காதலின் பொன்வீதியில் உச்சத்திற்கு ஏறநினைத்து ஆட்சி அதிகாரங்களை இழந்த பைபிளின் கெட்ட குமாரன்.
அம்ரிதா ஏயெம்.
எனது மகளுக்கு வெளியுலகத்தோடு தொடர்பு கொள்ளும் மிகக் குறைந்த வழிகளுள் இசையும் ஒன்று. சமீபகாலமாக முணுமுணுப்பதும் நெட்டுருப் போடுவதும், ஐபேடையும், ரெப்பையும், லெப்டெபையும், போனையும் போட்டு தேய்த்தெடுப்பதும் காதலின் பொன்வீதியில் காதலன் பண்பாடினான் என்ற பாடலிற்காகத்தான். நான் போனில் இருக்கும்போதும் அல்லது கணிணியில் வேலை செய்யும்போதும் எனது எட்டு வயது மகள் தவண்டு வந்து, என்னை பிடித்து எழும்பி, மிக மரியாதையுடன், பௌவியத்துடன் சுற்றி வளைத்து, காதலின் பொன் வீதியில் பாடலை ஒலிக்க அல்லது ஒளிக்க சொல்லுவார். அந்தப்பாடல் இசைக்கத் தொடங்கும் போது அவரின் கண்களில் ஒரு வித ஒளி மின்னி, இன்னொரு உலகிற்குள் சஞ்சரிக்கத் தொடங்குவார். துரதிருஸ்டவசமாகவோ அல்லது அதிஸ்டவசமாகவோ என்னையும் சேர்த்துத்தான் அழைத்துப் போவார். ஆனால் ஒரு நிபந்தனை ஆண் குரலுக்கு நான். பெண் குரலுக்கு அவர். கொஞ்சம் முந்தி பிந்தி பிழைத்து விட்டாலோ, வரிகளில் பிழைகள் ஏற்பட்டாலோ வாயில் மெல்ல ஒரு தட்டு. திரையில் இருந்த காதலின் பொன்வீதிகளுக்குள் மட்டுமல்ல, யூடியுபுக்குள் இருந்த அத்தனை உள்ளக, வெளியக, கரோக்கிகள் என்று இருந்த அத்தனை வீதிகளுக்கும் பயணம் செய்துவிட்டார், எல்லாப் பயணங்களிலும் என்னையும் கையைப் பிடித்து கூட்டிச் சென்று அந்த பொன்வீதிகளைக் காட்டினார். செல்லமான தட்டல்களுடன் இன்னும் அந்த வீதிகளில் பயணங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
*
தக்சிணாமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவரின் மூத்த மனைவியான பத்மாவதிக்கு 1948 ம் ஆண்டு பிறந்தவர்தான் மு.க. முத்து. குழந்தையாய் இருந்தபோது தாயை இழந்த முத்து, சிறுவனாய் இருந்தபோது தந்தையின் அரவணைப்பும், கண்காணிப்பும், கட்டுப்பாடுகளின்றியும் வளர்ந்தார். தனது தாய் மாமன் பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் மகளை திருமணம் முடித்தார். பின்னர் எம்ஜிஆர் தி.மு.க. வில் இருந்த போது அவருக்கு போட்டியாக சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டு சில படங்களில் நடித்தார். உடை, அலங்காரம், உடல்மொழி எல்லாவற்றிலும் எம்ஜிஆரைப் பின்பற்றினார். ஆனால் அவர் ஒரு பாடகரும் கூட.
*
(1972) யில் பூக்காரி படத்தில் தொடங்கி பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையாவிளக்கு என்று தொடர்ந்து பல படங்களில் நடித்தார் மு.க.முத்து. நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் பாடியும் உள்ளார். இவரின் நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா, சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க.. பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை. தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு எற்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு - சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு - மீண்டும் திரைப்பட உலகுக்கு வந்தார். இராம.நாராயணனின், வீரன் வேலுத்தம்பி, எஸ்ஏ ராஜ்குமார் "சுருளு மீசைக்காரனடி" என்ற பாடலையும் படித்தார். பவித்ரன் இயக்கத்தில் வெளியான மாட்டு தாவணி என்ற திரைப்படத்துக்காக தேவா இசையமைப்பில் நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பாடினார்.
