Saturday, May 19, 2018

முதலாளித்துவ-சூழலியற் சிக்கல்

-.எம். றியாஸ் அகமட், சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்

நாம். எதிர்கொள்ளுகின்ற சூழலியற்  சிக்கலானது  நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற முதலாளித்துவ பொருளாதார உலகத்தின் நேரடி விளைவு என முன்னர் பார்த்தோம். உலகில் இதற்கு முன்னர் வரலாற்று ரீதியாக நிலவிய புராதன பொதுவுடமைசமூக பொருளாதார முறை, ஆண்டான்-அடிமைப் பொருளாதாரமுறை, மானிய பொருளாதார முறை போன்றன சூழலைச் சிதைத்து இயற்கைச் சமநிலையைக் குழப்பிவிட்டு உயிரிகளின் நீடித்த நிலைத்த நிலவுகைக்கு சவாலாக இருந்தது மிகக் குறைவு. ஆனால் வரலாற்றில் முதலாளித்துவம் ஒன்றுதான் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் உலகைப் பரவி, மனிதனுக்கும் அவனின் பயன்பாட்டுக்குரிய உயிர்களுக்குமான நிலவுகைக்கு அபாயத்தை ஏற்படுத்தியது எனலாம்.
சுற்றுச் சூழல் மாசுபடுத்தப்பட்டு சேதமாக்கப்படுவதன் தீவிரத்தன்மையைஉணரும்திறன் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றது. சூழலிற்கு ஏற்படுத்தப்படும் சேதத்தின் தன்மையை உயிரியல், பௌதிக, இரசாயன, சமூக, கலாசார பண்பாட்டு, மானிடவியல் ரீதியாக பலமுறைகளில் பகுப்பாயலாம். ஆனால் உண்மையில் சூழலியற் பிரச்சினைகள் இயற்கை விஞ்ஞான பகுப்பாய்வுகளோடு, தற்போதையை உலகின் அரசியற்-பொருளாதார கொள்கைகளோடு பகுத்தாய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
எங்களுக்கு பல சகாப்தங்களுக்கு முன் வாழ்ந்த எழுத்தறிவில்லாதகல்வியறி வில்லாத  மனிதர்களோடு ஒப்பிடுகையில் நாங்கள் அறிவில் கூடுதலானவர்களாக இருக்கிறோம். முன்பு வாழ்ந்து இறந்தவர்களை விட, எங்களுக்கு  தீங்குதரும் நுண்ணுயிர்கள் பற்றியதும், சுகாதாரப் பிரச்சினைகள் பற்றியதும்சுற்றுச் சூழலில் கலக்கின்ற நஞ்சுகள் பற்றியதும், அதனைத் தடுப்பது பற்றியதும் அறிவு அதிகம் எனலாம்.
அந்த அறிவினால் நம்மைப் பாதுகாத்தும் வந்திருக்கின்றோம். பாதுகாத்தும் வருகின்றோம். இந்த அறிவினை பல்வேறு வழிகளில் பெற்றிருக்கின்றோம். தனியொரு நபரை எடுத்துக் கொண்டால், முன்பிருந்த சூழலியலின் அரசியல் பிரச்சினை விடயங்கள் பற்றிய அறிவைவிட இப்போது அதிகம். இந்த பிரச்சினை விடயங்களை ஒரு ஆரோக்கிய வழியில் முன்னெடுத்து செல்கிறோமா என்பது கேள்விக் குறியே. நிறைய நேரங்களில் நாம் இந்த முன்னெடுத்துச் செல்கையை அல்லது முன்னெடுப்பை நிராகரித்து விடுகிறோம். எனவே இதனைப் பற்றி விவாதிப்பதற்குரிய நேரத்தை நாம் அடைந்துவிட்டோம். ஏனெனில் எம்மைச் சுற்றி அபாயம் அதிகரித்துவிட்டது. சுற்றுச் சூழலின் கூறுகளின் அம்சங்களில் -ஒசோனில் ஓட்டை என்றும், பச்சை வீட்டு தாக்கம் என்றும், அணு உலைக் கசிவுகள் என்றும் அபாயம் அதிகரித்துவிட்டதாக தரவுகளோடும், ஆய்வுகளோடும் நியாயித்து நிறுவிக்கொண்டிருக்கின்றோம்.
