Thursday, December 26, 2019

வௌவால் மரங்கள்



-அம்ரிதா ஏயெம்
இந்த வௌவால் மரங்கள் முன்னொரு காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஐந்து ஆறு மரங்கள் இருந்திருக்கும். பல்வேறு காரணங்களால் இவ்வாறான வௌவால் மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் வௌவால்களும் அழிந்து கொண்டு வருகின்றன. வௌவாலைப் போல மனிதனுக்கு நன்மை செய்யக்கூடிய விலங்குகளை காண்பது அரிது. மனிதனுக்கு தீங்கு தரும் நுளம்புகளைக் கொல்வதோடு, பயிர்களுக்கு தீங்கு செய்யும் பீடைகளையும் அழிக்கின்றன. தாவரங்களில் மகரந்தச் சேர்க்கைக்கும் உதவுகின்றன. நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத நுாற்றுக் கணக்கான வகைப் பழங்களை மகரந்தச் சேர்க்கை மூலம் உருவாக்குகின்றன. நமது வாழைப்பழங்களை உருவாக்குவதே வௌவால்கள்தான். பழங்களை சாப்பிடும் வௌவால்கள் தங்களது மலங்களிலுள்ள விதைகளால் புதிய தாவரங்கள் பல இடங்களில் உருவாவதற்கு உதவுகின்றன. உ-ம் அத்தி, ஆலை, இத்தி, பேரீச்சை, முந்திரி போன்ற நுாற்றுக் கணக்கான மரங்களின் விதைகளை பரப்பி, காடுகள் அழிவதைத் தடுத்து புதிய காடுகளை உருவாக்குகின்றன. இதனால் வௌவால்கள் அயன மண்டல விவசாயிகள் என அழைக்கப்படுகிறார்கள். வௌவாலின் மலத்தை குவானோ என்பார்கள். அது மிக சிறந்த பசளையாகி மண்வளத்தை கூட்டி விளைச்சலைப் பெருக்குகின்றது. இரத்தம் குடிக்கும் வௌவால் சுரக்கும் இரசாயனப் பொருள், ஆராய்ச்சிகளில் உதவுகின்றன. அத்துடன் வௌவால்கள் எழுப்பும் கழியொலிகளின் அடிப்படையைப் புரிந்து பௌதிகவியலில் பல்வேறு உபகரணங்களும் தொழில்நுட்பங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. உ-ம் மீன்களைக் கண்டறிதல், எண்ணெய் வளத்தைக் கண்டறிதல், கண்தெரியாதவர்களுக்கு உதவுவதற்கான ஆய்வுகள் பல. இப்படியாக பல நுாற்றுக்கணக்கான பலன்கள், நன்மைகள்.
ஆனால் இப்பிரபஞ்சத்தின், அதிகூடிய சுயநலமான மிருகமான மனிதன் இந்த வௌவால் மரங்களை அழித்ததன் காரணமாக, மரம் மட்டுமல்ல, வௌவால் மட்டுமல்ல அதனை நம்பிய ஒரு சூழற்றொகுதியே பாதிக்கப்பட்டிருக்கின்றது. வளமிக்க ஆபிரிக்க சவானா சூழற்றொகுதியின் ஆபிரிக்க மரங்களின் உயிர் என அழைக்கப்படும் பாபொப் மரங்கள் அழிந்ததற்கு, அந்த மரத்தின் மகரந்த சேர்க்கைக்க உதவி செய்யும் வௌவால் இனங்கள் அழிக்கப்பட்டதே காரணம். அதன் காரணமாக இப் பூவுலகின் வளமிக்க அந்த சூழற்றொகுதி அழிந்து கொண்டிருக்கின்றது.
இவ்வகையான வௌவால் மரங்களின் வீழ்ச்சி, எங்களது சுற்றுச்சூழல் சம்பந்தமான விழிப்புணர்வின் மலட்டுத்தன்மையையும், எங்களது உயிரினப்பல்வகைமையின் அழிவையுமே பறைசாற்றி நிற்கின்றன.
வௌவாலைக் கொண்டாடாவிட்டாலும். அவைகளை மதிப்போம். வௌவாலை போற்றுவோம். வௌவால் மரங்களை பாதுகாப்போம்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...