Thursday, December 26, 2019

பாலமுனை முபீதின் உடைந்த கால்கள் - நவீன குறுங்காவியம் குறுங்காவியங்களின் வரிசையில் ஆரோக்கியமான முயற்சி.


-அம்ரிதா ஏயெம்
விமர்சனம் என்பது இறுக்கமான விதிகளுக்கும், கோட்பாடுகளுக்கும், உணர்வுகளுக்கும், அழகியல் விதிகளுக்கும் உட்பட்டு ஒரு படைப்பாளியை அடிஅடியென்று அடித்து துவைத்து கீலம்கீலமாக்கி காயபோடுவதென்றால் அந்த விமர்சனமுறை தேவையா என்ற ஐயப்பாடுள்ளது. அதனை நிறைவான விமர்சனம் என்று ஒரு போதும் சொல்லப் போவதும் இல்லை. இவைகளோடு அடிக்காமல், குறைநிறைகளை சுட்டிக்காட்டி, அந்த படைப்பாளியின் அடுத்த கட்ட நகர்வுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினால் அந்த விமர்சனமுறை ஆரோக்கியமானதொன்றாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
பாலமுனை பிரதேசத்திற்கும் குறும்பாக்களுக்கும் அப்படி என்னதான் தொடர்போ தெரியவில்லை. பாலமுனை பாறுக் அவர்களின் கொந்தளிப்பு, தோட்டுப்பாய் மூத்தம்மா, எஞ்சியிருந்த பிரார்த்தனைகளோடு போன்ற குறுங்காவியங்களுக்கு பிறகு அதே பாலமுனையிலிருந்து பாலமுனை முபீத் கொலுசுச் சத்தம் (2013), உரத்துப் பேசுதல் (2014) போன்ற கவிதைத் தொகுதிகளுக்குப் பிறகு உடைந்த கால்கள் (2015) என்ற நவீன குறுங்காவியத்தை தந்திருக்கின்றார். இது அவரது மூன்றாவது முயற்சியாகும். பாலமுனை முபீத் தனது உடைந்த கால்கள் மூலமாக சமூகத்தின் புரையோடிப் போயிருக்கின்ற சில “பிரச்சினைகளை” சொல்ல முயன்றிருக்கின்றார்.
ஊரில் கௌரவமான குடும்பத்தில் பாத்தும்மா என்ற பெண் பிள்ளை பிறக்கின்றாள். பாத்தும்மாவை பெற்றோர் கண்ணை இமை காப்பது போன்று காத்து வளர்க்கின்றார்கள். பாடசாலையில் உயர்தரம் படிக்கையில் ஒருவனுடன் காதல் வயப்பட்டு படிப்பைக் கெடுத்துக்கொள்கிறாள் பாத்தும்மா. பின்னர் வேறொரு இடத்தில் அவளுக்கு திருமணம் பேசி, அந்த திருமணம் நடக்க இருந்த நாளில், அந்த பாத்தும்மா தனது காதலனுடன் ஓடிவிடுகின்றாள். இதனால் திருமணம் தடைப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட பழிச்சொல், அவமானம் காரணமாக தந்தை மரைக்கார் நோய்வாய்ப்பட்டு மரணமடைகின்றார். தாய் மசாயினா புத்தி பேதலித்து சித்த சுவாதீனமற்றவளாகிறாள். இதுதான் பாலமுலை முபீத் அவர்களின் உடைந்த கால்கள்.
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் சில அன்றாட வாழ்வியல் கூறுகளை, அதற்கேயுரிய மண்வாசனையோடும், மண்சார்ந்த சொற்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் கொண்டும், அதற்கேயுரிய அழகியலோடு பாலமுனை முபீத் பதிவு செய்ய முயன்றிருக்கிறார். வெற்றியும் பெற முயற்சித்திருக்கிறார். இஸ்லாமிய பண்பாட்டு, அடையாளங்களோடு, காவியங்கள் எழுதிய அப்துல் காதர் லெப்பை, ஜின்னாஹ் சரிபுத்தீன், பாலமுனை பாறுக் போன்ற புலவர்கள் வரிசையில் பாலமுனை முபீத் அவர்களும் தனது தடத்தை அழுத்தமாக பதிக்க விழைகிறார். மிக மிக இளம் வயதில் நான்கு நூல்களைத் தந்த, முபீத் அவர்களின் இந்த முயற்சிக்கும், உடைந்த கால்களின் உயர்தரமான ஆட்பேப்பரின் மீதான அச்சுவேலைகளுக்காகவும் மிகுந்த பாராட்டுக்கள். நீண்ட பொறுமையான வாசிப்பும், பயிற்சியும் உங்களை இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்லும்;. வாழ்த்துக்கள முபீத்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...