கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (வந்தாறுமூலை), விஞ்ஞான பீடத்தின், விலங்கியற் பிரிவில் சிரேஸ்ட விரிவுரையாளராக பணியாற்றுகிறார் ஏ.எம். றியாஸ் அகமட். விஞ்ஞானமானி விலங்கியல் சிறப்பு B.Sc. (Special in Zoo)(Hons) கிழக்குப் பல்கலைக்கழகத்திலும், விஞ்ஞான முதுமாணி MSc (by Research) - University of Wits, Johannesburg, South Africa யில் Behavioural Genetical Evolution துறையிலும், முது தத்துவமாணியை ( MPhil) Behavioural Ecology துறையில் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் கற்றுத் தேர்ந்துள்ளார். இயற்கை விஞ்ஞானத்திலும், சமூக விஞ்ஞானத்திலும் பொறுப்பு வாய்ந்த பல்முனைசார் ஆய்வுகளை தொடர்ந்தமானமாய் மேற்கொள்பவர். சூழலினதும் சமூகத்தினதும் உண்மையின் மனச்சாட்சியாய் செயற்படும் றியாஸ் அகமட் தனது ஆய்வுகளின் உள்கட்டுமான நேர்த்திக்காக கள வழி அலைவுகளை மேற்கொள்பவர். தமது சூழல்சார் சூத்திரங்களை, அக்கறைகளை, கவன ஈர்ப்புகளை, தயரங்களை, வலிகளை, திட்டங்களை தனது பதிவுகள் மூலம் வெளிப்படுத்தி சூழல்-மனிதன் எனும் இரு கண்ணிகளிடையேயுள்ள முரண்பாடுகளை உடைத்து நேர் புள்ளியொன்றில் இணைத்து இயக்கப் பார்க்கிறார்.
தவிரவும், இலக்கிய உலகில் அம்ரிதா ஏயெம் எனும் புனைபெயரில் இயங்கும் றியாஸ் அகமட்; சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாடகம், கட்டுரை, இசை, விமர்சனம், சினிமா என பல்துறை இயங்குதளத்திதல் ஆரோக்கியமாக இயங்கி எழுத்தின் நுண்கூறுகளில் பல்வேறு பரிசோதனை வகைகளை செய்தும் , இயங்கியும் வருகிறார்.
(நேர்காணல் எஸ். நளீம், எங்கள் தேசம் மலர் 16 .இதழ் 06, மார்ச் 15-31)
01.உங்கள் இலக்கியப் பிரவேசம் எப்படி நிகந்தது, உங்கள் குடும்பப் பின்புலம் பற்றிக் கூறுங்கள்?
வாப்பா ஒரு பாடசாலையில் அதிபராக இருந்தார். நல்ல வாசகர். அவர் பொதுநூல் நிலையத்திலிருந்து எடுத்து வரும் நூல்களை, மிக மிக இளம் வயதில் விளங்குகிறதோ இல்லையோ படித்து முடிப்பது எனது வழக்கம். பின்னர் தினகரன் சிறுவர் பகுதிக்கு கவிதைகள், கட்டுரைகளை எழுதினேன். க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் படிக்கும் காலங்களில் ஓரளவு விஞ்ஞானம், அரசியல் சார்ந்த பெரிய கட்டுரைகளை தினரன் வாரமஞ்சரிக்கும், வீரகேசரிக்கும் எழுதினேன். பல்கலைக்கழகம் வந்தபோதும், அங்குள்ள சஞ்சிகைகளுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் விஞ்ஞானக் கட்டுரைகளையும், நாடக, இலக்கிய விமர்சனங்களையும் எழுதினேன். நான் பல்கலைக்கழகத்;தில் விஞ்ஞானபீட மாணவனாக இருந்தாலும், கலை கலாச்சார பீடத்தில், நுண்கலைத்துறையுடனும், மொழித்துறையுடனுமே எனக்கு அதிக தொடர்புகள் இருந்தன. பேராசிரியர் சி. மௌனகுரு, கலாநிதி சி. ஜெயசங்கர் போன்றவர்களுடன், மேடை முகாமையாளராக, உதவியாளராக, விமர்சகராக, களச் செயற்பாட்டாளராக