Monday, April 3, 2017

The Flightless Butterflies மரபுகளையும் தொன்மங்களையும், அரசியலையும். யுதார்த்தத்தையும் குறைந்த வளங்களோடு நிகழ்த்திக்காட்ட வந்த நிறைவான அரங்க முயற்சி - ஒரு உளவியல் அணுகுமுறை


-               அம்ரிதா ஏயெம்.

அறிமுகம்:
ஓகஸ்ட்-ஜூலை 2000 களில், கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கிலக் கற்கைகள் துறையினரின் அனுசரணையில், கலாநிதி சி. ஜெயசங்கரினால் நடாத்தப்பட்ட நாடகப் பட்டறையில், வீ. கௌரிபாலனினால் எழுதப்பட்டு 1994 ம் ஆண்டு தினமுரசில் பிரசுரிக்;கப்பட்ட நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து, அந்தச் சிறுகதை வீ. கௌரிபாலனினால், தமிழ் நாடகப் பனுவலாக எழுதப்பட்டு, எஸ்.எம். பீலிக்ஸினால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, ஆங்கிலத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் அரங்கேற்றப்பட்டு, பல்வேறு விருதுகளையும், தேசிய விருதையும் வென்றதும், கலாநிதி சி. ஜெயசங்கரினால் நெறியாள்கை செய்யப்பட்ட நாடகம்தான்The Flightless Butterflies”.

உளவியல் என்பது மனிதனின் நடத்தையை அறியும் விஞ்ஞானம். உளவியல் அகநிலை சார்ந்தது. மனித மனத்தின் பன்முகச் செயற்பாட்டை, பல்வேறு நிலைகளை ஆய்வதில் கருத்துச் செலுத்துகின்றதுஇலக்கியத் திறனாய்வை உளவியற் பகுப்பாய்வு வழிமுறையின் கீழ்நின்று முதன் முறையாக செய்தவர் பிராய்ட்; ஆகும். ஓர் படைப்பாளியின் வெளிப்படையான நோக்கங்களுக்கு அடித்தளமாக விளங்கும் உள்ளுறை நோக்கங்களாக சிலவற்றைக் குறுப்பிடும் முதல் முயற்சியாக இது இருந்தது எனலாம். உளவியற் பகுப்பாய்வு வழியமைந்த திறானய்வில் பிராய்டின் தாக்கம் மிகப் பெரிய அளவினதாகும்.

அம்பியும், உளவியல்ப் பண்புகளும்:

முதலாவது காட்சியில் அம்பி கந்தளாய்க்குளக் கட்டில் இருந்து கொண்டு, குளக்கோட்டனைப் புகழ்கின்றான். அப்போது ராஜ பல்லக்கில் இளவரசி முல்லை வருகிறாள். அம்பி நான்தான் உனது கணவன் முகில்வண்ணன் என்கிறான். முல்லை பல்லக்கை நிறுத்தி கீழிறங்கி அம்பியை நோக்கி கையசைத்துவிட்டு போகிறாள். அம்பி துரத்துகிறான். அவள் ஓடுகிறாள். அப்போது இராணுவ வீரர்கள், சிங்களத்தில் ஓட வேண்டாம் என்று கத்திக் கொண்டு, அம்பியை துரத்தி, தங்களது மேலதிகாரியிடத்தில் நிறுத்தி, குளத்தை குண்டு வைத்து தகர்க்க வந்ததாக கூற, அவர் அவனை பங்கரில் போடுமாறு உத்தரவிடுகிறார்.
இரண்டாவது காட்சியின் நடுப்பாகத்தில், அம்பி பெற்றோர்களின் கண்டிப்பான திணிப்பு காரணமாக ஏதாவது எந்நேரமும் படித்துக்கொண்டே இருக்கின்றான். குளக்கோட்டனின் வீரபிரதாபங்களை சத்தம்போட்டு வாசிக்கிறான். அவனின் தேரோட்டி முகில்வண்ணன் என்றும், அவனின் அழகிய மனைவி முல்லை என்றும் வாசிக்கின்றான். வேறு சம்பாசணைகளும் நடக்கின்றன.

