Thursday, May 17, 2018

முதலாளித்துவச் சூழலியல்




ஏ.எம். றியாஸ் அகமட்,
சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்


Oikos (வீடு அல்லது வாழ்வதற்கான இடம்), Logos (கற்றல்) என்னும் கிரேக்க சொற்களிலிருந்து தோன்றியது Ecology என்னும் சூழலியல். இதிலிருந்து சூழலியல் எனப்படுவது உயிரினங்களை அவற்றின் வாழிடங்களில் கற்றல் எனலாம். அதாவது சுற்றுச் சூழலிருக்கும் உயிரற்ற, உயிருள்ள கூறுகளையும், கற்கும் கற்கையாகும். ஜேர்மனைச் சேர்ந்த Hanns Reiter, 1885இல் சூழலியல் என்னும் பதத்தை உபயோகித்தார். 1869களில் ஒரு உயிரினத்தின் சேதன, அசேதன சூழல்களுக்கிடையிலான உறவுகளைக் கற்றல் சூழலியல் என Earnest Hackel வரைவிலக்கணப்படுத்தினார். 1963இல் Eugene Odumஇயற்கையின் அமைப்பையும், தொழிற்பாட்டையும் பற்றிய கற்கை என வரைவிலக்கணப்படுத்தினார். இந்த வரைவிலக்கணமே இன்று மிகவும் பெரிதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. பின்னர் இந்தச் சூழலியல் ஒரு வகையில் தற்சூழலியல், ஒன்றிய சூழலியல் என இருவகையாக அணுகப்படும். பின்னர் சாகியம், சமுதாயம், உயிர்க்கோளம் எனப் பல்வேறு மட்டங்களில் உயிருள்ள, உயிரற்ற கூறுகள் ஆராயப்படும்.

பொருளாதார முறைகள் எனப்படும்போது, பாடசாலை சிறு வகுப்புகளிலிருந்து தொடங்கி, பல்கலைக்கழகம் வரை, அவைகள் மூன்று வகைப்படும், அவையாவன முதலாளித்துவப் பொருளாதார முறை, சோசலிசப் பொருளாதார முறை, கலப்புப் பொருளாதார முறை எனப் போதிக்கப்படுவகின்றன.

எல்லாச் சமூகமும் எல்லாப் பொருளாதார ஒழுங்கமைப்புக்களும் எதிர்நோக்குகின்ற அடிப்படைப் பொருளாதார பிரச்சினைகள் பொதுவானவையாகவும், அவ்வடிப்படைப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் (அருமைத்தன்மை (scarcity) பொதுவானதாகவும் காணப்படுகின்றது. ஆயினும் ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு நாடும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வுகளின் அடிப்படையிலேயே பொருளாதார அமைப்புக்கள் தோற்றம் பெறுகின்றன. அல்லது அவற்றை அடையாளம் காண முடிகின்றது. பொருளாதார முறை என்பது ஒரு சமூகமானது தனது பொருளாதார நடவடிக்கைகளான உற்பத்தி, நுகர்வு, பங்கீடு போன்றவற்றை எந்த அடிப்படையில் ஒடுங்குபடுத்தியுள்ளது என்பதை விளக்கி நிற்கின்றது.


முதலாளித்துவப் பொருளாதாரத்தை நோக்குவோமானால், பொதுவாக முதலாளித்துவப் பொருளாதாரம் ஒன்றின் நடத்தையை மூன்று முக்கியமான உரிமைகள் தீர்மானிக்கின்றன. அவையாவன சொத்துரிமை, பொருளாதார உரிமை, உற்பத்தி உரிமை. அதாவது தனியுடமையாளர் தடையற்ற விதத்தில் தாம் விரும்பிய அளவு சொத்துடமைகளைக் கொண்டு, தான் விரும்பிய தொழிலை ஆரம்பிப்பதற்கும், அதன் வழியாக எத்தொழிலிலும் தான் விரும்பிய அளவு பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உரிய சுதந்திர முயற்சியை இவ்வுரிமைகள் குறிக்கின்றன.

முதலாளித்துவப் பொருளாதார அமைப்பினை சந்தைப் பொருளாதாரம், சுதந்திர முயற்சிப் பொருளாதாரம் என்றும் அழைப்பர். இப் பொருளாதார அமைப்பில்; உற்பத்திக் கரணிகள் தனியாருக்கு சொந்தமானவையாக உள்ளன. இவ்வுற்பத்திக் காரணிகளை தனியார் தமது விருப்பப்படி பயனப்படுத்தலாம். இலாப நோக்கத்தினை அடிப்படையாக வைத்தே இங்கு சொத்துடமையாளர்கள் தொழிற்படுகின்றனர். என்ன பொருளை உற்பத்தி செய்வது? எவ்வாறு உற்பத்தி செய்வது? யாருக்கிடையே பங்கிடுவது போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விலை முறையே தீர்வு காண்கின்றது. சகல முதலாளித்துவப் பொருளாதார அமைப்புக்களிலும் இன்று சில கட்டுப்பாடுகள் அரசாங்கங்களினால் பொதுநலன் கருதி விதிக்கப்படுகின்றன. எனினும் இத்தகைய கட்டுப்பாடுகள் தனியார் விரும்பிய தொழிலை தொடங்குவதையோ இலாப நோக்கத்தின் அடிப்படையில் இன்னொருவருடன் சேர்ந்து ஒப்பந்தங்களை மேற்கொள்ளுவதையோ தடை செய்வதில்லை.