உண்மையில், “அபாயம் அதிகரித்து விட்டது, அதற்கு ஒவ்வொருவரும் எதிர்வினை காட்டத்தான் வேண்டும்என்பதை நாம் ஒரு கருதுகோளாக வைத்துக் கொள்வோம். இந்த அதிகரித்து வரும் அபாயத்திற்கு எதிர்வினை செய்வதற்கு முன், அதன் முன்னே இரு கேள்விகள் உதயமாகின்றன.
1)            யாருக்கு அபாயம் காத்துக்கொண்டிருக்கிறது?
இந்தக் கேள்வி மேலும் இரு கூறுகளையுடையது, i) மனித குலத்திற்கு மத்தியில் யாருக்கு அபாயம் காத்துக்கொண்டிருக்கிறது?, ii) உயிர்வாழ் அங்கிகளுக்கு மத்தியில் யாருக்கு அபாயம் காத்துக் கொண்டிருக்கிறது?
2) அதிகரித்த அபாயம் என்ன கூறுகிறது?  யாருக்கு அபாயம் காத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறது?
இதில் முதலாவது கேள்வி, முதலாளி-தொழிலாளி, சுரண்டுவோர்-சுரண்டப்படுபவர் வகையான கேள்வியாயும், இரண்டாவது கேள்வி ஆழமான சூழலியல் சம்பந்தப்பட்ட கேள்வியாயும் உள்ளன.
இப்போது விடயத்திற்கு வருவோம். இந்த இரு கேள்விகளும் உதயமானதுமுதலாளித்துவமையவாத நாகரிக வளர்ச்சியின் அடிப்படை, இயற்கைப் பண்புகள், முதலாளித்து பொருளாதார உலகின் தொழிற்பாடுகள் போன்றவைகளே இந்த வினாக்களுக்கான மூல காரணங்களாகும். இந்த இரண்டையும் வைத்துக் கொண்டுயாருக்குஎன்று முன்பெழுந்த வினாக்களைப் பகுப்பாய்வோம். முதலாளித்துவத்திற்கு இரண்டு அடிப்படைப் பண்புகள் இருக்கின்றன. முதலாவது பண்பு, முதலாளித்துவமானது தனது ஏகாதிபத்திய தேவைகளின் நிமித்தம் அல்லது அதனை விருத்தி செய்வதற்காக மொத்த உற்பத்தியை கூட்டுதல் என்ற பெயரில் தங்களது முக்கியமான நோக்கத்தை அடைவதற்காக புவியியல் பரப்புக்கள் தாண்டி முடிவற்ற மூலதனங்களைக் குவித்து வைத்தல். இரண்டாவது பண்பு, வரையறை இல்லாத மூலதனங்களாகும். முதலாளித்துவாதிகள், (குறிப்பாக பெரும் முதலாளித்துவவாதிகள்) தங்களது கணக்கு வழக்குகளைக் காட்டுவதில்லை. இது முதலாளித்துவத்தின்ஊத்தை இரகசியம்எனப்படும்.
இவ்வாறான வரையறையற்ற மூலதனத்தை குவித்து, உலக முதலாளித்துவத்தை முதலாளித்துவவாதிகள் விரித்து செல்வதற்கான உழைப்பிற்கு, நிலம் தேவைப்படுகின்றது. இங்கே அவர்கள் (சூழலைக் கருதாது) “இயற்கையை வெல்”, “எல்லாம் மனிதருக்காகஎன்ற தாரக மந்திரங்களை உருவாக்கி நிலத்தை சுரண்டோ சுரண்டென்று சுரண்டி தங்களது பரந்த ஏகாதிபத்தியத் தேவைகளுக்கான உற்பத்தியைக் கூட்டுகிறார்கள். மேலே கூறிய தாரக மந்திரங்கள் 16ம் நூற்றாண்டில் ஆரம்பித்த முதலாளித்துவ உலக பொருளாதாரத்திற்கு பின்னர் உருவானவைகள்தான். அன்று இதற்கெதிராக கிளம்பிய சமூக எதிர்ப்புக்களையும், கிளர்ச்சிகளையும் அன்றிருந்தே முதலாளித்துவவாதிகள், அடக்கியும், மழுங்கடித்தும் வந்திருக்கின்றார்கள்.
