குறிப்பு -
ராஜாவிற்கும், மணிக்கும் Money சம்பந்தமான பிரச்சினை வந்தபோது. அது புலமைசார் சொத்து உரிமை (Intelectual Property Rights) என்ற மணிச் சத்தமாக ஒலித்தது. புலமைசார் சொத்து உரிமை என 16 பக்க கட்டுரை போட்ட சஞ்சிகைக்காரர்களே, வறுமையின் “பிடியிலுள்ள” எழுத்தாளர்களின் நூலை வெறும் 20 நூற்களை றோயல்டியாக கொடுத்துவிட்டு வெளியிடுகிறார்கள். இந்த மணிச் சத்தங்கள் புலமைசார் சொத்துரிமை எவ்வாறு உயிரினப் பல்வகைமையில் விளையாடுகிறது என்ற விடயத்தை எழுதியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.
புலமைசார் சொத்துரிமையும் உயிர்க் கொள்ளையடிப்பும்
-அம்ரிதா ஏயெம்
1) உயிர்ப்பல்வகைமையின் உரிமை
நாம் பயன்படுத்தும் நுண்ணுயிர் கொல்லிகளுள் Erythromycine உம் ஒன்றாகும். இவ்வாறான புதிய மருந்துகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகின்றன? மருந்து உற்பத்தி செய்யும் தாபனங்கள் புதிய நுண்ணுயிர்களை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன. இவ்வாறான தேடுதல் உயிர்ப்பல்வகைமை கூடிய இடங்களிலேயே செய்யப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டிலும் இவ்வாறான ஆராய்ச்சி; அமெரிக்க மருந்தக தாபனத்தால் செய்யப்பட்டது. 1949 இல் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானியால் Erythromycine எனும் நுண்ணுயிர்க்கொல்லி அந்த நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. இக்கிருமி கொல்லிக்கு அது கண்டுபிடிக்கப்பட்ட இடமான Llosone எனும் பெயர் கொடுக்கப்பட்டது. இவ்விஞ்ஞானி வேலை செய்த அமெரிக்க மருந்து தாபனம் இந்த புதிய நுண்ணுயிர் கொல்லியால் பல கோடி டாலர்களைச் சம்பாதித்தது; விஞ்ஞானிக்கும் பிலிப்பைனஸ்; நாட்டிற்கும் Llosone என அது கண்டுபிடிக்கப்ட்ட இடத்தின் பெயர் மட்டும் கிட்டியது.
மடகஸ்கார் எனும் தீவில் ஒரு வகையான பட்டிப்பூ (Rosy periwinkle) பாரம்பரியமாக மருத்துவத்தில் உபயோகிக்கப்படுகின்றது. அமெரிக்க புற்று நோய் நிறுவனம் ஒன்று 1400 கும் அதிகமான வெப்பவலய காடுகளிலுள்ள தாவரங்கள் புற்று நோயை எதிர்க்கக்கூடிய தன்மையை கொண்டிருப்பதாக அடையாளம் கண்டது. இதில் பட்டிப்பூ தாவரமும் அடங்கும்.
இத்தாவரத்திலிருந்து பெறப்படும் ஒரு வகையான alkalites வகையான புற்றுநோய்களிற்கு மருந்தாகும். இந்த மருந்தின் உற்பத்தியால் வருடத்திற்கு 100 மில்லியன் டொலர் வருமானமாக கிடைத்தாலும் இந்த தாவரத்தை பாரம்பரியமாக உபயோகித்து வந்த நாடான மடகஸ்கார் உரிமைகளற்று நிற்கிறது.
2) புலமைசார் சொத்து உரிமை ( Intellectual Property Rights)
2.1) Bioprospecting and Biopiracy
2.1) Bioprospecting and Biopiracy
விவசாயம், உயிர்தொழில்நுட்பம், மருத்துவ துறைகளிற்கு தேவையான உயிர்இரசாயன, பரம்பரை வளங்களை உயிர்ப்பல்வகைமையிலிருந்து தேடிப்பெறுதல் Bioprospecting எனப்படும். இவ்வகையான தேடுதலில் உயிரினங்களின் தன்மை ஆராயப்பட்டு, தமது தேவைக்கான மூல இராசயனப் பொருள் கண்டுபிடிக்கப்படும். உதாரணமாக இயற்கையாக காணப்படும் தாவரங்கள் அல்லது விலங்குகளிலுள்ள மருந்துகளாக உபயோகிக்ககூடிய பதார்த்தங்கள் கண்டுபிடிக்கப்படுதல். இதற்கு பல தாவர விலங்குகள் பரிசோதிக்கப்பட வேண்டும்.
