Tuesday, June 2, 2020

#கதைவாசிப்பு_2020_6 ‘விலங்கு நடத்தைகள்’#கதைவாசிப்பு_2020_6 ‘
கதை –  விலங்கு நடத்தைகள்
எழுத்து – அம்ரிதா ஏயெம்
புத்தகம் – விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்


       தனது பட்டப் படிப்பை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு நாயகன் ஒரு ஆய்வை செய்ய வேண்டியுள்ளது. அது குரங்குகள் குறித்த ஆய்வு. அதற்காக குரங்குகள் நிறைய இருக்கும் இடத்திற்கு சென்றுக்கொண்டிருக்கிறார். அவ்விடத்தை அடையாளம் காண்பது குறித்த பயம் அவரிடம் இல்லை. ஏனெனில் அது அவரது சிறிய வயது வீடு இருந்த இடத்திலிருந்து பக்கம்தான்.

       போருக்கு பிறகான பயணம் அது. ஆங்காங்கு போர் விட்டுச்சென்ற வடுக்களும், ஊர் விட்டுச்செல்லாத சீருடைப் படைகளும் இருக்கிறார்கள். கடற்பயணத்தில் நாயகன் காண்பதெல்லாம் இன்னமும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது அவற்றையெல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சி என்பதா அல்லது இயற்கைக்கான  கேடு என்பதா என்கிற ஐயம் மனதில் எழுகிறது.  கடற்படையினரின் அரைமணிக்கு ஒரு முறை நீருக்கு அடியில் செய்யப்படும் கிரனெட் சார்ஜினால் பல மீன்கள் கொல்லப்பட்டு நீரில் மிதக்கின்றன. அவற்றில் பாதியை முகாம்களுக்கு உணவுக்காகக் கொண்டுச் செல்கிறார்கள். மீதி மீன்கள் அங்கேயே மிதந்தவாக்கில் இருக்கிறது.

     தன் ஊரை அடைந்ததும், அவர் தங்க வேணடிய இடத்தை நோக்கி நடக்கிறார். அப்போது அங்கு சீருடை அணிந்த ஆட்கள் வந்துக் கொண்டிருக்கிறார்கள். போர் முடிந்துவிட்ட பின்னரும் அங்கு நிலவிக்கொண்டிருக்கும் பயம் காரணமாக நாயகனுக்கு மனதில் பல கேள்விகள் வருகின்றன. அவற்றையெல்லாம் அவர்  நினைக்கையில் வாசிப்பவர் மனதிலும் பயம் தொற்றிக்கொள்கிறது. தன்னை விசாரித்த சீருடைக்காரனைக் குறித்து தனது எண்ணம் தான் யார் என்பதை நாயகன் நிரூபிக்கிறார்.

    ஆங்காங்கு பயணத்தின் போது தன் சிறுவதில் பார்த்த இடத்திற்கும் இப்போதிருக்கும் மாற்றத்திற்குமான மனவோட்டம் பதிவாகிறது.

     அவர் தங்கவேண்டிய இடத்தில் முதல் நாள் கழிகிறது. அப்படியிப்படி என சில வாரங்களில் அங்குள்ளவை அவருக்கு பிடிபடுகிறது. அவர் வீட்டு ஜன்னலில் இருந்து தெரியும் ஆலமரத்தில் தான் குரங்கள் அடைக்களமாகின்றன.

     ஒரு சமயம் பெரிய சத்ததோடு குரங்கு கீழே விழுகிறது. நடப்பதை நாயகன் கவனிக்கிறார். குரங்குகளுக்கு முதலுதவி செய்ய செல்வது தற்கொலைக்கு சமமானது என சொல்லிக்கொள்கிறார். இதுவரை இப்படி சொல்லியும் கேட்டும் எனக்கு பழக்கமில்லை. முதலுதவி செய்யச் செல்லும் நாம் நல்லவரா கெட்டவரா என்கிற காரணம் அச்சமயத்தில் குரங்குகளுக்குத் தெரியாது. மற்ற குரங்குகள் சேர்ந்து நான்கு வேட்டைப்பற்களாலும் இருபது நகங்களாலும் நம்மை தாக்க தொடங்கும் என்கிறார். சிறுகதைகளுக்கு இவ்வாரன குறிப்புகள் (டீட்டெயில்) அவசியம். அது கதையை வாசிக்கின்றவர்களை கதையில் மேலும் ஒன்றிப்போக வைக்கும். அதோடு நாயகன் மீது நமக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். குரங்குகள் குறித்த ஆய்வுகளுக்காக வந்திருக்கும் நாயகனின் சிறிய குறிப்புகள் கூட வாசகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

