ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர்),
தென்கிழக்கு பல்கலைக்கழகம்.
ஐரோப்பிய குடியேற்றவாதிகள் தங்களது சுதேசிய விலங்கினங்களையும், தாவரங்களையும் முற்றாக அந்நியமயப்பட்ட நாடொன்றில் அறிமுகம் செய்து பல புதிய வகை நோய்களை அந்த நாட்டிற்கு தோற்றம்பெறச் செய்து, எவ்வாறு வெற்றியடைந்த குடியேற்றத்தை மேற்கொண்டார்கள் என்பது பற்றியதும், மேலும் தாங்கள் குடியேறிய நாட்டின் ஏற்கனவே சிறந்த சமநிலையில் இருந்த, இருக்கின்ற சூழற் தொகுதிகளுக்கு மதிப்புக்கொடுக்காமல் அவைகளின் சமநிலையை எவ்வாறு குழப்பினார்கள், குழப்புகின்றார்கள் என்பது பற்றியதுமான ஒரு வகைச் சிந்தனையே சூழலியல் ஏகாதிபத்தியம் எனக் கூறலாம்.
ஏகாதிபத்தியம் என்ற பதம் அரசியல் சூழலில் மிகவும் பரிச்சயமானது. ஆனால் சூழலியல் ஏகாதிபத்தியம் அதிகம் பரிச்சயமான விடயமல்ல. தோலிருக்கச் சுளை விழுங்கும் சூழலியல் ஏகாதிபத்தியம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் பூகோளமயவாதம் என்ற போர்வையுள் பல்தேசிய நிறுவனங்கள் நடத்துகின்ற வியாபாரம் ஒரு அழித்தொழிப்பு யுத்தமாகவே கண்ணுக்குப் புலனாகாமல் நடந்து கொண்டிருக்கிறது. காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களால் எவ்வாறு காலனியப்பட்ட நாடுகளின் பௌதிகச் சூழல் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது என்பதை விபரிப்பதாக சூழலியல் ஏகாதிபத்தியம் என்ற பதம் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இப்பதம் முதன் முதலில் அலபிறெட் டபிள்யு. குறொஸ்பி (Alfred W.
Crosbey) என்பவரால் பயன்படுத்தப்படடிருக்கின்றது.
ஏகாதிபத்தியம், காலனியப்பட்ட நாடுகளின் சமூக, அரசியல், பண்பாட்டுக் கட்டமைப்புக்களைமாத்திரம் மாற்றியமைக்கவில்லை அந்நாடுகளின் சூழலியலையும் சிதைவுக்குள்ளாக்கியது. பாரம்பரியமான வாழ்வியல் வளங்களையும் சிதைவுக்குள்ளாக்கியது. ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் வெற்றிக்குக் காரணமாக உயிரியல் மற்றும் சூழலியல் அம்சங்கள் அடிப்படைகளாக இருந்ததை குறொஸ்பி கவனத்திற்குக் கொண்டு வருகின்றார். தான் வாழும் சூழலைப் பற்றிய விழிப்புணர்வு கொண்ட எவரும் இதனைத் தெளிவாகக் கண்டு கொள்ள முடியும்.
குடியேற்றவாதிகள் தங்களது வெற்றியடைந்த குடியேற்றத்தின்போது கூடவே கொண்டு சென்ற நோயாக்கிகளால் வட அமெரிக்க, அவுஸ்தரேலிய, ஆபிரிக்க நாடுகளுக்குரிய உள்நாட்டு தாவர, விலங்கு இனங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இந்த அழிவானது ஆயுதங்களால் அவைகளுக்கு ஏற்படுத்தப்படும் அழிவைவிட பல்மடங்கு உக்கிரமானதாக இருந்தது. சில நாடுகளின் பிரதேசங்களின் தொண்ணூறு சதவீதத்திற்கு மேற்பட்ட சுதேசிய மக்கள்கூட அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.
16ம் நூற்றாண்டுகளின் ஸ்பானிய நாடுகாண் பயணக்காரர்களின் காரணமாக சில நாடுகளின் சாமராஜ்யங்கள் ஒரிரு ஆண்டுகளுக்குள்ளேயே முற்றாக அழிக்கப்பட்டிருந்தன. அதற்கு அவர்கள் புகுத்திய சின்னம்மை போன்ற நோய்களும் ஒரு காரணமாக இருந்ததாக கருதப்படுகின்றது. உதாரணமாக மெக்சிகோவின் அஸ்ரெக் சாம்ராஜ்யம் பெப்ரவரி 1519 இலிருந்து ஓகஸ்ட் 1521 காலப் பகுதிக்குள் அழிக்கப்பட்டதைக் கூறலாம்.
