Monday, June 1, 2020

விலங்குகளை படம் எடுப்பவன் புகைப்படம் பிடிப்பவன். விலங்கு நடத்தைகளை பிடிப்பவன் கலைஞன்.


சில வருடங்களுக்கு முன் தென்னாபிரிக்காவின் ஜொஹொன்னஸ்பேர்க்கிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டப்படிப்பை மேற்கொண்டபோது, அதற்கான ஆய்விற்காகவும், கள வேலைகளுக்காகவும் அருகிலுள்ள புமாலங்கா மாகாணத்திலுள்ள (பல்கலைக்கழகம் இருப்பது கௌடங் மாநிலம்) சவானா காடொன்றிற்கு என்னைக் கொண்டு சென்று விடுவது வழக்கம். அது மிகப் பெரிய காடு. அந்தக் காட்டிற்கு நடுவில், ஆய்வில் ஈடுபடுபவர்களுக்காக ஒப்பன்ஹைமர் என்ற தனவந்த கொடை வள்ளல் மரத்தினாலும், சுவர்கள் களிகளினாலும், கூரை ஒருவகை கோரைப் புற்களினாலுமான வசதிகள் நிறைந்த ஒரு விடுதியைக் கட்டித் தந்திருந்தார்;. பகலில் காடுகளிலும், இரவில் விடுதியிலும் தங்குவோம். அதன் வரவேற்பறையின் முன்பகுதியில் கண்ணாடியாலான ஒரு பகுதி இருக்கிறது. மாலை 6.00 மணிக்கெல்லாம் நாங்கள் அந்த விடுதியில் உள்ளடங்கிவிடுவோம். அதற்குப் பிறகு எங்களைச் சுற்றி அருகில் விலங்குகளின் இராச்சியம்தான். அவைகள் எதுவும் எங்களுக்கு ஒரு நாளும் எந்தக் கெடுதியும் செய்ததில்லை. நான் ஆய்வு செய்ய வேண்டிய பகுதிக்கு காலையில் என்னை பல்கலைக்கழக வாகனம் இறக்கிவிட்டுச் சென்றுவிடும்.. தொடர்பிற்கு நோக்கியா 3310 மட்டும்தான் இருக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எந்த மனித சஞ்சாரமும் தெரியாது. ஆனால் சுற்றி எல்லா வகையான விலங்குகளும் சென்று கொண்டிருக்கும். ஆரம்பத்தில் கொஞ்சம் கலக்கமாக இருந்தாலும், நாளடைவில் பழகிவிட்டது. தூரத்தில் ஒரு மனித ஊசலாட்டத்தை உணர்ந்தால்தான் அவனால் நமக்கு ஏதாவது பிரச்சனையாகுமோ என்று கொஞ்சம் பதட்டமாகிவிடும். நானும் சவன்னாவின் விலங்குகளும் இரண்டறக் கலந்திருந்த ஒரு அற்புதமான வாழ்க்கை அது. அதை அவ்வப்போது அசைபோட மட்டும்தான் முடியும். நேற்று டொக்டர். ஆகில் சரிபுத்தீன் அவர்களின் வனவிலங்கு புகைப்படக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். நான் இழந்து ஏங்கித் தவித்திருந்த அந்த அற்புத ஆபிரிக்க நாட்களுக்குள் கொஞ்சம் நேரம் என்னை வாழவைத்திருந்தார். நான் அவைகளுடனும் இறண்டறக் கலந்திருந்தேன்.
பொதுவாக வைத்தியத் துறையிலிருப்பவர்கள் இன்னொரு துறையுடனான பரிச்சயம் அவர்களுக்கு குறைவு. அதற்கு பல காரணங்கள். என்னுடைய தொடர்பிலிருக்கும் வைத்தியர்கள் கவிஞர்கள், ஓவியர்கள், இயற்கை விரும்பிகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், வியாபார மேலாண்மையாளர்கள், கடல்சார் உயிரியல் ஆய்வாளர்கள், சுழியோடிகள் போன்றவர்களாக இருக்கிறார்கள். அது போல