Friday, August 12, 2016

பொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம்:

பொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம்:
                                                                                                                                                                                                          -                                                                                                                                                       -


அம்ரிதா ஏயெம்


ஒரு தலைவனின் தனிமையின் பிரிவின் வலியையும், அதற்கான தலைவியின் பதிலையும் கொண்டமைந்த மென்மையான காதலும,;  அழகிய எதுகைகள், மோனைகள், சொற்பதம், பொருட்பதம் நிறைந்து இன்னிசையில் மனதை மென்மையான தென்றலாய் மயிலிறகாகி வருடும் உணர்வும் கொண்ட பாடல் இது. கேட்க மிகவும் அருமையாக இருந்ததற்கும் கண்ணதாசன் எழுதியது போல இருந்ததற்கும் காரணம் பஞ்சுவும் கண்ணதாசனும் சுமந்த பொது நிறமூர்த்தங்களாகவும் இருக்கலா”.

1)                    பொன்னெழில் பூத்தது புதுவானில்:
எனக்கும் மகளுக்குமான முக்கியமான தொடர்பு ஊடகமே இசைதான்;. இசையினாலேயே துயர்களையும் வலிகளையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்கிறோம். துன்பக் கடலை தாண்டும் போது தோணியாவது கீதம். அந்தக் கடலை தாண்டும் போது மகளுக்கு எதேச்சையாக வந்து வாய்த்ததுதான் கலங்கரை விளக்கத்தின் பொன்னெழில் பூத்தது புதுவானில். ஒரு நாளின் எதேச்சiயான சந்திப்பினில் கவிஞர் ஹசன் மகளின் இந்த சீசனுக்கான பாடலை வினவிக்கொண்டிருந்தார். நான் பொன்னெழில் பூத்தது புதுவானில் என்றேன். அந்தப் பாட்டை எழுதியது யார் என்று கேட்டார். நான் கண்ணதாசன் என்றேன். இல்லை என்று வேறொரு பெயரைச் சொன்னார். அந்தப் பெயருக்கு அப்போதிருந்து என்னில் மதிப்பு கூடத் தொடங்கியது. இதற்கிடையில் யூ டியுபின் புண்ணியத்தில அந்தப்பாட்டின் பல்வேறு பரிமாணங்களுக்கிடையில் பல்வேறு மேடைப்பாடல்கள், மேடை நிகழ்ச்சிகள், இசைக்கருவிகளின் தனி நிகழ்ச்சிகள், கரோக்கிகள்; என எனது ஏழு வயது மகள் பயணம் செய்து முடித்திருந்தது. ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் கேட்டது. பின் பேட்டில் நான் ஆண்குரலிலும் மகள் பெண் குரலிலும் இந்தப் பாட்டை பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டோம்.
                                                                                        
2)                    பஞ்சு அருணாசலம்:
தமிழ்நாட்டின், காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் 1941. ஜூன் 18 ம் திகதி பஞ்சு அருணாசலம் பிறந்தார். பல வெற்றிப் படங்களை தமிழ்த் திரையுலகிற்கு தந்த படஅதிபர் .எல்.சீனிவாசன், கவிஞர் கண்ணதாசன் ஆகிய இருவரினதும் மூத்த சகோதரரின் மகனே இவர். பள்ளியில் படிக்கும் போதே புத்தகங்களை விரும்பிப் படிப்பது, பாடல்களை ரசித்துப் பாடுவது என கலைகளில் ஆர்வம் உள்ளவராக இருந்த இவர், பியூசி முடித்தவுடன் சென்னைக்கு வந்து,; .எல். சீனிவாசனிடம், அவரது ஸ்ருடியோவில் வேலைக்கு சேர்ந்து, கண்ணதாசனின் தென்றல் பத்திரிகையில் சேர்ந்து கதைகள் எழுதி, பின்னர் கண்ணததாசனுக்கு உதவியாளராக இருந்து பல பாடல்கள் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றினார்.

