Monday, September 18, 2017

பொலித்தீனும் பிளாஸ்ரிக்கும் இந்தப் பூமிக்கு வரமா? சாபமா?.


.எம். றியாஸ் அகமட்,
சிரேஸ்ட விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம்.

இந்தப் பூமிப் பந்தின் நித்திய நிலவுகைக்கு அச்சுறுத்தலாக இருப்பது சூழல் மாசடைதலே. பூமியானது பல்வேறு வகைகளில் மாசடைகின்றது. இது பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளை (உதாரணம்: புவி வெப்பமடைதல்) அதிகரிக்கச் செய்து மனித வாழ்வின் இருப்பையே கேள்விக்குட்படுத்துகின்றது. சூழல் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் பல்வேறு மாசாக்கிகளுள் திண்மக் கழிவுகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அதிலும் பல்கிப் பெருகிவரும் பிளாஸ்ரிக், ரெஜிபோம், பொலித்தீன் போன்றவற்றின் பாவனைகள் பூமிக்கு பெரும் தலைவலியாக மாறிவருகின்றன
இதன் காரணமாக பிளாஸ்ரிக், ரெஜிபோம், பொலித்தீன் போன்றவை மனித பாவனைக்கு தடை செய்யப்பட வேண்டும் என்ற வலுவான குரல் நீண்ட காலமாகவே உலக அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இலங்கையிலும் ஆய்வாளர்கள், கொள்கை வகுப்போர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் போன்றோர் இவை எற்படுத்தும் பாரதூரமான விளைவின் காரணமாக இலங்கையிலும் தடை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்திருக்கின்றார்கள். இதன் காரணமாக 2016 களின் ஆரம்பங்களில் பொலித்தீன் பாவனை தடை என்றும், 20 மைக்ரோன் அளவைக் கொண்ட பொலித்தீன் பைகளின் உற்பத்தியும், பாவனையும், சட்ட விரோதம் என்றும் மீறுவோர் பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவர் என்றும் அறிவித்தல் வெளிவந்திருந்தாலும், இந்த தடையானது பல காரணங்களால் வினைத்திறனாக முன்னெடுக்கப்பட்டதாக அறியப்படவில்லை.
பொலிதீன் மற்றும் பிளாஸ்ரிக் காரணமாக ஏற்படும் சுற்றாடற் பிரச்சினைகளை மட்டுப்படுத்துவதற்காகவும் பொலிதீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை முகாமைத்துவம் செய்வதற்காகவும் தேசிய கொள்கை மற்றும் செயற்பாட்டு திட்டம் ஒன்றை வரைய நிபுணர்கள் குழுவொன்றுக்கு 2016 செப்டம்பர் 6 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு குறுங்கால, மத்தியகால மற்றும் நீண்டகால திட்டங்களை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. மெல்லிய பொலித்தீன்களைத் தடை செய்வது குறித்த சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.
இதற்கமைய, 20 மைக்ரோன் (Microns) அல்லது அதற்குக் குறைந்த அளவுடைய பொலித்தீன் பாவனை, விற்பனை மற்றும் உற்பத்தி என்பவற்றை தடைசெய்து சட்டத்தை தொடர்ந்து செயற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய, சமய, சமூக, கலாசார, அரசியல்  நிகழ்வுகளில் பொலித்தீன் பயன்பாடுகள் முற்றாக தடைசெய்யப்படவுமுள்ளன.
