Monday, March 27, 2017

தவளைகளும் விவசாய இரசாயனங்களும் டெங்கும்
தவளைகளும் விவசாய இரசாயனங்களும் டெங்கும்
- அம்ரிதா ஏயெம்தவளைகளும், வாற்பேத்தைகளும் (வாலாந் தவளைகளும்) ஒரு சூழற்தொகுதியில் பீடைகளையும், நுளம்புகள் போன்ற பூச்சிகளையும் கொன்றொழித்து அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. யுத்தத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்ட நிலங்களின் மீதான அதிகரித்த விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை இலங்கையில் தவளைகளின் குடித்தொகையை வெகுவாகக் குறைத்திருக்கலாம். இதன் காரணமாக தவளைகளினால் நுளம்புகளின்மீது செய்யப்படும் உயிரினவியல் கட்டுப்பாடு தடைப்பட்டு, அதிகரித்த நுளம்புக் குடித்தொகை காரணமாக இலங்கையில் டெங்கு அதிகரித்து காணப்படலாம். உயிரினப் பல்வகைமையும் நாமும் என்ற எனது நூல் ஒன்றில் நான் 10 வருடங்களுக்கு முன் விவசாய இரசாயனப் பாவனை தவளைகளை அழித்த கதை (95 – 102ம் பக்கங்கள் வரை) சொல்லியிருக்கிறேன். (இந்த நூலும் பெரிதாக யாராலும் கணக்கில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

இரசாயன மாசடைதல் - நச்சு கழிவுப்பொருட்களின் தாக்கம்
விவசாய நடவடிக்கைகள், பிளாஸ்ரிக் போன்ற பொருட்களின் உற்பத்தி போன்றவற்றின்போது பல நச்சுத் தன்மை வாய்ந்த விளைபொருட்கள் சூழலை வந்தடைகின்றன. உதாரணமாக அமெரிக்காவில் 300 மில்லியன் தொன் நச்சுப் பொருட்கள் ஒரு வருடத்தில் சூழலை அடைகின்றன. இவ்வாறான நச்சுப்பொருட்களின் தாக்கும் விதத்தைப் பொறுத்து அவை மூன்று வகையாக பிரிக்கப்படலாம்: நேரடியாக தாக்கும் நச்சுப் பொருட்கள், அழியாத சேதன மாசுக்கள், கானில்சுரப்பிகளை அல்லலு ஓமோன்களைக் குழப்பும் இரசாயனங்கள் என்பனவாகும்.
1. நச்சுப் பொருட்களின் நேரடித் தாக்கம்
நச்சுப் பொருட்கள் சூழலை அடையும் போது உயிரினங்கள் இறக்கும். பீடைநாசினிகளின் விளைவால் அமெரிக்காவில் ஒரு வருடத்தில் 60 மில்லியன் பறவைகள் இறந்துள்ளதாக ஒரு மதிப்பீடு கூறுகின்றது. இதைவிட பீடைநாசினிகளை உபயோகிக்கும் போது அவை பீடைகளை மட்டுமல்ல வேறு பல சிறிய உயிரினங்களையும் அழிக்கும்.
2. அழியாத சேதன மாசுக்கள் (persistant organic pollutants or POP)
மனிதன் விவசாயத்திற்கும் வேறு பொருட்களின் உற்பத்திக்கும் பயன்படும் இரசாயனப் பொருட்களின் மீதிகள் சூழலை வந்தடைந்ததும் என்ன நடக்கும்? இவை சூழலில் காணப்படும் அங்கிகளினால் உட்கொள்ளப்படும். மேலும் சில நச்சுத் தன்மையான இரசாயனப் பொருட்கள் அனுசேபத்தின் போது உடலிலிருந்து வெளியேற்றப்படும். சில இரசாயனப் பொருட்கள் கொழுப்பில் கரையக்கூடியவை. இவை அந்த அங்கியிலிருந்து வெளியேற்றப்படாது. இந்த அங்கி வேறு உயிரினங்களால் உணவாக உட்கொள்ளப்படும் போது உணவுச் சங்கிலியில் ஒவ்வொரு படியிலும் இவ்வாறான நச்சுப்பொருளின் அளவு கூடிக் கொண்டு செல்லும். எனவே உணவுச்சங்கிலியின் உச்சியிலுள்ள விலங்குகளின் உடலில் இரசாயனப் பொருள் மிகக் கூடுதலான அளவில் இருக்கும். இது உயிரியல்பெருக்கம் (biomagnification) எனப்படும்.