நாலாவது காட்சியில், உயர்தர பரீட்சை தவறிவிட்டதைத் தொடர்ந்து நான்கு, ஐந்து வருடங்களாக  கட்டாயப்படுத்தி படிக்க வைக்கப்பட்டிருந்தான் அல்லது அசையாது எங்கும் போகாதிருந்தான். அம்பி கதவு தட்டுப்படும் சத்தம் கேட்க, வேண்டா வெறுப்பாய் திறக்க, அங்கே ராசாத்தி பக்கத்து வீட்டுப் பெண் நிற்கிறாள். ! முல்லை என்று என்று கத்துகிறான். நான் உன்னை விரும்புகிறேன் என்று சொல்கிறான். நான் முல்லை இல்லைநான் ராசாத்தி. என்னை முல்லை என்று கூப்பிட வேண்டாமென்றும், அம்பியின் கல்யாணம் குழம்பிப் பேச்சுவார்த்தை குழம்பிப் போனது பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறுகிறாள். இருந்தும் அவன் அவையெல்லாவற்றையும் காதிற்கொள்ளாமல், முல்லைபற்றி கவிதை பாடுகிறான். அப்போது, அம்பியின் அம்மா வந்து, ராசாத்தியை அம்பியை கெடுப்பது நீதான் என்று துரத்துகிறாள்.

ஐந்தாவது காட்சியில், அம்பி தேரில் அரசனுக்கு காத்திதருக்கிறான். முல்லை மாடத்தில் தென்படுகிறாள். அம்பி உணர்ச்சி வசப்படுகுகிறான். அவன் முல்லைக்கு கையசைக்கிறான். அவளும் கையசைக்கிறாள். அம்பி தேரிலிருந்து குதித்து முல்லையை  கூப்பிடுகிறான். மாடத்தில் ஏற முயற்சிக்கிறான். வழுக்கி விழுகிறான். முல்லையை தேடுகிறான். எனது, தேவியே! தேவதையே! இளவரசியே! நீ எங்கே போனாய் என்று தேடுகிறான். உணர்ச்சிவசப்பட்டவனாக, அம்பி அங்குமிங்கும் ஓடுகையில், பங்கருக்குள் பொலிசார் வந்து அம்பியை இறுகப் பிடித்து தூக்கிப் போகின்றனர். அப்போது அம்பி முல்லை முல்லை என்று முணுமுணுக்கிறான்.

ஆறாவது காட்சி, நீதிமன்றக் காட்சி. இங்கு குளத்தை குண்டு வைக்கத் திட்டமிட்ட தீவிரவாதியென அம்பி குற்றம் சாட்டப்பட, அம்பி, தனக்கு முல்லையைத் தவிர ஒன்றும் தெரியாது. என்றும், தான் மாடத்தில் முல்லையை தேடியதாகவும் சொல்கிறான். பின் நீதிபதிக்கு அம்பியின் மனநிலை பற்றிய மருத்துவச் சான்றிதழ் காட்டப்பட, நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து, அம்பிக்கு மனிநிலை சிகிச்சை செய்யுமாறு கூறுகிறார்.
பின் ஏழாவது காட்சியில், அம்பி கோணேஸ்வர கோயில், குளக்கோட்டன் அதன் இயற்கைச் சூழல் பற்றி கவிதை பாடுகிறான். கோயிலுக்கு வரும் பெண்கள் கூட்டத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து, ! முல்லை, நான் இங்கே, நீ எங்கே போனாய்? என்று அவளின் கையை பிடித்து இழுக்க அவள் அறைகிறாள். அதற்கு அம்பி ஏன் முல்லை எனக்கு அறைந்தாய் என்கிறான். மீண்டும் பெண்களுக்கு அருகில் அம்பி வரப்பார்க்க கோயிலில் நின்றவர்கள் அம்பியைத் தாக்குகின்றனர். உடனே அம்பி மன்னவா! இதுவா உன் மனுநீதி? ஏன் முல்லையை நீ என்னிடமிருந்து பிரித்து உன் காவலர் கொண்டு தாக்கினாயே? மன்னவா இதுவா உன் மனுநீதி? இதுவா உன் மனுநீதி ஏன நாடகம் முடிகிறது.

