Monday, March 27, 2017

நகுலனின் இன்னொரு வளர்ப்புப் பூனை ஜெம்சித் ஸமான் - ஜெம்சித் ஸமானின் நகுலனின் வளர்ப்புப் பூனையை முன்வைத்து.

நகுலனின் இன்னொரு வளர்ப்புப் பூனை ஜெம்சித் ஸமான் - ஜெம்சித் ஸமானின் நகுலனின் வளர்ப்புப் பூனையை முன்வைத்து.

-அம்ரிதா ஏயெம்

1. இந்தியாவின் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் 
பிறந்த டி.கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன், இறுதி வரை (மே 17, 2007) கேரளத்தின் திருவனந்தபுரத்தில் வாழ்ந்தார். தமிழில் முதுகலைப்பட்டமும், ஆங்கிலத்தில் முதுகலை ஆராய்ச்சி பட்டமும் பெற்ற நகுலன், திருவனந்தபுரத்தின் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றார். பழந் தமிழ் இலக்கியத்திலும், நவீன ஆங்கில இலக்கியத்திலும் பெரிய ஈடுபாடு கொண்டவர். நகுலனின் கவிதைகள் மனம் சார்ந்தவைகளாகவும், இருப்பியல் சார்ந்தவைகளாகவும் கருதப்படுகின்றன.
2. பூனை பாலூட்டி வகையைச் சேர்ந்தது. மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. காட்டுப் பூனைகள் ஊனுண்ணியாக இருந்தாலும், வீட்டுப் பூனைகள் அனைத்துமுண்ணுபவைகளாகக் காணப்படுகின்றன. பண்டைய எகிப்தில் பூனைகளுக்கு முக்கியத்துவம் இருந்தது. அவற்றை வழிபட்டனர். இறந்ததும் மம்மியாக்கினர். பிரமிட் கட்டினர். அதற்கு சிலைகளும் வைத்தனர். Felis catus domesticus என்ற விஞ்ஞானப்; பெயரைக் கொண்ட பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் பல சிறப்புக்களையுடையன. பூனைகளால் இனிப்புச் சவையை அறிய முடியாது. தன் வாழ்நாளில் 150 குட்டிகளை ஈனக்கூடியது. மனிதனைவிட பல மடங்கு பார்த்தல், கேட்டல் திறனைக் கொண்டது. பூனைகள் 10000 ஆண்டுகளாக வளர்க்கப்படுகின்றன. தனது அன்பினை வெளிப்படுத்தல், தனிமையின் விருப்பம், தன்சுத்தத்தை பேணுவது போன்றதும், மனிதனுடன் பழகும்முறை காரணமாகவும் அதனை வளர்க்கத் தொடங்கினர். முகம்மத் நபி (ஸல்), போப் XII பெனடிக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே போன்ற பிரபல்யம் வாய்ந்தவர்களும் வளர்ப்புப் பூனைகளைக் கொண்டிருந்தனர்.
3. நகுலனுக்கு எப்போதும் நீயும், மௌனமும், சுசிலாவும் இருந்தன. சுசிலாவைச் சுற்றி சதா மஞ்கள் நிறப் பூனை சுற்றிக் கொண்டே இருந்தது. சிலவேளை ஒரு இறாத்தல் இறைச்சிக்காக தான் வளர்த்த நாயாக அந்தப் பூனை பல்வேறு நிறங் கொண்டு சுசிலாவைச் சுற்றிக்கொண்டும் இருந்திருக்கலாம்.

