Tuesday, March 28, 2017

இலக்கியத்தின் மூலம் சமாதானம்! புதிய நாகரீகம் ஏற்படுத்தப்படுவது அவசியம்!

குறிப்பு -

ஜேர்மனியின் எம்..சீ.ரி(MiCT) ஊடக வலையமைப்பினால் ஐரோப்பிய ஒன்றியம் (European Union), ஜேர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான மத்திய அமைச்சு (federal ministry for economic cooperation and development ) மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (Sri Lanka Press Institute) ஆகியவெற்றுடன் இனைந்து அமுல்ப்படுத்தும் கட்டுமரம் (The Catamaran) செயற்திட்டத்திற்காக இலங்கையின் கவனத்திற்கு உரிய மொழிபெயர்ப்பாளருள் ஒருவரும் கதை சொல்லியுமான சிரேஸ்ட விரிவுரையாளர் அம்ரிதா ஏயெம் என்கின்ற .எம். றியாஸ் அகமட் அவர்களுடனான எனது நேர்காணல்.. இது ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது
- முர்சித். முகம்மத்.

அம்ரிதா ஏயெம் '
இலக்கியத்தின் மூலம் சமாதானம்! புதிய நாகரீகம் ஏற்படுத்தப்படுவது அவசியம்!
இலக்கியம் என்பது அறியாமை என்னும் ஒரு முனைக்கும், அறிந்துகொள்ளல் என்னும் இன்னொரு முனைக்கும் இடையில் அப்பாவி மக்களின் இரத்தத்தையும், வெறுப்பையும் கொண்டிராததும், மாறுபட்ட நுண்ணுர்வுகளை மிக நுட்பமாக எடுத்துரைக்கும் கலை என்னும் எரிபொருளை கொண்டு வேகமாக ஓடும் ஒரு வாகனம்.

Reading for peace: The author on the beach.
இலக்கியம் என்பது அறியாமை என்னும் ஒரு முனைக்கும், அறிந்துகொள்ளல் என்னும் இன்னொரு முனைக்கும் இடையில் அப்பாவி மக்களின் இரத்தத்தையும், வெறுப்பையும் கொண்டிராததும், மாறுபட்ட நுண்ணுர்வுகளை மிக நுட்பமாக எடுத்துரைக்கும் கலை என்னும் எரிபொருளை கொண்டு வேகமாக ஓடும் ஒரு வாகனம். இலக்கியமானது இவ்வாறான தொடர்பாடலை சிறப்பாக செய்வதற்குரிய வாகனமாகும். எனவே இலக்கியத்தின் மூலம் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, புதிய நாகரீகம் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்.என்கிறார் அம்ரிதா ஏயெம் என அறியப்படும் .எம். றியாஸ் அகமட்.

றியாஸ் அகமட், கிழக்குப் பல்கலைக்கழகத்தில், விலங்கியல் பிரிவில் சிரேஸ்ட விரிவரையாளராக கடமையாற்றுபவர். இலக்கியச் செயற்பாட்டில் அம்ரிதா ஏயெம்என அறியப்படுபவர். அம்பாறை , மருதமுனையைச் சேர்ந்த இவர், சிறுவயதில் இருந்தே நிறைவான வாசிப்பின் பக்கம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தற்போது தன்னை அற்புதமான கதைசொல்லியாகவும், சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும் அடையாளப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருடன் நமது கட்டுமரம் இணையத்தளத்திற்காக நேர்கண்டபோது..

கேள்வி :கலை, இலக்கியங்களினூடாக சமாதானத்தை ஏற்படுத்துதலில் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் அது எவ்வாறு சாத்தியமாகும் என நினைக்கிறீர்கள்?
பதில் :சமாதானம் என்பது பலவந்தமாக ஏற்படுத்தப்படுவதல்ல. அது வன்முறைகள் அற்ற நிலையைக் குறிப்பதும் அல்ல. போர்கள் அற்ற நிலையைக் குறிப்பதும் அல்ல. சமாதானம் என்பது தானாக உருவாக வேண்டியது. அதாவது நம்பிக்கையுடன், வாழும் வழிவகைகளுடன் சமாதானம் உருவாக வேண்டும். சமதானம் பரஸ்பரம் ஒருவர்  இன்னொருவரை மதிப்பதுடன் தொடங்குகின்றது. வேறுபட்ட கலாச்சாரம், கருத்தியல், சாதி, இனம், மதம், வகுப்பு, கல்வி, பால்நிலை, பால்நிலை விருப்பு போன்றவைகளைக் கொண்ட இன்னொருவரின் சுயகௌரவத்தை மதித்தலும், மற்றவர்களை கௌரவத்தை மதித்தலுடனும் சம்பந்தப்பட்து ஆகும்.