அத்தியாவசிய செயற்பாடுகளுக்காக 20 மைக்ரோனுக்கும் குறைவான பொலித்தீனை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். உணவுகளைப் பொதிசெய்யப் பயன்படுத்தப்படும் லஞ்ச் சீற்களை (Lunch sheets) இறக்குமதி செய்யவோ தயாரிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ தடை விதிக்கப்படும். பொலித்தீனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவைப் பொதிசெய்யும் பெட்டிகள், பிளாஸ்டிக் கோப்பைகள், கரண்டிகள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கும் தடைவிதிக்கப்படும். பொலித்தீன்களில் சுற்றி பதப்படுத்தப்பட்ட அல்லது சமைத்த உணவுகளை விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்படும். பொருட்களை வாங்கும்போது பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு மாற்றீடாக சூழலுக்கு உகந்த துணி, கடதாசி பைகள் போன்றவற்றை பயன்படுத்தவும் உக்கக்கூடிய பிளாஸ்ரிக் உற்பத்திகளை மேற்கொள்வதற்கும் ஊக்குவிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திறந்த இடங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்கை எரிப்பதற்கு தடை விதிக்கப்படும். உயிரியல் உக்கக்கூடிய பிளாஸ்ரிக் மூலப் பொருட்களை அறிமுகப்படுத்தவும் ஊக்குவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
**
பொலிஎதிலீன் (Polyethylene) அல்லது பொலிதீன் (Polyethene) (சுருக்கம் (PE)) என்பது மிகவும் பொதுவாக பாவனையில் உள்ள பிளாஸ்ரிக் வகைகள் ஒன்றாகும். இந்த பொலிதீனானது, ஆய்வுகூட பரிசோதனை ஒன்றில் 1898 ஆம் ஆண்டு தவறுதலாக ஹன்ஸ் வொன் பெக்மான் என்ற ஜேர்மனிய விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டு, பல நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளால் தற்போதுள்ள மேம்படுத்தப்பட்ட பொலிதீன்வரை கொண்டுவரப்பட்டுள்ளது.
சூழலில் ஏற்படும் விரும்பத்தகாததும், சூழலின் சமனிலையை குலைப்பதுமான மாற்றங்கள் சூழல் மாசடைதல் என ஓரளவு வரையறுக்கலாம். தரை, வளி, நீர், ஒலி, கதிர்த்தொழிற்பாட்டு மாசடைதல் போன்ற சூழல் மாசடைதல் வகைகளுக்குள், தற்போது பொலித்தீன் அல்லது பிளாஸ்ரிக் மாசடைதல் வகையையும் உள்ளடக்கலாம். பொலிதீன் அல்லது பிளாஸ்ரிக் சேர்வதன் மூலம் வனஜீவராசிகள், மனிதர்கள், அவைகளின், அவர்களின் வாழிடங்கள், சுற்றுச் சூழல்கள் போன்றவைகளில் மிகவும் மோசமான விளைவுகளை, ஏற்படுத்துமாயின் அது பிளாஸ்ரிக் அல்லது பொலித்தீன் மாசடைதல் எனலாம். பொலித்தீன் அன்றாட பாவனைக்கு இலகுவானதாகவும், பாவனையின் பின்னர் தூக்கி வீசப்படக்கூடியதாகவும், விலை குறைவானதாகவும், பாவனையும் கூடியதாகவும் இருக்கின்ற காரணங்களால் இதன் பாவனையும் அதீத அளவில் அதிகரித்து மாசடைதலும் அதிகரித்து  சூழலுக்கு ஓர் அரக்கனாக விஸ்வரூபமெடுத்து பல தரப்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையாக மாறிவருகின்றமை மிகவும் கவனத்திற்குரியதாகும். உதாரணமாக கொழும்பு மாநகரினுள் நாளாந்தம் சுமார் ஆறு இலட்சம் பேர் வருகை தருகின்றனர். அவர்களினூடாக சுமார் 12 இலட்சம் லஞ்ச் சீட், பொலித்தீன் (சொப்பின்) பைகள் மாநகரத்திற்குள் குப்பையாக வந்து சேர்வதாகவும், கடந்த வருடத்தில் 7159.5 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகளும், 44038.67 கிலோகிராம் இலத்திரனியல் கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிபரம்; குறிப்பிடுகின்றது. இதன் காரணமாகவே இன்று கொழும்பு பல்வேறு பாரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
பொலித்தீன், பிளாஸ்ரிக் போன்றவை உக்குவதற்கு 15 - 1000 வருட காலங்கள் எடுக்கின்றனஉதாரணமாக பிளாஸ்ரிக் கப் - 50 வருடங்களும், குளிர்பானப் போத்தல்கள் 400 வருடங்களும், பம்பஸ்கள் 450 வருடங்களும், தூண்டில் தங்கூசி 600 வருடங்களும் எடுக்கின்றனஅவை உக்கும்போதும், எரியும்போதும், கரையும்போதும் வெளியிடப்படும் இரசாயனங்கள் காரணமாக நோய்களையும் (உதாரணம்- புற்றுநோய்), சூழலுக்கு பாரிய பிரச்சினைகளையும் தோற்றுவிக்கின்றன. பொலித்தீன்களினால் ஏற்படும் பிரச்சினைகளை எடுத்துநோக்குவோம்.