இன்று நடைமுறையில் இருக்கும் பொருளாதார அமைப்பு, உறுதியானதாக இருக்கலாம். ஆனால் அதனை நிர்வாகம் செய்பவர்கள் முட்டாள்களோ அல்லது கற்பனை வளம் இல்லாதவர்களோ அல்ல. அவர்கள் எதிர்ப்புக்களை சமாளிப்பதில் சிறப்பான தேர்ச்சிகளைப் பெற்றுள்ளனர். முற்போக்கான கருத்துக்களை முளையிலேயே கிள்ளியெறிய நன்றாகவே அறிந்துள்ளனர். அவர்கள் எப்போதும் சூழலியல் கோரிக்கைகளை தங்களுக்குச் சாதகமாகவே வளைக்க முற்படுவர்.
முதலாளித்துவவாதிகளுக்கான வரையறையற்ற மூலதனங்களைக் குவிக்கும், முதலாளித்துவவாதிகளின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கும், இந்த வரலாற்று முதலாளித்துவத்தின், சுற்றுச்சூழற் பிரச்சினை  பதினேழாம் நூற்றாண்டில் ஏற்படத் தொடங்கியது. அன்று அயர்லாந்தின் மரங்களை முற்று முழுதாக வெட்டிச் சாய்த்துவிட்டு, இன்று லத்தீன் அமரிக்க நாடுகளின் அமேசன் காடுகளை பாதுகாக்க வேண்டும் என்று முதலாளித்துவம் கூறுகிறது.  முதலாளித்துவத்திற்கு புகார் (smog) என்பது 65 வருடங்களுக்கு முன்பு ஒரு புதுச்சொல்லாக லொஸ்ஏன்ஜல்சில் இருந்தது.  இன்று பாரிஸ், ஏதென்ஸ் எல்லாம் தாண்டி, முதலாளித்துவத்தின் வேகமான வளர்ச்சியுடன், பல  எல்லைகளையும் தாண்டி புகாரானது (smog) எங்கும் பரந்து விரவி, கிழக்கு, தென்கிழக்கு ஆசியா வரை வந்து விட்டது.
ஜனநாயமாதலும் அல்லது அதிக ஜனநாயகம் கூட சுற்றுச் சூழல் சிதைவுக்கு ஒரு காரணமாக இன்று கருதப்படுகின்றதுமக்களின் ஆடம்பர, சொகுசு, உல்லாசத் தேவைகள் அதிகரிக்க, அதற்காக அவர்கள் குரல் எழுப்புவார்கள். உடனே அவர்களின் தேவையை நிவர்த்தி செய்ய  அதிகமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்இதனால் காற்று, நீர், நிலம், போன்றவை மாசடையும். அத்தோடு இந்த அதிகரித்த உல்லாச, சுகபோகப் பொருட்களின் உற்பத்திக்குப் பின்னால் பெருந்தொகையான பாதுகாக்கப்பட வேண்டிய உள்நாட்டுக்குரிய மரங்களும், விலங்குகளும் (-ம்: காண்டாமிருகம், யானை- கொம்புகளுக்காக, பாம்புகள,; புலி போன்ற பூனையினங்கள் - தோல்களுக்காக), அவைகள் சார்ந்து வாழும் சுற்றாடலும் சிதைக்கப்படுதல் (-ம்: மரங்கள் இல்லாவிட்டால் மழை கிடைக்காது அத்துடன் மண்ணரிமானமும் ஏற்படும். ஓரு விலங்கின் எண்ணிக்கை திடிரெனக் குறைதல் இயற்கைச் சமனிலையை குழப்பி இறுதியில் எல்லா விலங்கினங்களின் அழிவுக்கும் காரணமாகும்) என்பது மிகப் பெரிய சோகமாகும்.