இன்னொரு வகையில் சொல்லப் போனால் சுமாதானம், சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள், வலது குறைந்தோர், மாற்றுப் பாலினத்வர்கள், கல்வியறிவற்றோர், ஏழைகள் போன்ற வலுக்குறைந்தவர்களை மதிப்பதுடன் தொடங்குகின்றது. இந்த சமாதானத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கு அது பற்றிய விழிப்புணர்வும், ஒழுக்கப்படுவோரையும், விளிம்புநிலையிலுள்ளோரையும் பாதுகாப்பதற்கு ஒரு சமூகத்தில் ஒரு பொறிமுறை காணப்பட வேண்டும். இவர்களுக்காக எழுதுவதும் சமானத்தை ஏற்படுத்துவதில் பங்களிப்பச் செய்கின்றது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமாதானத்திற்கு முதலில் நம்பிக்கை கொண்ட இதயங்கள்தான் தேவை. இதன் காரணமாக எமது பிள்ளைகளுக்கு நூல்களினூடாக, எழுத்துக்களினூடாக, கதைகளினாடாக, கவிதைகளினூடாக சமாதானம் பற்றிய நம்பிக்கை கொடுக்கப்பட வேண்டும். அந்த நம்பிக்கைகள் அவர்களின் சமாதானம் பற்றி எண்ணக்கருக்களில் வலுப்படுத்துதலை ஏற்படுத்த வேண்டும்.
நல்ல இலக்கியப் படைப்புக்கள்  ஒரு மனிதரை இன்னொரு மனிதருக்குள் பிரயாணம் செய்ய வைக்கும்.
நல்ல இலக்கியப் படைப்புக்கள்  ஒரு மனிதரை இன்னொரு மனிதருக்குள் பிரயாணம் செய்ய வைக்கும். அவர்கள் அந்த இன்னொரு மனிதருக்குள் செய்த பிரயாணம் அவர் சார்ந்த கருத்தியல்கள், நிலைப்பாடுகள் பற்றிய ஒரு அறிவைக் கொடுக்கும். அதன் காரணமாக அந்தப் பாத்திரமும், வாசகனும் வலுப்பெறுவர்.

எங்களுடைய குழந்தைகளுக்கு வலுவையும், நம்பிக்கையையும், இட்டு நிரப்பக்கூடிய படைப்புக்களைக் கொடுப்போம். அதனைவிட முக்கியம், அவர்களுக்கு சுயசக்தியையும், தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய படைப்புக்களைக் கொடுத்து வளர்க்க வேண்டும். உதாரணமாக இது போன்ற வாசிப்பு செயற்பாடுகளுடன் அவர்கள் வளரும் போது அல்லது வளர்ந்து பெரியவனாகும் போது, நிஜ உலகிற்கு வருகையில், சமாதானத்திற்கு எதிரான எல்லாவற்றையும் எளிதில் தூக்கியெறிந்து விடுவார்கள். சமாதானம் என்பது நாங்கள் நிஜ உலகில் வாழ்வதற்கு மிகவும் அவசியமானது.

