Monday, May 14, 2018

நகரப் பசுமையாக்கம்:


-ஏ.எம். றியாஸ் அகமட், சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

 ஆதிகாலம் தொட்டே மரங்கள் அலங்காரத் தாவரங்களாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. மரங்கள் வேருடன் பந்து வடிவில் மண்கொண்டதாக பிடுங்கப்பட்டு மீண்டும் வேறு இடங்களில் நடப்பட்டன என்றும், மேலும் மரங்கள் படகுகள் மூலம் 2400 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் நடப்பட்டன என்றும் 4000 வருடங்களுக்கு முன்னரேயே எகிப்தியரின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.

வரைவிலக்கணம்:
நகரத்திலும், நகரத்தை அண்டிய பகுதியிலும் உள்ள மரங்களையும், காட்டு வளங்களையும் அவைகள் சமூகத்திற்கு கொடுக்கின்ற உடற்றொழிலியல், சமூகவியல், உளவியல், பொருளாதார, அழகியல் நன்மைகளுக்காக முகாமை செய்கின்ற கலை, அறிவியல், தொழிநுட்பம் நகரப் பசுமையாக்கம்  எனப்படும்.

சுற்றுச் சூழலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும், மண்ணரிப்பைத் தடுப்பதற்காகவும் செயற்கையாக நடப்பட்ட தாவரங்களைக் கொண்டு, அல்லது இயற்கையாக இருக்கின்ற தாவரங்களை ஒரு ஒழுங்கமைப்பில் பேணுவதன் மூலம் அழிவடைந்த அல்லது அழிக்கப்பட்ட அல்லது தரம் குறைந்த அல்லது தரம் குறைக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் தொழிற்பாடுகளை முறையாக மற்றும் நிலைபேறான தன்மையில் பேண செய்யப்படும் கட்டியெழுப்பற் செயற்பாடு எனவும் கூறலாம். இதன் மூலமாக ஒரு ஆரோக்கியமான, பூரணமான நிலையை நோக்கிய, நிலைபேறான தன்மையுள்ள சூழற்றொகுதியை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படும்.

நகரப் பசுமையாக்கலின் நோக்கங்களாக சுற்றுச் சூழல் தாக்கங்களைக் குறைத்தலும், உயிரின பல்வகைமையை பராமரித்தலும், அதனைப் பாதுகாத்தலும் மற்றும் மேம்படுத்தலும், வளங்களை மிதப்படுத்துவதன் மூலமாக சுற்றயல் மக்களின் வாழ்வாதார வழிகளை நிலையானதாக வகைப்படுத்தலும், புதிய வாழ்வாதார வழிகளை ஏற்படுத்தலும் போன்றவைகளை பொதுவாக ஓரளவு கொள்ளலாம். எனினும் கருத்திட்டங்களின் தன்மைக்கு ஏற்ப சிலவேளைகளில் நோக்கங்கள் வேறுபடலாம்.


நகரப் பசுமையாக்கமானது நிலைபேறான அபிவிருத்தியில் முக்கிய பங்கை வகிக்கின்றது. இதனை முழுவீச்சில் வெற்றிபெறச் செய்வதற்கு பொருளாதார, அரசியல், சமூக, முகாமைத்துவ, திட்டமிடல் போன்ற பல துறைகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். அத்துடன் உள்ளுராட்சி நிறுவன அலுவலர்கள், தொழில்முறைசார் மரவளர்ப்பு வல்லுனர்கள், காடு வளர்ப்பு வல்லுனர்கள், சுற்றாடற் கொள்கை வகுப்பாளர்கள், நகர வடிவமைப்பாளர், கல்வியலாளர்கள், நிபுணர்கள், ஆய்வாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் போன்றவர்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.

நகரப் பசுமையாக்கத்தினால் கிடைக்கப் பெறும் நன்மைகள்:

01)          சுற்றுச் சூழல் பெறும் நன்மைகள்:
1)            சூழலுக்கான நன்மைகள்:
உயிரினப் பல்வகைமை பாதுகாக்கப்படல், நகர காலநிலை சீர்படுத்தப்படல், மழைவீழ்ச்சி, வெப்பநிலை, காற்றின் வேகம், சார்பு ஈரப்பதன் போன்றன பொருத்தமான அளவில் பாதுகாக்கப்படல்.

