Friday, March 31, 2017

புலமைத்துவ பயங்கரவாதத்தால் நான்கு தசாப்தங்களாக விளிம்பு நிலைக்குள் வைக்கப்பட்ட க. பாலேந்திராவின் யுகதர்மம் மையத்தை நோக்கி - யுகதர்மம், நாடகமும் பதிவுகளும் நாடகப் பனுவலை முன்வைத்து.





- அம்ரிதா ஏயெம்


நவீன ஐரோப்பிய நாடக உலகில் ஹென்றிக் கிப்ஸன், ஆகஸ்ட் ஸ்ற்றிப்போர்க் போன்றவர்களைத் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுள் ஒருவராக பேர்டொல்ட் பிரக்ட் (1898 – 1956) கருதப்படுகின்றார். பிரக்ட் முற்போக்கான சிந்தனையடையவர். 1920 களிலிருந்து தன்னை மார்க்சியத்துடன் வரித்துக் கொள்கிறார். பிரக்ட்டின் நாடகங்கள் எந்தளவு மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றனவோ. அதே அளவிற்கு ஜேர்மனிய பாசிச நாசிக்களால் வெறுக்கப்பட்டன. இதன் காரணமாக சுவீடனுக்குப் புலம்பெயர்ந்து அங்கு சிறிது காலம் வாழ்ந்து, ஜேர்மன் வட ஐரோப்பாவைக் கைப்பற்ற, அங்கிருந்து அமரிக்காவிற்கு புலம் பெயர்ந்தார்.

53 நாடகங்களை எழுதிய பிரக்டின் மிகச் சிறந்த நாடகங்கள் உலகப் போரின் போதே எழுதப்பட்டன. கலிலியோவின் வாழ்க்கை, தைரியத் தாய், செச்சுவானின் நல்ல பெண்மணி, கொக்கேசிய சுண்ண வட்டம் போன்றன.  அவருக்கு அமரிக்காவிலும் தான் ஒரு கம்யுனிஸ்ட் என்ற பிரச்சினைகள் எழவே, 1947இல் சுவிட்சர்லாந்திற்கு புலம் பெயர்கிறார். மேற்கு வல்லரசுகளின் கட்டுபாட்டிலிருந்த தான் பிறந்த நாடான மேற்கு ஜேர்மனியில் நாசிக்களுக்கு மிக முக்கிய பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டது கண்டு தான் பிறந்த ஊரான பவேரியாவிற்கு திரும்புவற்கு வெறுப்படைந்து, 1949 முதல் இறக்கும் வரை கிழக்கு ஜேர்மனியிலேயே வாழ்ந்தார்.

அவரது அந்திம காலங்களில் நாடகங்கள் எதனையும் எழுதாத போதிலும், புதிய தலைமுறைக்கான நாடக இயக்கங்களை உருவாக்குவதிலும், இயக்கத்திற்குட்படுத்துவதிலும் தனது உழைப்பபை முன்னெடுத்தார். மார்க்சிச சிந்தனைகளை முன்னெடுக்கும் கற்பித்தல் நாடகங்கள் என்னும் வகையில் அவர் பல குறுநாடகங்களை எழுதினார். தனது நாடகப் பிரதிகளை தொடர்ந்து திருத்தங்கள் செய்து வந்தார். அது அவரது நாடகம் பற்றிய அணுகுமுறைக்குரிய பண்பாக காணப்பட்டது.


நன்மை வெல்லும், இனி எல்லாம் சுகமே ரகமான முடிவுகளை பிரக்டின் நாடகங்களில் காணுவது முடியாது. அநீதியும், கெட்டதும், வெற்றி பெறுகின்றன என்பதன் மூலம் நீதியும், நல்லதும் தேவையாயின் உலகின் விதிகளை மாற்றத்திற்குட்படுத்தவும், கேள்விக்குட்படுத்தவும், எதிர்க்கவும் வேண்டும். சிறந்த கவிஞரான பிரக்ட் அவரது நாடகங்களில் பாடல்களைச் சேர்த்ததுடன்,  கலை கலைக்காகவே என்ற வாதத்தை மறுத்து, கலையும் அழகியல் அம்சங்களும் குறையாமல் அரசியல் சேர்ந்த ஆக்கங்களை தனது நாடகங்கள் மூலம் தந்தவர்.