இவ்வாறு பிரிந்தழியாது சூழலில் காணப்படும் இரசாயனப் பொருட்கள் அழியாத சேதன மாசுக்கள் எனப்படும். உலகில் மனிதனிற்கும் உயிர்ப்பல்வகைமைக்கும் முக்கியமான dirty zone என அழைக்கப்படும் 12 அழியாத சேதன மாசுக்கள் கீழே தரப்பட்டுள்ளன. இவை யாவும் தற்போது தடை செய்யப்பட்டவை. எனினும் பல வளர்முக நாடுகளில் பீடைகளின் கட்டுப்பாட்டிற்கு தொடர்ந்து உபயோகிக்கப்படுகிறது.
அழியாத சேதன மாசுக்கள்
Dioxin பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்தியின் போது உருவாகும்
Furan
PCB (polychlorinated bipheyls) மின்சாதனங்களின் பாதுகாப்பிற்கு உபயோகிப்பது
HCB பங்கசுக் கொல்லி
DDT பீடைநாசினி
Chlordane பீடைநாசினி
Toxophene பீடைநாசினி
Dieldrin பீடைநாசினி
Aldrin பீடைநாசினி
Endrin பீடைநாசினி
Heptachlopr பீடைநாசினி
Mirex பீடைநாசினி
அட்டவணை.3.6. உலகிலுள்ள அழியாத சேதன மாசுக்களில் முக்கியமான 12 வகைகள் (மூலம் UNEP)
DDT இன் பாவனை உணவுவலையூடாக பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, அமெரிக்காவிலுள்ள கபில அடசல்மான் (Brown Pelican) இனம் எண்ணிக்கையில் குறைந்தது அவதானிக்கப்பட்டது. இதற்கான காரணம் DDT ஆகும். னுனுவு கழிவுகள் நீரோட்டத்துடன் நீர்நிலைகளை வந்தடைந்து உணவு வலையூடாக அடசல்மானை வந்தடையும்; போது அவை அப்பறைவைகளின் உடற்தொழிலியலை பாதித்தது. அவற்றின் முட்டைகளின் ஓடுகள் மென்மையாக மாறின. இதனால் அடைகாக்கும் போது பெரும்பாலான முட்டைகள் உடைந்துவிடும். இதுவே அடசல்மானின் எண்ணிக்கை குறைவிற்கு காரணமாகும்.
அம்பிபியன்களின் (தவளைகளின்) எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைந்து வருவது அவதானிக்கப்பட்டது. சூழல் மாசடையும் போது முதலில் தாக்கப்படுவது இவ்வினங்களாகும். இதற்கான காரணம் அண்மையில் அறியப்பட்டுள்ளது. மலத்தியோன், DDT, Dieldrin போன்ற பீடைநாசினிகள் தவளைகiளின் நீர்ப்பீடனத் தொகுதியை பாதிக்கிறது. இவற்றின் உடலில் உடல் எதிரி (antibodies) மிகக்குறைவாக காணப்படுவதால் இலகுவில் நோய்களிற்கும் ஒட்டுண்ணிகளின் தாக்கத்திற்கும் பலியாகிறது.
3. கானில்சுரப்பிகளை குழப்புபவை (endocrine distrupters)
சூழலிற்குள் வெளியேறும் பல விதமான இரசாயனப் பொருட்கள் நேரடியாக தாக்கத்தை உருவாக்காவிடினும் நீண்ட கால போக்கில் பாரதூரமான விளைவுகளைக் ஏற்படுத்தும். இவ்வாறான இரசாயனப் பொருட்கள் சூலிலுள்ள உயிரினங்களின் முளையத்தைப் பாதிக்கும். இதன் விளைவு பல வருடங்களின் பின்னர்தான் வெளிப்படும். DDT, மலத்தியோன், கட்மியம், ஈயம், மேக்குரி (இரசம்) போன்ற பார உலோகங்கள், 60 வீதமான களைகொல்லிகள் போன்றவை இவ்வாறான ஓமோன்களின் தொழிற்பாட்டை பாதிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முள்ளந்தண்டில்லா, முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் முளைய விருத்தி, கருக்கட்டிய முட்டையிலிருந்து ஒரு நிறைவுடலி உண்டாதல் போன்ற இனப்பெருக்க செயற்பாடுகள் ஓமோன்கள் மற்றும் இரசாயன சமிக்ஞைகைகளால் வழிநடத்தப்படுகின்றன. நாம் உபயோகிக்கும் சில வகையான இரசாயனப் பொருட்கள், முளைய விருத்தியை வழிநடத்தும் ஓமோன்களின் தொழிற்பாட்டை; பாதிக்கும்:
இனப்பெருக்க ஓமோன்களை தொழிற்படாமல் தடுத்தல்,
இனப்பெருக்க ஓமோன் போலிகளாக தொழிற்படுதல்
அல்லது தைரொயிட் சுரப்பியின் தொழிற்பாட்டை தடுத்தல்.
