Monday, March 27, 2017

“சொண்டின் மேற்பகுதியில் பூனைமயிர்கள் சுருண்டு கிடந்தன. பெண்ணுக்குள் ஒழிந்திருக்கும் ஆண்மை”. சுமதி ரூபனின் உறையும் பனிப் பெண்கள் என்ற சிறுகதைத் தொகுதியை முன்வைத்து.

“சொண்டின் மேற்பகுதியில் பூனைமயிர்கள் சுருண்டு கிடந்தன. பெண்ணுக்குள் ஒழிந்திருக்கும் ஆண்மை”. சுமதி ரூபனின் உறையும் பனிப் பெண்கள் என்ற சிறுகதைத் தொகுதியை முன்வைத்து.

-அம்ரிதா ஏயெம்.

இந்த சமூகம் ஆணாதிக்க மனோபாவங்களின் மூலமே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இலக்கியங்களிலும், இதிகாசங்களிலும் அந்தந்த கால கட்டங்களுக்குரியவற்றை ஆண் எழுத்தாளர்களே அல்லது பெண் எழுத்தாளர்களே பதிந்து வைத்திருப்பினும், அவற்றில் பெரும்பாலானவை ஆண்மையச் சிந்தனையை சுற்றியவையாகவே இருந்தன. இவைகள் விட்டுச் சென்ற மரபுகள், கட்டுப்பாடுகள், விழுமியங்கள் எல்லாமே ஆண்மையவாதத் தன்மை கொண்டவையாகவே இருந்தன. காலங்களினூடான பல்வேறு மாற்றங்களினூடே இவைகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா அல்லது ஆண்மையவாதத்திலிருந்து விலத்தி, பெண்மையவாதத்தை நோக்கி சிந்தித்திருக்கிறோமா என்று எங்களை நாங்களே கேட்க வேண்டியுள்ளது.
பெண்ணை நுகர்வுப் பொருளாகவும், உடைமைப் பொருளாகவும் பார்க்கும் மனோபாவமும், பெண்ணின் வாழ்க்கை ஆணைச் சார்ந்து இருப்பதாகவும், ஆணைச் சாராத, அல்லது ஆணிலிருந்து இழந்துவிட்ட வாழ்வு பெண்ணின் இழப்பாகவே கருதப்படுகின்ற மனோபாவமும் நிலவுகின்றது. பெண் உடல் ரீதியாக மட்டுமன்றி, உணர்வுரீதியாகவும், சிதைக்கப்படும்போது, அவை எவ்வாறு எழுத்துக்களால் வெளிக்கொணரப்பட வேண்டும்?, பெண்ணைப் பேசும், பெண்ணைச் சித்தரிக்கும் படைப்புக்கள் பெண்ணிடமிருந்தே வர வேண்டும். பெண் உணர்வுகளை ஆண் எழுதும் போது, ஆணாதிக்க சிந்தனையும், அதனை ஆணுக்கானதாய் படைத்துத் தருவதுமாகவும் இருக்கும்.

முன்னொரு காலத்தில் நானும் Empathy ஆக, பெண் உணர்வுகளை எழுதிவடலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால் காலமும், அனுபவமும், வாசிப்பும். அது ஆணினால் முடியாததது என்பதை சொல்லிச் சென்றன.