இந்த வகையில் பிரக்ட் கற்பித்தல் வகையான வுhந நஒஉநிவழைn யனெ வாந சரடநள என்ற நாடகத்தை 1930 களில் எழுதினார். வர்க்க வேறுபாடு உள்ள சமூகத்தில், நீதியும் வர்க்கச் சார்பானது என்ற கருத்தை மையமாக வைத்தே இந் நாடகம் எழுதப்பட்டது. 1970களின் பிற்பகுதிகளில், க. பாலேந்திரா அவர்களின் அயராத முயற்சிகளின் காரணமாக, ச. வாசுதேவன், நிர்மலா ராஜசிங்கம் ஆகியோர் மொழி பெயர்க்க, எம். கண்ணன் இசையமைக்க, பல நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் க. பாலேந்திராவின் இயக்கத்தில் இலங்கை, புலம்பெயர்ந்த நாடுகளில் சுமார் 29 தடவைகள் மேடையேற்றப்பட்டதுதான் “யுகதர்மம்” என்ற நாடகம். இந்நாடகம் 1979 களிலிருந்து 1982 வரை இலங்கையிலும், 1988 யிலிருந்து இன்று வரை புலம் பெயர்நாடுகளிலும் மேடையேற்றப்பட்டு வந்துள்ளது.

இந்த நாடகத்தையும், அது பற்றிய பல குறிப்புக்களையும், தகவல்களையும், பதிவுகளையும் கொண்டதுதான் யுகதர்மம்: நாடகமும் பதிவுகளும் (ஆசிரியர்: க. பாலேந்திரா, 136 பக்கங்கள், வெளியீடு: தமிழ் அவைக்காற்று கலைக்கழகம், குமரன் புத்தக இல்லம்) வெளியீடாக வெளிவந்துள்ளது.

இலங்கையில் இந் நாடகம் அரங்கேற்றப்பட்ட வேளை, இந் நாடகத்திற்கான முகமூடிகளை வடிவமைத்து தந்தவரும், தற்போது அவுஸ்தரேலியாவில் வசிக்கும், கட்டடக் கலைஞருமான சி. குணசிங்கம் அவர்கள் அட்டைப்படத்தை வடிவமைத்திருக்கிறார். அட்டைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த அட்டைப்படத்தில் .வியாபாரி-கூலி அல்லது ஆளுவோன்-ஆளப்படுவோன் அல்லது ஒடுக்குவோன்-ஒடுக்கப்படுவோன் போன்ற இரு நபர்கள் ஆறு ஒன்று குறுக்கறுக்கும் பாலையில் போய்க் கொண்டிருப்பது, நாடகத்தின் ஒரு காட்சியை ஞாபகப்படுத்துகின்றது.

அடுத்து நாடகநெறியாளனின் தொகுப்புரை காணப்படுகின்றது. இதனை க. பாலேந்திரா தந்திருக்கின்றார். இந்த நாடக அரங்கு இயக்கத்தை முன்னெடுப்பதில், மூல எழுத்து, மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், நாடகச் செயன்முறை உருவாக்கம், அதன் பரிணாம வளர்ச்சி, வரலாறு, கற்கைச் செயன்முறைநிலை, சந்தோசங்கள், துக்கங்கள்,  அதற்கு வந்த விமர்சனங்கள், சர்ச்சைகள், மனக்கிலேசங்கள், எதிர்ப்புக்கள், அதனை எதிர்கொண்ட விதங்கள் போன்றவற்றை விபரித்திருக்கிறார். அதற்கு பிறகு கலாநிதி சி. ஜெயசங்கர் அவர்களின் முன்னுரை, இசையமைப்பாளரின் நினைவுக் குறிப்புக்கள், நடிகர் ஒருவரின் அனுபவப் பகிர்வு, நீண்டகாலத்து ரசிகர் ஒருவரின் மனப் பதிவு போன்றவை காணப்படுகின்றன.