டொக்டர் ஆகிலிடம் பல திறமைகள் இருக்கின்றன. (அவரின் பயமற்ற அரசியல் பதிவுகளுக்கு நான் தீவிர ரசிகன்.) அதில் ஒன்று புகைப்படக் கலையின் மீதான ஈடுபாடும் திறமையும். விலங்கியல் ஆசிரியராகவும், ஆய்வாளனாகவும் இருப்பதால் மாத்திரம் அவரின் படங்களின்மீது எனக்கு ஈடுபாடு இருப்பதில்லை. நான் அடிப்படையில் விலங்கு நடத்தையியலாளனாக (அதிலும் நடத்தைச் சூழலியல்) இருப்பதினால், அந்தப் படங்களில் அவர் கொண்டு வந்துவிடும் மிக மெல்லிய நுண்மையான கூறுகளையும் என்னால் அவதானிக்க முடிவதுண்டு. அவரின் படங்களை முகநூலில் நுணுக்கமாக ஏற்கனவே பார்வையிட்டிருந்தாலும், அவரின் கண்காட்சி அது தனியொரு அனுபவம். மிகவும் கவனமாக எல்லாவற்றையும் செய்திருந்தார். அக்கரைப்பற்ற 2/3 கொமன் வீதியில் ஒரு கலாபவனம்.
அவரின் படங்களில் அந்தக் கலைமீதான காதலும், செலவும், ஈடுபாடும், பொறுமையும், கால,நேரரீதியான, பொருளாதார தியாகங்கள், ஆய்வு, தேடல், நுணுக்கமான பின்- பொலிதாக்கல், தெரிகின்றன. பல படங்களின் கண்கள் பேசும் கதைகள், விலங்குகள் இயங்கத்துள் இருக்கும் ஆக்கத்திறன்,. உள்ளடக்கம், சேர்க்கை, ஒளியின் அளவு, செறிவு, திசை, கோணம், நடத்தைகள், நகைப்பு, சட்டகத்திற்குள் இறுக்கமாகும் தன்மை, குடும்பம், குடித்தொகை, அவைகளின் கதைகள், சமூகங்களுடன் சேர்ந்திருக்கும் தன்மை, நாளாந்த, வருடாந்த, தனிச்சிறப்பான விலங்கு நடத்தைகள், (உதாரணத்திற்கு சில:- வலசைபோகும் தருணம், கெசலுக்கும், சிறுத்தைக்கும் இடையிலான இரைகொன்றுண்ணும் நடத்தைகளின் ethogram களின் கூறுகளின் சிறப்பான கோர்வை, செரன்கற்றியின் பெருந்தொகைக் கொலையாதல்களின் அற்புதமான பதிவு), சூழற்றொகுதிகளின் கணிசமான கூறுகளின் உள்ளடங்கு தன்மை;, வித்தியாசமாகவும், பரீட்சார்த்தமாகவும் செய்துபார்க்கும் தன்மை எல்லாம் அவரின் தனித் திறமையைக் காட்டுகின்றன. அவரின் தாய் வழி, தந்தை வழி நிறமூர்த்தங்கள் இரண்டும் கலைகளுடனும், நுண் கலைகளுடனும் சம்பந்தப்பட்டுள்ளன. அவரின் தந்தை வழி பாட்டனார் புலவர்மணி ஆ.மு. சரிபுத்தீன் அவர்களிடம் இலக்கிய விடயங்களுக்கு அப்பால் ஓவியமும், கைவினைக் கலைகளும் கொட்டிக்கிடந்திருக்கின்றன. அவரின் பிள்ளைகளிடமும் இருந்திருக்கின்றன. அந்த வழி அப்படியே செல்கின்றது. செல்லவும் வேண்டும். டொக்டர் ஆகிலின் அடுத்த கட்டம் மனிதர்களும், மற்றமைகளும்.
விலங்குகளை படம் எடுப்பவன் புகைப்படம் பிடிப்பவன். விலங்கு நடத்தைகளை பிடிப்பவன் கலைஞன். ஒரு விலங்கு நடத்தையாளனாக சொல்கின்றேன். முன்னையது எல்லோராலும், பின்னையது ஒரு சிலராலும் செய்யக்கூடியது. நீங்கள் கலைஞன் முன்னே செல்லுங்கள்.










No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...