காலம் காலமாக, ஆண்களினால் பெண்களுக்கான உணர்வுகளை எழுதலாம் என்று வாதித்து வந்த அந்த உணர்வுகளை ஆண்மையவாதமாக்கி வெற்றியடைந்ததாக புளகாங்கிதம் அவர்கள் அடைந்துகொண்டிருந்தபோது, சுமதி ரூபன் இவ்விடத்திலே எனக்கு வித்தியாசமாக தெரிகிறார்.
                                                                      *
உறையும் பனிப் பெண்கள் (ஆசிரியர்: சுமதி ரூபன், கருப்பு பிரதிகள் வெளியீடு, 96 பக்கங்கள்) 12 சிறுகதைகளை கொண்டமைந்து காணப்படுகின்றது. இந்த சிறுகதைத் தொகுதியில் பெண்ணாக இருந்து ஆண் உணர்வை உள்வாங்கி சில கதைகளில் அவர்களின் தோலை உரித்திருக்கிறார். ஒரு ஆணாக இருந்து பார்க்கும்போது. ஆண்சார்ந்த உணர்வுகள் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றது என்றே தோன்றுகின்றது. அத்துடன் ஆணின் உணர்வுகளை சிறப்பாக உள்வாங்கி, ஆண்மையவாதத்தை கேள்விக்கட்படுத்தியிருக்கிறார் அல்லது தகர்த்திருக்கிறார். ஆணினால் பெண் உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமென்றால் (ஒரு பேச்சுக்கு) ஏன் பெண்ணினால் ஆண் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது என்று வரிந்து கட்டிக்கு வந்து நின்று ருத்ரதாண்டவம் ஆடியது போல் தெரிகிறது. அமானுஸ்ய சாட்சியங்கள் என்ற கதையில், புலம்பெயர்ந்து வந்து தனது வீட்டில் தங்கியிருக்கும் மனைவியின் தங்கையை எப்படியாவது அனுபவிக்கத் துடிக்கும் அத்தானின் காமவெறியை அல்லது அந்த ஆணின் உணர்வுகளை, அவனது பாலியல் அத்துமீறல்களை தைரியமாக சொல்லியிருக்கிறார். ரெக்ஸ் என்ற நாய்க்குட்டி என்ற கதையில், நாயின் பாலியல் உணர்வை குறைக்க அதற்கு காயடித்துவிட்டு, ஆனால் அந்த நாயின் சொந்தக் காரர்களான மாமியும், மாமாவும் வயது சென்றும் போடும் ஆட்டம் நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளது. 40 பிளஸ் என்ற கதையில் தனது மனைவியிடமிருந்து கிடைக்கப்பெறாத சுகத்தை பெற, கணவன் செய்யும் வேலைகளையும், ஒரு இளம்பெண்ணிற்கு பின்னான அலைச்சல்களையும் சொல்கிறது. சூட் வாங்கப் போறன், நஸ்டயீடு போன்ற கதைகள், ஆண் உணர்வுகளை உள்வாங்கி சொல்லப்பட்ட கதைளாகும். 

பெண்ணின் உடம்பு பற்றி நம் சமூகம் காலம் காலமாக உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள், கருத்துக்கள், கட்டமைப்புக்கள் மற்றும் அதன் காரணமாக பாதிக்கப்படும் பெண்ணின் வாழ்வுரிமை பற்றி யாரும் இங்கே பெரிதாக பேசுவதில்லை. அதாவது அந்த அழகு என்று கட்டமைக்கப்பட்ட ஒன்று இல்லாத பெண்கள் பற்றி, அவர்களின் உணர்வுகள், அவஸ்த்தைகள் பற்றி யாருமே சொல்வதில்லை. இந்த விளிம்புநிலை பற்றி சுமதி ரூபன் உறையும் பனிப் பெண் என்ற கதையில் சொல்கிறார். என்றாலும் இந்த தொகுதியிலுள்ள கதைகள் பூராக ஏதோவொரு வகையில் கறுத்த தோலும், பருக்களும் உருவமாகவும் அல்லது அரூபமாகவும் வந்து கொண்டே இருக்கின்றன. இந்தக் கறுத்த தோலும், பருக்களும், அழகும் சம்மட்டியாய் வீறுகொண்டு சமூகத்தை அடித்து துவம்சம் செய்வது போலவே எனக்கு தென்படுகின்றன. இதனையும் நாங்கள் இந்த விளிம்புநிலையில்தான் உள்ளடக்க வேண்டுமோ அல்லது உளவியல் அணுகுமுறைக்கு உள்ளாக்க வேண்டுமோ தெரியாது. கறுப்பு என்பது துக்கம் அல்ல. அது எதிர்ப்புக் குரல். கலகக் குரல். நீதிக்கான, சமத்துவத்திற்கான போராட்டம். அது நீதியின் நிறம்.
                                                                      *
கறுப்பி என்ற புனைப் பெயர் கொண்ட சுமதி ரூபன், யாழ்ப்பாணம் கோண்டாவி;லில் பிறந்து, 1983 ஐரோப்பிய நாடொன்றிற்கு புலம்பெயர்ந்து, 1989யிலிருந்து கனடாவில் வசித்து வருகின்றார். யாதுமாகி நின்றாள் (2003, மித்ர பதிப்பகம்), உறையும் பனிப் பெண்கள் (2010, கருப்புப் பிரதிகள்) என்ற இரு சிறுகதைத் தொகுதிகளையும், மேலும் பல சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட இனி (2002), உஸ் (2004), மனுஸி (2004), யூ ரூ (2005), பிள்ளை (2006), ரு பி கொன்ரினியுட் (2006) போன்ற குறுற்திரைப்படங்களை எழுதியும் இயக்கியும் இருக்கின்றார். 2015ல் இவர் இயக்கிய நியோகா என்ற முழு நீள திரைப்படம் என்ரிரிஎப் 2016 மிட்நைற் சன் விருதைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான பல்வேறு அனுபவங்களைக் கொண்ட சுமதி ரூபன் அவர்களின் கதைகளில் யதார்த்தமும், நுட்பங்களும், சிறப்பியல்புகளும் நிறைந்து கிடக்கின்றன. அவர் எந்த இசங்களுக்குள்ளும் சிக்கவில்லை. அவர் விட்டுச் செல்லாத இருள்களுக்காக அவரின் கதைகளில் தேவையில்லாத மேலதிக ஒளியை பாய்ச்ச வேண்டிய அவசியமும் இருக்கவில்லை.