குடியேற்றவாதிகள் குடியேறிய நாடுகளுக்கு, ஏற்கனவே நன்கு திட்டமிட்டபடியும், சிலவேளை தவறுதலாகவும் தங்களுடன் கொண்டுவந்த புதிய தாவரங்களும், விலங்குகளும், ஐரோப்பிய பாணியிலான பண்ணைமுறைகள், பயிற்செய்கை முறைகள் காரணமாகவும் அறிமுகம் செய்யப்பட்ட தேன் பூச்சிகள், பன்றிகள், குதிரைகள், கோவேறு கழுதைகள், ஆடுகள், மற்றும் கால்நடைகள், கோதுமை, பார்லி, ஓட்ஸ், புற்கள், திராட்சை போன்ற பயிர்களும் அதன் காரணமாக அவைகளுடன் உடன் வந்த நோயாக்கிகள், களைகள், எலிகள் போன்றவைகளும் ஏற்கனவே சமனிலையில் இருந்த சூழற்றொகுதிகளை குழப்பிவிட்டிருந்தன. அத்துடன் மிகவும் பாரதூரமான முறையில் சுதேசிய குடித்தொகைகளின் வாழ்க்கை முறைகளை பாதித்தும் குழப்பியும்விட்டிருந்தன.
உதாரணமாக: மொரிசீயஸ் தீவில் காணப்பட்ட பறக்க முடியாத பெரிய பறவை டுடு (னுழனழ). எந்தவித மனித சந்திப்புசார்ந்த அனுபவமற்று காணப்பட்டது. இதன் காரணமாக முதன்முதலில் ஐரோப்பியர்கள் மொரிசீயஸ் வந்திறங்கியபோது, அஞ்சாமல் அவர்களை நெருங்கிச் சென்றதால், இலகுவாக அந்த பறவைகளைப் பல்வேறு தேவைகளுக்காக பிடித்தார்கள். இதனால் அந்தப் பறவை இனம் அழிவிற்குள்ளாகியது. டுடு பறவை இனஅழிவின் சின்னமாக இன்றும் கருதப்படுகிறது. இப்பறவை மட்டுமல்ல, மொரிசீயஸில் காணப்பட்ட 20 பறவைகளும் 8 ஊர்வனங்களும் மனிதனாலும் அவனோடு சேர்ந்து வந்த நாயாலும் வேட்டையாடப்பட்டு அப்போதே அழிக்கப்பட்டிருந்தன. மொரிசீயஸ் தீவில் குடியேறியவர்கள் கூட்டி வந்த பன்றிகள், எலிகள் போன்ற புதிய விலங்கினங்களினாலும் சூழல் சமநிலை பாதிக்கப்பட்டிருந்தது.
ஹவாய் தீவு பசிபிக் கடலின் நடுவே காணப்படும் மிகத் தனிமையான தீவாகும். இங்கு எரிமலைகளின் தொழிற்பாடும் அதிகமாகும். எரிமலைகளின் தாக்கத்தால் உயிரினங்கள் அழிக்கப்பட்ட நிலையில் அலைகள,; காற்று போன்றவற்றால் இத்தீவை வந்தடைந்த தாவரங்களும், பூச்சிகள், பறவைகள் போன்ற விலங்குகளும் இசைவு விரிகை அடைந்தன. இதனால் எங்கும் காணப்படாத 10000 இற்கும் அதிகமான உள்நாட்டிற்குரிய இனங்கள் இங்கு தோன்றின. பொதுவாக இரைகௌவிகளான பெரிய பாலூட்டிகளும், ஊர்வனவும் இவ்வாறான தனிமையான தீவுகளில் காணப்படாது. எனவே இந்த தீவுகளில் ஏற்கனவே காணப்பட்ட விலங்குகள் பெரிய முலையூட்டி, ஊர்வன போன்ற இரைகௌவி விலங்குகளிலிருந்து தப்பிப் பிழைக்கும் இசைவாக்கங்களை கொண்டிருக்காது. புதிய விலங்குகளையும், இரைகௌவிகளையும், தாவரங்களையும் இத் தீவுகளுக்கு புதிதாக அறிமுகப்படுத்தும் போது அவை ஏற்கனவே இருந்த விலங்குகளையும், தாவரங்களையும் முற்றாக அழித்துவிடும். இத் தீவில் காணப்பட்ட 200 உள்நாட்டிற்குரிய இனத்தாவரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. மேலும் 800 இன தாவரங்கள் அழியும் அபாயத்திலுள்ளன. உலகத்திலேயே அழியும் அபாயத்திலுள்ள அங்கிகள் அதிஉயர் செறிவாக காணப்படும் இடம் ஹவாய் தீவாகும்.