 2)            சூழல் மாசடைதலை கட்டுப்படுத்தல்:
நகரப் பசுமையாக்கமானது பல்வேறுவகையான தூசு துணிக்கைகளையும், புகைகளிலுள்ள நச்சுப் பதார்த்தங்களையும் குறைக்கிறது. நகரத்தில் அமைக்கப்பட்ட சிறு பூங்காவிலுள்ள காற்றானது, மற்றைய பிரதேசங்களில் காணப்படுவதைவிட 85 சதவீதமான நச்சுப் பொருட்கள் அற்றுக் காணப்படுமென ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. நகரப் பசுமையாக்கமானது, சத்தத்தினால் உருவாகும் மாசடைதலையும் குறைக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் காபனீரொட்சைட்டு வாயுவின் அளவையும் குறைக்கின்றன.

3)            உயிரியல் பல்வகைமையும் இயற்கையைம் பாதுகாத்தல்:
நகரப் பசுயைமயாக்கமானது அங்கிகளைப் பாதுகாப்பதன் மூலம், அவைகளின பெருக்கத்திற்கு உதவுவதுடன், மண், நீர் போன்றவற்றின் பண்புகளைப் பேணவும் உதவுகின்றது.

02) பொருளாதார அழகியல் நன்மைகள்:
1) சக்தியை மீதப்படுத்தல்:
மரங்களை அண்டிய கட்டடங்கள், வீடுகள், கடைகள், அலுவலகங்கள் இயற்கையான முறையில் நகரப் பசுமையாக்கத்தின் மூலம் குளிராக்கப்படுவதால் ஓரளவு சக்தியை மீதப்படுத்தும். ஒரு சதுர கிலோ மீற்றர் அடர்த்தியான தாவரங்களைக் கொண்ட நகரத்தில் 5 தொடக்கம் 10 சதவீதம் சக்தியை சேமிக்கலாம்.

2)            சொத்துக்களின் மதிப்பு:
நகரப் பசுமையாக்கத்தின் காரணமாக குடியிருப்புகளும், கட்டடங்களும் அதிக விலையைப் பெறுகின்றன. பசுமையாக்கத்தின் மூலம் கிடைக்கின்ற அழகியல் மதிப்பிற்காக குடியிருப்போரும், முதலீட்டாளர்களும் சொத்துக்களுக்கு அதிக விலை கொடுக்க தயாராக இருக்கின்றனர்.
3)            விற்பனை அதிகரிப்பு:
நகரப் பசுமையாக்கம் இல்லாத நகரத்தைவிட, பசுமையாக்கம் உள்ள நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் வர்த்தகம் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன என்று ஒரு ஆய்வு கூறுகின்றது.
4)            பாதைகள் பராமரிப்பு செலவு குறைதல்:
பௌதீக காரணிகளால் ஏற்படும் பாதிப்புகளை (உதாரணம்: மண்ணரிப்பு) போன்றவைகளை குறைப்பதன் காரணமாக பாதைகளின் பராமரிப்பு செலவைக் குறைக்கின்றது.

3. சமூக உளவியல் நன்மைகள்:
1) பொழுதுபோக்கு நடவடிக்கைகள்:
ஓய்வெடுக்கவும், களைப்பாறவும், புத்துணர்ச்சி பெறவும் இவ்வாறான இடங்கள் உதவுகின்றன.

2. மனித சுகாதாரம்:
நகரப் புற மனிதர்களுக்கு மனஅழுத்தம் மிக அதிகமாகும். நகரப் பசுமையை நோக்கிய அறையைக் கொண்ட நோயாளிகள் மற்றைய நோயாளிகளைவிட 10 சதவீதம் வேகமாக குணமடைந்தார்கள் என்றும் அத்துடன் 50 சதவீதம் குறைவாகவும் அவர்களுக்கு வலிநிவாரணிகள் தேவைப்பட்டது என்றும் ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து உடல், உள ஆரோக்கியத்திற்க நகரப் பசுமையாக்கம் எவ்வளவு முக்கியம் எனத் தெரிகிறது. தாவரங்களினால் வளி தூய்மைப்படுத்தப்படுவதனால் சுவாசப்பை நோய்களும் குறைக்கப்படுகின்றது. அத்துடன் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை இரசிப்பதற்கும், வினைத்திறனாக வேலை செய்வதற்கும், பொதுவான உளச் சுகாதாரத்திற்கும் உதவுகின்றது.