*
காதலின் பொன்வீதியில் மு.க. முத்து:
கிருஸ்ணன், பஞ்சு இயக்கி, செல்வம் தயாரிக்க, எம்.எஸ். விசுவநாசன் இசையமைக்க மு.க. முத்து, மஞ்சுளா, வெண்ணிறஆடை நிர்மலா நடித்த திரைப்படம்தான் பூக்காரி (1973). இது மு.க. முத்துவின் இரண்டாவது படம். இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் காணப்படுகின்றன. மஞ்சுளா பாவாடை தாவணியில் துள்ளிக்குதித்து ஆடும்; "முப்பது பைசா மூணு முழம் முல்லை மல்லிகை கனகாம்பரம்" (எல்.ஆர். ஈஸ்வரி). முத்துவுக்கும் மஞ்சுளாவுக்கும் பாஸ்ட் டூயட்டாக வரும்; "முத்துப்பல் சிரிப்பென்னவோ, முல்லைப்பூ விரிப்பல்லவோ" (ரீஎம்எஸ், சுசீலா) என்ற பாடலும், ஒரு பார்ட்டி நடனத்திற்கு நடனம் ஆடும்போது ஜெய்குமாரி படிக்கும் "புத்தகம் விரிப்பதிங்கே தத்துவம் படிப்பதற்கே" (எல். ஆர். ஈஸ்வரி) என்ற பாடலும், காதலின் பொன்வீதியில் காதலன் பண்பாடினான் என்ற பாடலும் அடங்கும்.
காதலின் பொன் வீதியில் பாடல் ஏன் மகளுக்கு பிடித்திருக்கும் என்பதற்கு, கண்ணதாசனின் சிற்றப்பா மகனான பஞ்சு அருணாசலம் அந்தப் பாடலை எழுதியிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏற்கனவே கலங்கரை விளக்கத்தில் பஞ்சு அருணாசலத்தின் பொன்னெழில் பூத்தது புதுவானிலின் மென்மையில் தன்னைப் பறிகொடுத்திருந்த நேரம். "காதலின் பொன் வீதியில்” ரீஎம்எஸ், ஜானகி ஆகியோர் பாடிய பாடல். சாருகேசி இராகத்தில் அமைந்திருந்த இந்த பாட்டிற்கு மு.க. முத்துவும், வெண்ணிற ஆடை நிர்மலாவும் திரையில் தோன்றியிருப்பார்கள்.
வெண்ணிற ஆடை நிர்மலா ஜெயலலிதா, வெண்ணிறஆடை மூர்த்தி, சிறிகாந்த்துடன் அறிமுகமாகியிருந்தும், 70 களில் பிரபலமான பிரமீளா, ஜெயசித்ரா, மஞ்சுளா போன்றவர்களைவிட நல்ல தோற்றத்தையும், நடிப்பையும், நடனத்தையும், கொண்டிருந்தும், உச்சத்திற்கு வரமுடியாததத்திற்கும், பேசப்படாமல் போனதற்கும் அவரிடம் எப்போதும் குறைவாகக் காணப்படும் கொன்பிடன்சியல் ஒரு காரணமாகக் கருதப்படுகின்றது.
நீண்ட பாடல்போல் தென்படும் இப் பாடல். பஞ்சு அருணாசலத்தின் வரிகள்கள் காரணமாகவும், அபாரமான வயலின், ஹம்மிங் காரணமாகவும் மிகுந்த ரசிப்புக்குரியதாகவும் மாறியிருக்கலாம். பஞ்சுவின் தலைசிறந்த பாடல்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. ரீஎம்எஸ்ஸின் குரலின் ஒரு சேர வெளிப்படும் ஒரு கம்பீரமும் காதலின் மென்மையும், ஜானகியின் குரலில் வெளிப்படும் நாணமும் இந்தப்பாடலை மறக்கமுடியாத பாடல் ஆக்கியுள்ளது எனலாம். கண்ணை மூடிக்கொண்டு கேட்கும்போது காதலின் பொன்வீதியில் நாங்களும் பயணித்து அந்த உன்னதத்தின் உணர்வகளை உள்வாங்கிக் கொள்ளுவதும் உணருவதும் புரியும்.