இலக்கியத்தினூடாக சமாதானம் என்ற எண்ணக்கருவை, பேசுவதன், எழுதுவதன், வாசிப்பதன் மூலமாக வகுப்பறைகளில், தொழில்செய்யும் இடங்களில், பொது இடங்களில், வீடுகளில், அலுவலகங்களில் இந்த உலகத்திற்கான கனிவான இதயங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
இலக்கியம் என்பது அறியாமை என்னும் ஒரு முனைக்கும், அறிந்துகொள்ளல் என்னும் இன்னொரு முனைக்கும் இடையில் அப்பாவி மக்களின் இரத்தத்தையும், வெறுப்பையும் கொண்டிராததும், மாறுபட்ட நுண்ணுர்வுகளை மிக நுட்பமாக எடுத்துரைக்கும் கலை என்னும் எரிபொருளை கொண்டு வேகமாக ஓடும் ஒரு வாகனம். இலக்கியமானது இவ்வாறான தொடர்பாடலை சிறப்பாக செய்வதற்குரிய வாகனமாகும். எனவே இலக்கியத்தின் மூலம் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, புதிய நாகரீகம் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். சமாதானத்தை ஏற்படுத்துவதில் இலக்கியமே சிறந்தவொன்றாக நாம் அடையாளம் காணலாம். இதன் மூலம் ஏற்படத்தப்படுத்தப்படும் அறம் சார்ந்த கருத்துக்கள், உடனடியாக பல தசாப்தங்களாக மரபு ரீதியாகவும், பாடசாலைக் கல்வி ரீதியாகவும் மாற்ற முயடிh மனித மனங்களை மாற்றுவதற்குரிய சக்தியைக் கொண்டிருக்கின்றன. இந்த இலக்கியங்கள், மனிதனை விழிப்படையச் செய்து பூமியின் மீதான அன்பு, கருணை, அனைவருக்குமான சமத்துவம், பிரபஞ்சம் பற்றிய புரிதல், பூமியின்மீதான சமாதானம் போன்றவை குடிகொண்டிருக்கும் ஆன்மாவின் மையத்தின் மகிழ்ச்சியின் கருவூற்றினை நோக்கி எங்களை நகரச் செய்யும்.

நாங்கள் வளரும்போதே இனங்களுக்கிடையேயான நல்லுறவு, சமாதானம் போன்றவைகளைப் பற்றித்தான் நிறைய கற்பித்து வளர்க்கப்பட்டோம். இலக்கியத்தின் மூலம் சமாதானம் என்ற கோட்பாட்டில் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. அந்தக் கோட்பாட்டின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதில் மொழிபெயர்ப்புகள் முக்கியமான பங்காற்றலாம் என நான் கருதுகின்றேன். 2006ம் ஆண்டு காலப் பகுதியில் இலக்கியத்தின் மூலம் சமாதானம் என்ற பெயரில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடாத்தி முடித்தோம்.