முதலாளித்துவவாதிகளின் நோக்கில் அதிகரித்த உற்பத்தி என்பது இலாபத்தை அதிகரிப்பதற்காக. இலாபம் என்பது விற்பனை விலைக்கும், மொத்த உற்பத்திக்கும், செலவுக்கும் இடையே தனியே இயங்கிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ உலக பொருளாதாரத்தின் வரலாற்றின் தொழிற்படையினருக்கான பேரம் பேசும் சக்தி அதிகரித்துக் கொண்டே வந்திருக்கின்றது. அதிகரித்த உற்பத்தி தேவை காரணமாகவும், இலாப நோக்கம் கருதியும், குறைந்த விலையில் ஊழியர்கள் தேவைப்பட்டனர்இதனால் முதலாளித்துவம் பசப்பு வார்த்தை காட்டி கிராமப் புறங்களிலிருந்த, கிராமிய உணவுற்பத்திசார்ந்த விவசாய முயற்சிகளில் வெற்றிகரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த, பல நூற்றுக் கணக்கான தொழிலாளர் படைகளை குறைந்; ஊதியத்திற்கு நகரங்களை நோக்கி நகரச் செய்தன. இதன் காரணமாக கிராமியப் பிறழ்வு ஏற்பட்டது. நகரத்து வாழ்க்கை பற்றிய கனவுகளுடன் சென்றவர்களுக்கு முதலாளித்துவம் குறைந்த ஊதியம் கொடுத்து, அத் தொழிலாளர்படைகளை நட்டாற்றில் கைவிட்டது. பின்னர் அவர்களை சேரிப்புறங்களில் தள்ளிவிட்டது. அதிகரித்த சேரிச் சனத்தொகையினரே இன்றைய பெரும் நகரங்களில் சுற்றுச்சூழல் மாசடைதலுக்கு பிரதான காரணிகளுள் மிகவும் ஒன்றாக இருக்கிறார்கள். இந்த சேரிப்புறங்களால் நீர், நிலம், வளி, சத்தம் போன்ற மாசுகள் ஏற்பட்டது முதலாளித்துவத்தின் கைவரிசைதான் என்றால் அது மிகையாகாது.
இன்று சூழலியல்  ஒரு தீவிரமான அரசியல் போக்காக உலகின் பலபாகங்களில் மாறிக்கொண்டிருக்கின்றது. சூழலைப் பாதுகாப்போம் என்ற மையவாதக் கருத்தைச் சுற்றி பல அரசியல் இயக்கங்கள் சூழல் அழிவைத் தடுப்பதற்கும், நல்ல சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் களத்தில் கச்சை கட்டிக் கொண்டு நிற்கின்றனஇன்று எமது நாட்டில் அல்லது எமது பிரதேசங்களில் இவ்வாறான இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் அல்லது இவ்வாறான சூழலியல்-அரசியல் போக்கை முன்னெடுத்துச் செல்வதில் எமது பங்கு என்ன என்று ஒவ்வொருவரும் தங்களைப் பார்த்துக் கேட்டுக்கொள்வதும், அதற்கான நடவடிக்கையில் காலம் தாழ்த்தாது இறங்குவதும் மிகவும் முக்கியமானதும், அவசியமானதுமான ஒன்றாக இருக்கிறது.
No comments:

Post a Comment

தொலைதலின் இனிமை – 43 (இனிமையின் இறுதிப் பகுதி):

-  ஏ.எம். றியாஸ் அகமட் ஒரு சூரியன் உதித்த அதிகாலையில் வடக்கு அல் சர்க்கியா மாகாணத்திலுள்ள வித்தியா என்னுமிடத்திலுள்ள சர்க்கியா ...