   குளோரின் கலந்த பொலித்தீன்கள் உக்கும்போது, அவை வடிந்து நிலத்தடி நீரையும், நீர் நிலைகளையும் சூழற்றொகுதியையும் அடைந்து உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
   நிலத்தை நிரப்புவதற்கு இவற்றை பாவிக்கும்போது சூடோமோனஸ், நைலோன் உண்ணும், பிளேவோ பக்டீரியாக்கள் போன்றவை நைலோனேஸ் நொதியத்தை சுரந்து பொலிதீனை உக்கச்செய்ய ஆரம்பிக்கும்போது, அவை மெதேன் வாயுவை வெளிவிடுகின்றது. மெதேன் வாயு புவிவெப்பமடைதலுக்கு காரணமான முக்கியமான வாயுக்களில் ஒன்றாகும்.
   ஒவ்வொரு வருடமும் கடலில் வந்து சேரும் 165 மில்லியன் தொன்னுக்கு அதிகமான பிளாஸ்ரிக் பொலிதீன் கழிவுகள் அல்லது 5 ட்ரில்லியன் பிளாஸ்ரிக், பொலிதீன் துணிக்கைகளால் விடுவிக்கப்படும், அல்லது இவை கடலில் பிரிகையுறும்போது, மிகவும் சக்திவாய்ந்த நச்சுப் பொருட்களான பயோபீனோல்-, பொலிஸ்ரைறீன் டைஎதைல்ஹெக்ஸைல் பெதெலேற், கட்மியம், ஈயம், இரசம் போன்றன புற்றுநோயை உருவாகக்ககூடிய இரசாயனங்களாகும். இந்த துணிக்கைகளை  கடலுணவுகளாக பயன்படும் மீன்கள்; போன்றன உண்ணும்போது புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, பிறப்புக் குறைபாடுகள் போன்ற நோய்களை மனிதர்கள் எதிர்நோக்குகிறார்கள். கடலில் மிதக்கக்கூடிய பிளாஸ்ரிக், பொலித்தீன் பைகளை மீன்கள், கடலாமைகள், திமிங்கிலங்கள், பறவைகள். சீல்கள் போன்ற இருநூறிற்கும் மேற்பட்ட கடல் உயிரி இனங்கள் உண்ணுவதால் சமிபாட்டு தொகுதிகளிலும், சுவாசத் தொகுதிகளிலும் பொலித்தீன்கள் சிக்கி அவைகள் இறக்கின்றன. கடல் நீரில் கரைகின்ற பொலித்தீன்கள் விடுவிக்கின்ற அதி சக்திவாய்ந்த நச்சுப் பொருளான பொலிகுளோறினேற்றட் பைபீனைல் (PCB) போன்ற இரசாயனங்கள் கடல் வாழ் உயிரிகளின் சமிபாட்டு தொகுதியை அடைத்தும், ஓமோன் தொகுதியை சிக்கலுக்குள்ளாக்கியும் உயிரிகளை கடுமையாகப் பாதிக்கின்றன. இவை தவிர இன்னும் பல நூற்றுக் கணக்கான கண்டு பிடிக்க முடியாத இரசாயனங்கள் பொலித்தீன், பிளாஸ்ரிக் போன்றவைகளில் காணப்படுகின்றன.