விலங்கினங்களின் உரோமங்களுக்கான அதிகரித்த ஐரோப்பிய கேள்விகள் காரணமாக, தரைத்தோற்ற, வனவிலங்குகள் பற்றிய சுதேசிகளுக்கு இருந்த அறிவு காரணமாக, சுதேசிகள் ஐரோப்பியர்களிடம் வேலைக்கமர்த்தப்பட்டு, அவர்களுடன் நெருங்கிப் பழகி வேலை செய்யவேண்டி ஏற்பட்டது. இதன் காரணமாக, ஐரோப்பிய நோய்களுக்கு இயற்கையாகவே நிர்ப்பீடனம் இல்லாதிருந்த சுதேசிகளுக்கு அந் நோய் தொற்றி அவர்களை முற்றாக அழித்தது.
விலங்குகளின் தோல் ஏற்றுமதி வட அமெரிக்காவின் சூழற் சமிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உதாரணமாக 1822ம் ஆண்டு அமரிக்காவின் தென் மேற்கு பிரதேசத்திலள்ள ஹட்சன் வளைகுடா கம்பனியானது உரோமங்களிற்காக 1500 நரிகளையும், 106000 பீவர்களையும், மேலம் கணக்கில் வராத இலட்சக்கணக்கான உயிரினங்களையும் கொன்றிருக்கின்றது.
குடியேற்றக்காரர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட சின்னம்மை, சிபிலிஸ் போன்ற நோய்களால் பல்லாயிரக்கணக்கான வருடப் பழமையான கலாச்சாரம், அரசியல், வரலாறு கொண்ட இராச்சியங்கள் இருந்த தடயங்கள் இல்லாமல் அழிக்கப்பட்டிருந்தன. (உதாரணம்:அபனகி, பவ்ருகெற், வம்பானொக் போன்ற அமெரிக்க பழங்குடியினர்கள்) குடியேற்றவாதிகளின் உணவுகளுக்காக அனைத்தும் உணவாக்கப்பட்டன. உறையுளுக்காக எல்லாம் கொல்லப்பட்டும், வெட்டப்பட்டும்;, தோண்டப்பட்டும்;, அகழப்பட்டும் உபயோகிக்கப்பட்டன. ஆடைகளுக்காக பலநூற்றுக் கணக்கான இனங்கள் கொல்லப்பட்டு மனித உடம்புகள் போர்த்துவிக்கப்பட்டிருந்தன. மற்றும் இதர பல தேவைகளுக்காகவும் அழிக்கப்பட்டிருந்தன.
காலனியப்பட்ட நாடுகளில் அவர்களால் இயற்றப்பட்ட அல்லது மேற்கொள்ளப்பட்ட சட்டங்கள்அபிவிருத்தி என்ற பெயரில் செய்யப்பட்டட நடவடிக்கைகள். உட்டகட்டமைப்புக்கள், திட்டங்கள் இப்போதும் பசி கொண்ட வேங்கைபோல் சூழலின் சமநிலையை வேட்டையாடிக்;கொண்டிருக்கின்றன.
இதன் காரணமாக சூழலியல் ஏகாதிபத்தியவாதம் நவ காலனித்துவவாதிகளால் பல புதிய போக்குகளுக்கு இட்டுச் செல்லப்பட்டிருக்கின்றது. பூகோளமயவாதம், ஆங்கிலக் கல்வி போன்றவை சூழலியல் ஏகாதிபத்தியவாதத்திற்கு சமாந்தரமாக எம்மை உறுஞ்சுவதற்கும், சுரண்டுவதற்கும் வந்தவைகளாகும்.