இவரிடம் உதவியாளராக இருந்த செல்வராஜ் எழுதிய கதைக்கு இவர் திரைக்கதை வசனம்  எழுதி  தயாரித்தார். அன்னக்கிளி என்கிற பெயரில் வெளியான இந்தப் படம், பெரும் வெற்றிப் பெற்று ஓடியது. சிவக்குமார், சுஜாதா நடிக்க தேவராஜ் மோகன் இயக்கிய அந்தப் படத்தில் இசைஞானி இளையாராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். ரஜினிகாந்த் நடித்த ஆறிலிருந்து 60 வரை, எங்கேயோ கேட்ட குரல், குரு சிஷ்யன், வீரா, கமல் ஹாசன் நடித்த கல்யாணராமன், ஜப்பானில் கல்யாண்ராமன், மைக்கேல் மதன காமராஜன், பாக்யராஜ் இயக்கி நடித்த ராசுக்குட்டி, சரத்குமார் நடித்த ரிஷி, விஜயகாந்த் நடித்த அலெக்ஸாண்டர், சிவக்குமார் நடித்த ஆனந்தராகம், சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார், சேரன் கதாநாயகனாக அறிமுகமான சொல்ல மறந்த கதை, ரகுமான் நடித்த தம்பிப் பொண்டாட்டி ஆகிய படங்களை தனது பி..ஆர்ட்ஸ் பட நிறுவனம் மூலம் தயாரித்தார் இவர்.

சிவாஜி நடித்த கவரிமான் படத்திற்கு கதை, பாடல்கள் எழுதிய இவர், சிவாஜி நடித்த வாழ்க்கை, அவன்தான் மனிதன், ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா, தம்பிக்கு எந்த ஊரு, பாயும் புலி, எங்கேயோ கேட்டக் குரல், முரட்டுக்காளை, கமல் நடித்த சிங்காரவேலன், உயர்ந்த உள்ளம், தூங்காதே தம்பி தூங்காதே, சகலகலா வல்லவன், மீண்டும் கோகிலா, உல்லாசப் பறவைகள், எல்லாம் இன்ப மயம், விஜயகாந்த் நடித்த எங்கிட்ட மோதாதே என முப்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதினார். சில படங்களுக்கு கதை, சிலப் படங்களுக்கு வசனமும் எழுதினார். ஏட்டுப்படங்களை இயக்கி, பதினைந்துக்கு மேற்பட்ட படங்களை தயாரித்து  நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள இவர்,; கதை வசனம் எழுதிய தயாரித்த எங்கேயோ கேட்டக் குரல் படத்திற்கு தமிழக அரசின் சிறந்தப் படத்திற்கான முதல் பரிசும், தங்கப் பதக்கமும் கிடைத்தது. அதே போல பாண்டியன் படத்திற்காக சிறந்த கதை ஆசிரியருக்கான விருது பெற்றார் இவர். தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ள, பஞ்சு அருணாசலம், கதையாசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் பன்முகம் கொண்ட கலைஞரான இவர், தனது 75 வயதில் காலமானார்.

3)                    கலங்கரை விளக்கம்:
1958இல் அல்பிரட் ஹிட்ச்கொக்கின் வெர்டிகோ என்ற சைக்கோதிறில்லர் ஆங்கிலத் திரைப்படத்தை 1965ல் கே. சங்கர் கலங்கரை விளக்கம்  என்ற கறுப்பு வெள்ளை திரைப்படமாக இயக்கி அமோக வெற்றி பெற்றார். (சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி தயாரிப்பு, கதை - மா. லட்சுமணன்இசை விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்கள் பஞ்சு அருணாசலம், வாலி, பாரதிதாசன்). கல்லூரியில் வரலாறு படிக்கும் நீலா (சரோஜா தேவி) சிறு விபத்தில் மனநிலை பாதிப்படைகிறார். தன்னை ஆடலரசி சிவகாமியாகக் கற்பனை செய்துகொண்டு நரசிம்ம பல்லவ சக்ரவர்த்தியைத் தேடி அடிக்கடி கலங்கரை விளக்கு இருக்குமிடத்துக்கு நள்ளிரவில் செல்கிறார். பெரிய பணக்காரரான அவளுடைய தந்தை, டாக்டர் கோபால் (வி. கோபாலகிருஷ்ணன்) மூலம் சிகிச்சை அளிக்கிறார். கோபாலுக்கு உதவியாக அவருடைய சென்னை வழக்கறிஞர் நண்பர் ரவி (எம்.ஜி.ஆர்.) மகாபலிபுரத்துக்குக் காரில் வருகிறார். நள்ளிரவில் கலங்கரை விளக்கை நோக்கி ஓடும் நீலாவை, தான்தான் நரசிம்ம பல்லவன் என்று சொல்லி காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார். நீலா இறந்த பிறகு அண்ணனின் சொத்து முழுவதையும் கைப்பற்ற தம்பி நாகராஜன் (நம்பியார்) திட்டமிடுகிறார்.
அவருக்கு ஒரு காதலி, அந்தக் காதலிக்கு ஒரு தங்கை மல்லிகா (இன்னொரு சரோஜா தேவி). இப்படத்தில் சரோஜா தேவிக்கு இரட்டை வேடம். உருவ ஒற்றுமை உள்ள மல்லிகாவை நீலாவாக நடிக்க வைத்து, நீலாவைக் கொன்றுவிட்டு சொத்தை அடையச் செயல்படுகிறார் நம்பியார். மல்லிகா சாதாரணத் தங்கை அல்ல. சென்னை, பெங்களூர் என்று நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திக் கலைக்காகச் சேவை செய்கிறார். நீலா கொல்லப்பட்ட பிறகு மல்லிகாவைத் திருமணம் செய்துகொள்ளும் எம்.ஜி.ஆர். அவர் மூலம் உண்மையை வரவழைத்து நம்பியாரைச் சிறைக்கு அனுப்புகிறார். தவறுக்கு உடந்தையாக இருந்ததற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை பெற்ற மனைவியை சிறைக்கு அனுப்பி வைக்கிறார்.