அதனைத் தொடர்ந்து

சுரண்டும் ஒருவனதும்
சுரண்டப்பட்ட இருவரதும்
நீண்ட பயணத்தில்
நடந்ததை சொல்ல வந்தோம்
என்ற பாடலுடன் நாடகப் பிரதி விரிகிறது.

ஒடுக்கப்பட்ட இருவரதும், ஒடுக்கும் ஒருவனதும் கதையை நாடகப் பனுவல் சொல்கிறது. பாலைவனத்தில் கூலியும், வழிகாட்டியும், வியாபாரியும் பயணம் செய்யும் போது, வியாபாரி கூலியை மிக மோசமாக வேலை வாங்குகின்றான். அடிக்கிறான். தண்டிக்கிறான். துப்பாக்கியை காட்டி மிரட்டி வேலை வாங்குகிறான். ஆற்றைக் கடக்கும்போது கூலியின் ஒரு கைகூட உடைகிறது. இந்நிலையில் தாகத்தை போக்குவதற்கு தண்ணீர்ப் போத்தலை மனிதாபிமான ரீதியில் வியாபாரியை நோக்கி நீட்டிய கூலி மீது, பயம் காரணமாக துப்பாக்கி பிரயோகம் செய்து கூலியை சுட்டுக் கொல்கின்றான் வியாபாரி. கூலியின் மனைவி வழக்குத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்ற போதும்,  வழிகாட்டி கூலிக்கு சார்பாக சாட்சி சொல்லியும், வியாபாரியை நீதிமன்றம் விடுதலை செய்கின்றது.

சுரண்டுகின்ற அமைப்பில் வலியவர்கள் வெல்வதும், சுரண்டப்படுகின்றவர்கள், தோற்று செத்து போவதும், நீதிமன்றங்கள் பாரபட்சமாய் இருப்பதும், அது வர்க்கச்  சார்புடையதாய் இருப்பது பற்றிய விடயங்களை மக்களுக்கு அல்லது பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதே பிரக்டின் குறிக்கோளாக இருந்திருக்கிறது. சுரண்டப்படுகின்றவர்கள், சுரண்டுகின்றவர்களுக்கு எதிராக பொங்கி எழுவார்கள் என்றும், அதற்குரிய சக்தி அவர்களிடம் உண்டு என்றும், அது பற்றிய அச்சம் சுரண்டுபவர்களுக்கும் வர்க்கபேத அரசுகளுக்கு உண்டு என்றும,; இவ்வாறான சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தினை யுகதர்மமாக நியாயப்படுத்துவதாகவும், இருந்திருக்கிறது.

அப்பாவியான கூலி சுடப்பட்டு இறந்தததைவிட மோசமான வியாபாரி தற்பாதுகாப்புக்காகத்தான் அவனை சுட்டுக் கொன்றான் என்று தர்மமாக்கப்படுகின்றது. வியாபாரியை காப்பாற்ற சட்டம், நீதிமன்றம், சமுதாய அமைப்பும் துடிக்க, உழைக்கும் வர்க்கம் காலடியில் போட்டு மிதிக்கப்படுகின்றது. இதுதான் யுகதர்மம். இந்த நாடகப் பிரதி என்றென்றைக்குமான பொதுமையானது. சாசுவதமானது. இதிலுள்ள காட்சிகள்தான், இன்று நாடு பூராகவும், தொழிற்தலங்களிலும், தொழில் கொள்ளப்படும் இடங்களிலும், நிறுவனங்களிலும், நீதி வழங்க வேண்டிய இடங்களிலும் நடந்து கொண்டிருப்பன. இதுதான் யுகதர்மம். இது எமது நாட்டுக்கோ, தென்னாசியாவிற்கோ, ஆசியாவிற்கோ மட்டும் பொதுமையானது அல்ல. முழு உலகிற்கும் பொதுமையானது. இதுதான் யுகதர்மம்.