அம்பியின் உளவியல் சிக்கல் இங்கு ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். அம்பியின் ஆழ்மனம் என்பதானது நாம் ஊகித்தே அறியக்கூடிய மனநடவடிக்கைகளாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த, அந்த நேரத்தில் நாம் கொஞ்சம் கூட அறிந்திராத மனநிலை. அம்பியின் பெரும்பான்மையான நனவுநிலைச் செயல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே. நனவு நிலையாக விளங்கி, பின் உள்ளுறைந்துவிடுகின்றன. ஆனாலும் பின்னர் அவை மீண்டும் எளிமையாக நனவு நிலையாகிவிடுகின்றன.
உளவியல் நாடகமெனப்படுவது தலைவனின் துன்பம், நனவு நிலை என்ற இரண்டு உணர்வு தூண்டல்களுக்கு இடையே நிகழும் பேராட்டத்தால் நிகழ்கின்றது. ஆனால் உளச்சிதைவு நாடகங்களில் நனவு நிலையான உணர்வுத் தூண்டல் ஒன்றிருக்கும் ஆழ்மன நிலைக்கு (அல்லது மனமறியா நிலைக்கு)த் தள்ளப்பட்ட உணர்வு தூண்டல் ஒன்றிற்கும் இடையிலான போராட்டம் ஒன்றிருக்கும். இந்த நாடகத் தலைவன் அம்பி இவ்வகையான துன்புறுத்தலுக்குள்ளாவதால்; இது உளச்சிதைவு அம்சத்தைக் கொண்ட நாடகமாக கருதப்பட வேண்டியதே.

பெற்றோரின் அதீத கண்டிப்புக் காரணமாக, எந்நேரமும் படிக்கச் சொல்லும் சூழ்நிலையில், அம்பி குளக்கோட்டன்-முல்லை-முகில்வண்ணன் கதைகளை திரும்பத் திரும்ப படிக்கிறான். முல்லை மீது மாறாக் காதல் கொள்கிறான். முல்லை பற்றிய பல்வேறு பொய்த் தோற்றங்களின் அம்பி மனம் உழல்கிறது. அம்பியின் மனத்தில் அவள் எவ்வாறு இருந்திருப்பாள்?, எங்கே இருந்திருப்பாள்? என்னும் வினாக்கள் குடைகின்றன. அம்பிக்கு ராசாத்தி முல்லையாக தெரிகிறாள். ஏனெனில், அவள் பக்கத்;து வீடு என்பதால், சிறுபருவத்து விளையாட்டுத் துணையாக விளங்கிய தோழியை மையமாக கொண்டு அம்பி தனது பொய்த் தோற்றங்களை மெல்ல மெல்ல கட்டமைத்து அவளை பல்லக்கில் ஏறிவரும் முல்லையாக மனத்தால் மாற்றிக் கொண்டான். உண்மையில் அம்பி கற்பனை செய்திருந்த கி.பி. 14ம் நூற்றாண்டு தொன்மை வாய்ந்த முல்லையின் வாழ்க்கை என்பது உண்மையில் அம்பியும், ராசாத்தியும் விளையாடிய குழந்தைப் பருவமும், அதன் விளையாட்டுமாகும். முல்லை பற்றிய புராணம் அம்பியின் அடிமனநிலைக்கு தள்ளப்பட்டமையால் (Represion) இராசாத்தி நினைவு மறதிக்கு ஆளானதாய்க் தெரிகிறது,

