Friday, December 27, 2019

எங்கள் தேசம் - நேர்முகம்



நேர் கண்டவர் - இர்சாத் இமாமுத்தீன்:

அறிமுகம் :
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமைாற்றும் (ஏற்கனவே கிழக்குப் பல்கலைக்கழைகத்தின்  விஞ்ஞான பீடத்தின், விலங்கியற் பிரிவில் சிரேஸ்ட விரிவுரையாளராக பணியாற்றியவர்) .எம். றியாஸ் அகமட். விஞ்ஞானமானி விலங்கியல் சிறப்பு B.Sc. (Special in Zoo)(Hons) கிழக்குப் பல்கலைக்கழகத்திலும், விஞ்ஞான முதுமாணி MSc (by Research) - University of Wits, Johannesburg, South Africa யில் Behavioural Genetical Evolution துறையிலும், முது தத்துவமாணியை ( MPhil) Behavioural Ecology துறையில் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் கற்றுத் தேர்ந்துள்ளார். இயற்கை விஞ்ஞானத்திலும், சமூக விஞ்ஞானத்திலும் பொறுப்பு வாய்ந்த பல்முனைசார் ஆய்வுகளை தொடர்ந்தமானமாய் மேற்கொள்பவர். சூழலினதும் சமூகத்தினதும் உண்மையின் மனச்சாட்சியாய் செயற்படும் றியாஸ் அகமட் தனது ஆய்வுகளின் உள்கட்டுமான நேர்த்திக்காக கள வழி அலைவுகளை மேற்கொள்பவர். தமது சூழல்சார் சூத்திரங்களை, அக்கறைகளை, கவன ஈர்ப்புகளை, துயரங்களை, வலிகளை, திட்டங்களை தனது பதிவுகள் மூலம் வெளிப்படுத்தி சூழல்-மனிதன் எனும் இரு கண்ணிகளிடையேயுள்ள முரண்பாடுகளை உடைத்து நேர் புள்ளியொன்றில் இணைத்து இயக்கப் பார்க்கிறார். அண்மைக் காலமாக விதைப்பந்துகள் மற்றும் இதர திட்டங்கள் மூலம் இலங்கையை பசுமையாக்கல என்னும் முயற்சியிலும் தீவிரமாகவும் ஈடுபட்டுவருகின்றார். பன்னிரண்டுக்கு மேற்பட்ட நுாற்களையும் எழுதியுள்ளார். தவிரவும், இலக்கிய உலகில் அம்ரிதா ஏயெம் எனும் புனைபெயரில் இயங்கும் றியாஸ் அகமட்; சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாடகம், கட்டுரை, இசை, விமர்சனம், சினிமா என பல்துறை இயங்குதளத்தில் ஆரோக்கியமாக இயங்கி எழுத்தின் நுண்கூறுகளில் பல்வேறு பரிசோதனை வகைகளை செய்தும் , இயங்கியும் வருகிறார்.


இர்சாத் இமாமுத்தீன்: விதைப்பந்துகளும், உங்களுடைய மீள்வனமாக்கல் நடிவடிக்கைகள் பற்றியும் கூறமுடியுமா?