நாடகச் செயற்பாடுகளில் பங்குபற்றத் தொடங்கினேன். இக் காலை, சி. ஜெயசங்கர், என்னிடம் ஒரு சிறுகதை கேட்டார். எனக்கு சிறுகதை எழுதுவதில் கொஞ்சம் தயக்கமும், தன்னம்பிக்கை குறைவாகவும் இருந்தது. நண்பன் சிவ வரதராஜனும் ஊக்கப்படுத்த, 1998/ 99 களில் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் விலங்கு நடத்தைகள் என்ற எனது முதலாவது சிறுகதையை எழுதினேன். அந்தக் கதையை ஜெயசங்கர் சரிநிகர் பத்திரிகைக்கு அனுப்ப அது உடனே பிரசுரமானது. இதனால் ஏற்பட்ட உற்சாகநிலை காரணமாக 16 கதைகளை குறுகிய காலத்திற்குள் சரிநிகர், கிழக்கொளி (சஞ்சிகை) போன்றவைகளுக்கு எழுதினேன். அந்தக் கதைகளை மூன்றாவது மனிதன் பதிப்பகம் தொகுத்து, விலங்கு நடத்தைகள் அல்லது விலங்குகள் தொகுதி ஒன்று என்ற பெயரில் தொகுப்பாக 2001;ல் வெளியிட்டது. அன்றிலிருந்து எனது இலக்கிய பயணம் ஆரம்பமாகத் தொடங்கியது.
02, உங்கள் பெயர் அம்ரிதா ஏயெம் ஆனது குறித்து...?
ஆரம்ப காலங்களில் பல்வேறு பெயர்களில் அடையாளம் கண்டு பிடிக்கமுடியாதபடி எழுதிக் கொண்டிருந்தேன். பெயர்கள் மாறிக்கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் ஜெயசங்கர், ஒரு நிலையான பெயருக்கு என்னை வரும்படி ஆலோசனை கூறினார். வாப்பாவின் பெயர் Ahamed Mohaideen, உம்மாவின் பெயர் பரிதா. வாப்பாவிலுள்ள முதல் இரண்டு எழுத்துக்களையும், உம்மாவிலுள்ள கடைசி இரு எழுத்துக்களையும் சேர்த்து அம்ரிதா உருவாகியது. என்றாலும் அந்த நேரத்தில் மூன்றாவது மனிதன் பௌசர், உக்குவளை அக்ரம் போன்றவர்கள் அம்ரிதா என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்ததால் எனது முதல் எழுத்துக்களையே பின்னால் போட வேண்டி வந்தது. இதுதான் அம்ரிதா ஏயெம் பெற்றோர்களிலிருந்து பிறந்த கதை.
03, உங்கள் ஊடகமாக சிறுகதையை தேர்ந்ததற்கு விசேட காரணங்கள் உண்டா?
எவ்வளவுதான் நான் கவிதைகளுக்கு விமர்சனம் பேசினாலும், எழுதினாலும், கவிதை என்றால் என்ன என்ற தத்துவச் சிக்கல் வாழ்நாள் பூராக இருந்து கொண்டே இருக்கின்றது. கவிதை என்பது ஓசையும், இனிமையும் கொண்டமைந்து காணப்பட வேண்டும் என்ற சிக்கலுக்குள் நான் மாட்டுப்பட்டுக் கொண்டிருப்பதாக எப்போதும் எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. அதன் காரணமாக மகாஹவி, நீலாவாணன் போன்றவர்களை தாண்டி இன்னும் என்னால் செல்ல முடியாமல் இருக்கிறது. நன்றாக எனக்கு கவிதை வருகிறது என்ற நண்பர்கள் சொல்லியும், எனது சிறுகதை மொழி கவித்துவ மொழி என பேராசிரியர் நுஹ்மான் சொல்லியும், இந்தத் தத்துவச் சிக்கலைத் தவிர்க்கத்தான் சிறுகதையை எனது ஊடகமாக தெரிவு செய்துகொண்டேன். ஆனால் ஒரு கவிதையின் விரிவு சிறுகதை, அதனின் விரிவு நாவல் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இவை எல்லாமே சமனான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது என்கருத்து.
