Saturday, May 12, 2018

மட்டக்களப்பு, கல்லடியில் கண்டதுவும் காண்பதுவும் கடற்பாம்புகளா,அல்லது விலாங்கு மீன்களா?



.எம். றியாஸ் அகமட்,  சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்.

கல்லடிப் பாலத்திற்கருகிலும், அதனை அண்டிய கடற்கரைப் பகுதிகளிலும்கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் காணப்பட்டுக் கொண்டிருப்பது. கடற்பாம்புகளா அல்லது வேறு ஏதேனும் கடல் உயிரியா என்பது பற்றி சில கருத்துக்களை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.
இந்தக்கட்டுரை நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும்.

1.            கடற்பாம்புகள்
2.            மீன்கள்

3.            கல்லடியில் கண்டதுவும் காண்பதுவும் கடற்பாம்புகளா, அல்லது விலாங்கு மீன்களா?
4.            முடிவுரை

01)       கடற்பாம்புகள்:
கடந்த பல ஆண்டுகளாக இலங்கை கடற்பாம்புகள் ஆய்வுகளின் ஒரு உறுப்பினராக
(Sea Snakes Survey of Sri Lanka)  நான் இருந்து வருகின்றேன். எனவே கடற்பாம்புகள்பற்றி ஓரளவுக்கு என்னால் கூற முடியும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். இலங்கையில் 104  இன பாம்புகள் காணப்படுகின்றன (தரை, நன்னீர், உவர்நீர், கடற் பாம்புகள் அடங்கலாக). இவற்றுள் உள்நாட்டுக்குரிய (அதாவது உலகில் எங்குமே காணப்படாத இலங்கையில் மட்டுமே காணப்படக்கூடிய 51 இனங்களும் 08 உப இனங்களும் அடங்குகின்றன). இவைகள் 12 குடும்பத்திற்குள் அடக்கப்படுகின்றன. இவற்றுள் விசம் கொண்ட பாம்புகள் ஐந்து குடும்பங்களிலேயே இருக்கின்றன. இவற்றுள் கடற்பாம்புகள் ஹைட்ரோபிடே என்ற குடும்பத்தைச ;சேர்ந்தவையாகும். இலங்கையில் 15 இன கடற்பாம்புகள் காணப்படுகின்றன. இவைகளின் வாழிடங்களாக முருகைக்கற்பாறைகளும், கடற்புற்படுக்கைகளும் காணப்படுகின்றன.

கடற்பாம்பின் அமைப்பும், இசைவாக்கங்களும்:
கடற்பாம்புகளானது நீர்வாழ்க்கைக்கான பல்வேறு சிறப்பான இயல்புகளைப் பெற்றிருக்கின்றன. வயிற்றுப் பக்கமாகதட்டையாக்கப்பட்ட துடுப்பு வடிவான வால் அதன் முன்னேறிச்செல்வதற்கான இயக்கத்திற்கு உதவுகின்றது. இந்த வகையான வால்கள் மற்றைய தரை, நன்னீர், உவர்நீர் பாம்புகளில் காணப்படுவதில்லை. மூக்குப் பக்கமான வால்வுகளுள்ள கண்கள். இதனுடன் உப்புச் சீராக்கும் சுரப்பியும் காணப்படும். முழு உடம்பின் நீளத்திற்கு சமனான இடதுபக்க சுவாசப்பையையும் கொண்டு காணப்படும். கடற்பாம்புகள் நைதரசனை தனது தோல்களுக்கூடாக வெளியேற்றும் தகவு கொண்டது. இதன் காரணமாக நைதரசன் வாயுக்குமிழிகள் உடம்பில் சேர்ந்து விடாமல் பாதுகாத்துக் கொள்கின்றது. இலங்கையில் காணப்படுகின்ற கடற் பாம்புகள் 75 சென்ரிமீற்றரிலிருந்து 300 சென்ரிமீற்றர் வரை  நீளம் கொண்டுகாணப்படுகின்றது.

விசம்:
பொதுவாக நிலப் பாம்புகளை விட கடற்பாம்புகள் அதிகளவு விசம்கொண்டவை. உலகில் சில நிலப் பாம்புகள் கடற் பாம்புகளைவிட அதிகவிசம் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை கடற்பாம்புகள் நிலப் பாம்புகளைவிட அதிக விசம் கொண்டவையாக இருக்கின்றன. சில பாம்புகள் நாகப் பாம்பை விட 15 மடங்கு விசம் கொண்டவையாக இருக்கின்றன. கடற் பாம்புகளின் விசமானது நரம்புத் தொகுதியையும், தசைத் தொகுதியைம் தாக்குபவனவாக உள்ளன (nurotoxins and myotoxins).

