப்பு மழை, மத்திய மலைநாட்டின் பல மைல்களுக்கு நீளத்திற்கான நிலப் பிளவு, அம்பாறைப் பகுதியில் இதுவரை என்னவென்று காரணம் கண்டுபிடிக்க முடியாத தொடர்ச்சியான நில அதிர்வுகள் இவைகளுக்கு எவை சாத்தியமான காரணங்களாக இருக்கலாம்?

4.            முடிவுரை:
செயற்கையாகத் தூண்டி இயற்கையாக நடந்தது போன்ற தோற்றப்பாடுகளுடன் இருக்கும் மேற்குறிப்பிட்ட விடயங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்று ஹார்ப் ஆய்வுத்திட்ட நிறுவனத்தினர் நிராகரித்து இவைகளை விஞ்ஞான நியமங்கள் ஊடாக நிருபித்துக்காட்டச் கூறினால் வட அமெரிக்க, மேற்கு ஐரோப்பியமயப்பட்ட விஞ்ஞான நியமங்களினூடாக நிருபித்துக் காட்டுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கும். இருட்டறைக்குள் இருக்கும் கறுப்புப் பூனையை தேடி கண்டுபிடிக்க வாய்ப்புகள் தரப்படச் சாத்தியங்கள் குறைவு.

எனவே காலநிலை-ஆயுத-தொழில்நுட்ப ஏகாதிபத்தியம் என்பது குறைத்து மதிப்பிடக்கூடிய விடயமல்ல. அது நவகாலனித்துவச் சூழலில் தன்னை நன்கு விசாலித்து  நிலைநிறுத்தி, தனது வழிக்கு மற்றையவைகளை கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபடும் என்றும், அந்த வகையில் இலங்கை போன்ற நாடுகளுக்கு 'அடங்காத சின்னப் பிள்ளைக்கு செல்லத் தட்டுஎன்றும் கருதப்பட முடியும் என்பதற்கு சாத்தியங்கள் இல்லாமல் இல்லை.




No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...