நாடகப் பிரதிகளுக்கும், இலக்கிய பிரதிகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இலக்கியம் பிரதி தனி ஒருவரினால் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டு உருவாவது. நாடகப்பிரதி தனி ஒருவரினால் அல்லாமல் பலரின்  முயற்சியில் உருவாக வேண்டியிருப்பது. நாடகத்தின் எழுத்துப் பிரதியை ஒருவரே எழுதவேண்டிய நிலை வந்தாலும் அது அரங்காற்றுப் பிரதியாவதற்கு இவ்வாறான பல பேர்களின் கூட்டு முயற்சிகள் அவசியமாகும். இந்தகைய கூட்டு முயற்சிகள் பற்றியும் நாடக நெறியாளரின் தொகுப்புரை கூறிச் செல்கின்றது. அதில் க. பாலேந்திராவின் நேர்மையும், உண்மைத் தன்மையும் தெரிகிறது.

பேர்டோல்ட் பிரக்ட்டை இந்திய தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தாத நிலையில் முதன் முதலில் அவரை அறிமுகப்படுத்திய பெருமை க. பாலேந்திரா குழுவினரையே சாரும். இந்த நாடக பனுவலிலிருந்து நாடகத்தின் நடுவே பாத்திரங்கள் அவையோரை விழித்துப் பேசுதல், நாடகப் போக்கை இடைமறித்து பாடப்படும் பாடல்கள் போன்ற பல பிரக்டின் உத்திகள் பாவிக்கப்பட்டுள்ளன.

இந்த நாடகப் பிரதியை வாசிக்கும் போது, மனத்திரையில் நாடகத்தை பார்ப்பது போன்று எனக்குத் தோன்றியது. இது நாடகப் பிரதியின் நேர்த்திக்கு எடுத்துக் காட்டாகும். இலக்கியப் பிரதிகளைப் போல, நாடகப் பிரதிக்கு  போதிய கால அவகாசம் இல்லாத படியால் அதற்கு சொற்கட்டு அல்லது சொற் சிக்கனம் அல்லது சொற் தேர்வு முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. அந்த அடிப்படையிலும் தேர்ந்த ;வெற்றி பெற்ற ஒரு பனுவலாகவே யுகதர்மம் தெரிகிறது.

சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை மட்டும் வாசகர்கள் வாசித்தால் மட்டும் போதாது. இவ்வாறான நாடக எழத்துருக்களையும்; வாசிப்பதும், அவைகளுக்கு வரவேற்பளிப்பதும் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும், ஆய்வாளர்களினதும், வாசகர்களினதும் கடமையும். அவசியமுமாகும்.

136 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில், 40 பக்கங்கள் நாடக எழுத்துருவிற்காகவும்,  மற்றைய பக்கங்களில் க. பாலேந்திராவின் இந் நாடகம் பற்றிய மற்றையவர்களின் குறிப்புக்கள், படங்கள் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. பயிற்சிகள்,  ஒத்திகைகள், பயணங்கள், போன்றவையும் புகைப்படங்களாக வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அத்துடன் க. பாலேந்திராவின் இந்த நூற்களும், முயற்சிகளும், பாடசாலை, பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறவனங்களின் பாடவிதானங்களிலும் இணைக்கப்பட வேண்டும் என்றும், அவைகள் ஆய்வுக்குட்டபடுத்தப்பட வேண்டும்; என்றும் நான் கருதுகின்றேன்.