நான்: விதைப்பந்துகள் என்பது மூன்று பங்கு களியும், ஒரு பங்கு பசுஞ்சாணமும் கலந்து ரொட்டிக்கு மாவு பிசைவதுபோலு உருண்டையாக்கி அதன் நடுவில் ஒரு விதையை வைத்து ஒரு நாள் நிழலிலும், பின்னொரு நாள் வெயிலிலும் காயவைத்து, அதனை சேமித்து, பின்னர் நாங்கள் வெளியே தூரப் பிரயாணங்கள் செல்லும்போது அதனை மரங்கள், காடுகள் தேவையான இடங்களில் வீசிவிட்டு செல்லவேண்டும். பின்னர் மழை பெய்ய, களி கரைந்து விதைகள் முழைக்கத் தொடங்கும். பந்துக்குள் விதைகள் ஒரு வருடம் வரை பாதுகாப்பாக இருக்கும். இது புராதன எகிப்து முறையாகும். இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பிறகு ஜப்பானியர்கள் இந்த முறை மூலம் காடுகளை வளர்த்து வெற்றியடைந்திருந்தார்கள். இந்தியா போன்ற பல நாடுகளில் வெற்றிகரமான ஒரு முறையாக இது இருந்தாலும், இது இலங்கைக்கு பரிச்சயமற்ற முறையாக இருக்கின்றது. இந்த முறையை இங்கு உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பல்வேறு பாரம்பரிய மரங்களின் விதைகளைச் சேகரித்து, பின்னர் விதைப்பந்துகளுக்கு தேவையான மூலப்பொருட்களைச் சேகரித்து, விதைப்பந்துகளை உருவாக்கி, அதனது வெற்றித் தன்மையை பரிசோதிப்பதற்காக நான் தற்போத கடமையாற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக, பிரயோக விஞ்ஞான பீடத்தின், உயிரியல் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் அதனைப் பரிசோதித்தேன். வியக்கத்தக்க வகையில் விதைப்பந்துகளிலிருந்து வேம்பு, புளி, நாவல், அன்னமுன்னா, ஆத்தி போன்ற மரங்கள் வளரத் தொடங்கியிருந்தன. இதன் வெற்றி வீதம் சுமார் 90 சதவீதமாகும். 2018.12.21ம் திகதி வரை புளிய மரங்கள் ஒரு அடிக்கு மேல் வளர்ந்துவிட்டிருந்தன. விதைப் பந்துகளின் பரீட்சார்த்த ஆய்வுகள் வெற்றிபெற்ற கையோடு எனது மாணவர்களின் பாடத் திட்டத்திற்குள் விதைப் பந்துகளைப் புகுத்தி அவர்களுக்கு இந்த திட்டத்தை புரியவைத்து பங்குதாரராக்கினேன். அவர்கள் அனைவரும் இலங்கையின் பல்வேறு பகுதியையும் சேர்ந்தவர்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு சென்று சுமார் 130 க்கு வகைகளுக்கு அதிகமான பல்லாயிரக்கணக்கான விதைகளைச் சேகரித்து வந்து மலைக்கவைத்தார்கள். அதன் பின்னர்; ஆயிரக் கணக்கில் விதைப்பந்துகள் செய்யும் திருவிழாவை எங்கள் பீடத்தில் வெற்றிகரமாக நடாத்தினோம். 