ஆனால் பாடல் படமாக்கப்பட்ட விதமும், முத்துவினதும், நிரமலாவினதும் பாடலுக்கான பங்களிப்புகளும் நகைச்சுவையை வரவழைக்கக்கூடியன. பாடலின் தொடக்கத்திலேயே ஸ்லோமோசனில் இருவரும் ஒருவரையொருவர் நோக்கி ஓடிவருவார்கள். ஆனால் நன்கு அவதானித்தால் ஸ்லோமோசனிற்குள்ளேயே இன்னொரு ஸ்லோமோசனை பார்க்கலாம். வெண்ணிற ஆடை நிர்மலாவின் நடனம், பங்களிப்பு எல்லாம் கொஞ்சம் கொன்பிடன்சியல் குறைந்தது போல் தெரிகிறது. மு.க. முத்துவோ கால்வாசி சிவாஜி கணேசன், முக்கால்வாசி எம்ஜிஆர் ஆகியோரை மனதில் இருத்தி, எம்ஜிஆர் விக் விழாமலிருக்க வேண்டும் என்ற கவலையிலும், அடுத்தது என்ன செய்து தொலைக்க வேணுமோ என்ற கவலையிலும், தனது அப்பா எம்ஜிஆரை கட்சியை விட்டு தீர்த்துக்கட்டிவிடும் மனத்திரைக் காட்சியிலும் கவனம் செலுத்தியபடி பங்களித்திருப்பது நகைச்சுவையின் உச்சம்.
*
படம்: பூக்காரி
இசை: எம்.எஸ்.வி.
குரல்: ரீ.எம்.எஸ்., எஸ்.ஜானகி
பாடல்: பஞ்சு அருணாசலம்
காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்
காதலின் பொன் வீதியில்
நானோரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்
திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக
இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை
நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக
இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம்போல
என் மனதினிலே உன் நினைவுகளே
அதை அள்ளி வந்தேன் உனக்காக
காதலின் பொன் வீதியில்...
விழி ஓரங்களில் சில நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்
அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பதுதான் கலையா...கும்
அந்தக் கலைகளிலும் பல புதுமை உண்டு
அதைப் பழகுவதே பேரின்பம்
இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை
இனி காலம் எல்லாம் உன் சொந்தம் !
காதலின் பொன் வீ...தியில் காதலன் பண்பா...டினான் ..
*
தந்தையின் கலையுலக வாரிசாக, எம்ஜிஆரை தீர்த்துக்கட்டும் ஆசையில் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த முடிவு தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை உண்டாக்கியது. தனது திரை வாழ்விற்கு வந்த எதிர்ப்புமணியாக இதைக் கருதிய எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகமெனத் தனிக்கட்சி துவங்க வித்திட்டது இந்நிகழ்வு.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அண்ணா 1969ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர் கருணாநிதி அண்ணாவைப் போல் எம்.ஜி.ஆரிடம் சுமூக நட்புக் கொள்ளவில்லை. முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தின் தன்னேரில்லாத்த் தலைவராக உயர்ந்தார். அதுமட்டுமா? அப்போது அகில இந்தியக் கட்சியான காங்கிரஸில் ஏற்பட்ட மாற்றமும் அவருக்குப் பயனுள்ளதாய் அமைந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பிரதமர் இந்திராகாந்தி ஒரு அணியிலும், பெருந்தலைவர் இன்னோர் அணியிலும் பிரிந்து நின்றனர். அது கலைஞருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.அவர் பிரதமர் இந்திராகாந்தியின் அணியோடு தேர்தல் உறவை ஏற்படுத்திக்கொண்டார். 1971 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தி, மிகப்பெரும் வெற்றியைப் பெற்றார். அதனால் மீண்டும் முதல்வரான கலைஞர் கருணாநிதிக்கு முன்னிலும் அதிகமான தன்னம்பிக்கை ஏற்பட்டது. அதன் விளைவாகத் தி.மு.க. வின் எல்லா மட்டங்களிலும் கலைஞரின் செல்வாக்குப் பெருகியது. ஆட்சியும் தன் கையில், கட்சியும் தன் கையில் என்னும் நிலை ஏற்பட்டபோது எம்.ஜி.ஆரின் உதவி தமக்குத் தேவையில்லை என்று கருதி விட்டார் கலைஞர்.
