Tuesday, June 2, 2020

மட்டக்களப்பு மாவட்ட மீள்வனமாக்கல் – புணானை - பகுதி- 2

மட்டக்களப்பு மாவட்ட மீள்வனமாக்கல் – புணானை - பகுதி- 2
இன்றைய நாளும் இறைவன் உதவியால் அவன் தந்த ஒரு – அதிஷ்டமுள்ள நாளாக அமைந்தது. வாகனேரியில் பகுதி 1 மீள்வனமாக்கல் பணிகளை முடித்துவிட்டு, ஏ11 பெருந்தெருவில், திருக்கொண்டியாமடு-ஹபரணை வீதியில் பொலநறுவைப் பக்கம் உள்ள புணானை நோக்கி மீள்வனமாக்கலின் இரண்டாவது கட்டத்திற்கு எங்களது வாகனத்தில் புறப்பட்டோம். வாகனம் புணானைப் பகுதிக்கான வனபரிபாலன அலுவலகத்தைச் (Beat Forest Office) சென்றடைந்தது. அந்த அலுவலகத்தின் பின்னால் சுமார் 160 ஏக்கரில் வர்த்தக நோக்கில் தேக்கு மரங்களை வனபரிபாலன திணைக்களம் வளர்த்திருந்தது. அதனைச் சுற்றி முள்கம்பியினால் வேலியும் அமைத்திருந்தார்கள். யானைகள் வேலியை உடைத்து வந்து இளம் தேக்கு மரக் கன்றுகளை சாப்பிடத் தொடங்கி அந்தத் தேக்கங் காடுகளை அழிக்கத் தொடங்கியிருந்தன. யானைகள் ஏன் இவ்வாறு செய்கின்றன என்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை விவாதத்துக்குரியன. எனவே அந்த தேக்கங் காட்டை சாதாரண காடாக மாற்றும் முயற்சியில் நாங்கள் ஈடுபடுவதன் நிமித்தம், 3000 யிற்கு மேற்பட்ட விதைப் பந்துகளை வீசினோம். நுாற்றுக் கணக்கான மரங்களை நடுகை செய்தோம். ஆயிரக் கணக்கான இலகுவில் முழைக்கக் கூடிய சுதேச மரங்களின் விதைகளை விதைத்தோம். நானும், றமேசும் கன்றுகளை, நடுவதிலும், விதைகளை விதைப்பதிலும் ஈடுபட்டோம். மற்றவர்கள் அவர்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்ட பகுதிகளில் சென்று விதைப்பந்துகளை வீசிக்கொண்டிருந்தார்கள். யானைகள், பாம்புகள், காட்டு விலங்குகள் போன்றவற்றின் அச்சங்கள், மழை போன்றவைகளுக்கு மத்தியில், காட்டுக்குள் தொலைந்துவிடாமல் எங்கள் இருப்பிடத்தை அறிவிப்பதற்காக சத்தத்தை இடைக்கிடையே எழுப்பிக் கொண்டும் பணிகளை செவ்வனே செய்து முடித்தோம்.
வாழைச்சேனை வட்டார வனபரிபாலன அலுவலகத்தைச் (Range Forest Office) சேரந்த, வனவிரிவாக்கல் அதிகாரி திரு. தவரஞ்சன், புணானைப் பகுதிக்கான வனபரிபாலன அலுவலகத்தைச் (Beat Forest Office) சேர்ந்த கே.பி.ஏ.ஐ. பத்திரண, வனவெளிக்கள உத்தியோகத்தர் ஆகியோர் எங்களை வழிநடாத்தியிருந்தனர். பத்திரண சுமார் ஒரு மாதத்திற்கு முன்னால் காட்டில் விசப் பாம்பு தீண்டலுக்குள்ளாகி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பிழைத்து வந்திருக்கிறார். அவருக்கு உதவியாக அவரின் தந்தை காடு, மேடு எங்கும் கூடவே வந்து கொண்டிருக்கிறார். வேர்கள் அமைப்பு அதன் இரண்டாவது வருட மீள்வனமாக்கலை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர் மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் திரும்பிக் கொண்டிருக்கிறோம். அடை மழை பிடிக்கிறது. வாகனத்தின் கூரையில்லாத பின்பகுதியில் இருந்து வந்துகொண்டிருந்த பிருந்தாபன், சினோஜன், இனேகாந், சேருன் , கடுமையாக மழையில் நனையத் தொடங்கியிருந்தார்கள். உள்ளே வருமாறு கூறினோம். அவர்கள் வரவில்லை. பின்னர் நாங்களும் கட்டாயப்படுத்தவில்லை. வாகனம் வேகமாக போய்க்கொண்டிருந்தபோது அவர்கள் பாடிய
“மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடி கரையும்போது மண்ணில் சொர்க்கம் ஏய்துவாய்
நீ கண்கள் மூடி கரையும்போது மண்ணில் சொர்க்கம் ஏய்துவாய்”
வைரமுத்துவின் வரிகள் மழையை, வாழ்க்கையை கவிதையாக அனுபவிப்பததை புரியவைத்தது.


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...