கத்தியின்றி ஒரு யுத்தமே சூழல் ஏகாதிகத்தியவாதமாய் நடந்துகொண்டிருக்கின்றது. கட்டுப்படுத்த முடியா களைகள், நிலக்கீழ் நீருறிஞ்சி வேகமாய் வளரும் மரங்கள், பரம்பரையலகு உருமாற்றப்பட்டட தாவரங்கள், விலங்கினங்கள், ஏகாதிபத்தியவாதிகளுக்காய் உருவாக்கப்பட்ட சட்டங்கள், அவைகளை தனக்கு சாதகமாக்கிய முதலாளித்துவம் (அதன் நேரடி மற்றும் மறைமுக பாதக விளைவுகள்), தனது இருப்பை தொடர்ச்சியாக பேண எத்தனிக்கும் அரசியல் போன்ற பகுத்துணராதவைகளால் யுத்தம் நடந்துகொண்டிருக்கின்றது.
காலனியப்பட்ட நாடுகள் தமது பாரம்பரியச் சுழற்சிமுறைப் பயிர்ச் செய்கைகளில் இருந்து தடுக்கப்பட்டு, காலனித்துவ நாடுகளுக்கு பொருளாதார வளஞ்சேர்க்கும் பணப் பயிர்ச் செய்கைகளை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்படுவதற்கும், மேற்படி நாடுகள் எதிர்கொள்ளும் பஞ்சம், பட்டினிச் சாவுகளுக்குமுள்ள நேரடித் தொடர்பும் சுட்டிக் காட்டப்படுகின்றது. ஏன் ஒரு பகுதி நாடுகள் எப்போதும் பஞ்சத்தையும், பட்டினிச் சாவுகளையும் எதிர்கொள்பவைகளாhகவும், மற்றொரு பகுதி நாடுகள் நிவாரணம் வழங்குபவைகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றன என்று சற்றுச் சிந்திக்கத் தொடங்கினால், பிரச்சினைகளை அடையாளம் காணும் கதவுகள் திறக்கத் தொடங்குகின்றன.
ஒட்டுப் போடப்பட்ட அல்லது மெருகிடப்பட்ட காலனித்துவக் கல்வி முறைமையுள் இத்தகையபார்வைகளுக்கான சாத்தியப்பாடுகள் எந்தளவிற்கு இருக்க முடியும்? நடைபெறுகின்ற ஆய்வுகளுள், எழுதப்படுகின்ற ஆய்வுக் கட்டுரைகளுள், அவற்றை மேற்கொள்ள கையாளப்படுகின்ற ஆய்வு முறைமைகள் பற்றிய மறுமதிப்பீடுகள் இதனை நன்கு புலப்படுத்தும். இவை பற்றிய உக்கிரமான விவாதங்கள் இன்றைய காலத்தின் அவசியத் தேவையாகும்.
நவகாலனித்துவச் சூழலியல் ஏகாதிபத்தியம், கல்வி, தொடர்புசாதனம், தகவல் தொழில்நுட்பம், சூழலியல், ஆங்கில மொழி எனப் பல்வேறு வடிவங்களில் தனது பொல்லாச் சிறகினை விரித்துக் கொண்டிருக்கிறது. “புதிய உலக ஒழுங்கு”, “பூகோளமயவாதம்” என்ற மாயப் பெயர்களையும் சூடிக்கொண்டிருக்கிறது. சூழலியல் ஏகாதிபத்தியத்துடன் மறு துருவத்தில் இதற்குச் சமனானதும் சமாந்தரமானதுமாக மொழிகளில், கலைகளில், கலாச்சாரங்களில், கல்வியில், சமயங்களில், பண்பாடுகளில் ஏகாதிபத்தியவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றது. இவைகளை நாங்களே பல்வேறு பெயர்களுடன் விரும்பி அழைத்து ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். ஏனெனில் நாங்கள் எப்போதும் அவர்களுக்கான வெள்ளை எலிகள் என்ற அறியாமையே. நாம் வெள்ளை எலிகள் என்ற விழிப்புணர்வு எங்களிடத்தில் எப்போது வருகிறதோ அதுவே எங்களுக்கு விடிவு காலமாகும்.
No comments:
Post a Comment