   பொலித்தீன்களிலிருந்து விடுவிக்கப்படும் நச்சுப் பொருட்கள் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட மனிதர்களின் (நச்சுப் பொருட்களுக்கு வெளிப்படுத்தப்படும்) சிறுநீரில் பொதுவாகக் காணப்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இந்த இரசாயனப் பொருட்கள் மனிதர்களில் கருவளம், இனப்பெருக்கம், இலிங்க முதிர்ச்சி, தைரொயிட் ஓமோன் செயற்பாடுகள், நரம்புத் தொகுதி போன்றவைகளில் பாதிப்பையும் ஆரோக்கிய குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றன.
   பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றுவதற்கு, எரிப்பது சிறந்த முறையாக இருக்காது. அதனை எரிப்பதனால் வீனைல் குளோரைட்டு, டைஒக்சின், பெதெலேற், பிளாஸ்ரிசைசர் போன்ற நச்சுப் பொருட்கள் (பீவீசி யிலிருந்தும்),  பென்சீன் (பொலிஸ்ரைரினிலிருந்தும);, போமல்டிகைட், பயொஸ்பீனோல்-, BPA போன்றவை (பொலிகார்பொனெல்களிலிருந்தும்), மற்றும் சேதன மாசாக்கிகளும் விடுவிக்கப்படுகின்றன.
   மழைக்காலங்களில் பொலித்தீன்கள், பிளாஸ்ரிக் போன்றவைகள் கழிவுநீர், மழைநீர் வடிகான்களை அடைப்பதனால் வெள்ளப்பெருக்குக்கு காரணமாகின்றன.
   ஆற்றுப்படுக்கைகளிலும், நீர்ப்படுக்கைகளிலும்; படையாக மண்ணினுள் சேரும் இப்பிளாஸ்ரிக், பொலிதீன் பொருள்கள் மண்ணினுள் நீர் வடிந்து செல்ல தடை ஏற்படுத்தி, நிலத்தடி நீரின் அளவைக் குறைப்பதுடன் வெள்ளப் பெருக்கையும் ஏற்படுத்துகின்றன. கடந்த வரடங்களில்  இந்தியாவின்; தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு இதுவும் ஒரு காரணமாக கருதப்படுகின்றது.
   பொலித்தீன் (சொப்பிங்); பை, பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல், யோகட் கோப்பை ஆகியவை பாவனைக்கு பின் தூக்கி எறியப்படுவதால் அவற்றில் நீர் தேங்கி நின்று நுளம்புகள் பெருக்கெடுத்து, நோய்களை ஏற்படுத்துகின்றன.
   பயிர்ச்செய்கை நிலங்களின் உயிர்ப்பும், உயிரினப் பல்வகைமையும் ஆபத்துக்குள்ளாவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கால் நடைகளினாலும் (ஆடு, மாடு), வனஜீவராசிகளாலும் (மான், மரை, யானை) உண்ணப்படும் பொலித்தீன்கள் குறிப்பாக சொப்பின் பைகள் அவற்றின் உணவுக் கால்வாய்த் தொகுதியினுள் சிக்குண்டு  அவைகள் இறப்பதற்கு காரணமாக இருக்கின்றன.
   வெப்பமான உணவுப்பொருள்களை பரிமாறுவதற்கு இவற்றை பயன்படுத்தும்போது இவற்றிலுள்ள இரசாயனங்கள் வெப்பத்தின் காரணமாக பிரிந்தழிகைக்குட்பட்டு உணவுடன் கலந்து உடலினுள் சேர்ந்து உடல் கலங்களின் கட்டுப்பாடற்ற பெருக்கத்திற்கு வழி வகுத்து புற்றுநோய், பிறப்புக் குறைபாடுகள் நோய் எதிர்ப்பு சக்திகுறைதல், நாளமில்லா சுரப்பிகளின் சீர்குலைவு, வளர்ச்சி குறைபாடுகள், இழையங்களின் மீளுருவாக்கம் போன்ற நோய்களையும் ஏற்படுத்துகின்றன.
(அடுத்த வாரம் தொடரும்….)






No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...