அவரின் கதைகளில் வரும் நளா, மீரா, பெண்கள்: நான் கணிக்கிறேன் கதையில் வரும் திருமணம் பற்றிக் கதைக்கும் நண்பியான பெண், கங்கா, எனக்கும் ஒரு வரம் கொடுவில் வரும் அண்ணி, மூளியில் வரும் மாமியைச் சந்திக்கும் பெண், சுஜா, கங்காவின் தம்பி, வெளிச்சத்தின் விபத்திற்குள்ளான பையன்கள் எல்லாம் நிச்சயமாக சுமதியின் கூறுகளாகத்தான் இருக்க வேண்டும். இந்த ஆண்மையவாதப்பட்ட உலகில் சில நேரங்களில் அல்லது பல நேரங்களில் ஆணுக்கு சமமாக போட்டிபோடவும், இருக்கவும் ஏற்படுகின்றது.

புலம்பெயர் வாழ்வின் சிக்கல்கள், அந்த வாழ்வின் அவஸ்த்தைகள், ஆண்களின் போலித்தனங்கள், புலம்பெயர்ந்து தொழில்நுட்ப முன்னேற்றம் கூடிய நாடுகளில் வாழ்ந்தாலும், இன்னும் அவர்களிடமிருந்து விடுபடாத சாமத்தியச் சடங்குகள், பிள்ளைப் பேற்று சடங்குகள், இறப்பு சடங்குகள், பூசை புனஸ்காரச் சடங்குகள், சீதன முறைமைகள், பெண் அழகுக்கு முன்னுரிமை கொடுத்;தல் இதன் காரணமாக பெண்ணை ஒதுக்கி வைத்தல், பெண் உணர்வுகளை ஒதுக்கி வைத்தல், அவர்களை தாழ்வுணர்ச்சி கொள்ளச் செய்தல், தன் சுயவிருப்புப்படி உணவு, உடை, உறை தெரிதலுக்கான சுதந்திரக் குறைவு, ஏமாற்றுக்கள், நடிப்புக்கள், குடும்பதிற்கு விசுவாசமில்லாமல் நடத்தல், என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் கலாச்சாரம் காரணமாக தங்கள் மீதான அடாத்துக்களை பெண்கள் வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளுதல், வாழ்ந்ததும்-வந்தேறியதுமான நாடுகளிடைக்யேயான திருமணம், குழந்தை, குடும்பம் பற்றிய தத்துவச் சிக்கல்கள், பிள்ளைகள் இல்லாததால் ஏற்படும் நெருக்கடிகள், விதவைகள் மீதான நெருக்கடிகள் போன்ற நிறைய விடயங்களை சுமதி ரூபன் மிகுந்த தைரியத்துடன் பேசிக் கொண்டு செல்கின்றார். 

