Thursday, December 26, 2019

சல்லித்தீவு

-ஏ. எம். றியாஸ் அகமட்

”இந்த பூமி கடவுளுக்கு விலை மதிப்பற்றது. இதற்கு தீங்கு இழைத்தால் கடவுளை அவமதித்தது போலாகும். வெள்ளையர் காலமும் ஒரு நாள் முடியும். ஒரு வேளை மற்றைய மனித இனங்களை விட அது வேகமாகவும் இருக்கலாம். நீங்கள் உங்கள் படுக்கையை அசுத்தப்படுத்தினால் அந்தக் கழிவுப் பொருட்களாலேயே மூச்சுத் திணறி முடிவடைவீர்கள். எந்த கடவுள் உங்களை இந் நிலத்திற்கு கொண்டு வந்து ஏதோ ஒரு காரணத்திதற்காக சிவப்பிந்தியரை வெற்றி கொள்ள வைத்திருக்கிறாரோ அவரது சக்தியாலேயே நீங்கள் அழிவீர்கள். எங்களை வெற்றி கொண்டு வாழ்வதை விதியெனக் கொண்டால் அந்த விதி எங்களுக்கு புரியாத புதிராகவே இருக்கின்றது. ஏனெனில் எங்கள் எருமை மாடுகள் ஏன் கொலையுற வேண்டும்? ஏன் கானகக் குதிரைகளை நீங்கள் அடிமை கொள்ள வேண்டும்? காடுகள் எங்கும் உங்கள் மக்கள். மூலை முகடுகள் எல்லாம் தொலைபேசிக் கம்பிகள். புதர்கள் மறைந்துவிட்டன. இனிய வாழ்க்கை முடிந்து வாழ்க்கைப் போராட்டம் ஆரம்பமாகிவிட்டது”.

(மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களிடமிருந்து அவர்களின் நிலத்தை வாங்க அமெரிக்க அரசு கடிதம் எழுதியபோது அக்கடிதத்திற்குப் பதிலளித்து "சியட்டில்" என்ற சிவப்பிந்தியத் தலைவன் எழுதிய கடிதம் வரலாற்றில் தனி இடத்தை பெற்றுள்ளது. ஆற்றாமையுடனும் இலக்கியச் சுவையுடனும் எழுதப்பட்ட அக்கடிதத்தின் ஒரு பகுதி)
இன்று சமீபகாலமாக சுற்றுலாத் தலமாக புகழ்பெறத் தொடங்கியுள்ள சல்லித்தீவிற்கு சென்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில், மட்டக்களப்பு திருகோணமலை பெருந்தெருவில் 58வது கிலோமீற்றரில், பனிச்சங்கேணி பாலத்திற்கு முன்னால் திரும்பி 4 கிலோமீற்றர் சென்றால் சல்லித்தீவு (8°06′40″N81°27′49″E) வருகிறது. பரப்பு 0.09 சதுரகிலோமீற்றர். வடக்கிலிருந்து வ.வி.கு. கடலும், தெற்கிலிருந்து சமாந்தரமாக உப்பாறு வாவியும், வ.வி.கடலும், சல்லித்தீவை, அதிசயிக்கத்தக்கதொரு காட்சி கொண்ட தீவாக மாற்றுகிறது. இப்போது அந்தத் தீவில் ஒரு ஹோட்டல் கட்டப்படுகிறது. இன்னும் ஒரு வருடத்திற்கு பிறகு, ஹோட்டல் திறக்கப்படும், நிலங்கள் சம்பந்தமில்லாத தூரத்திலுள்ளவர்களால் கையகப்படுத்தப்படும். பாதைகள் விரிவுபடுத்தப்படும், மக்கள் அந்த நிலங்களையும், அழகையும் இரசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்தக் கடலை நம்பிய மீனவர்களின் வாழ்வாதாரம் அதோ கதிதான். இந்தத் தீவினதும், இந்தக் கடலினதும், இதனை அண்டிய நிலப் பகுதிகளினதும் உயிரினப் பல்வகைமை அழியும். முதலாளித்துவம் வெல்லும். சூழல் தோற்கும். இறுதியில் முதலாவது தனது இறுதியுரையை தானே எழுதிக்கொள்ளும் எல்லாவற்றுடனும் சேர்த்து.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...