Thursday, December 26, 2019

தென்கிழக்கு முஸ்லீம்களும் பக்கீர் சமூகமும்


- அம்ரிதா ஏயெம்

அப்துல் ஆபித் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப் பாடமாகக் கற்று அதிலே முதலாம் வகுப்பில் தேறி அதே பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமானி மாணவராக இருப்பவர். தனது முதலாவது பட்டத்திற்காக செய்த ஆய்வை, ”தென்கிழக்கு முஸ்லீம்களும் பக்கீர் சமூகமும்” என்ற தலைப்பில் தற்போது நுாலாக வெளியிட்டிருக்கிறார். மிகுந்த தேடலும், விரிவான வாசிப்பும் ஆழமான ஆய்வுத்திறனும் கொண்ட எம்.ஏ.ஏ. ஆபித் அவர்களின் இந்நுால் தீவிரமான வாசிப்புக்கும் கலந்துரையாடலுக்கும் உட்படுத்தப்பட வேண்டியதொன்றாகும். மிக விரிவாக பின்னொரு முறை விரிவாக எழுதப்பட வேண்டிய இந்நுாலுக்கு நான் வழங்கிய பின்னுரையை இணைத்துள்ளேன். நேரமிருந்தால் வாசியுங்கள். ஆபித் சிங்கள மொழியை குறுகிய காலத்தில் சுயமாக கற்று, சிங்கள இலக்கிய விடயதானங்களை தமிழ்மொழிக்கு மாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
”இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியத்தினதும், பண்பாட்டுருவாக்கத்தினதும் ஒரு முக்கிய அங்கமாக பக்கீர் சமூகத்தின் இருப்பைக் கருதவேண்டியுள்ளது. இவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகளாக பல பாகங்களிலும் முஸ்லிம்களின் கலாச்சார அசைவியக்கத்திற்குக் கடுமையான உழைப்பைச் செலுத்தி வந்திருக்கிறார்கள். இவர்களின் சமூகப் பரப்பிலான செயற்பாங்குகளும், ஊடாட்டங்களும் அதிகம் அக்கறை கொள்ளப்பட வேண்டியவையும், பொது வெளியில் வெளிக்கொணரப்பட்டு, சமூக உரையாடலாக மாற்றப்பட வேண்டியவையுமாகும். இருந்தும், சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள இவர்களது இருப்பும், கலைகளும், சமூகச் செயல் நிகழ்த்துகைகளும் மத நிறுவனங்களின் இறுக்கமான வாதங்களின் விளைவாக புறமொதுக்கல்களுக்குள்ளாகியிருக்கினறன. முஸ்லிம் சமூகப் பரப்பில் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருக்கும் பக்கீர் சமூகம், அவர்களின் வாழ்வியல், சமூகச் செயற்பாங்குகள், கலை, இலக்கிய அழகியல் சார் விடயத்துவங்கள் குறித்து நுணுக்கமான பார்வைகளைச் செலுத்தி, ஒரு வாசிப்புப் பிரதியாக முன்வைக்கப்பட்டிருக்கும் எம்.ஏ.ஏ.ஆபித் அவர்களின் இந்நூல், இன்றைய சூழலில் பெரும் கவனித்தலைப் பெறுகின்றது. பக்கீர் சமூகத்தின் வேர்களைத் தேடும் வரலாற்றெழுதியல் பிரதியாகவும், அவர்களின் பல்வகைப் பாடல்கள் மற்றும் சமூக வெளி அரங்கு நிகழ்த்துகைகளை நெருங்கி வாசிப்புச் செய்யும் கலை இலக்கியப் பிரதியாகவும், தென்கிழக்கில் தற்பொழுது வாழ்ந்து வரும் பக்கீர்கள் பற்றிய குறிப்புக்கள், அவரகளது நிகழ்த்துகைகளுடன் தொடர்புபட்ட அரிய பாடல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆவணப் பிரதியாகவும் பல பரிமாணங்களில் சுவாரஸ்யமாக விரித்துச் செல்லும் நூலாசிரியரின் முனைப்பு மிகுந்த பாராட்டுக்குரியது.” 
அம்ரிதா ஏயெம் சிரேஸ்ட விரிவுரையாளர்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...