Thursday, June 2, 2016

காத்தான்குடியில் கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதும் அல்லது கரையொதுங்கி இறப்பதும்.

காத்தான்குடியில் கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதும் அல்லது கரையொதுங்கி இறப்பதும்.
ஏ.எம். றியாஸ் அகமட்,
விலங்கியல் துறை விரிவுரையாளர்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

காத்தான்குடியில் ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்கியதும் அல்லது கரையொதுங்கி இறந்ததும் இரண்டு மூன்று நாட்களாக பல்வேறு தரப்பினரதும் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக இருந்தது.  இவ்வாறு கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதற்கு அல்லது கரையொதுங்கி இறப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நோய்த் தொற்று, காலநிலை மாற்றம், பிழையான அல்லது சட்டவிரோதமான மீன்பிடிமுறைகள் (டைனமைட், சயனைட் மீன்பிடி முறைகள்), இயந்திரப் படகுகள், கப்பல்களிலிருந்து தவறுதலாகவோ அல்லது நோக்கமாகவோ கொட்டிவிடப்படும் இரசானப்பொருட்கள், கடலின் அடித்தளத்தில் புதைக்கப்படும் இரசாயன அணுக்கழிவுகள், இரசாயனக் கழிவுகள், ஆயுதங்களை பாவித்தல் அல்லது பரீட்சித்துப் பார்த்தல் போன்றவைகளைக் கூறலாம் என நினைக்கின்றேன்.


காத்தான்குடி நிகழ்வைப் பொறுத்தவரை இதில் எந்த காரணம் மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நோய் காரணமென்றால், அதற்குரிய அறிகுறிகள் உயிரினங்களில் இருந்திருக்க வேண்டும்;. 

காலநிலை மாற்றம் காரணமென்றால், காலநிலை மாற்றம்தான் காரணம் என்ற இரு சொற்களை சொல்லிவிட்டு இலகுவாக சென்றுவிட முடியாது. சமுத்திரங்களின் மேற்பரப்பு நீரோட்டம் (10 சதவீதமான நீர் இதற்கு உட்படுகின்றது), கீழிருந்து மேற்பக்கமான நீரோட்டம் (மீதி 90 சதவீதம் நீர் இதற்கு உட்படுகின்றது. சமுத்திரங்களின் வெப்பநிலையை மாற்றுவதில் செல்வாக்கு செலுத்துவதும், மீன்களுக்கு அதிக போசணைப் பொருட்கள், உணவுகள் போன்றவற்றைத்; தாங்கிக் கொண்டு வந்து மீன்பிடியை அதிகரிக்கச் செய்வதும் இந்த நீரோட்டம்தான்), இந்த நீரோட்டங்களை உருவாக்கும் சூரிய வெப்பம், காற்று, புவியீர்ப்பு விசை, கொரியோலிஸ் விளைவு போன்றவைகளை வைத்துக் கொண்டு அதனால் சமுத்திரத்தின் வெப்பநிலை (ஒரு வேளை அதிகரிக்கலாம் அல்து குறையலாம்), உவர்த்தன்மை, அதனுடன் விலங்கு அலையுயிரின் அடர்த்தி, ஒட்சிசனின் அடர்த்தி, கடல் உயிரினங்கள் சமுத்திரத்தின் வாழும் பகுதிகள் (அடியில், நடுப்பகுதியில், மேற்பகுதியில்), மற்றும் அதன் உணவு முறைகள் போன்றவைகளை தொடர்புபடுத்தி விளக்கம் கொடுக்க வேண்டும்.

இதனைத் தவிர மற்றையவைகளுக்கும் சாத்தியம் இல்லையென்று எதனையும் நிராகரிக்கவும் முடியாது.