ழூ

துரதிருஸ்டவசமாக க. பாலேந்திரா மொழிபெயர்ப்பு நாடகங்களை மட்டுமே தந்தார் என்று இலங்கையில் அறியப்பட்ட ஒருவராக இருக்கிறார். அவர் நெறியாள்கை செய்த 68 நாடகங்களில், சுயமொழி ஆக்கங்களே மொழி பெயர்ப்புக்களைவிட மிக அதிகம். தற்போதைய அவருடைய நாடக முயற்சிகள் பற்றிக்கூட எவரும் அறிந்திருக்கவில்லை.

இதற்கு என்ன காரணம்?

1970களின்  இவர் மேற்கொண்ட மொழிபெயர்ப்பு முயற்சிகளை “பலம் பொருந்திய” ஒரு அணியினரால் முற்றாக புறந்தள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  இது உற்சாகமாக, அர்ப்பணிப்புடன தமிழ் நாடகத்தின் பன்மொழித் தன்மைக்கு உழைத்த இளம் தலைமுறையினரின் நாடக செயற்பாட்டை காயடிக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே கருதத் தோன்றுகின்றது.

தமிழ் உயர்கல்விச் சமூகத்தின் குழு மனப்பான்மை உச்சம் பெற்றிருந்த காலப் பகுதியில், யுகதர்மம் நாடகத்திற்குப் பிறகு மொழிபெயர்ப்பு நாடகங்கள் பற்றிய கதையாடல்கள் நிகழ்ந்தன என்று அறியக் கிடக்கின்றது. பேராசிரியர் கைலாசபதி, கே.எஸ். சிவகுமாரன், பேராசிரியர் என். சண்முகரெட்ணம் (சமுத்திரன்), பேராசிரியர் எம்.ஏ. நுஹ்மான், ந. சுந்தரலிங்கம், க. பாலேந்திரா, பேராசிரியர் சி. சிவசேகரம், ஏ.ஜே. கனகரெத்தினா, அ. யேசுராசா. ரெஜி சிறிவர்த்தனா ஆகியோர் பங்குபற்றியதும், அதில் பின்னருள்ள நான்கு பேர் மட்டுமே க. பாலேந்திராவிற்கு ஆதரவாக இருந்தனர். மற்றையவர்களோ க. பாலேந்திராவின் அரங்காற்ற முயற்சிகளை உருவ வாதம் என்றும், வரலாற்றை திரிபுபடுத்துதல் என்றும் கட்டமைத்தனர். கவிதை, கதை, நாவல் போன்றவைகளில் மொழிபெயர்ப்புக்களை தாங்கள் ஏற்றுக்கொள்கின்ற போதிலும், நாடகங்களுக்கு செய்யப்படுகின்ற மொழி பெயர்ப்புக்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். பேராசிரியர் க. கைலாசபதி தனது நாடகங்கள் எதனையும் பார்க்காமலேயே அது சம்பந்தமான கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் என்று க. பாலேந்திரா கவலையுடன் குறிப்பிடுகின்றார்.

நாடகம் என்பது ஆற்றுகையுடன் முடிந்து போவது. அது பற்றி விமர்சனங்களும் அல்லது பதிவுகளும்தான் அந்த நாடகத்தை எமது எதிர்கால சந்ததிகளுக்கு கொண்டு செல்கின்றன. பேராசிரியர் க. கைலாசபதியின், தினகரன் 23.03.1980 கூற்று பின்வருமாறு இருக்கிறது.

“..தற்சமயம் மேனாட்டு நாடகங்களை மொழி பெயர்த்து மேடையேற்றுவதே முனைப்பான போக்காகக் காணப்படுகின்றது. இது விவாதத்திற்குரியது.