3)            பாதசாரிகளின் பாதுகாப்பை அதிகரித்தலும், விபத்துக்களை குறைத்தலும்:
சாதாரண நோக்குதலுக்கு நகரப் பசுமையாக்கமானது விபத்துக்களை உண்டு பண்ணும் என்பது போலத் தோன்றினாலும், ஆய்வுகளின் முடிவுகள் பாதசாரிகளின் பாதுகாப்பை நகரப் பசுமையாக்கம் அதிகரிப்பதுடன், விபத்துக்களை குறைக்கவும் செய்கின்றன எனத் தெரிவிக்கின்றன. வாசிங்டன் பல்கலைக்கழக ஆய்வானது மரங்களில் மோதி உண்டாகும் விபத்துகளுக்கான நிகழ்தகவானது 100000:1 எனக் கூறுகின்றது.

நகரப் பசுமையாகத்திற்கு பயன்படும் மரங்கள் கொண்டிருக்க வேண்டிய இயல்புகள்:

1) மரங்களின் தொழிற்பாடு:
நிழல் தரக்கூடியதும், அலங்காரமானதும், நீர் வடிக்கக்கூடியதும், மண்ணரிப்பைத் தடுக்கக்கூடியதும் வருடம் பூராக இந்த இயல்புகளை தொடர்ச்சியாகக் கொண்டிருக்கக்கூடியதுமான மரங்கள்;.

2) மரங்களின் தோற்றம்:
வேகமாக, உயரமாக, கிளைகள்விட்டு வளரக் கூடிய இயல்புகள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். நடுத்தர உயரமான மரங்கள் விரும்பத்தக்கது. நடுத்தர ஆணிவேர், குறைந்த பக்க வேருள்ள மரங்கள் விரும்பத்தக்கவை.

3) மரங்களின் இயல்புகள்:
மரங்கள் அடர்த்தி மற்றும் அடர்த்தியற்ற தன்மையும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.

4) மரங்களின் பராமரிப்பு:
இலகுவாக பராமரிக்கக்கூடியதா? இலைகளை உதிர்க்கக்கூடியதா? பெரிய பழங்களை உருவாக்கக்கூடியதா? போன்ற இயல்புகள்.

5) பசுமையாக்கம் செய்யும் இடத்தின் இயல்புகள்:
மண்ணின் அமில கார இயல்புகள், ஈரப்பதன், அடர்த்தி, சூரிய ஒளி, இடத்தின் பரப்பு போன்றன.

6) சுற்றுச்சூழல் காரணிகள்
வளம் குறைந்த மண்ணில் வளரக்கூடிய, அதிக வெப்பம், மற்றும் சூழல் மாசாக்கிககளை தாங்கக்கூடிய, குறைந்த நீர் தேவை கொண்ட, வெள்ளத்தினால் அல்லது நீர் தேங்கி நிற்றலினால் பாதிப்படையாத, வாகனங்களினாலும், புகை போக்கிகளினாலும் அல்லது வேறு வழிகளாலும் வெளியேற்றப்படும் புகைகளினால் பாதிப்படையாத, குறைந்த உரத் தேவையுள்ள மரங்கள்.

7) வேறு இடங்களில் பொதுவாக காணப்படும், வளர்ச்சி வீதம் குறைந்த மரங்களை நாட்டுவதை தவிர்த்தல்.

8) நீண்ட வாழ்க்கை காலத்தை கொண்ட மரங்கள்,

9) மனிதர்களினதும், விலங்குகளினதும் அழுத்தங்களையும் அல்லது தாக்கங்களையும் தாங்கும் திறன் கொண்டவை.

10) நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை.

11) வருடத்திற்கு இரண்டு சதவீதத்திற்கு குறைவான இலைகளை உதிர்க்கும் என்றும் பசுமையான மரங்கள்

12) அடைப்பான இலை, கிளைத்தொகுதி உள்ள மரங்கள்.

13) ஆகக் குறைந்தது 10 அடிக்கு நேராக உயர்ந்து சென்று, பின்னர் வட்ட வடிவமான தொகுதியாக மாறும் மரங்கள்

14) முள், விசமற்ற, தீங்கற்ற, பயனுள்ள மரங்கள்

15) பிரபல்யப்படுத்தத் தக்க ஏதாவதொரு இயல்பைக் கொண்டிருத்தல்: கலாச்சாரம், மத, அரசியல் முக்கியத்துவமுள்ளவையாக இருத்தல். (யாழ்ப்பாணத்திற்கு பனை, மட்டக்களப்பிற்கு தென்னை, காத்தான்குடிக்கு பேரீச்சை)