இதற்கிடையில் தி.மு.க ஆட்சியைப்பற்றிய தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவின. மேற்சொன்ன போக்கு அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு வேதனை அளிப்பதாய் இருந்தது. இந்நிலையில், எம்.ஜி.ஆர். இரசிகர் மன்றங்களின் மீது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு மன்றங்கள் உதாசீனப்படுத்தப்பட்டன. முதலில் ஊமை யுத்தமாகத் தொடங்கி ஊர்தோறும் ஓசையில்லாமல் பரவி வந்த இந்தப் பனிப்போர், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படம் வெளிவந்ததும், பகிரங்கமாய் வெடித்தது. பின்னர்பல்வேறு கசப்பான சம்பவங்களின் பின்னர் எம்ஜிஆர் திமுக விலிருந்து தூக்கியெறியப்படுகிறார். என்றாலும் சுதாரித்துக் கொண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி ஆட்சியை பிடித்து, அது பின்னர் ஜெயலலிதாவிற்கு மாறி, பின்னர் அந்த ஆட்சி உயிர்தோழியிடம் உலாத்துகின்றது.
*
முத்து நல்ல பாடகர், பாடல்களில் தாய்வழி மாமனான ரீஎம்எஸ் ஐ பிரதி எடுத்தார். உடை, அலங்காரம், உடல்மொழி எல்லாவற்றிலும் எம்ஜிஆரைப் பிரதி எடுத்தார். ஒருவேளை ஒரிஜினாலிட்டியோடு இருந்திருந்தால் இன்றைக்கு குறைந்தபட்சம் துணை முதல்வராக இருந்திருக்ககூடும்.
மு.க. முத்து எப்போதும் பாடல் கச்சேரிகளில் அப்பா வசனம் எழுதி கல்யாண்குமார் நடித்த ’தாயில்லாப் பிள்ளை’ படத்தில் ரீ.எம்.எஸ் பாடிய பாடலை எப்போதும் அனுபவித்துப் பாடுவார்.
‘தாயில்லாப் பிள்ளை
பேச வாயில்லாப் பிள்ளை’
அதில் சரணமுடிவில்
‘இன்று ஊருமில்லை உறவுமில்லை யாரும் இல்லையே
நான் கடந்து வந்த பாதையிலே அமைதி இல்லையே
நான் தாயில்லாப்பிள்ளை பேச வாயில்லாப்பிள்ளை’
தன் மோசமான நடவடிக்கைகளால் உறவுகளை சிரமப்படுத்தி அவர்களிடம் கெட்ட பெயர் வாங்கியவர் தாயில்லாமல் வளர்ந்த கெடுக்கப்பட்ட பிள்ளைதான் முத்து. உறவுகளுக்கு இவரால் பல வருத்தங்கள். குடும்பத்தில் மூத்த பிள்ளை சரியில்லை என்ற வருத்தம் அப்பாவுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் இருந்து கொண்டே இருந்தது..
முத்துவின் ஏற்றமும் இறக்கமும் என்பது முத்துவின் தனிப்பட்ட ஏற்றமும் இறக்கமும் அல்ல. பலகோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தின் ஏற்றமும் இறக்கமும், உடை, அலங்காரம், உடல்மொழி எல்லாவற்றிலும் எம்ஜிஆரைப் பின்பற்றி அவரைத் துரத்த நினைத்த தன் அப்பாவுக்காக சுயத்தை இழந்து வளர்க்கப்பட்ட பையன்தான் மு.க. முத்து. அதன் காரணமாக எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்து என்று மாறிய காட்சிகளுக்கும், சிறிய வயதில் தாய் இறந்ததன் காரணமாக தந்தையின் அரவணைப்பின்றி, தந்தையின் சுயநலத்திற்காக பாவிக்கப்பட்டு, கறிவேப்பிலையாய கசக்கி மதுவுக்கும், மாதுகளுக்குள்ளும் எறியப்பட்ட காதலின் பொன்வீதியில் உச்சத்திற்கு ஏறநினைத்து ஆட்சி அதிகாரங்களை இழந்த மு.க. முத்து பைபிளில் வரும் கெட்டகுமாரனாக்கப்பட்டதில் முத்துவுக்கு மட்டும் பங்கிருப்பதாக தோன்றவில்லை.
No comments:
Post a Comment