இங்கிருந்துதான் முதலாளித்துவ சூழலியற் சிக்கல் உருவாகின்றன. இலாபநோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு சூழலியல் பற்றிய அக்கறை ஒரு போதும் கிடையாது. ஆனால்  கடுமையான எதிர்ப்புக் கிளம்பும்போது  முதலாளித்துவம் தனக்கும் சூழல்மீது அக்கறை இருப்பதாக பம்மாத்துக் காட்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டை கைத்தொழிற் புரட்சியின் பொற்காலம் எனலாம். கிடைக்கக்கூடிய அனைத்து மூலப் பொருட்களையும் உபயோகித்து, உற்பத்தி செய்த பொருட்களை அடுக்கி வைத்து, புதிய வளங்களையும், புதிய சந்தைகளையும், கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தி;ற்கு முதலாளித்துவம் தள்ளப்பட்டது. அமெரிக்க முதலாளித்துவம், அமெரிக்கக் கண்டத்தையும், ஐரோப்பிய முதலாளித்துவம் ஆபிரிக்கக் கண்டத்தையும் சுரண்டுவதற்கு தங்களுக்குள் பிரித்துக் கொண்டன.

இவர்கள் தங்களது சொந்தப் கருத்துக்கள் மற்றும் நடைமுறை கலாச்சாரங்களையும் சுதேசிகளின் மீது திணித்து அவர்களின் வேர்களை சிதைப்பதிலும் குறியாயிருந்தார்கள். அந்தச் சுதேசிகளின் மீதான இயற்கைச் சுரண்டல்களும், இயற்கையை அழித்து மேற்கொண்ட உட்கட்டமைப்புக்கள் (வீதிகள், கால்வாய்கள், அணைக்கட்டுக்கள், பாலங்கள், கட்டடங்கள் போன்றன) போன்றவற்றினூடும் முதலாளித்துவ-சூழலியற் சிக்கலின் கடுரத் தன்மை வெளியே தெரியத் தொடங்கியதுகாலம் காலமாக இயற்கையோடு இணைந்திருந்த பயிர்;ச் செய்கை முறைகளை காலனித்துவம் அடியோடு ஒழித்தது. காலனியவாதிகள் அந்த இடத்தினை பணப்பயிர்களினால் மாற்றீடு செய்து கொண்டார்கள். கலப்புப் பயிர் முறைகளும், ஓரினப் பயிரினால் மாற்றீடு செய்யப்பட்டது. முதலாளித்துவவாதிகளின் சூழலின் மீதான சுரண்டற் போக்கினால் சுதேசிகளின் கிராமங்களின்மீது தீவிர உணவுப் பிரச்சினைகள் ஏற்பட்டன. மக்கள் மேலும் மேலும் வறுமைநிலைக்கு உள்ளாகத் தொடங்கினார்கள்.

உலகப்  போர்களுக்குப் பிந்தைய முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, வரையறையற்ற தொழில்நுட்பத்திற்கும், வரையறையற்ற உற்பத்திக்கும், ஏகபோக நுகர்தலுக்கும் கால்கோளாக அமைந்தது. இதனால் அந்த முதலாளித்துவ நாடுகளே பாதிக்கப்பட்டன. (கிழக்கு ஐரோப்பிய கம்யூனிசநாடுகளும் இதேமாதிரி பாதிக்கப்பட்டன). முதலாளித்துவம் சுற்றுச் சூழலை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை (ஒரு சாரார் சோசலிசம் சுற்றுச் சூழலை மதிக்கின்றது என்று வாதிடுகின்றனர். ஆனால் உண்மை அவ்வாறல்ல. இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே. சோசலிச சூழலியல்பற்றி இன்னொரு கட்டுரையில் பாரக்கலாம்). சூழலை என்றுமே அள்ள அள்ளக் குறையாத பாத்திரமாகக் கருதியது. சூழலியற் பிரச்சினைகளை ஒரு சிறிய பிரச்சினையாகக் கூட அவர்கள் கருதவில்லை. உதாரணமாக தற்போதைய அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் றம்ப், காலநிலை மாற்றத்திற்கு காரணமான காபனீரொட்சைட்டு வாயு வெளியேற்றத்தின் அளவைக் குறைப்பதற்கான பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து கடந்த வருடம் வெளியேறி, உலகத்தை மாசுபடுத்தும் முதன்மை நாடாக அமரிக்காவை மாற்றியதற்குப் பின்னால், இலாபத்தை மட்டுமே நோக்காகக் கொண்ட உற்பத்தியே தவிர வேறு ஒன்றுமில்லை.

இன்றைய முதலாளித்துவத்தின் சிக்கல், சூழலியற் சிக்கலின் ஒரு பகுதியேமுதலாளித்துவம் தனது அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியால் அல்லது தொழில்நுட்பவெறியினால் (technofascism) இறுமாப்புடன் இயற்கையை அலட்சியம் செய்தது. இன்று அதனால் ஏற்பட்ட சூழலியற் சிக்கலுக்கான விலையை முதலாளித்துவத்துடன் இணைந்து எல்லோரும், அமில மழையாய், அணுஉலைக் கசிவாய், ஓசோன் ஓட்டையாய், எல்-நினோவாய், லா-நினாவாய் காட்டுத் தீயாய், கடல்நீர்மட்ட உயர்வாய் விலை கொடுக்கவேண்டியுள்ளது.







No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...