காத்தான்குடி கரைகளில் கடல் உயிரினங்கள் கரையொதுங்குவது போன்ற நிகழ்வுகள் இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்வுகள் அல்ல. கடந்த காலங்களில் அவ்வப்போதும், அண்மைய வருடங்களாக அடிக்கடியும் உலகின் பலபாகங்களிலும் நடைபெறுகின்றன. கடந்த வருடம் ஜனவரி, மார்ச் மாதங்களில் அமரிக்காவின் அர்கன்சாஸ் மாநிலம், ஜனவரியில் அமரிக்காவின் மேரிலான்ட் மாநிலம், இங்கிலாந்தின் தனஸ் பகுதி மற்றும் பிறேசில், நியுசிலாந், சுவீடன் போன்ற பகுதிகளில் கடல் உயிரினங்கள் ஆயிரக் கணக்கில் இறந்து கரையொதுங்கியும் அல்லது கரையொதுங்கி இறந்துமுள்ளன. நோய்கள் காரணமாக இருக்கலாம். வெப்பநிலை உயர்ந்து இருக்கலாம். வெப்பநிலை குறைந்து இருக்கலாம்.  குளிர் நீர் விளைவாயிருக்கலாம். அபாயகரமான கழிவுகள் கடல் அடித்தளங்களில் புதைக்கப்பட்டிருக்கலாம். தவறுதலாக கடலில் வெளிவிடப்பட்ட இரசாயனக் கழிவுகளாக இருக்கலாம் போன்ற உறுதிப்படுத்தப்படாத காரணங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் இது போன்ற நிகழ்வுகளுக்கு தெளிவான காரணங்களும்  முன்வைக்கப்படவில்லை. உறுதியான முடிவுகளும் முன்வைக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான ஊகங்களும், அனுமானங்களும், கொள்கைகளுமே முன்வைக்கப்படுகின்றன. இவைகள் எப்போதும் மர்மமாகவே இருக்கின்றன. 

எனவே இந்த நேரத்தில் நாம் செய்யக்கூடியது, அவதானம், கருதுகோள், பரிசோதனை, கொள்கை போன்ற படிமுறைகளினூடாக மக்களுக்கு விடையைத் தெரிவிப்பதுதான். இதன் நிமித்தம் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், ஆய்வாளர்களுமான பேராசிரியை ஸ்ரான்லி தேவதாசன், ஏ.எம். றியாஸ் அகமட் என்பவர்களால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன.

ஆய்வுகளின் மூலம் விடையைத் தெரிவிப்பதிலுள்ள பிரச்சினை என்னவென்றால் ஊடகப் போட்டி, ஊடகப் பிரபல்யம், நான் முந்தி நீ முந்தி போன்ற காரணங்களால் சிறுபிள்ளைத்தனமான முதிர்ச்சியற்ற அறிக்கைகளை விடுவதே. எனவே இதனைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. அதிலும் ஆய்வாளர்கள் தவிர்த்துக் கொள்வது நல்லது.

இறுதியாக ஒருவிடயம், விலங்குகளின் அசாதாரண நடத்தைக்கும், இயற்கை அனர்த்தங்களின் முன்னறிவிப்பிற்கும் எப்போதும் தொடர்பு இல்லை அல்லது எப்போதும் தொடர்பு இல்லாமலும் இல்லை. ஆனால் இது சம்பந்தப்பட்ட ஆய்வுமுறைகள் இலங்கையில் இன்னும் வளரவில்லை. சீனா போன்ற நாடுகளில் வளர்ந்திருக்கின்றன. ஆனால் எல்லா அசாதாரண நடத்தைகளும் அனர்த்தத்திற்கான முன்னறிவிப்பு என்று கொள்ளமுடியாது. அசாதரண நடத்தைகளை விலங்குகள் காட்டினாலும் (உயிரியல்), மற்றைய துறைகளான வானிலையியல், காலநிலையியல், பௌதிகவியல், இரசாயனவியல், புவியியல் போன்ற துறைகளுடன் சேர்ந்த ஆய்வுகளின் மூலமே அதனை உறதிப்படுத்த முடியும். 

என்னைப் பொறுத்தவரை, இந்த அசாதாரண நடத்தை, சமீபகாலங்களில் உலகில் நடக்கும் சாதாரண நடத்தையில் ஒன்று என்று கருதிக்கொள்வது நன்று என நினைக்கின்றேன்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...