உளவியல் அணுகுமுறையின் ஒரு சிக்கலான தன்மை என்பது ஓரு படைப்பு பெரிதும் விளங்கிக் கொளப்பட வேண்டுமாயின், அதன் படைப்பாளியின் வாழ்க்கைக் குறிப்புக்கள் அவசியமாகும். படைப்பை இவ்வாறு ஆய்வு செய்கையில், ஓரு எழுத்தாளரின் நூல்களை அவரது வாழ்க்ககை நிகழ்ச்சியோடு ஒருங்கிணைத்து அவரது அடிமன நிலையை வெளிக் கொணர்தலே பிராய்டின் குறிக்கோளாக இருந்திருக்கிறது. அது எல்லா நேரமும் படைப்பாளிக்கு பொருந்துமா? ஏன்ற என்ற சர்ச்சைகளும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, இந்த அணுகுமுறையில் படைப்பாளியை அல்லது மூலக்கதாசிரியரை அணுகினால், ஈடிபஸ் சிக்கலால் மூலக்கதையாசிரியருக்கு தந்தைமேல் ஒரு வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு ஆழ்மனத்தில் இருந்திருக்கலாம் என்றும், அடுத்தது தனது பெற்;றோர்களின் கட்டளைகளாலும், போக்குகளாலும், புரிந்துணர்வின்மையாலும் மூலக்கதையாசிரியர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கவும் வேண்டும் என்றும்எனவே அதன் காரணமாக தந்தையையும், கண்டிப்புக்களுக்கான தாயைiயும் பழிவாங்கும் எண்ணத்தை ஆழ்மனத்தில் அவருக்கு தெரியாமல் கொண்டிருந்தார் என்றும், அம்பியை குணமாக்காமல் விட்டுவிட்டதன் காரணமாக, அது அம்பிக்கு பெண்களினால் கொடுக்கப்படும் அறைகளும், பாதுகாப்புக்காரர்களினால் கொடுக்கப்படும் அடிகளும், அம்பியை அவமானப்படுத்தக் கூடியது அல்லவென்றும், மாறாக.பெற்றோரும், குடும்பமும், பாடசாலை, கோயில் போன்ற நிறுவனங்களும், சமூகமும் என்றே எண்ணத் தோன்றும். இதனை ஆசிரியர் எவ்வாறு நோக்குவார் என்பது பரந்த மனப்பான்மையையும், விட்டுக்கொடுப்பையும் வேண்டி நிற்கின்றது. பிராய்டின் கோட்பாடுகளை இன்றளவும் பலர் ஏற்க மறுத்தாலும் மனித வாழ்வில் தீர்வுகாணவியலா புதிர்களாக விளங்கிய மனக் கோணங்கள் பலவற்றிற்கு தக்க விடையளிப்பதாய் பிராய்டின் உளவியல் பகுப்பு அமைந்துள்ளது. இதனைப் போன்றே இலக்கியப் படைப்புகளுக்கு புதிய விளக்கம் அளிக்கும் ஆய்வுக்கும் இலக்கிய மாந்தர்களின் பண்பு நலநன உரிய முiறியல் மதிப்பீடு செய்வதற்கும், பிராய்டின் உளவியற் பகுப்பாய்வு பெரிதும் துணை புரிகின்றது.

பெற்றோர் காட்டும் கண்டிப்பு, எந்நேரமும் படிக்கச் சொல்லுதல், அவனின் சுயவேலைகளையே செய்ய விடாமல் வைத்தல், அதீத கவனம், ஒடுக்கவிழுமியக் கட்டுப்பாடு போன்றவை சில அடிப்படைத் தேவைகளுக்காக பெற்றோரை சார்ந்து வாழவேண்டும் என்பதால் குழந்தையால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அம்பியின் பெற்றோர்கள் செய்யக்கூடாதனவற்றை அன்பாகவும், பொறுமையாகவும் அறிவுசார்ந்த நிலையிலும் எடுத்துக் கூறியிருந்தால் அம்பியும் நாம் எதிர்பார்க்கத்தக்க பிள்ளையாகவே வந்திருப்பான். ஆனால் அவ்வாறு இல்லை என்ற படியால், அவனும் பெற்றோருடன் அத்தன்மையிலேயே பழகுகிறான்தண்டிக்கின்ற மனப்பான்மையில் பெற்றோர் கண்டிக்கத் தொடங்கியதால் அம்பி பெரிதும் அந்நியனாக வளர்கின்றான்.

பெற்றோர் தன்மீது காட்டும் அன்பையும் தான் பெறும் பாதுகாப்பையும் இழந்துவிட நேரும் என்று அம்பி அஞ்சி, மேலும் தனது பெற்றோர் கோபத்தைக் காட்டினால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், கற்பனை செய்து தன்னுள் அவன் அச்சத்தை வளர்த்துக் கொள்கிறான். அம்பி அப்போது தனது பெற்றோரைக் கொல்ல வேண்டும் என்று கருதினாலும், அதற்கு பெற்றோர் அளிக்கும் தண்டனை கொலைத் தண்டனையாகவே அது இருக்கும் என்று கருதினான். அந்த சூழலில் பெற்றோருடன் வாழ்வதை பகைவருடன் வாழ்வதைப் போலவே கருதினான். பின் அம்பி அவனுக்கு எதிராகவே ஆற்றாமையினால் மிகப் பெரும் கோபத்தை திருப்பிக் கொள்கிறான்.

