Thursday, December 26, 2019

அண்மைய வரவுகளான சில சிறுசஞ்சிகைகளை முன்வைத்து...


- அம்ரிதா ஏயெம்
சிறுசஞ்சிகைகள்:
வீ. அரசு அவர்கள் சிறுசஞ்சிகைகளை வரைவிலக்கணப்படுத்த எடுத்த முயற்சிகளைக் கொண்டு, சிறுசஞ்சிகைகளின் இயல்புகளாக பின்வரும் இயல்புகளை பட்டியற்படுத்த முயற்சிக்கலாம்.
1) இலாப நோக்கின்றி நடத்தப்படுவதும், குறைந்த பிரதிகளே வெளிவருவதுமாக இருக்க வேண்டும். இவை தட்டச்சு, கையெழுத்து என்ற எந்த வடிவத்திலும் வரலாம்.
2) வர்த்தக நோக்கும், விளம்பர பற்றும் இன்றி நடாத்தப்படுவன.
3) குறிப்பிட்ட தத்துவம் அல்லது கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு வெளிவருவன.
4) வாசகர்களின் இரசிகத்தன்மையை வணிகம் செய்யாமல், தனது கோட்பாட்டை முதன்மைப்படுத்தி, வாசகனை தெளிவுபெறச் செய்வதில் முன்நிலை வகிப்பன.
5) அச்சு அமைப்பு, வடிவ அமைப்பு, பட விளக்கங்கள் அல்லது படக்கவர்ச்சி போன்றவற்றை முதன்மைப்படுத்தாது. முற்றாக தாம் கொண்டிருக்கும் கோட்பாட்டிற்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் தன்மையின.
6) தொடர்ந்து இவை வருவதில்லை. நிற்பதும் பின்னர் வருவதும் இவற்றின் இயல்பு. இதற்கு விதிவிலக்கானவை மிகக் குறைவு.
7) அந்த சஞ்சிகைகளுக்கு தான் சார்ந்த மெய்யியல் நிலைப்பட்ட ஒரு உள்ளார்ந்த அரசியல் ஒன்றிருக்கும்.

ஆனால் தற்போதைய நிலையில் எல்லா சிறு சஞ்சிகைகளும், மேற் கூறிய எல்லா இயல்புகளையும் கொண்டிருப்பதில்லை. ஏனெனில், தொழில் நுட்பமும், பொருளாதார விருத்தியும், காலமும், பௌதிக கலாசார விருத்தியும் இந்த இயல்புகளில் சேர்ந்து பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்திருக்கின்றன.
தற்போது எல்லா சஞ்சிகைகளும் நட்டத்தில் இயங்குவதுமில்லை. சில சஞ்சிகைகளுக்கு விளம்பரதாரர் அனுசரணையும், புரவலர்களின் ஒத்துழைப்பும், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியும், வெளிநாட்டு உறுதுணையும் கிடைக்கின்றன. இதன் காரணமாக எல்லா சஞ்சிகைகளும் நட்டத்தில் செல்வதில்லை.
பெரும் வணிக நிறுவனங்கள் பெரும் வணிகமயப்பட்ட அளவில் பேரளவில் இலக்கிய சஞ்சிகைகளை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டிருப்பதால், குறைந்த பிரதிகள் பெரும்பாலும் சஞ்சிகைகளுக்கு இருப்பதில்லை.
தற்போதைய நிலையில் சில சிறுசஞ்சிகைகள், தங்களுடைய இலக்கியம் சார்ந்த கோட்பாட்டையா அல்லது வியாபாரம் செய்தலையா முதன்மைப்படுத்துகின்றன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 1980 களிற்கப் பின்னரான பெருமளவான தமிழர்களின் பலம்பெயர்வானது அந்தந்த நாடுகளில் பெரும் வணிக நிறுவனங்களின் சஞ்சிகைகளுக்கான கேள்விகளை அதிகரித்திருக்கின்றன. இதனை பெரும் வணிக நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியும் இருக்கலாம்.