அதிஸ்டவசமாக, மனிதர்கள் பெரும்பாலும் கடல் பாம்புக் கடிக்கு உட்படுவது குறைவு. கடற்பாம்புகடி நிகழ்வுகள் ஆயுர்வேத, மற்றும்அரச வைத்தியசாலைகளில் அறிக்கை செய்யப்படுவது மிகவும் குறைவு. கடற்பாம்புகள் திடிரென யாரையும் கடிப்பதில்லை. அவைகள் கோபப்படுத்தப்படும் போது தாக்க எத்தனிக்கின்றன. அவ்வாறு கடித்தாலும், அது உலர் கடியாகவே (Dry bites) இருக்கிறது. அதாவது விசம் செலுத்தப்படாத கடி. வலையில் மாட்டிக் கொண்ட கடற்பாம்பை கழற்றி விடும்போது, பெரும்பாலும் மீனவர்களே கடிக்கு இலக்காகிறார்கள். 90 சதவீதத்திற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு கடற்பாம்பு அதிக விசம் என்ற விடயம் தெரியாது. ஏதோ கடல்விலாங்கு மீன் என்று கருதிக்கொண்டு கடற்பாம்புகளை இலகுவாக கையாழ்கிறார்கள்.

02) மீன்கள்:
பொதுவாக மீன்களை கசியிழைய மீன்கள், முள் மீன்கள் என இரு வகைப்படுத்தலாம். கசியிழைய மீன்களுக்கு உதாரணமாக சுறா, திருக்கை போன்ற மீன்களையும், முள் மீன்களுக்கு மற்றைய மீன்களையும் உதாரணமாகக் கூறலாம்.

விலாங்கு மீன்:
ஓடர் அங்குலிபோம்ஸ் இல் அடங்கும் 4 உபஓடர்களையும், 20 குடும்பங்களையும், 111 சாதிகளையும், 800 இனங்களையும் கொண்ட விலங்குக் கூட்டமாகும். கல்லடியில் காணப்பட்ட வகை ஒபிச்திடே குடும்பத்தைச் சேர்ந்த, கலேகீலிஸ் எனும் இனமாக கருதப்பட வாய்ப்புண்டு. இந்தக் குடும்பத்தில் 15 இனங்கள் காணப்படுகின்றன. இவை அயனமண்டல கடல் வாழிகள். 4- 35 மீற்றர் ஆழத்தில் காணப்படும். மேற்கு அத்திலாந்திக், மேற்கு, கிழக்கு புளோரிடா, போட்டாரிகா, பகாமாஸ், செனகல், ஐவரிகோஸ்ட் போன்ற நாடுகளில் பொதுவாகக் காணப்படும் இந்தோ-பசுபிக் சமுத்திரத்திற்குரிய இனமாகும். மெல்லிய உருளையான உடல் கொண்ட இந்த மீனில் தெளிவாக பூப்பிளவுகளும், முகுப்புற, குத, வாற் செட்டைகளும் காணப்படுகின்றன. புள்ளிகளும், வரிகளும் கொண்டு சில வௌ;வேறு நிறங்களில் காணப்படுவதனால் நிற கடற்பாம்புகள் எனவும் தவறுதலாக அடையாளம் காணப்படுகின்றன. இது பொதுவாக Snake eels (பாம்பு விலாங்குகள்) என அழைக்கப்படுகின்றன.

 
விலாங்கு மீன்களின் பொதுவான வாழ்க்கை வட்டம்:
பொதுவாக நிறையுடலி நன்னீர் நிலைகளிலும், இளம் பருவங்கள் சவர்நீர் நிலை, கடல் போன்றவற்றில் காணப்படுகின்றன. கடலில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து, நன்னீர் நீர் நிலைகளான குளம், ஆறுகள் போன்றனவற்றிற்கு திரும்புகின்றன. பெரும்பாலும் சேற்றுப் பாங்கான வாழிடங்களை விரும்புகின்றன. ஆறுகளில் கற்களுக்கிடையிலும் காணப்படுகின்றன. இவை சிறிய மீன்களையும், கிறஸ்றேசியன்களையும், மொலக்காக்களையும் உணவாக உட்கொள்ளுகின்றன.