வீதியின் இரு பக்கங்களிலும் நடக்கூடியது
1) வாகை (Samanea saman)

2) திருக்கொன்றை (Casia fistula)

3) நெருப்பு அல்லது பூ வாகை (Delonix regia)

4) வேம்பு (Azadirecta indica)

5) சித்திரை வேம்பு (Filicium decipiens)

6) இலுப்பை (Madhuka longifolia)

7) நாவல் (Syzygium cumuni)

8) கூழா (Schleichora oleosa)

9) வசந்த ராணி (Tabebuia rosea)

10) மா (Mangifera indica)

11) புளி (Tamarindus indica)

12) பூவரசு (Thespesia populnea)

13) நா (Mesua ferrea)

14) பூ மருது Lagerstroemia speciose)

15) குமிழ மரம் (Gmelina arborea)

16) புங்கை (Pongamia pinnata)

17) பாலை (Manilkara hexandra)
18) வேங்கை மரம் (Pterocarpus marsupium)
19) பேரீச்சை (Phoenix sp.)

20) கிளைப்பனை அல்லது சீனிப்பனை
Hyphaenu (thebaica)

இதனை விட இன்னும் பல மரங்கள் (உதாரணமாக ஆல், அரசு போன்றவைகள்) உண்டு. எந்த மரங்கள் நடப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு பல காரணிகள் உண்டு. மரங்கள் நடப்படுவதற்கு முன் அவை கருத்திற் கொள்ளப்பட வேண்டும். கடந்த காலங்களில் மறைந்து, அழிந்து போன சுதேச மரங்களும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

நகரப் பசுமையாக்கம் எதிர்கொள்ளும் சவால்கள்:
நகரப் பசுமையாக்கமானது பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றது. இவ்வாறான சவால்கள் சமூக பொருளாதார காரணிகள், கலாச்சாரம், குடித்தொகைப் பெருக்கம், வினைத்திறனற்ற முகாமைத்துவம், சுற்றாடற் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதிலுள்ள குறைபாடுகள், திட்டமிடப்படாத அதிகளவான நகரத்தை நோக்கிய கிராமப்புறத்திலிருந்தான இடம்பெயர்தல்கள் போன்ற காரணிகளால் உருவாகின்றன. இந்த சவால்களை சுருக்கமாக இங்கு நோக்குவோம்.

1)            மக்களிடமும், சமூகத்திடமும் இது சம்பந்தமான விழிப்புணர்வு இன்மை.
2)            கருத்திட்டங்கள் செயற்படுத்தப்படும் காலம் மிகக் குறைவாக இருத்தல்.
3)            மரங்களை நாட்டிய பின்னர் ஒழுங்கான முறையான பராமரிப்பின்மை.
4)            பாதைக்கு நோக்கமின்றியோ, நோக்கத்துடனேயோ சேதம் விளைவித்தல்.
5)            திட்டத்திற்கு மக்களின் விருப்பு வெறுப்புக்களை பெறுவதிலோ அல்லது அதனை அறிந்து கொள்வதிலோ உள்ள குறைபாடுகள்.
6)            மரங்களை நாட்டும் போது மழை காலத்தில் நாட்டாமல், கோடை காலத்தில் நாட்டுதல். மழை காலத்தில் நடுகை செய்யும் போது நீரிறைத்தலுக்கான செலவை 3 தொடக்கம் 4 மாதங்களுக்கு மிச்சப்படுத்தலாம்.
7)            பிரயாணிகளாலும், விலங்குகளாலும் மரங்கள் சேதப்படுதப்படல்.
8)            தேவையான இடம் கிடைக்காமை, இதன் காரணமாக வேர்கள் போதியளவு ஊடுருவாது.
9)            குறைந்த மண் வளம்.
10)          நடப்படும் தாவரங்களைப் பற்றிய அறிவில் உள்ள குறைபாடுகள்.
11)          பயிற்சி குறைந்த, அல்லது இல்லாத பராமரிப்பாளர்கள்.
12)          அரசியல் ஆதரவு
13)          பொருளாதாரம்

மேற்கூறிய காரணிகளை நிவர்த்திக்க முயல்வதன் மூலம் வீதிப்பசுமையாக்கத்தின் நிலைபேறான தன்மையைக் கட்டியெழுப்பி, ஒரு ஆரோக்கியமான, பூரணமான நிலையை நோக்கிய, நிலைபேறான தன்மையுள்ள சூழற்றொகுதியை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்தலாம் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...