     கீழே விழுந்த குரங்கு இறந்துகிடக்க அதனை சுற்றி பல குரங்குகள் வேடிக்கப்பார்க்கன்றன. அதையொட்டிய காட்சிகளை வாசிக்கையில் புதிய அனுபவமாக இருகிறது. பெரிய குரங்கு இறந்துவிட்ட குரங்கின் மரணத்தை உறுதி செய்து தலையில் கைப்பதாகட்டும், குட்டிக் குரங்கு ஒன்று, இறந்த தந்தை குரங்கைக் கட்டிப்பிடித்து அழுதவாகட்டும் மனதை நெருடுகிறது.

     குட்டிக்குரங்கிற்கு ஜெனி என்றும் தாய் குரங்கிற்கு வீணா என்றும் இறந்துவிட்ட குரங்கிற்கு விக்கி என்றும் பெயரை வைக்கிறார்.

     நாளாக நாளாக அனைத்து குரங்குகளுக்கும் பெயரை வைத்துவிடுகிறார். பெயர் வைப்பதற்கான காரணம் நமக்கு சிரிப்பைக் கொடுக்கிறது. ஆனால் அந்த சிரிப்பு அடுத்தடுத்து தொடரவில்லை என்பதுதான் வருத்தம்.

     சீக்கிரத்தில் வீணாவிடமும் ஜெனியிடமும் மாற்றம் தெரிகிறது. அதற்கு காரணமாக மூன்றாவதாக ஒரு குரங்கு. அதற்கு பரா என்றும் பெயரிடுகிறார். வீணாவிற்கு துணையும் ஜெனிக்கு தந்தையும் கிடைத்துவிட்டார்கள். துணையாதலும் துணையாக்குதலும்தானே வாழ்க்கை என கதாசிரியர் சொல்லும் போது நமக்குள் பல நினைவுகள் சம்பவங்கள் எழாமல் இருக்கவில்லை.

     துணையில்லாமல் காலம் தள்ளுவது மனிதர்களுக்கு மட்டுமல்ல, நமக்கு மிக அருகில் இருக்கும் குரங்குகளுக்கும் முடியாதா நினைத்துப்பார்க்கிறேன். ‘பரா’ என்னும் அந்த குரங்கின் மீது ஏனோ அன்பு ஏற்படுகிறது. பிராணியாக இருந்தாலும் அவற்றுக்கும் துணையின் மீதா அவசியம் தெரிந்ததை நினைத்து மகிழ்வதா அல்லது துணையில்லாமல் இருப்பது குரங்குகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என யோசிப்பதா என தெரியவில்லை.

     நாயகனின் ஆராய்ச்சியில் நாம் எதையோ கண்டுபிடித்த மகிழ்ச்சியில் இருக்க வைக்கிறார் கதாசிரியர்.

     ஓடையில் குளித்து வெளியேறும் நாயகன் ஒரு சிறு குடும்பத்தை பார்க்கிறார் ஒருவர் தோணியில் மின் பிடித்துக்கொண்டே வருகிறார். கரையில் அவருக்காக சிலர் காத்திருக்கிறார்கள். அவர்கள் அம்மா அப்பா மகள் என புரிந்துக்கொள்கிறார். அவர்களிடம் பேச்சு கொடுக்கிறார்.  நடுத்தர வயது பெண் மட்டுமே பேசுகிறார். அந்த இளம் வயது பெண் அவளின் மகளென்றும் அவளின் கணவனை சீருடைக்காரர்கள் கூட்டிச்சென்று கொன்றுவிட்டதாகவும் இப்போதிருப்பவர் தனது இரண்டாம் கணவர் என்கிறார்.

