நேற்று ஒரு முக்கியமான நாள். கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, இலங்கையின் வனங்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஒரு முக்கியமான நாள். இவ்வாறான முயற்சியில் ஈடுபட்ட மருத்துவத்துறைசார்ந்த முதலாவது நிறுவனமாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை கொள்ளலாம்.
அம்பாறை மகாஓயா பிரதான வீதியின் 56வது மைல் கல்லில் மகாஓயா பொரபொல என்னுமிடத்திலிருந்து இடது பக்கமாக, பொரபொல வாவி வீதியினுாடாக சுமார் 5 கிலோமீற்றர் பிரயாணம் செய்து எங்கள் வாகனங்களை நிறுத்தி, பலத்த மழையினுாடே நனைந்துகொண்டு, சுமார் விதைப்பந்துகளையும், மரக் கன்றுகளையும் சுமந்து, அடர்ந்த புல்வெளி, சிற்றாறுகள், மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும் யானை வேலிகள் (அவைகளை மினசாரம் தாக்காமல் கவனமாக கடந்து), முட்களும், கற்களும் நிறைந்த, சேறும், சகதியுமான வழுக்குகின்ற ஒற்றையடிப் பாதைகள் போன்றவைகளைக் கடந்து மீள்வனமாக்கப்போகும் சுமார் 5 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இடத்தை அடைந்தோம்.
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர். ஏ.எல்.எப். றகுமான் தலைமையில் டொக்டர். ஏ.எல். பாறுக், டொக்டர். ஆர்.ஏ. நியாஸ் அகமட், மற்றும் உத்தியோகத்தர்கள் அடங்கிய ஒரு குழுவும், மகாஓயா பிரதேச வனபரிபாலன உத்தியோகத்தர் லியாவுல் ஹக்கீம் தலைமையில் சுமார் 10 பேர் அடங்கிய வனபரிபாலன உத்தியோகத்தர்கள் அடங்கிய இன்னொரு குழுவும் சுமார் 6000 விதைப் பந்துகளை வீசியும், 1000 மரக்கன்றுகளை நடுகை செய்தும் பலத்த மழைக்குள் நனைந்து கொண்டு இந்தப் பணியை செவ்வனே செய்து முடித்தார்கள். இந்தக் கடின சூழலுக்குள் மிகவும் இலகுவாக தாக்குப் பிடித்து பணிகளைச் செய்த வைத்தியசாலையின் பெண் உத்தியோகத்தர்களின் திராணியையும், தைரியத்தையும் பாராட்ட முடியாமல் இருக்க முடியாது. அத்தோடு வைத்திய அத்தியட்சகர் அவர்களின் குழுச் செயற்பாடு (Team Work) என்னைப் பிரமிக்க வைக்கிறது. அவருக்கு என்றும் எல்லாவற்றிற்கும் துணையாகவிருக்கும் டொக்டர் ஆர்.ஏ. நியாஸ் அகமட், மருத்துவ அதிகாரி (தரநிர்ணயம்), டொக்டர். ஏ.எல். பாறுக், மருத்துவ அதிகாரி (பொதுச் சுகாதாரம்) போன்றவர்களளையும், அவர்களின் உத்தியோகத்தர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது. டொக்டர் ஏ.எல்.எப். றகுமானும், அவரது குழுவினரும், என்னைப் பொறுத்தவரையில் நிருவாகச் நடவடிக்கைகளில் குழுச் செயற்பாடுகளிற்கு ஒரு முன்னுதாரணமும், மாதரியுருவும் (Role Model) ஆகும் என்றால் அது மிகையில்லை.
பணிகளை முடித்து, முன்னர் கூறிய கடினமான சூழல்களை பலத்த மழையில் நனைந்துகொண்டு கடந்து, எங்கள் வாகனங்களை அடைந்து, அங்கிருந்த ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்தி, சிறிய நிகழ்வொன்றையும் நடாத்திவிட்டு எங்கள் இடங்களை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தோம். அரந்தலாவ, மங்களகம தாண்டியவுடன், பெய்த கடும் மழையால் வீதி வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டு வேகமாக நீர் ஓடிக்கொண்டிருந்தது. வீடு சேர்வதற்கு எல்லோருக்கும் இன்னும் ஒரு முக்கால் மணித்தியால பயணமே தேவைப்பட்டது. இருந்தும், வெள்ளம் காரணமாக வந்த வழியே திரும்பி, மகாஓயா, பதியத்தலாவ, பிபில சென்று அங்கிருந்து இங்கினியாகலை வழியாக அம்பாறை சென்று வீடுகள் அடைந்தோம். மேலதிகமாக சுமார் 4 மணித்தியாலங்கள் தேவைப்பட்டது. இருளில் புறப்பட்டு இருளில் சென்றடைந்தோம். எவைகளையோ ஒளியாக்க.
எங்களது பணிகள் முடிந்து, சிறு நிகழ்வில் வனபரிபாலன அதிகாரி லியாவுல் ஹக்கீம் பேசும்போது, என்னைச் சுட்டிக்காட்டி இவர் காடுகள் சம்பந்தமாக கற்பிக்கிறார், கற்கிறார் அவருக்கு தேவையிருக்கிறது காடுகளை விரிவாக்க. வைத்தியத்துறையைச் சேர்ந்த உங்களுக்க என்ன தேவையிருக்கின்றது? நீங்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள், காலத்தால் நினைவுகூரப்பட வேண்டியவர்கள் என்று அவர் கூறியபோது வெளியே பெய்துகொண்டிருந்த அடர் மழையினால் வனங்களும், பூமியும் ஈரமாகி குளிர்ந்ததுபோல எங்களது மனங்களும் ஈரமாகி குளிர்ந்தன.
No comments:
Post a Comment