கேள்வி: 2008 இன முறுகல் காலகட்டம். அந்தக்காலகட்டத்தில் நீங்கள் நடத்திய நிகழ்வுபற்றி கூறுங்கள்?
பதில்: இந்த நிகழ்வு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினதும், கனேடிய அபிவிருத்தி ஸ்தாபனத்தினதும் அனுசரணையில் ஒரு நாள் நிகழ்வாக பல்வேறு உரையாடல்களைக் கொண்டமைந்து காணப்பட்டது. இதை மருதமுனை நூலகத்தில் மிகவும் சிறப்பாக நடாத்தியிருந்தோம், இதில் தென்கிழக்கின் முக்கிய இலக்கியச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு இலக்கியத்தின் மூலம் சமாதானம் எனும் கருப்பொருளில் உரையாற்றினர். இது சிறந்த கருத்துப்பரிவத்தனையாகவும் ஆரோக்கியமான சிந்தனைக்கிளறலாகவும் அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இலக்கியத்தை முன்நிறுத்திய இதுபோன்ற கருத்தாடல்களும் கலந்துரையாடல்களும் போர் காலகட்டத்திலேயே நடத்தியிருந்தோம். தற்போது போருக்குப்பிந்திய சூழலில் சமாதானம் மற்றும் சமத்துவத்தை கோட்பாடுகளுக்கு அப்பாலும் உயிர்ப்புடையதாக்க அவை உதவும் என்பதை நான் பெரிதும் நம்புகிறேன்.
கேள்வி : இலக்கிய ஆக்கர்த்தாவாக உங்களுடைய ஆக்கங்கள் களம் கண்ட கதைகள் எவ்வாறிருந்தன?
பதில் : கலாநிதி ஜெயசங்கரின் ஊக்கப்படுத்தல் காரணமாக 1990களின் இறுதிகளிலிருந்து சரிநிகர; (மாற்றுப் பத்திரிகை)நிற்கும் வரை எனது கதைகள் அதில் வெளியாகத் தொடங்கின. அந்தக் காலப்பகுதிகளில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்சங்க வெளியீடாக வெளிவந்துகொண்டிருந்த கிழக்கொளி சஞ்சிகையும் எனது ஆக்கங்களுக்கு சிறப்பாக களம் தந்துகொண்டிருந்தது. இதற்கு சரிநிகர் ஆசிரியர் பீ. சிவகுமார், கிழக்கொளி ஆசிரியர் எஸ். சூரியகாந்தன் ஆகியோர் எனக்கு ஊக்கமும் சந்தார்கள். பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் நாடகத்திற்கும், கலாநிதி ஜெயசங்கரின் நவீன பஸ்மாசுரன் நாடகத்திற்கும் மேடை முகாமையாளராக இருந்ததும், இன்னும் பல நாடகச் செயற்பாடுகளில் பல்வேறு வடிவங்களில் ஈடுபட்டதும் இன்னும் மறக்கமுடியாத கற்றலுக்கான அனுபவங்களாக இருக்கின்றன.