 
இனப்பெருக்கம்:
கடலில் நிறையுடலிகளால் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கப்பட்ட குடம்பிகள் பல நூறு மைல்கள் வேறொரு பகுகிகளுக்கு கடல் நீரோட்டத்தினால் அல்லது சிலவேளை காலநிலை மாற்றங்களினால் எடுத்துச் செல்லப்பட்டு ஆறுகளுக்குள் விடப்படுகின்றன.; இந்த ஆறுகளுக்குள் ஆயிரக் கணக்காக படையெடுத்து இலிங்க முதிர்ச்சியடையும் வரை தங்கி, பின்னர் தங்கள் பிறந்த இடங்களுக்கு திரும்புகின்றன. அங்கேயே முட்டையிட்டு இறக்கின்றன. எல்லா இன விலாங்குமீன்களுக்கு இந்த வாழ்க்கைமுறை பொதுவாக பொருந்துவதில்லை என கூறப்படுகின்றது. விலாங்குகள், உணவு, அலங்கார மீன் போன்ற தேவைகளுக்காகபல்வேறு மீன்பிடி உபகரணங்களினால் பிடிக்கப்படுகின்றன.


03) கல்லடியில் கண்டதுவும் காண்பதுவும்  கடற்பாம்பா,அல்லது விலாங்கு மீனா?

இரு வருடங்களுக்கு முன் நான் எனது சங்கத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையி;ன்அடிப்படையில் சில பகுதிகளை பார்க்கலாம். உயிருள்ள மாதிரிகளும், உயிரற்ற மாதிரிகளும் பரீட்சிக்கப்பட்டு, சிலமுடிவுகள் பெறப்பட்டன. பிடிக்கப்பட்ட மாதிரிகளில் பூப்பிளவுகள் (Gills) அல்லது பூக்கள் தெளிவாகக் காணப்பட்டன. இது மீன்களின் ஒரு இயல்பு. இதனூடாகவே சுவாசம் நடைபெறுகின்றது. பாம்புகளில் இந்தபூப்பிளவுகள் அல்லது பூக்கள் காணப்படுவதில்லை. செட்டைகளும் (fins) காணப்பட்டன. செட்டைகளும் பாம்புகளில் காணப்படுவதில்லை. எனவே கல்லடி பாலத்தின் கீழ்ப் பகுதியிலும், அதனை அண்டிய கடற்கரையிலும் காணப்பட்டது பாம்பல்ல. வேறு ஒரு நீர் உயிரினம். அது விலாங்காக இருக்கலாம் என கருதுகின்றேன் எனவும், அவை எங்கேயிருந்து எப்படி வந்திருக்கலாம் என்றும், அதன்வாழ்க்கை வட்டத்தின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த அங்கத்தவர்களையும் கொண்டிருப்பதன் காரணமாக பல்வேறுநிறங்களில் காணப்படுவதாகவும், அனுபவமற்ற, தூரப்பிரதேசங்களிலிருந்து கொண்டு, களத்திற்கு வராமல் அறிக்கைவிடுபவர்களாலேயே மக்கள் பயப்படுகின்றார்கள் என்றும் அறிக்கை செய்திருந்தேன். எனவே ஊடகங்களுக்கு உள்ள பொறுப்பு, விலாங்குகளுக்குப் பதிலாக கடற் பாம்புகளை உலாவவிடுவதல்ல.

04. முடிவுரை:
எனவே இந்தக் கட்டுரையை மூன்று விடயங்களைக் கூறி முடிக்கலாம்என நினைக்கின்றேன்.
1)            கடந்த வருடம் வந்ததும் அதே விலாங்கு
2)            இந்த வருடம் வந்ததும் இதே விலாங்காக இருக்கலாம்.
3)            விலங்குகளின் அசாதாரண நடத்தைக் கோலங்களிற்கும்இயற்கை அனர்த்தங்களின் முன்னெச்சரிக்கைக்கும் தொடர்புகள் இல்லாமல் இல்லை. ஆனால் எல்லா அசாதாரண நடத்தைகளும் முன்னெச்சரிக்கைகள் இல்லை.

2 comments:

  1. Continue ur research sir! May Allah grant u endless knowledge which is beneficial to this world and the hereafter!

    ReplyDelete
  2. Very interesting Article. Thank you for education the public.

    ReplyDelete

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...