மொழியை குறைவாக கையாண்டு நிறைவான உணர்வைத் தர முயற்சித்தலும், தேவையில்லாமல் மனிதர்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள், காலங்களின் பெயர்கள் போன்றவைகளை தவிர்த்தலும் சுமதி ரூபனின் கதைகளில் கண்ட தனித்துவமான சிறப்பான விடயமாக கருதவேண்டியுள்ளது. எப்போது மனிதர்களும், இடங்களும், காலங்களும் குறிப்பிடப்படவில்லையோ அது காலங்கடந்து நிலைத்து நிற்கும். இந்தக் கதைகளும் அவ்வாறே நிலைத்து நிற்கும் என்பது நம்பிக்கையாகும்.
                                            *
வித்தியாசமான காலநிலை, இட அமைப்பு, மொழி, கலாச்சாரம், சட்டதிட்டங்கள், வாழ்க்கை முறைகள் உள்ள ஒரு நாட்டிற்கு இடம் பெயர்ந்துள்ள இவர்களின் பிரச்சினைகள் பல. அவற்றை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளுகிறார்கள், அதனால் எவ்வாறான உளவியற் தாக்கங்கள் எல்லாம் ஏற்படுகின்றன என்பதெல்லாம் கருத்திற்கொள்ளப்பட வேண்டியன. தாய் நாட்டிலுள்ளவர்கள் புலம்பெயர் நாடுகளை பாலும், தேனும் ஓடுகின்ற சுவர்க்கம் என்றும், அங்குள்ளவர்கள் வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தின் தேவதூதர்கள் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றவேளை, சுமதி ரூபன் தனது கதைகளின் மூலம் அவைகளை சுக்கு நூறாக உடைத்து, புலம்பெயர்வின் வாழ்வின் யதார்த்த முகங்களை உயிர்ப்புடன் படம்பிடித்து காட்டுகிறார்.

அவர் படம்பிடிப்பவர் என்பதால்தான் என்னவோ, ஒவ்வொரு பந்தியிலும், கோணங்களும், வெளிச்சங்களும், இயக்கநிலையிலுள்ள காட்சிகளும் தெரிகின்றன. காட்சிப் படிமங்களாகவே பந்திகள் நகர்வதை கூர்ந்து நோக்கினால் புரிந்துவிடும். ஒவ்வொரு பந்தியிலும் மிகுந்த ஈர்ப்பு எனக்கு இருந்தது. அதுவே சுமதியின் ஒரு வகையான தனித்துவம்தான்.

சுமதி ரூபனின் கதைகள், “பாசாங்குகள் இல்லாமலும், முன்முடிவுகள் இல்லாமலும்”, பெண்ணிலை சார்ந்து தனித்துவத்துடனும், துணிச்சலுடனும், அழகு மிளிர, அதீத வாசக ஈர்ப்புடன் சொல்லிக் கொண்டு செல்கின்றன. இவைகள் பற்றி எங்களை தொடர்ச்சியாக சிந்திக்க வைக்கின்றன. இவைகள் எதுவும் கற்பனையென்று தோன்றவில்லை. எங்கள் சூழலிலும் நாளாந்தம் சந்திக்கும் மனிதர்களாகவே இந்தக் கதைமாந்தர்கள் உலவுவதைக் காண்கின்றோம்.

இந்த உறையும் பனிப் பெண்கள் என்ற சிறுகதைத் தொகுதியை கவிஞை அனார் என்னை விமர்சனம் செய்யச் சொன்ன போது சுமதி ரூபனின் பெயர் மட்டுமே எனக்கு தெரிந்திருந்தது. அவரின் படைப்புக்களினூடான எந்தப் பரிச்சயமும் எனக்கு இருக்கவில்லை. கவிஞர் அனார் தந்த அறிமுகத்துடன், சுமதி ரூபனை தேடிச் சென்றபோது நாடக, குறும்பட, திரைப்பட எழுத்தாளராக, இயக்குனராக நடிகையாக, சிறு கதை எழுத்தாளராக என்னுள் விரிந்தார். இவரின் பல்வேறு பரிமாணங்களின் சேர்க்கையையேஇந்த உறையும் பனிப் பெண்கள் என்ற சிறுகதைத் தொகுதியின் செப்பத்தில் நான் பார்க்கிறேன். இன்னொரு விதமாக சொன்னால் இரு வாரங்களுக்கு முன்னால் ஒரு சிறு விதையாக இருந்த நீங்கள் இன்று ஒரு பெரும் ஆல விருட்சமாக என்னுள் விரிந்திருக்கிறீர்கள்.
                                                                 *

உறையும் பனிப் பெண்களா?
உறையும் பணிப் பெண்களா?
உறையும் பணியும் பெண்களா?
எப்படியாயிருந்தாலும் உங்கள் எழுத்து அவர்களை உருக்கி கொதிக்கவைத்திருக்கிறது. எழுப்பி நிமிரவைத்திருக்கிறது. தூக்கி தைரியம்கொடுக்கவைத்த்திருக்கிறது. உங்கள் துணிச்சலுக்கும், திறமைக்கும், நுட்பத்திற்கும் உறையும் பனிப் பெண்கள் கொண்ட தனித்துவத்திற்கும் எனது வாழ்த்துக்கள், இன்னொன்றை எதிர்பார்த்தவனாக.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...