எம். பௌசரின் மூன்றாவது மனிதன் பதிப்பகம், எனது 16 சிறுகதைகளைத் தொகுத்து. 2000களின் ஆரம்பங்களில் விலங்கு நடத்தைகள் அல்லது விலங்குகள் தொகுதி ஒன்று என்ற நூலை வெளியிட்டது. அதில் தொகுக்கப்பட்டிருந்த எனது ஒரு சிறுகதைதான் கிருஸ்ணபிள்ளை. அந்தக் கதை, லண்டன் திரு. பத்மநாபஐயர், கண்ணில் தெரியுது வானம் தொகுப்பில்; வெளியிட்டிருந்தார். இந்தச் சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளரான நண்பர் . விமல்ராஜ், கிச்சான் என்ற ஒரு குறும்படத்தை இயக்கி தயாரித்திருந்தார். அந்த திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றிருந்தது. அந்தப் படத்திலும் என்னை அவர் ஈடுபடுத்தி அதனை எனக்கு கற்றலுக்குரிய ஒரு களமாக்கினார்.

இந்தக் காலங்களில் நான் மேற்சொன்னவர்களின் ஆற்றுப்படுத்தல்கள் காரணமாக நிறைய கட்டுரைகளையும், நாடக, திரைப்பட, இசை, கவிதை, நாவல், சிறுகதை, சிறுசஞ்சிகை, விஞ்ஞானம், பொதுவான விடயங்கள் சம்பந்தமாக விமர்சனங்களையும் எழுதினேன். கலாநிதி சி. ஜெயசங்கர் எனது நண்பர், எனக்கு வழிகாட்டி போன்றவர். எப்போதும் என்னை சரியான வழிக்கு ஆற்றுப்படுத்தி கொண்டும், ஊக்கப்படுத்திக் கொண்டும் இருந்தார். என்னை எழுத்துத் தளத்திற்குள் இருந்து, செயற்பாட்டுத் தளத்திற்கள் கொண்டுவந்தார். சுற்றுச்சூழல், பெண்ணியம், சிறுவர் உரிமைகள், சுதேச அறிவு போன்றவற்றை முன்னிறுத்தி சேவைகள் ஆற்றி வந்த மூன்றாவது கண் குழுவினரோடு என்னை களப்பணிகளில் ஈடுபடச் செய்தார். அவர்களோடு பல விடயங்களில் பங்குபற்றியிருப்பதை இப்போது நினைத்தாலும் மனதுக்கு இதமாக இருக்கிறது.
பல்கலைக்கழக மாணவனாக இருந்த இந்தக் காலப்பகுதியில் விலங்குகளின் மீதான ஆய்வுகளின் நிமித்தம், காடு, கரை, குளம், ஆறு, கடல் என்றெல்லாம் கட்டற்ற தேடலும், அலைச்சலும் எனக்கிருந்தது. அதற்கு என் பேராசிரியை மீனா தரமரெத்தினம் அவர்களை நன்றியுடன் நினைவுகூருகிறேன். இந்த விஞ்ஞான ஆய்வு விடயங்களையே அல்லது விலங்குகளுடனான ஆய்வுகளில் கண்டு கொண்ட விடயங்களையே சிறுகதைகளாக்கினேன். இது வரை நான், சிறுகதைத் தொகுதி, கட்டுரைத் தொகுதி, என்று 10 இற்கு மேற்பட்ட நூற்களை ஏதோ ஒரு காரணம் கருதி வெளியிட்டிருக்கிறேன். நான் எழுதிய விமர்சனங்கள், மொழி பெயர்ப்புச் சிறுதைகள் போன்றவற்றை அடுத்த வருடத்திற்குள் தொகுத்து வெளியிடலாம் என்று நினைத்திருக்கிறேன்.
கேள்வி : நூறு சதவீதமாக இஸ்லாமிய மக்கள் வாழுகின்ற ஒரு கிராமத்திலிருந்து, இனப் பிரச்சினை உக்கிரமாக இருந்த காலகட்டத்தில் தமிழர் பகுதியிலிருந்த ஒரு பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்து கற்கச் சென்றிருக்கிறீர்கள். அந்த நிலைமையை எப்படி சாதகமாக மாற்றிக்கொண்டீர்கள்?
பதில் : மற்றவர்களுக்கு அந்த கால கட்டம் அவ்வாறு இருந்திருக்கலாம், ஆனால் நான் அதனை அவ்வாறு நினைக்கவில்லை. எனது பிரதேசத்திலிருந்த பல்கலைக்கழகம் ஒன்றில் கற்பதைத்தான் நான் அக்காலங்களில் விரும்பியிருந்தேன். எங்கே இருக்கிறோம் என்பது முக்கியமாகப்படவில்லை எவ்வாறு இருக்கிறோம் என்பதுதான் முக்கியமாகப்பட்டது. அங்கே எனக்கான ஒரு புது உலகம் என்னை வரவேற்கக் காத்திருந்ததை உணர்ந்தேன். அதற்காக எனது தொடர்புகளை விருத்தி செய்யத் தொடங்கினேன். மொழியில் துறையில் பேராசிரியர் செ. யோகரசா, பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, நாடக, நுண்கலைத் துறையில் பேராசிரியர் சி. மௌனகுரு, கலாநிதி சி. ஜெயசங்கர், திரு. பாலசுகுமார் போன்றவர்களும், ஆங்கிலத்துறையில் அமரர் திரு. தெ. கிருபாகரன், திரு. பீலிக்ஸ், விலங்கியல் தறையில் கலாநிதி மீனா தர்மரெத்தினம், சமூகவியலில் கலாநிதி யுவி தங்கராஜா போன்றவர்களும் என்னை ஊக்கப்படுத்தி. வாசிக்கச் செய்து, போக வேண்டிய பாதைக்கு திசையைக் காட்டினார்கள்.