.. அணுச் சக்தி உலையிலிருந்து ஆட்டாமா ஆலை வரையில் பொறியியல் நுணுக்கங்களையும் தொழில் நுட்ப நிபுணத்துவத்தையும் கீழைத்தேயங்களுக்கு – வளர்முக நாடுகளுக்கு வழங்கும் தகுதி வாய்ந்தனவாய்க் கருதப்படும் நவீன கைத்தொழில் நாடுகளில் இருந்து கலை நுணுக்கங்கள் வந்து புகுவதில் வியப்பென்ன இருக்கின்றத? குடியேற்றவாதத்தின் மீதி மிச்சங்களில் இதுவும் ஒன்று போலும்!...

..மொழி பெயர்ப்புக்களும், தழுவல்களும் தற்காலிகமான கவர்ச்சியை உண்டுபண்ணக் கூடுமாயினும், நாளடைவில் உறுதியான பங்களிப்பைச் செய்யமாட்டா. இன்று இது முக்கியமாக மனங்கொள்ள வேண்டியதொன்றாகும்.”

ஆனால் கே.எஸ். சிவகுமாரனின், தினகரன் 09.03.1980 மொழிபெயர்ப்பு நாடகம் ஒன்று பற்றிய கூற்று பின்வருமாறு இருக்கிறது.
“மேனாட்டு இலக்கியம் என்பதற்காக, துடக்கு மனப்பான்மை கொள்வதோ, தற்காலச் சூழலுக்குப் பொருத்தமோ என்பதில்தான் நாம் அக்கறைகொண்டு வந்திருக்கின்றோம். ஆனால் அப்பிறநாட்டு இலக்கியங்கள் தரும் சுவையனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு பின்னர் மதிப்பீடு செய்து, தள்ளுவதைத் தள்ளிக் கொள்ளுவதைக் கொள்ளு முன்னரே, குழு மனப்பான்மை வந்து மட்டந்தட்டும் முயற்சிகளில் ஈடுபடுகிறோம்.

..கெட்டிக்காரத்தனத்தை இருட்டடிப்பு செய்தாலும், அது எல்லாத் தடைகளையும் மீறி ஒளிவிடத்தான் செய்யும்….”

இந்த புலமைத்துவ பயங்கரவாதத்தின் காரணமாக நாடகமும் அரங்கியலும் கற்கின்ற பாடசாலை மாணவர்களை பல்லைக்கழக மாணவர்களுக்கும், தமிழ் அவைக்காற்று கலைக் கழகம், க. பாலேந்திராவின் முயற்சிகள் பற்றி அதிகம் தெரியாமல் செய்யப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டனவோ என்றே தோன்றுகின்றது.

இவ்வாறான நாடகப் பிரதிகளும், அவைகளுடன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள், செய்திகள், விமர்சனங்கள் நூலாக்கப்படும் போதுதான் புலமைத்துவ பயங்கரவாதமும், அதன் தொடர்ச்சியான இருட்டடிப்பும் தெரியவந்து அதன்மீது புள்ளியாய், கீற்றாய் ஒளி பரவத் தொடங்கும். பின் ஒளி வெள்ளமாய் பிரவாகம் எடுத்து உண்மையின் ஒளி துலங்கும் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.

இறுதியாக. க. பாலேந்திராவின், யுகதர்மம் - நாடகமும் பதிவுகளும் என்ற நூல் ஒரு படைப்பின் சுதந்திரத்தை விரும்பிய கலைஞன், அதன் அழகியலை நேசித்து, அதனைச் செதுக்கி, அதற்காகவே வாழ்ந்து, அதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முனைந்து, தான் செதுக்கிக் கொண்ட சிறப்பானவைகளை அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்கும் அருமந்த முயற்சியாகவே எனக்குத் தெரிகிறது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் தற்காலிகமாக இருட்டடிக்கப்பட்டாலும், விரைவில் ஒரு ஒளி உங்களை வந்தடைந்து நீங்கள் காலத்தால் வாழ்வீர்கள். உங்களிடமிருந்து இன்னும் எதிர்பாரக்கிறோம். நன்றி.





No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...