-அம்ரிதா எயெம்
இரண்டாயிரம்களின் ஆரம்பங்களில் பிரச்சினை உக்கிரகட்டத்திலிருந்த காலத்தில் அளிக்கம்பை வனக்குறவர்களிடம் ஒரு ஆய்வை மேற்கொள்வதற்காக நீண்டகாலமாக அளிக்கம்பைக்கச் சென்று கொண்டிருந்தேன். அளிக்கம்பைக்கு அக்கரைப்பற்று
அம்பாரை வீதியால் சென்று நீத்தை வழியாக, அல்லது திருக்கோவில் சாகாமம் வழியாக அல்லது அக்கரைப்பற்று பனங்காடு வழியாக மூன்று வழிகளிலும் போவதுண்டு. எந்த வழியால் சென்றாலும், போக்குவரத்துச் செய்வதற்கே தகுதியற்ற மிக மிக மோசமான பாதைகள். உயிருக்கே உத்தரவாதமில்லாத காலம். நமக்கு உயிர் ம.. மாதிரி இருந்த காலம். அப்போது புட்டம்பையைக் கடக்கும் போதெல்லாம் ஆறுதலாக மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி அந்தப் பள்ளிவாசல், மத்ரசா எல்லாவற்றையும் பார்ப்பதுண்டு (இது தற்கொலை முயற்சிக்கு சமனானது. கண்ணகிபுர மலையிலிருந்தும் ஆபத்து வருகிற காலம்). அந்த அறபு எழுத்துக்களை வாசிப்பதுண்டு. இந்த கொடுந்துயரத்தின் வலி எப்போதும் பாரமாக இருப்பதுண்டு. இது போலவே மற்வர்களுக்கும் வரலாறுகள் இருக்கலாம். யாராக அவர்கள் இருந்தாலும், தாங்கள் பூர்விகமாக வாழ்ந்த இடத்திலிருந்து வெட்டி கொலைசெய்து துரத்தப்படுவது துயரமானதுதான்.
(இப்ப வனக்குறவர்களுக்கு வருவம்) வனக்குறவர்கள் பழைய தெலுங்கு மாதிரியான ஒரு மொழியை தங்களுக்குள் பேசுவார்கள். வெளியாக்களுடனும் கல்வியும் தமிழில்தான். இதேபோன்று தம்பத்தேகம, அனுராதபரத்திலுள்ளவர்கள் தெலுங்கும், சிங்களமும் பேசுவார்கள். நான் வனக்குறவர்கள் வளர்த்த பாம்புகள், பாம்புக்கடி சிகிச்சை முறைகள்,அவர்கள் எடுக்கும் எண்ணெய்கள் (மயில், கரடி போன்றன), வேட்டைமுறை (தங்கல்வேட்டை, பல நாய்களை வைத்து வேட்டையாடும்முறை), வாழ்க்கைமுறை, கலாச்சாரம் போன்றவைகளை கற்றுக்கொண்டிருந்தேன். நான் அப்போது கண்ட அவர்களின் வாழ்க்கைமுறைக்கும் இப்போதைக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம். அதிசயித்தக்க வகையில், காட்டு முருகனை கடவுளாக கருதும், தற்போது கிறிஸ்தவர்களான அவர்களின் பாரம்பரியமும கலாச்சாரமும் அழிந்தது போல நான் திரட்டிய தரவுகளும் தகவல்களும் அழிந்து போய்க்கிடக்கின்றன.
No comments:
Post a Comment