Monday, June 1, 2020

ஒலுவில் துறைமுகம் - மகா சொப்பனத்தின் கொடுங்கனவு

இரண்டாயிரமாண்டு ஆரம்பத்தில் நான் வாழுகின்ற மாவட்டத்தில் கடலில் ஒரு கட்டுமானம் அமைப்பதற்காக ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அப்போது அந்தக் குழுவில் நானும் இணைந்து கொள்ளுகின்றேன். கட்டுமானம் நடக்கப்போகும் இடம் என் பெருவிருப்புக்குரிய கண்டல் சூழற்றொகுதி உள்ள இடம். அதற்கு முன் அடிக்கடி செல்லும் இடம். அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டேன் ஒவ்வொரு நாளும் பல மைல்கள் நடந்தே, தரையிலுள்ள காடுகள், கடலில் உள்ள உயிரிகள், அதன் சுற்றாடல், நீர், மண், எவ்வாறு பாதிப்புக்குள்ளாகும்? அவைகளை எவ்வாறு நிவர்த்திக்கலாம்? என்ற ஒரு ஆய்வு. அதற்குப் பின்னால் நடந்ததெல்லாம் ஒரு பெரிய கொடுங்கனவு. என்ன நடந்ததென்றே இன்னும் புரியவில்லை என்று இலகுவாக தப்பியும் செல்லலாம் நமக்கேன் வீண் வம்பு என்று வாழாது அடையாளத்தை மறைத்து அமைதியாக இருந்தும் விடலாம். என்றாலும் இருபது வருடங்களுக்குப் பிறகு இந்தக் கொடுங்கனவு எப்படி இருக்கும் என்பதற்கு ஆதார தரவுகளை உருவாக்குவதற்காக நானே சுயமாக ஒரு விபரக்கொத்தை தயாரிக்கிறேன். அவை பின்வருவன போன்ற சில விடயங்களைக் கொண்டிருக்கின்றன. இனம், மதம், வயதுத் தொகுதி, சராசரி குடும்பத்தின் அளவு, பெண்கள் பங்கு கொள்ளும் தொழில்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் கல்வி நிலை, தொழில் சொந்தமானதா, முதலாளிகளிடமா? மீனவர்கள் பயன்படுத்தும் மீன் பிடிமுறைகள், பயன்படுத்தும் வள்ளங்களின் வகைகள், மீன்பிடி முறைகள், வலைகளின் கண்களின் அளவு, ஈடுபடும் தொழிலாளர்களின் அளவு, எந்த நேரங்களில் ஈடுபடுகிறார்கள்?, எந்த ஆழங்களில் ஈடுபடுகின்றார்கள்? வீடுகளுக்கும் படகு நிறுத்தும் இடங்களுக்கும் இடையிலான துாரம், பிடிக்கப்படும் மீனின் அளவு, சட்டவிரோத முறைகள், அலங்கார மீன்பிடி முறைகள், கடல் மாசு, பிடிக்கப்படும் மீன்களின் இன அடிப்படையிலான வகுதி, ஒவ்வொரு மீன்பிடி முறைகளுக்கான பிடிக்கப்படும் மீனின் அளவு, இனங்களின் வகைகள், அதன் உயிரியல் பல்வகைமை, கண்டல் காடுகளின் இனப் பல்வகைமை, விலங்குகள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், மாதாந்த வருமானம் போன்ற பல விடயங்கள்.
சுமார் நுாற்றுக்கு மேற்பட்டவர்களை பல்வேறு வழிகளில் ஆய்வுக்குட்படுத்தி தரவுகளை சேகரித்து வைத்திருந்து ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு பிறகு அதனை ஒரு பல்கலைக்கழகத்தில் அதன் வருடாந்த அறிவியல் ஆய்வு மாநாட்டுக்கு சமர்ப்பிக்கின்றேன். (இருபது வருடங்களுக்குப் பிறகு அந்தத் தரவுகள் பெரும் பொக்கிசமாக எனக்குத் தெரிகிறது). அது கலைத்துறை சம்பந்தப்பட்ட விடயங்களை கொண்டிருப்பதாக நிராகரிக்கப்பட்டு, பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிரரகரிக்கப்படத்தான் வேண்டும். ஏனெனில் தங்களது சுற்றயலில் உள்ள பிரச்சினைகளை ஆய்வுகள் பேசக்கூடாது. மிகவும் கடுமையான பிரயத்தனத்திலும், உழைப்பிலும் உருவாக்கப்பட்ட தரவுகளைக் கொண்ட இந்த ஆய்வை, அதன் தரவுகளை வழமைபோல் ஆய்வுச் சமூகம் கண்டுகொள்ளவில்லை. கவலை கொள்வதற்கு ஒன்றுமே இல்லை.
அரசியலுக்கு சூழலியல் தெரியாது.
சூழலியலுக்கு அரசியல் தெரியாது.
என்றோ புள்ளிகளாகத் தெரிந்த
இன்றைய மகா சொப்பனத்தின் கொடுங்கனவு.
எம் பணி முன்னே செல்வது.
முன்னேறிச் செல்வது.
களங்கள் மாறும்,
சமர்கள் மாறப்போவதில்லை.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...