சிறுசஞ்சிகைகளின் கோட்பாடுகள், அமைப்பு என்பதைப் பொறுத்த மட்டில், சில சஞ்சிகைகள் கோட்பாட்டிலும், சில அமைப்பிலும், இன்னும் சில இரண்டிலும் கவனம் செலுத்துபவைகளாகவும் இருந்தன, இன்னும் இரண்டிலும் கவனம் செலுத்தாதவைகளாகவும் இருக்கலாம்.
உண்மையிலே இதனது குறிப்பிட்டு சொல்லக்கூடிய இயல்பு என்பது தொடர்ச்சியாக வராமல் இருப்பதும், நிற்பதுமேயாகும். இது தொடர்ந்தேர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கு பொருளாதாரம் மட்டும் காரணமல்ல. ஆக்கங்களை பெறுவதிலுள்ள கடினங்கள், அவைகளை சேகரிப்பது, அதன் தரம் போன்ற பிரச்சினைகள் காரணமாக தொடர்ச்சியாக வருவதில்லை.
சிறுசஞ்சிகைகளுக்கான மெய்யியலோடு கலந்த அரசியல் என்று ஒன்றிருப்பது எக்காலத்திலும் மாறாதது ஆகும். சிறு சஞ்சிகைகள் இருக்கிறது இல்லையோ? அல்லது வெளிவருகிறது இல்லையோ இந்த மெய்யியலும் அரசியலும் முடிந்து போவதில்லை.
சிறுசஞ்சிகைகளுக்கான விமர்சனங்கள்:
இந்த இயல்புகளை அடிப்படையாக கொண்டு, சிறுசஞ்சிகைகளுக்குரிய விமர்சனங்களை எவ்வாறு செய்யலாம் என்பதும் ஒரு சிக்கலான விடயமே. இந்த சஞ்சிகைகள் பெரும்பாலும் மூன்று வகையாக இருக்கலாம். சில வேளை அதற்கு மேலதிகமாகவும் இருக்கலாம்.
1) கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் சங்கங்களினால் வெளியிடப்படும் மாதாந்த, கலாண்டு, அரையாண்டு, ஆண்டு சஞ்சிகைகள்.
2) புல்கலைக்கழக, கல்விக்கல்லூரி, ஆசிரிய பயிற்சிக்கலாசாலை, தொழி;ல்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பிரதேச செயலக கலாசார பேரவைகள் மூலம் வெளியிடப்படுகின்ற மாதாந்த, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு சஞ்சிகைகள்
3) தேர்ந்த வாசிப்புள்ள எழுத்தாளர்கள், வாசகர்கள், வணிக நிறுவனங்கள் வெளியிடும் மாதாந்த, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு சஞ்சிகைகள்
முதலாவது வகை சஞ்சிகைகள் சாதாரண தரமாவும், இரண்டாவது இடைத் தரமாகவும், மூன்றாவது நல்;ல தரமான சஞ்சிகைகளாகவும் இருக்கலாம். (இங்கே தரம் என்றால் என்றால் என்னவென்று ஒரு கேள்வியும் இருக்கின்றது). இம் மூன்று வகையான நிறுவனங்களினாலும் வெளியிடப்படும் சஞ்சிகைகள், எப்போதும் அந்தந்த நிலைகளில் இருக்க வேண்டும் என்ற அவசியம் எப்போதும் இல்லை. அந்தந்த நிறுவனங்களில் காலத்திற்கு காலம் நல்ல காத்திரமான ஆசியர்களும், சஞ்சிகைக் குழுக்களும் வாய்க்கப்பெறும்போது நல்ல தரமான சஞ்சிகைகள் எந்நிறுவனங்களின் வழியிலிருந்தும் கிடைக்கலாம்.
அந்த அடிப்படையில், இந்த சஞ்சிகைகளை எவ்வாறு மதிப்பீடு செய்யலாம். குழந்தைகளையும், இளைஞர்களையும், வயோதிபர்களையும் ஒரே ஓடுபாதையில் ஓடச் செய்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியுமா? அல்லது ஒரே திறத்தாரை களித்தரையிலும், புற்தரையிலும், மணல் தரையிலும், ஓரே நேரத்தில் ஓடச்செய்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியுமா?
