Thursday, December 26, 2019

குறியீட்டுக் கதைகள்

- அகமட் சாஜித்


இரண்டாவது முறையாக அம்ரிதா ஏயெமின் 'விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்' பிரதியினை வாசித்து முடித்திருக்கிறேன். ஏலவே இப்பிரதி பற்றி எழுத நினைத்தும் அதற்கான வாய்ப்புகள் தவறி விட்டன. இப்பொழுது மீள் வருகையாக இப்பிரதியினை நுகர்ந்து எழுதுவதில் பிரிதொரு மயக்கமிருப்பதாய் உணர்கிறேன். அம்ரிதா வின் எழுத்துக்கள் மீது கனதியான வாசிப்பு தெரிவதை தொடர்ச்சியான ஒரு வாசிப்பாளன் இலகுவில் புரிந்து கொள்வான். அம்ரிதாவினை வாசிப்பவர்கள் சூழலின் விளைவினையும் கூடவே கடந்து செல்கிறார்கள். தான் சார்ந்த துறையின் வீரியத்தினூடே அம்ரிதா கதைகளைச் சொல்கிறார். இதுவரைக்கும் மொழிகளின் வித்தைகளோடு சூழலின் கதை சொல்லும் அழகியல் அம்ரிதாவிடம் மட்டுமே தங்கியிருக்கின்றன. கடந்து செல்கின்ற மாமூலான போக்கிலிருந்து அம்ரிதாவின் கதைகள் வேறொரு பக்கம் எம்மை திசை திரும்ப வைத்திருக்கிறது. வேறுபட்ட பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெவ்வேறு காலங்களில் வெளிவந்த கதைகளை ஒரே வாசிப்பில் நுகரும் போது அவற்றிக்கிடையிலான சங்கிலிப் பிணைப்பினை ஒரு நாவல் வடிவமைப்பில் நான் புரிந்து கொள்ள முற்படுகிறேன். இதுவே ஒட்டுமொத்த பார்வைக்காக என்னை அழைத்துக் கொண்டிருக்கிறது.
உரையாடல்களை உருவாக்கும் இப்பிரதியின் கதைகள், குறியீட்டு அதிகாரத்தின் மூல வடிவமாய் இயங்குகின்றன. சீருடைவாதிகளாகவும், பாதுகாப்பு வேஷத்துடனும், பயங்கரவாத இயக்கங்களும் குரங்குகளின் அனுமானத்தினூடே சித்தரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு கதையின் போக்கிலும் விபரித்துச் சொல்லப்படுகின்ற கெம்பஸ் வளாகம், மரக்கிளைகளில் அலைந்து திரியும் குரங்குகளின் வாழ்வு, அதன் வழியே கேள்விக்குட்படுத்தப்படுகின்ற அதிகார இலுப்பைகள் என அம்ரிதா விசித்திரமாகவே தெரிகிறார். தனித்தனியே அம்ரிதாவின் கதைகளை வகைப்படுத்த முடியவில்லை. ஒரு முற்றுப் புள்ளியிலிருந்து தொடங்கி, மீண்டும் முற்றுப் புள்ளியை இடாதபடி தொடக்கி வைக்கப்படுகின்றன கதைகள். இதிலிருந்து அம்ரிதாவை வாசிக்க முற்படுதலே நேர்த்தியானது. நிறுத்தியும், சாதாரண மிருக நிலைப்பாட்டினூடும் அம்ரிதாவை வாசிப்பின் அது தோல்வியிலே முடிவடைந்து விடும். குறியீட்டு அனுமானத்தின் முதல் சாகசத்தினை நுட்பமாய் நிகழ்த்திய பிரதியாக அம்ரிதாவின் விலங்கு நடத்தைகள் வெளிப்பட்டு நிற்கின்றன.
'தறு' மிக முக்கியமான கதைகளில் ஒன்று. தறுக்காக கொல்லப்படும் கடல் வாசிகளின் ஒட்டுமொத்த வாழ்வாகவே அக்கதையினை நோக்குகிறேன். ராஜபக்ஷ வந்து போகின்ற தீர்க்கரிசன எழுத்துக்களை வைத்தே குறியீட்டு வாதியாக அம்ரிதாவினை அடையாளம் காணலாம். ராணுவ முரண்பாட்டுக் காலங்களின் மற்றுமொரு முகமாக வெளியேறி நிற்கிறார். நடந்தேறிய வன்முறையின் உச்ச கட்ட விளைவினை உயிரிழப்புக்களே சாத்தியமாக்கின. ஈழப் போர் ஏற்படுத்திக் கொண்டிருந்த தாக்கங்களின் விளைவினை இப்பிரதி சீருடை தாக்கமாக உட் கொள்கிறது. ராணுவ அடையாளச் சிதைவினை பேசிய அளவிற்கு புலிகளின் வன்முறைச் சிதிலங்களை இப்பிரதி மிகக் குறைவாகவே பேசியிருக்கிறது. அம்ரிதா எழுதிய காலங்களைப் பொறுத்தவரை இவற்றிக்கான அச்சம் பெரும் தாக்கத்தினை செலுத்தியிருக்கலாம். அப்போதைய வாசிப்பிற்கு இதன் ஊடாட்டம் நெருங்கியே பயணித்திருக்கும். ஆனால் தற்போதைய போருக்குப் பிந்திய சூழலில், இப்பிரதியின் வாசிப்பு பரிணாமத்தை வேறு திசைக்கு செலுத்த முனைந்திருக்கிறது. அல்லது வேறு திசையில் வைத்து வாசிப்பு செய்திருக்கிறேன் எனலாம்.
இரண்டு காலங்களுக்கான பிரதியாகவே இதனை நோக்கலாம். போருக்கு முந்திய வாசிப்பு, போருக்கு பிந்திய வாசிப்பு. முந்திய வாசிப்பினது தாக்கத்தினை விட பிந்திய வாசிப்பு மனோ நிலை கொண்டவன் நான். முந்திய வாசிப்பறிதலில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் முன்னுரையும், அம்ரிதாவின் உரையும் போதுமானது. பின்னரான வாசிப்பிற்கு அம்ரிதா கொடுத்திருக்கும் உரையானது இப்பிரதியின் மீது, மீள் வாசிப்பிற்கான கேள்விகளை தொடக்கி வைக்கின்றன. அம்ரிதா ஏயெம் புதர்களின் எழுத்துக்களை விலங்கு தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் எனும் படியாக எழுதியிருக்கார். Amritha Ayem அற்புதமான படைப்பாளிதான்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...