கடந்த டிசம்பர் (2018), ஜனவரி (2019) காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் அரந்தலாவ பகுயில் 100 ஹெக்டேயர் காடுகளை மீள்வனமாக்குவதற்காக இரு தடவைகளில் 10000 விதைப்பந்துகளையும், 2000 விதைகள், முழைத்த விதைகள், கன்றுகள் போன்றவைகளை, அந்த மாவட்டத்தின் வனபரிபாலன திணைக்களத்தின் முகாமையின் கீழ் எனது மாணவர்களின் உதவியுடன் விதைத்தோம். நாட்டினோம். இதே போன்று கடந்த ஜனவரி (2019) காலப் பகுதியில் தேத்தாத்தீவைச் சேர்ந்த எனது முன்னை நாள் மாணவனும் தற்போதைய ஆசிரியருமான ரமேஸ் சிவஞானம் மற்றும் அவரின் மாணவர்கள் (பல்கலைக்கழக, பாடசாலை) மாணவர்களின் உதவியுடன், மட்டக்களப்பு வனபரிபாலன திணைக்களத்தின் முகாமையின் கீழ் புல்லுமலை, அலியாஓடை என்ற பகுதியில் 100 ஹெக்டேயர் காடுகளை 5000 விதைப்பந்துகளை வீசியும், 2000 விதைகளை, முழைத்த விதைகளை, கன்றுகளை விதைத்தும், நாட்டியும் மீளவனமாக்கலில் ஈடுபட்டோம். சில தனியார் பெரும் காணிகளிலும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டோம். பருத்தித்துறை பசுமைச் சுவடுகளின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்திலும், அதன் தீவகப் பகுதிகளிலும் இன்று சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, அங்கு ஏற்கனவே இருந்து அழிந்துபோன பழைய பாரம்பரிய சூழற்றொகுதியை உருவாக்குவதற்கான வேலைகளையும் கடந்த 2019, பெப்ரவரியில் ஆரம்பித்திருக்கிறோம். அதை விடுத்து திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, அம்பாறை, பொலநறுவை போன்ற மாவட்டங்களிலுள்ள சுற்றுச்சூழல் ஆர்வமுள்ள குழுக்களுடன் இணைந்து அந்தந்த பிரதேசங்களில்  அழிந்துபோன வனங்களை மீளுருவாக்கும் வேலைத்திட்டங்களிலும் ஈடுபட்டுவருகிறோம். அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் கண்டற் சூழற்றொகுதியை மீளுருவாக்குதலில் சுற்றுச்சூழற் குழுக்களுடன் ஆர்வத்தை செலுத்தி வருகின்றோம். அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனையில் கோணாவத்தை ஆற்றை சுற்றி கண்டல் சூழற்றொகுதியை மீளுருவாக்கும் வேலைத்திட்டங்டகளிலும் ஈடுபட்டு வருகின்றோம்.

விதைப்பந்துகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்த தமிழிலும், சிங்களத்திலும் வீதி நாடகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன் மும்மொழிகளிலும் பிரசுரங்களும் மக்களுக்கு விநியோகிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன் கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த இசைநடனக் கல்லூரியை சேர்ந்த எனது மாணவர்களும் இதற்கு கைகொடுத்திருப்பது இதற்கு இன்னுமொரு பலமாகும். கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மற்றும் பல சுற்றுச்சூழல் ஆர்வல குழுக்கள் உதவுவதற்கான கரிசனையை முன்வைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இ;ன்னொரு புறம் என்னிடம் கற்று தற்போது வேலைசெய்துகொண்டிருக்கும் மாணவர்களும், எனது ஆசிரியர்களும் இதற்கு உதவ முன்வந்திருக்கிறார்கள். அதே நேரம் எனது இலக்கிய நண்பர்களும், எழுத்தாளர்களும் இதற்குத் தேவையான விதைகளை அனுப்புவதுடன், இந்த திட்டத்தை சாத்தியப்படுத்தி இலங்கையை பசுமையானதாக மாற்ற உறுதி பூண்டிருக்கிறார்கள்.
மீள்வனமாக்கலுக்கு அப்பால் அதனுடன் சம்பந்தப்பட்ட வேறு எவ்வாறான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறீர்கள்?
ஈரவலயத்தை அடிப்படையாகக் கொண்ட (பெரும்பான்மையினரின்) பிரதேசங்களில் இன்சா அல்லாஹ் வருகின்ற தென்மேற்கு பருவ மழைக் காலத்தின் முன் எனது மாணவர்களைக் கொண்டு பல மீள்வனமாக்கல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். மூன்று சரணாலயங்களில் (தென்னிலங்கையில் இரண்டு, கிழக்கில் ஒன்று) வனவிலங்குகள் உணவாகக் கொள்ளக்கூடிய தாவரங்களை உருவாக்கும் விதைப்பந்து வேலைத்திட்டத்தை அதே மழையுடன் தொடங்க இருக்கிறோம். அதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட திணைக்களத்திடமிருந்து பெற்றிருக்கின்றோம். இதற்கு மேலாக பாடசாலை மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள், பாடசாலைகள், புதிதாக உருவாக்கப்பட்ட கிராமங்கள், வீதிகள் போன்றவைகளில் பசுமையாக்கல், பிரதேசங்களுக்குரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை இனங்கண்டு அவைகளை நிவர்த்தித்தல் போன்றவைகளுக்கு பல்வேறு பிரதேச குழுக்களுடன் வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம். ஓவ்வொரு பிரதேசத்திலும் சுற்றுச்சூழல் அக்கறையுள்ள சுயசார்புள்ள தங்களை தாங்களே இயக்கக்கூடிய நிலைபேறான குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். நாங்கள் இல்லாத போதும் அடுத்தடுத்த காலங்களில் அவர்கள் சுயமாகவே இயங்க வேண்டும். இது எங்களுடைய நோக்கங்களில் ஒன்று.