எனவே இந்த சஞ்சிகைகளுக்கான மதிப்பீடுகளை வெவ்வேறு அளவுகோல் கொண்டுதான் செய்ய வேண்டியிருக்கின்றது. அப்போதுதான் மெலிந்தவர்களை போக வேண்டிய பாதைக்கும், வலிந்தவர்களை ஆற்றுப்படுத்தவும் உதவலாம். அதைவிடுத்து, இறுக்கமான கோட்பாடுகள், விதிகள், அழகியல் உணர்வுகள் போன்றவற்றிற்கூடாக எல்லோரையும் அறுவைச் சிகிச்சை செய்து அடி அடியென்று அடித்து துவைத்து காயப்போடுவது எழுத்தையும், சிறுசஞ்சிகைகளையும் பேண்தகவு நிலையில் வைத்திதருக்காது என்று கருதலாம் போல் இருக்கிறது.
எறும்புகள்:
காலாண்டு கலை இலக்கிய சமூகவியல் சஞ்சிகை என்றவாவாறாக ஏ.ஜே. முஜாரத் அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு, கிண்ணியா எறும்புகள் பதிப்பகத்தின் ஊடாக, எறும்புகள் (ஆகஸ்ட் - நவம்பர், இதழ் 1) என்னும் சஞ்சிகை வெளிவந்துள்ளது. புதிய இலக்கியவாதிகளை உருவாக்கும் நல்நோக்கத்தில் கவிதை, கட்டுரை, சிறுகதை, மற்றும் சிறவுர் இலக்கியங்கள், இளம் கலைஞர் அறிமுகம் போன்றவற்றை அறிமுகப்படுத்துவதோடு, அவர்களுக்கு களமும் அமைத்து அவர்களை சிறந்த இலக்கியவாதிகளாக உருவாக்குவதிலும் முயற்சி எடுக்கிறோம் என்று ஆசிரியர் தனது கருத்தில் குறிப்பிடுகிறார்.
தமிழருவி அப்துல் கஹ்ஹார் ஜே.பி. அவர்கள் பற்றிய ஒரு விரிவான பதிவும், கலாபூசணம், எஸ்.ஏ. முத்தலிபு, அவர்களின் இலக்கியம் என்ற பதிவும், நசார் இஜாசின், மாயா ஏஞ்சலோ உதிரும் கனவுகளை உயிர்ப்பாக்கியவள் என்ற கட்டுரையும், கலாபூசணம் கஸன்ஜியுடனான நேர்காணலும், கலாபூசணம் ஏஎம்எம் அலி அவர்களின் இது கவியுகம் என்ற பதிவும், ஏஎம் கஸ்புள்ளாவின் மன்னிக்க வேண்டுகிறேன் என்ற குறுங்கதையும், மூதூர் முகம்மட் றாபி, கிண்ணியா சபறுள்ளாஹ், கலாபூசணம் எம்எம் அலி அக்பர், காத்தநகரான் எம்ரிஎம் யூனுஸ், கிண்ணியா ஏஎல் முகைமினா, கலாபூசணம், சீஉன் துரைராஜா, ஜமீல், கிண்ணியா ஜெனிரா ஹைருல் அமான், ரோசான் ஏ. ஜிப்ரி, இலக்கிய வித்தகர் பீ.ரி. அஸிஸ், ஏ. நஸ்புள்ளாஹ் போன்றவர்களின் கவிதைகளும் எறும்பின் கனதியை அதிகரிக்கின்றன.
இன்றைய தொழில்நுட்பத்தை சாதகமாக்கி, மிகவும் கவர்ச்சியாகவும், அமைப்பில் அழகாகவும் எறும்பு செய்யப்பட்டிருக்கிறது. எறும்புகள் தொடர்ச்சியாக ஊர்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, இதனை வெளியிட்டு வரும், கிண்ணியா எறும்புகள் பதிப்பக நிறுவனர், கவிஞர் ஏ.கே. முஜாரத் அவர்களையும் இந்தக் கனதியான முயற்சிக்காக வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...