இவ்வாறான விளைவிற்குட்படும் முளையம் பல வருடங்களின் பின் பல குறைபாடுகளைக் கொண்டிருக்கும். நோயை எதிர்க்கும் சக்தி, இனப்பெருக்கும் ஆற்றல், புத்திக் கூர்மை குறைவாக இருத்தல் போன்றவை இக்குறைபாடுகளிற் சில. இதே வேளை விரைவாக இனப்பெருக்க வயதை அடையும் தன்மையையும்; கொண்டிருக்கும்.
பரம்பரையியல் தன்மையில் ஒரு தனியன் ஆணாக இருந்தாலும் முளைய வளர்ச்சியின் போது ஏற்படும் ஓமோன்களின் தாக்கத்தால் பெண்களாகவும் மாறலாம். சில இரசாயனக் கழிவுகள் இவ்வாறான மாற்றங்களையும் செய்யக்;கூடியன. இதன் விளைவால் ஒரு குடித்தொகையில் ஆண் பெண் விகிதம் மாறலாம்.
ஒவ்வொரு நாட்டில் காணப்படும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களும் குறைந்தளவில் நச்சு தன்மையான இரசாயன கழிவுப் பொருட்கள் இருப்பதை அனுமதிக்கும். ஆனால் இவ்வாறாக குறைந்தளவில் உள்ள கழிவு இரசாயனப் பொருட்களில,; பல வகை இணையும் போது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு வகையான களைநாசினியும் (paraquat) பங்கசுநாசினியும் சேரும் போது மனிதரில் ஏற்படும் நரம்பு நோயான பார்கின்சன்ஸ் நோய் போன்ற அறிகுறிகளை விலங்குகளில் ஏற்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இரசாயனப் பொருட்களும் பயிர்களிற்கு சாதாரணமாக உபயோகிக்கப்படுவதாகும்.
இவ்வாறான ஓமோன் தொழிற்பாட்டை பாதிக்கும் இரசாயனப் பொருட்கள் எவ்வாறு உயிர்ப்பல்வகைமையை பாதிக்கும்? ஆண் பெண் விகிதம் குறைதல், அசாதாரணமான இனப்பெருக்க உறுப்புக்கள், குறைவான இனப்பெருக்கும் ஆற்றல் போன்ற காரணிகளால் ஒரு குடித்தொகையின் அளவு பாரதூரமாக பாதிக்கப்படும்.
இரசாயனப் பொருட்களும் உயிர்ப்பல்வகைமையும்
DDT இவ்வாறு பால் தன்மையை மாற்றக்கூடியது. Tributylin (TBT) எனும் இரசாயனப் பொருள் கடலில் உபயோகிக்கப்படும் ஒரு வகை வர்ணத்திலும் பல கரபெiஉனைந களிலும் உபயோகிக்கப்படுகிறது. இந்த இரசாயனப் பொருளின் கழிவுகள் கடலில் கலக்கும் போது கடல் வாழ் நத்தைகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெண் நத்தைகள் ஆண் நத்தைகளாக மாறும் தன்மை அவதானிக்கப்பட்டது. இவ்வாறான தாக்கம் பல கடல் வாழ் விலங்குகளிலும் நடைபெறலாம். இவ்வாறான விளைவும் இறுதியில் ஒரு இனத்தின் குடித்தொகையைக் குறைப்பதாகவே அமையும்.
அண்மையில், அம்பிபியன்களின் (தவளைகளின்) உலக ரீதியான அழிவிற்கு ஒரு காரணமாக களைகொல்லிகளாக காரணமாயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண் தவளைகளை பெண் தவளைகளாக மாற்றக்கூடிய தன்மையைக் இவ்விரசாயனப் பொருள் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...