தமிழர்களின் மதம், மொழி, கலாச்சாரம், அரசியல், தத்துவம், வழக்காறுகள், கிராமியம், வாழ்வியல், இலக்கியம் என்பவைகளை நான் மதித்தேன். அதற்காக அவர்களும் என்னை மதித்தார்கள். இதன் காரணமாக பரஸ்பர சுயமதிப்பை விருத்தி செய்து கொண்டோம். எனக்கு அரங்காற்றுச் செயற்பாடுகளில் இருந்த மிகுந்த ஈடுபாடுகாரணமாக கூத்துச் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்ள நிறைய இடங்களுக்கு பிரயாணம் செய்யவேண்டியிருந்தது. நிறைய கோயில் விழாக்களிலும், பண்டிகைகளிளிலும், விசேட வைபவங்களிலும், கிராமங்களில் நடந்த வைபவங்களிலும் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. அதாவது இனமுரண்பாடுகள் மிகசிக்கலாகி உக்கிரமாக இருந்தகால கட்டத்தில்தான் இவைகள் எல்லாம் நடந்தன. இதனால் பல்கலைக்கழக கற்றலியல்; சமூகத்திற்கும், மக்களிற்கும், பல்கலைக்கழகத்தில் வேலை செய்தவர்களுக்கும், மற்றும் மாணவர்களிற்கும் எனக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வும், நட்பும் ஏற்பட்டிருந்தது.
கேள்வி : சமாதானத்தை ஏற்படுத்துதலில் மொழிபெயர்ப்பு பணியின் முக்கியத்துவத்தை எப்படி விளக்குவீர்கள்?
பதில் :மொழிபெயர்ப்பானது தொடர்பாடலை இலகுபடுத்தவும், மற்றவர்களினது கருத்துக்கள், சிந்தனைகளை பரீட்சயமான மொழிகளில் புரிந்து கொள்வதற்கு உதவுகின்றது. எழுத்தாளர்களின் கருத்துக்களும் சிந்தனைகளும் மொழி பெயரப்பின் மூலமாகவே விரிவுபடுத்தப்படுகின்றன.
இன்றைய பத்திரிகைச் செய்திகள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கற்கின்ற பாடப்புத்தகங்கள் போன்றவற்றிற்காக கிடைக்கின்றன தகவல்கள் எங்களுக்கு மொழி பெயர்ப்பின் மூலமே கிடைக்கின்றன. திரைப்படம், ஓவியம் உட்பட சகல துறைகளுக்கும் மொழிபெயர்ப்புகள் இன்றியமையாதது. மொழிபெயர்ப்புக்களால் இலக்கு மொழி வளப்படுத்தப்பட்டுள்ளது. மொழி பெயர்ப்பாளர்களால் பல மொழிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பதும் கண்கூடு.
மொழிபெயர்ப்புக்கள்தான் உண்மையான நல்லிணக்கத்திற்கும், பொறுப்புக்கூறும் தன்மையை விருத்தி செய்வதற்கான தகவை அதிகரிப்பதற்கும் உதவி செய்கின்றன. ஒரு படைப்பு மொழி பெயர்க்கப்படும்போதுதான் அந்தந்த மொழிகள் சார்ந்த சமூகங்களினதும், மக்களினதும், சிறு நிலப் பிரதேசங்களினதும் கலாச்சாரம், மதம். நம்பிக்ககைகள், அரசியல், வாழ்வியல், நிலவியல் மற்றும் அவைகளோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றைய மொழிக்காரர்கள் அறிவதற்குரிய ஒர் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும். பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தி, சமாதான சகவாழ்விற்கும் உதவும்.
அத்தோடு மொழிபெயர்ப்புக்கள் மூலம், இரு மொழிகளைப் பேசும் வேறுபட்ட மக்களின் பண்பாடு, வேறுபட்ட நாகரிகங்கள் தோற்றுவிக்கும் முரண்பாடு களைவதின் அவசியத்தையும் விளங்கிக் கொள்வதோடு, மொழி பெயர்ப்பானது பண்பாட்டு வளர்ச்சி, இலக்கிய வகையறாக்களின் பெருக்கம், அறிவியல் மேம்பாடு, சமுதாய முன்னேற்றம், சமய வளர்ச்சி, அரசியல் விழிப்புணர்ச்சி போன்றவைகளுக்கும் இன்றியமைததாகும்.

இலங்கையைப் பொறுத்தவரை மொழி பெயர்ப்புகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்ற மும்மொழிகளிலும் செய்யப்பட வேண்டும். ஆனால் செய்யப்படுகின்ற படைப்புகளைத் தேர்வு செய்வதிலும் அதற்குப் பின்னால் அதிகாரத்துவமும், குறுங்குழும மனோநிலைச் செயற்பாடுகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

ஒர் சமூகத்தின் மனச்சாட்சி படைப்பாளிகளே அல்லது எழுத்தாளர்களே. அவர்களின் படைப்புக்கள் மொழி பெயர்க்கப்படும்போதுதான் ஒவ்வொரு சமூகத்தினதும் மனங்களை மற்றவர்கள் புரிவதற்கும், நல்லிணக்கத்தை பேண்தகு நிலையில் வைத்திருந்து மற்றவர்களின் மனங்களை வெல்வதற்கும் அவை சாத்தியங்களை அவை உருவாக்குகின்றன என்றால் அது மிகையில்லை.


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...