4)                    இசையும் பாடலும் போட்டி போடும் அருமையான பாடல்:
அமாவாசையானால் சித்தம் கலங்கி பிரச்சினை கொடுக்கும் நீலாவைக் குணப்படுத்த ரவி வெளியே அழைத்துச் செல்லும் போது, பிரச்சினைக்குள்ளான நீலா மலை உச்சிமீதேறி குதித்து தற்கொலை செய்யப் போகும் போது, ரவி சிவகாமி, சிவகாமி என அழைத்து தானும் நரசிம்ம பல்லவனாகி நீலாவைக் காப்பாற்ற இருவரும் பாடும் பாட்டே பொன்னெழில் பூத்தது புது வானில். பஞ்சு அருணாசலத்தின் முதற் பாட்டு. சரோஜா தேவி. பூமா தேவி, அவர் முகம் பூகோளம். அது அழும் போது உலகமே அழுகின்றது. சிரிக்கும் போது உலகமே சிரிக்கின்றது. சரணத்தில் நீலா, ஆடலரசி சிவகாமியாகி, ரவியை நோக்கி வரும்போது, லோங் சொட்டிலிருந்து, குளொஸ் அப்புக்கு வரும்போது ரவி, நரசிம்ம பல்லவனாகி இருக்கையில், அவர்கள் இருவரின் அழகின் காலடியில் உலகமே விழுந்து கிடப்பதாக தோன்றுகிறது. எம்.ஜீ.ஆர் இருந்த பல்லவனில் கமலஹாசன் இருந்தால் பெண்மையும், அஜித் இருந்தால் வெளிநாட்டுத்தனமும் தெரிந்திருக்கும். இந்தப் பாடலை ரசியுங்கள். இசையும் பாடலும் போட்டி போடும் அருமையான பாடலை வரிக்க வரி ரசியுங்கள்.

சிவகாமி..சிவகாமி....
ஓஓஓஓஓ

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா

என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வென் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
ஆஆஆஆஆஆஆஆ...

ஒரு தலைவனின் தனிமையின் பிரிவின் வலியையும், அதற்கான தலைவியின் பதிலையும் கொண்டமைந்த மென்மையான காதலும,;  அழகிய எதுகைகள், மோனைகள், சொற்பதம், பொருட்பதம் நிறைந்து இன்னிசையில் மனதை மென்மையான தென்றலாய் மயிலிறகாகி வருடும் உணர்வும் கொண்ட பாடல் இது. கேட்க மிகவும் அருமையாக இருந்ததற்கும் கண்ணதாசன் எழுதியது போல இருந்ததற்கும் காரணம் பஞ்சுவும் கண்ணதாசனும் சுமந்த பொது நிறமூர்த்தங்களாகவும் இருக்கலாம்.
No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...