4. ஜெம்சித் ஸமானின் நகுலனின் வளர்ப்புப் பூனைக்குள் நுழைவதற்கு முன் ஜெம்சித் ஸமானின் யதாரத்தவாதத்தை மறுக்கும், நவீனத்துவத்தை மீறிய கவிதைகளின் எடுத்துரைப்பு முறைகளை சற்று புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கால, நேர ஒழுங்கையும், நேர்கோட்டுத் தன்மையையும் சிதைத்து விடுகின்ற கவிதைகள் ஜெம்சித் ஸமானினதாகும். இதன் காரணமாக அவரின் கவிதைகளினால் ஒரே தடவையில் யாதார்த்தவாத நேர்கோட்டு எழுத்துக்களால் இலகுவாக பிரதிபலிக்கப்படும் ஓவியம் ஒன்று உடனடியாக கிடைக்காமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக வெட்டி ஒட்டப்பட்ட, கலைக்கப்பட்ட ஒட்டுச் சித்திரம் அல்லது அவ் ஓவியங்களின் தாறுமாறான உருவம் கிடைக்கிறது. இதன் காரணமாக நிச்சயிக்கப்பட்டட உருவத்திற்கு அப்பால் பல்வேறு சாத்தியப்பாடுள்ள பல்வேறு உருவங்கள் கிடைக்கலாம். இது வாசகனின் உணர்வையும், சிந்தனைத் தளங்களையும் விரித்து, கிளர்வையும் ஏற்படுத்துகின்றன.
வெளிப்படையாகத் தெரியும் காட்சியை, வெளிப்படையாக, மரபார்ந்த முறையில் விபரிப்பதிலிருந்து விலகி, அந்தக் காட்சியை தோற்றுவிக்கும் மூலக்கூறுகளின் வழியே நேர்கோடற்ற முறையில் முன் பின்னாக காட்சிப்படுத்த முனைகின்றார். இதற்கு உதாரணமாக நூலின் முதலாவது கவிதையான, துறவக் குளங்கள் ஞானிகளாகின்றன என்ற கவிதையை எடுத்துக் கொள்ளலாம்.
“வெயிலை மேய்ந்து திரும்பும்
வெள்ளாடுகளின் பசி
நாய்களைப் போன்று குரைத்தன”
இந்தக் கவிதையில் அகவயமான காட்சியைத் தோற்றுவிப்பதில் பங்களிக்கும் மூலக்கூறுகளாக வெள்ளாடு, மேய்தல், வெயில், நாய்கள் என்பன என்று நான் கருதுகின்றேன். முன் அல்லது பின்னாக இந்த மூலக்கூறுகளை வெவ்வேறு வழிகளில் நகர்த்தினால் வெவ்வேறு காட்சிகளை அடைந்து கொள்ளலாம். அதன் வழியேயும், மீள்வாசிப்புக்களின் வழியேயும், ஆசிரியன் கண்டுகொள்ளவிழைந்த தரிசனத்தை வாசகனும் ஒரு நிலையில் அடைந்து கொள்ளலாம். இவ்வாறான ஒரு வாசிப்பை நகுலனின் வளர்ப்புப் பூனைகள் வேண்டி நின்று அதனால் நிரம்பி வழிகின்றன.
அகவயமான காட்சிகளை இந்த உள்ளக மூலக்கூறுகள் உருவாக்குவதால் ஜெம்சித் ஸமான் உருவாக்கிய காட்சிகள் ஞாபகத்தில் நின்றுதொலைக்க தவறிவிடுகின்றன. இதன் காரணமாக மீண்டும் இன்னொரு வாசிப்பை கோருகின்றது. இன்னொரு வாசிப்பில் எமக்கு புதிய அனுபவமும், உணர்வும் காத்துக்கொண்டிருக்கின்றன. மீண்டும் இன்னொரு காட்சியையும் படத்தையும் கொடுக்கின்றன. நிற்க ஒரு விடயம்! ஞாபகத்தில் நிலைக்கத் தவறிவிடுகின்ற விடயங்கள், மோசமான, கெட்ட விடயங்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
இதன் காரணமாக காட்சிகளுக்கான செம்மையான பிக்சல்களாகத் திரளாமல், காட்சிகளை ஒழுங்கமைக்கப்போகும் உணர்வுகளின் பிக்சல்களாகத் திரளுகின்றன. இந்த உணர்வுகளின் பிக்சல்களாக காட்சிகளை உருப்படுத்த விரும்பாத வாசகன், நீண்ட மீள்வாசிப்பனுபவத்தின் மூலம் தனக்கான செம்மையான பிக்சல்களைக் கொண்ட காட்சிகளை உருவாக்கலாம்.
ஜெம்சித் ஸமானின் நகுலனின் வளர்ப்புப் பூனையில் நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் வரும் அதிகமான பறவைகள், ஊர்வன, நீர் உயிரிகள், பூச்சிகள், பாலூட்டிகள் போன்ற விலங்குகள் - நகுலனின் வளர்ப்புப் பூனையில் வரும் பூனையாக – அவைகளின் இருப்பை, வாழ்வை தங்களோடு சேர்ந்த மனிதர்களோடும், சுற்றாடலோடும், அதன் உறுப்பினர்களோடும் சேர்த்துக் கொண்டு, இருப்பின் வலியை, இன்பத்தை பேசுகின்றன போல் தெரிகின்றன.

5. நகுலனின் வளர்ப்புப் பூனை, ஜெம்சித் ஸமானின் முதலாவது நூல். களரி தொல்கலைகள், மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம், ஏர்வாடி, சேலம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா வெளியீடாக, சுமார் 35 கவிதைகளைக் கொண்டு, 88 பக்கங்கள் அளவில், டெமி 1/8 அளவில் வெளிவந்துள்ளது. சிறந்த தளக்கோலம், அட்டை அமைப்பு, நேர்த்தியான அச்சமைப்பு, ஜெம்சித் ஸமானின் கவிதைகள் என்பவற்றிற்காக மெச்சப்பட வேண்டும். இருந்தும் ஜெம்சித் ஸமான் எந்த நாடு, எந்த ஊர், அவர்களை எப்படித் தொடர்பு கொள்வது என்ற எந்த விபரங்களும் நூலில் இல்லை. ஒருவேளை இதுவும், அவரது படைப்புக்களை மீள மீள வாசித்து கண்டடைவது போல, அவரையும், அவரை எப்படித் தொடர்பு கொள்ளவேண்டிய தகவலையும் மீள மீள அலைந்து தேடித்தான் கண்டுகொள்ள வேண்டுமோ என்னவோ? இதுவும் ஒரு புதிய உத்தியோ என்னவோ?
6. ஜெம்சித் ஸமானின் நகுலனின் வளர்ப்பு பூனைக்கான முன்னுரையில் கவிஞர் றியாஸ் குரானா “ஈழத்தில் இன்று எழுதிக்கொண்டிருக்கும், இளம் கவிஞர்களில் முக்கியமானவர் நீங்கள் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்கப் போவதில்லை. எனது விருப்பமெல்லாம், உங்களுக்கான ஒரு பாதையை நீங்கள் கண்டடைய வேண்டும் என்பதுதான். அது உங்களால் முடியுமென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்று கூறியது மிகையானது அல்ல. வாழ்த்துக்கள் ஜெம்சித் ஸமான், நீண்ட நெடிய வாசிப்பும், அனுபவங்களும், புத்தாக்க சிந்தனைகளும் உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...