     இதற்கிடையில் பாராவின் நடத்தையில் மாற்றம் இருப்பதை நாயகன் உணர்கிறார். அது காட்டுமிராண்டித்தனமாக நடந்துக் கொள்வதாகச் சொல்கிறார். ஜெனியை முதுகு பக்கமாய் கடித்தும் உள்ளது. நாயகன் அதற்கு மருந்திடுகிறார். நாளடைவில் சில சம்பவங்கள் அவரின் கவனத்திற்கு வருகிறது. தாய்க்குரங்கு வீணா இல்லாத போது அதன் குட்டியை பரா புணரத் தொடங்குகிறது. அதையொட்டிய நாயகனின் விவரனையும்  ஜெனியுன் நிலையையும் அவர் சொல்லும் போது இது வெறும் பிராணிகள்தானே அப்படித்தான் இருக்கும் என நம்மால் சமாதானத்தைச் சொல்லிக்கொள்ள முடியவில்லை.

     அது அவரை அலைக்கழிக்கிறது. இங்கு அவர் வந்ததற்கான காலம் முடிந்தது. புறப்படவேண்டும். கிளம்புகிறார்.  அப்போது பெரிய சத்தம் கேட்கிறது. குரங்குகள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஒரு குரங்கை தாக்குவதாக தெரிந்துக் கொள்கிறார்.

     அச்சமயம், ஜனக்கூட்டமும் தூரத்தில் தெரிகிறது. யாரோ ஒருவனை மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி , சவுக்கால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன தவறுக்கான தண்டனை என பிடிபடவில்லை. புளியமரத்தில் அனை கட்டுகிறார்கள். அவனது கழுத்தில் எதையோ எழுதி மாட்டிவிட்டிருக்கிறார்கள். நாயகன் அவ்விடத்தை கடக்கிறார். இப்போது நாயகனால் நன்றாக அந்த எழுத்துகளைப் படிக்க முடிகிறது. ‘எனது மகளைக் கற்பழித்தவன் நான்’ என  இருந்தது. இப்போதுதான் அவர் நினைவுக்கு வருகிறது அன்று ஓடையில் பார்த்த தோணிக்காரன் தான் அந்த எழுத்தை சுமந்துக் கொண்டு இருக்கிறான்.

     ஆலமரக்கிளையில் இருந்து ஒரு குரங்கு தலையில் அடிபட்டு கீழே விழுகிறது.  அதன் மேலெல்லாம் நகக்கீரல்களும் பற்களில் காயங்கலும் இருக்கின்றன. அதன் அருகில் சென்று பார்க்க அது அந்த ‘பரா’ குரங்கு என தெரிகிறது. மூச்சை இழுத்து இழுத்து அது இறக்கிறது. அதே சமயம் புளியமர முச்சஞ்தியில் துப்பாக்கி சுடும் சத்தம் மூன்று முறை  கேட்கிறது. யாரோ தன் தாயை அலறிக்கூப்பிடுவதாக கேட்கிறது என கதாசிரியர் கதையினை முடிக்க நினைக்கிறார்.

     உண்மையில் நாம் செய்ய வேண்டிய ஆய்வுகள் எதை பற்றியதாக இருக்க வேண்டும் என்கிற கேள்விதான் கதையை வாசித்து முடிக்கையில் தோன்றுகிறது. மனிதன் ஒரு சமூக மிருகம் என யாரோ சொல்லிச்சென்றதில்தான் எத்தனை உண்மைகள் உள்ளன. ஆகக்கடைசியில் மனிதன் தன் உணர்ச்சிகளுக்கு எல்லாவற்றையுமே பழி கொண்டுவிடுகிறானா என்கிற கேள்விதான் மனதில் நிற்கிறது.

     இன்றும் கூட நாளிதழில் அதைவிட வேகமாக சமூக வலைத்தளங்களில் இவ்வாறான செய்திகளை தொடர்ந்துக் கேட்டுக்கொண்டு வருகிறோம். என்ன செய்ய முடிந்தது கோவமாக ஒரு இமோஜியை போடுகிறோம். என்றாவது நம்மை சுயபரிசோதனை செய்திருக்கிறோமா?

     யாருமற்ற தனிமையில் இருக்கும் போதுதான் ஒருவன் தான் யார், என்ன மாதிரி எண்ணங்கள் தன்னை சூழ்ந்து உள்ளன என அறிய முடிகிறது. அறிந்து முடித்தப்பின் என்ன செய்கிறோம் என்பது அவரவர்க்கு அவர் தரும் நேர்மையான பதிலாக இருக்கட்டும்.

-          -தயாஜி


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...