இர்சாத் இமாமுத்தீன்: இந்த மீள்வனமாக்கல் நடிவடிக்கைகளில் எவ்வாறான முறைகளை கையாண்டு வருகின்றீர்கள்?

நான்: பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதுபோல நாங்கள் விதைப் பந்துகள் மட்டும் வீசுவதில்லை. அது மழை காலத்திற்கு முன்னர் மட்டுமே வீசப்பட வேண்டியது. அதற்கு மேலதிகமாக நாங்கள் சேகரித்த பாரம்பரிய விதைகளையும், அவ்வாறான முழைக்கச் செய்யப்பட்ட விதைகளையும், அந்த விதைகளிலிருந்து உருவாக்கிய கன்றுகளையும், இயற்கை சூழற்றொகுதியில் இருந்து பெற்ற கன்றுகளையும் நடுதல். சாத்தியமான ஓரளவு பெரிய மரங்களை மீள்நடுகை செய்தல், அந்நிய ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றி முன்பிருந்த ஆரோக்கியமான சூழற்றொகுதியை உருவாக்கல்,  கண்டற் தாவரங்களை நடுதல், நகர, வீதி பசுமையாக்கம், பிரதேசங்களுக்குப் பொதுவான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான சாத்தியமான தீர்வுகளை முன்வைத்தல், பொதுமக்கள், பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு எற்படுத்தல் போன்ற பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 

இர்சாத் இமாமுத்தீன்: இவ்வாறான நடவடிக்கைகளில் நீங்கள் சந்திக்கின்ற, சந்தித்த சவால்கள் எவை?

நான்: பெரிய சவால்கள் ஒன்றுமில்லை. ஆரம்ப காலங்களில் விதைப்பந்துகள் உருவாக்கலில்தான் பல சவால்களாக இருந்தன. ஏனெனில் இலங்கைக்கு அறிமுகமில்லாத முறை. அது சம்பந்தமான இலங்கைத் தரவுகளும், உருவாக்கும் முறையியலும் காணப்படவில்லை. விதைப்பந்துகளை முயன்று தவறிக் கற்றல் முறையில் அனுபவங்களைப் பெற்று உருவாக்கியிருக்கிறோம். நாங்கள் ஈடுபடுகின்ற இவ்வாறான நடிவக்கைகளுக்கு பொருளாதாரம், நிதி வசதிகளை பலர் பெரியதொரு பிரச்சினையாக பார்த்தார்கள். அதனை நாங்கள் பெரிய பிரச்சினையாக எடுக்கவில்லை. பெரும்பாலும் எங்களது சொந்த நிதியையும், வாகனங்களையும், மனித வளங்களையுமே பாவித்தோம். பாவிக்கிறோம். இருந்தும் எங்களது இந்த நடவடிக்கைகளை பெரிதாக ஊடகங்கள் கண்டுகொள்ளவுமில்லை. அதனைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. அதுவும் ஒரு வகையில் சந்தோசமே. ஏனெனில் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றைமட்டும் நாடித்தான் இந்த திட்டங்கள் செய்யப்படுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

இர்சாத் இமாமுத்தீன்: இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும்போது நீங்கள் அவதானித்த அல்லது உணர்ந்து கொண்ட ஏதாவது பிரச்சினை அல்லது விடயம் பற்றிக் கூற முடியுமா?