நான் மேற்கூறிய கருத்துகளுக்கெல்லாம் பின்வரும் நாடகக் காட்சிகள் சாட்சியாக இருக்கின்றன. இரண்டாவது காட்சியின் ஆரம்பத்தில் அம்பியின் அம்மா அவனின் சேர்டடை அயன்பண்ணுவதும், தந்தை அவனின் புத்தக அலுமாரியை துடைப்பதும், அப்போது அம்பி தனது சேர்ட்டை தானே அயன்பண்ண விரும்புவதும், அதற்கு தாய் அவன் விரலை சுட்டுக் கொள்வானென்று அவனை ஏசுவதும், தந்தைகூட  அலுமாரியை துடைக்கும் நேரத்தில்  பாடசாலையில் தந்த வீட்டு வேலைகளைச் செய்யுமாறும் எச்சரிப்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது சக மாணவர்கள் சிகிரியாவிற்கு சுற்றுலா செல்லும்போது கூட, அம்பி தனது பெற்றோரினால் வெளியே பாதுகாப்பில்லை. குண்டு வெடிக்கிறது, அம்பி வரும்வரை ஊசிமுனையில்  இருப்பது போல இருக்க இயலாது என்று சொல்லி, அவனுக்கு அனுமதி மறுத்து படிக்கச் சொல்கிறார்கள்அம்பி ஏங்கிப்  போகிறான்.

சிறுபருவத்தில் தேர்த்திருவிழாவுக்கு பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் போக அம்பியை அனுமதிக்காத போது, அம்பி சாப்பிட மறுத்து அடம்பிடிக்க, அப்பா காதை பிடித்து, இழுத்துக் கொண்டு கூட்டிக்கொண்டு போகிறார். இப்படியான நடத்தைகளை அம்பி விரும்புவதில்லை.
அம்பியை சிறுசிறு வேலைகளுக்காக அதாவது கடைகளுக்குகூட அவர்கள் அனுப்புவதில்லை. அப்படி அனுப்புவதென்றாலும், அடையாள அட்டை எடு, வீதி அருகாலே போ, யாரோடயும் கதைக்காதே என்று இளைஞனான அம்பிக்கு பெற்றோர்கள் கட்டளையிடுகிறார்கள்.
பாடசாலையும், அதன் கற்பித்தல் முறைகளும், பெற்றோர், குடும்பம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கின்ற கற்பித்தல் பற்றிய அணுகுமுறைகள் கேள்விக்குட்படுத்தக்கூடியன. பாடத்திட்டத்திற்கு அப்பால் கற்பதிலும், கற்பிப்பதிலும், அறிவைத் தேடுவதிலும், வாசிப்பதிலும் மிகக் கவனமாக மேற்கூறிய நிறுவனங்கள் திட்டமிட்ட வகையில் தங்களது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றன.
நாலாவது காட்சியின், அம்பி உயர்தரப் பரீட்சையில் தவறியதிலிருந்து நான்காவது வருடமாக தனிமையில் ஒரு அறையில் இருந்து, படித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. அப்போது அவனது விட்டுக்கு வரும் அவள் அம்பியின் பரிதாபநிலையை அவனுடைய தாய்க்கு விளங்கப்படுத்த முனைகிறாள். ஆனால் பலனில்லை. இந்த மனிதர்கள் மாறமாட்டார்கள் என்று சொல்லி ராசாத்தி வெளியேற, தாயோ அம்பியை, அவள் பைத்தியம் மாதிரி, எப்படிப் பேசுகிறாள். அவள் உன்னை பழுதாக்கிப் போடுவாள். அவளிடம் கவனம் என்று சொல்கிறாள். அவனுக்கு கொடுத்த தினமுரசு பத்திரிகையை வாங்கி அது பாடசாலைக் கல்விக்கு அப்பாற்பட்டது என்று வீசி எறிகிறாள்.

