“சூழலும் சுரண்டலும் ஏகாதிபத்தியமும்”
------------------------------------------------------------
-ஜிப்ரி ஹாசன்
இலக்கிய வெளியில் அம்ரிதா ஏயெம் என அறியப்பட்ட எழுத்தாளர் நண்பர் ஏ.எம். றியாஸ் அகமட் Amritha Ayem கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராக உள்ளார். சில வருடங்களுக்கு முன் அவரது “விலங்கு நடத்தை தொகுதி ஒன்று” எனும் சிறுகதைத் தொகுதி வெளிவந்த போது சூழலியல்-விலங்கியல்-அரசியல் பற்றிய அவரது நுட்பமான பார்வையை என்னால் உணர முடிந்தது.
இப்போது அவரது “சூழலும் சுரண்டலும் ஏகாதிபத்தியமும்” எனும் நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மூன்றாம் உலகின் விலங்கியல்-சூழலியலில் நிகழ்ந்த மிகப்பெரும் சூறையாடலை ஒரு உரையாடலுக்கு எடுத்துக் கொள்கிறது இந்நூல்.
தாவரங்களையும் விலங்குகளையும் ஏகாதிபத்திய அரசியல் எவ்வாறு மூன்றாம் உலகம் மீதான தனது சுரண்டல்களுக்கு பயன்படுத்திக் கொண்டது என்பது பற்றியும் இது தொடர்பில் மேலும் பல சுவாரஸ்யமான விசயங்களையும் றியாஸ் அஹமட் பேசுகிறார்.
நாம் பெரும்பாலும் கண்களால் பார்த்து இரசித்து விட்டு மட்டும் கடந்து செல்லும் இந்த விலங்கியல்-சூழலியலுக்குப் பின்னால் ஏகாதிபத்திய சுரண்டல் அரசுகளின் நலன் பேணும் மாபெரும் அரசியல் கட்டமைக்கப்பட்டிருக்கும் நுட்பம் நமது சாதார்ண கண்களுக்குத் தெரிவதே இல்லை.
இந்த உண்மையை ஒரு மூன்றாம் உலக மனிதன் புரிந்து கொள்ளும் போது அவனுக்குள் அது ஏற்படுத்தும் அதிர்ச்சி சாதார்ணமானதன்று. இந்த நூலுக்கான ஒரு மூன்றாம் உலக வாசகனின் மிக அடிப்படையான எதிர்வினை என்பது தன்னைச் சுற்றியுள்ள சூழலியல் சுரண்டல்களுக்கெதிராக உஷார் அடைவதுதான்.
புத்தக வடிவமைப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்திருக்கத் தவறியிருப்பது போல் தென்படினும் நூலின் உள்ளடக்கம் நமது கட்டாய வாசிப்புக்குரியது.
(06.12.2016)
No comments:
Post a Comment