உயிர்தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால் இவ்விரசாயனப் பொருள் வர்த்தக ரீதியிலும் உருவாக்கப்பட்டு விற்கப்படுகிறது. இதனால் ஏற்படும் இலாபத்தை கருத்தில் கொண்டு Bioprospecting மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மூன்றாம் உலக நாடுகளில் பாரம்பரியமாக உயிர்ப்பல்வகைமை பல்வேறு பிரயோகங்களிற்கும் உபயோகிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, வேப்பமரத்தின் பகுதிகள் பீடைக்கட்டுப்பாட்டில் பாரம்பரியமாக இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் உபயோகிப்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் வேம்பின் இயல்புகளை பகுத்தராய்ந்த இரு அமெரிக்க தாபனங்கள் அதன் இரசாயனப் பொருளைக் கண்டறிந்து அதற்கான உரிமையையும் பெற்றன. இதனால் வேம்பிலுள்ள இரசாயனப் பொருளின் வர்த்தகத்தால் பெறப்படும் இலாபம் அனைத்தும் இவ்வர்த்தக நிறுவனங்களிற்கே உரியதாகும். இந்த வர்த்தகத்தில் ஒரு வருடத்திற்கு 50 மில்லியன் டாலர்கள் இலாபமாக பெறமுடிகிறது. இவ்வாறு ஒரு நாட்டிற்குரிய உயிரினத்தின் பொருளாதார லாபங்களை மற்றுமொரு நாடு பெறுதல் Biopiracy (உயிர்க் கொள்ளையடிப்பு) எனப்படும். இதற்கு இந்தியாவில் காணப்பட்ட பாஸ்மதி அரிசி இனத்தின் உரிமையை Ricetec எனும் அமெரிக்க தாபனம் பெற்றது மற்றுமொரு உதாரணமாகும்.
உயிர்ப்பல்வகைமை உடன்படிக்கையில் ~உயிர்ப்பல்வகைமையின் உபயோகங்கள் சமனாகப் பங்கிட வேண்டும்~ எனும் பகுதி காணப்பட்டாலும் வர்த்தக ரீதியான உபயோகத்திற்கான pயவநவெ உரிமைகளை பெறுவதற்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்படவில்லை. இதனால் மேற்கூறியவாறு விஞ்ஞான முன்னேற்றமடைந்த நாடுகள் உயிர்ப்பல்வகைமை அதிகம் காணப்படும் வறிய நாடுகளை கொள்ளையடிப்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
3) சர்வதேச அறிவுச்சொத்து உரிமை சட்டம் (International Intellectual Property Rights Law (IPR))
இது புதிய கண்டுபிடிப்புகள் மற்றவர்களால் உபயோகப்படுத்தாது பாதுகாக்கிறது. இது உயிர்ப்பல்வகைமை உடன்படிக்கைக்கு எதிர்மாறானதாகும். இதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக நடவடிக்கை சம்பந்தப்பட்ட அறிவுசொத்து உரிமை உடன்படிக்கையின் ((Agreement on trade related aspects of intellectual property rights TRIPS)) மூலம் உலக வர்த்தக தாபனம் (World trade organization WTO) உருவாக்கப்பட்டது. இத்தாபனத்தின் அங்கத்துவ நாடுகள் பதிப்புரிமை, அறிவுச்சொத்துரிமை என்பவற்றைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளன. இதனால் பொதுச்சொத்தாக கருதப்படும் அறிவு தனியாரிற்கு சொந்தமாக்கப்;படும். மூன்றாம் உலக நாடுகளில் தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் உரிமைகளை இழக்கும் தன்மையையும் இவ்வுடன்படிக்கை ஏற்படுத்துகிறது. பூகோளமயமாதல் செயற்பாட்டின் போது உருவாகும் திறந்த வர்த்தக கொள்கைகள் இக்கொள்ளையடிப்புகளுக்கு மேலும் ஏதுவாக இருக்கிறது.
பல வளர்முக நாடுகளில் காடுகளிலுள்ள மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களைப் பற்றிய அறிவு குறைவாகவே உள்ளது. எனவே பாரம்பரிய மருத்துவத்தில் உபயோகிக்கப்படும் தாவரங்களின் அழிவு நிலை பற்றி கூடுதலான அக்கறையும், அவற்றை செயற்கையாக பயிரிட வேண்டிய அவசியமும் இலங்கை போன்ற நாடுகளின் தார்மீக கடமைப்பாடாக இருக்கிறது.
No comments:
Post a Comment