நான்: முஸ்லிம்கள் என்றால் மரத்தை வெட்டுபவர்கள். காடுகளை அழிப்பவர்கள். சுற்றுச்சூழல் அக்கறை இல்லாதவர்கள் என்ற கருத்து பெரும்பான்மையினர் மத்தியில் நிலவுவதை இந்த வேலைகளில் ஈடுபடும்போது அவதானிக்கவும், கவனத்திற்கொள்ளவும் முடிந்தது. அது வலிந்தும், புனைந்தும் உருவாக்கப்பட்ட கருத்துருவாக்கம் ஒன்றாகவும் இருக்கலாம். முஸ்லிம்கள் மீதான அந்தக் கருத்துருவாக்கத்தை அகற்றி,  மீண்டும் நல்ல கருத்துநிலையாக்கத்தை மீளுருவாக்கம் அல்லது மீள்கட்டமைப்பு செய்ய வேண்டும் என்பதும் எங்களது நோக்கமாக இருந்தது. இருக்கிறது. எங்களது பெரும்பாலான வேலைகளை முஸ்லிம் பிரதேசமல்லாத இடங்களிலேயே தற்போது செய்து வருகின்றோம். அவர்கள் அழைக்கிறார்கள் செல்கிறோம். மக்களை சந்திக்கிறோம்.  கலந்துரையாடுகிறோம். பிரச்சினைகளை அறிகிறோம். அவர்களுடன் உண்டு, தங்கி, மீள்வனமாக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். இது எங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தருகின்றது. முஸ்லிமாக இதனைச் செய்வதில் மிகுந்த “கர்வமும், பெருமையும்” கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

இர்சாத் இமாமுத்தீன்: முஸ்லிம்கள் பற்றிய இவ்வாறான எண்ணப்பாங்குக்கு என்ன காரணம்?

நான்: சுற்றுச்சூழல் வெப்பநிலை 42 பாகை செல்சியஸ் உள்ள ஒரு பிரதேசத்திதல், மரங்கள் குறைந்த, மரங்களின் பெறுமதி தெரிந்த, நீரின் அருமை உணர்ந்த, சுற்றுச்சூழலின் மீதான கரிசனையுள்ள நபி அவர்கள் போதித்த இறைவனின் மார்க்கத்தை பின்பற்றுகிறவர்கள் நாங்கள். நாளை உலகம் அழியப் போகிறதென்றாலும் ஒரு மரக் கன்றையாவது நாட்டிவிடுங்கள் என்று சொல்கிற மார்க்கத்தை பின்பற்றுகிறவர்கள் நாங்கள். அப்படிப்பட்ட இறைவேதம், நபி வழிகாட்டல், இறை கட்டளை வழி வந்த எங்களுக்கு சுற்றுச்சூழல் அக்கறையும், விழிப்புணர்வும், கரிசனையும் அதி உச்சத்தில் இருக்க வேண்டும். குறைவாக அல்லது இல்லாமல் இருந்தால் எங்கோ தவறுகள் இருக்க வேண்டும். அவைகள் திருத்தப்பட வேண்டும். முற்றாக களையப்பட வேண்டும். ஒரு சுற்றுச்சூழல் அக்கறையுள்ள ஆரோக்கியமுள்ள சமூகம் ஒன்று கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இறுதியாக..
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனது பல கட்டுரைகளை எங்கள் தேசம் தொடர்ச்சியாக வெளியிட்டதன் மூலம் பல கதையாடல்களையும், மாற்றங்களையும் சமூகவெளிகளில் ஏற்படுத்தியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.  நாம் அவைகளை நேரடியாக ஒவ்வொரு நாளும் கண்கூடாக காண்கிறோம். அதற்கு எங்கள் தேசத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இன்சாஅல்லாஹ். வெற்றிகரமாக பயணிக்கிறோம். பயணிப்போம். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...