வகுப்பறையில், ஆசிரியை பூச்சிகளின் வாழ்க்கை வட்டம் சம்பந்தமாக படிப்பித்துக் கொண்டிருக்கும் போது, அம்பி இடையில் குறுக்கறுத்து கேள்வி கேட்க, ஆசிரியை அதற்கு பதில் சொல்கிறாள். அம்பியின் கேள்விகளுக்கு ஆசிரியை இது தேவையில்லாத பாடத்திட்டத்திற்கு அப்பாற்றபட்ட விடயம் என்று சொல்லி  அம்பியை நிறுத்தச் சொல்கிறாள.; காலம் சிறிது, பாடத்திட்டம் பெரிது, தேர்வு செய்து படிக்க வேண்டும் என்கிறார். வகுப்பிலிருந்த இன்னொரு மாணவனோ ஆசிரியையிடம் அம்பி கற்பனை உலகத்தில் இருக்கிறான் என்றும், நேரத்தை வீணடிக்கிறான் என்றும் அம்பிமீது குற்றம் சாட்டுகிறான் பின்னர் ஆசிரியை குறிப்புக்களை மாணவனிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லிவிட்டு மற்றையவர்களை எழுதுமாறு பணித்துவிட்டு வெளியயேறிச் செல்கிறார்.

நாங்கள் ஒவ்வொருவரும் கேள்விப்படும் கருத்துக்கள், அனுபவங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்தே எங்களது தீர்மானங்களையும், ஆடிவுகளையும் எடுக்கின்றோம். அந்த வகையில் சமகால கல்வி முறை மாற்றப்பட வேண்டியதும், தீரக்கப் படவேண்டிய பல அம்சங்களையும் கொண்டமைந்து காணப்படுகின்றது.

சிறுவர்களை அல்லது பிள்ளைகளை முறையாக கையாண்டால் எளிதாக நல்லவற்றுக்கு ஆற்றுப்படுத்தலாம். ஆனால் பெற்றோர்களும், ஆசிரியர்களுமே, மற்றவர்களுமே சிறுவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ தவறான வழிகாட்டிகளாகிவிடுகின்றனர். கல்வி என்பது ஒரு மனிதனை உருவாக்கும், பண்படுத்தும் ஒரு செயற்பாடாகும். அது முறைப்படுத்தப்படாத போது, சிறுவர்களும் அல்லது பிள்ளைகளும் முழுமையற்ற முறையற்றவர்களாக உருவாகி அழிந்து போகிறார்கள்.

அந்த வகையில் The Flightless Butterflies என்ற நாடகம் சாட்டையாய், சம்மட்டியா எங்களின் முகத்தில் ஓங்கிக் குத்துகிறது. . றஜிவனி பிரான்சிஸ், . லலினி திசவீரசிங்க, மைத்ரேயி சோமசுந்தரம், பிரகாசினி ஜீவரத்தினம், கே. ஹரிஹரராஜ், டபிள்யு. தர்மேந்திரா, பிறிட்டோ அதயராஜ், பீ. வியேயேந்திரன் போன்ற எட்டு மாணவ நடிகர்களைக் கொண்டு, குறைந்தளவான செட்களைக் கொண்டும் அரங்காற்றப்பட்டதே இந்த நாடகம்.

இந்த நாடகப் பனுவலாக்கம், கூட்டாகப் புதிதளித்தல் முறைக்கு சிறந்த உதாரணமாகும். சிறுகதை உருவாக்கம், குழுநிலையில் படைப்பாக்கம், மொழி பெயர்ப்பு, கலந்துரையாடல்கள், உருவாக்கங்கள், மதிப்பீடுகள் எனப் பல்வேறுபட்ட பயிற்சி முறைகளின் விளைவுகளையும், அனுபவங்களையும், இந்த நாடகத்தின் முழு அரங்காற்றுச் செயற்பாடுக்களினூடாக புரிந்து கொள்ள முடிகின்றது.

The Flightless Butterflies ஆங்கில மொழியினூடு எங்கள் மரபுகளையும், தொன்மங்களையும் வெளியார் அறிந்து கொள்வதற்கு மிகக் குறைந்த வளங்களைக் கொண்டு நிகழ்த்திக் காட்டப்பட்ட நிறைவான அற்புதம் என்றால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...