04) சிறுகதையை தாண்டி வேறு எந்த விடயங்களில் உங்களுக்கு ஆர்வம் இருந்தது?
நான் ஏற்கனவே கூறியதுபோன்று அரங்கச் செயற்பாடுகளிலும். கூத்துச் செயற்பாடுகளிலும் அதிக ஆர்வம் இருந்தது. எனது கிருஸ்ணபிள்ளை என்ற கதையை அடிப்படையாக வைத்து 2004ம் ஆண்டு எடுக்கப்பட்ட கிச்சான் என்ற படமாக்கத்தில் பங்குபற்றியதும் எனக்கு ஒரு கற்றலாகவும், அனுபவமாகவும் இருந்தது. நண்பர் ஏ. விமல்ராஜ் இயக்கிய இப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றிருக்கின்றது. பல உலகத்து சிறுகதைகளின் மொழிபெயர்ப்புச் செயற்பாட்டில் ஈடுபட்டேன். அவை வௌ;வேறு சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. அவை நூலுருவாகிக் கொண்டிருக்கின்றன. பல உயிரியல், சூழலியல் சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.. அவைகளும் நூலுருப் பெற்றிருக்கின்றன. பல விமர்சன அரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளும், பிரசுரிக்கப்பட்ட விமர்சனங்களும் நூலுருவிற்கு தயாரான நிலையில் உள்ளன. நான் எழுதிய சில இசை, சினிமா, நாடகம், சிறுகதைகள், கவிதைகள், நூல்மதிப்பீடுகள், கட்டுரைகள் போன்றவற்றில் சிலவற்றை நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் www.amrithaam.com என்ற இணையத்தளத்தில் கண்டுகொள்ளலாம்.
இயற்கையாக வித்தியாசமான சிந்தனை, போக்கு, தன்மைகள் என்னில் காணப்பட்டிருக்கலாம். உலக இலக்கியங்களுடனான பரீட்சயமும் என்னுள் இருந்திருக்கலாம். இவைகளுடன், ஒரு விலங்கியல் கற்கும் மாணவனாக, கற்பிக்கும் ஆசிரியனாக, ஆராய்ச்சியாளனாக, செயற்பாட்டாளனாக எனது வாழ்வின் பெரும்பகுதியின் நேரங்களை செலவிட்டதன் காரணமாக, அல்லது ஏற்பட்ட அனுபவங்களின் காரணமாக, எனது கதைகளுக்கான களன்கள் இந்தப் பின்புலத்திலிருந்தூன் வந்திருக்க வேண்டும். இவைகள் எல்லாம் சேர்ந்து ஒரு வித்தியாசத்தை கொடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை எனது தொழிலையும் வாழ்க்கையும் வித்தியாசப்படுத்தி பார்க்க எனக்கு முடிந்திருக்கவில்லை.
06, உங்களது "விலங்குகள் அல்லது விலங்கு நடத்தை" தொகுப்பு வெளிவந்தபோது அதற்கான எதிர்வினை எப்படி இருந்தது?
நண்பர்கள் மனதார பாராட்டினார்கள். சிலர் விளங்கவில்லை என்றார்கள். சிலர் உள்நுழைய முடியவில்லை என்றார்கள். சிலர் கொதிநிலை அரசியல் பேசுகிறேன் என்றார்கள். சிலர் ஒரு முஸ்லிம் தமிழ் தேசியம் பேசுகிறான் என்றார்கள். சிலர் எங்கள் பிரச்சினையை ஏன் பேசவேண்டும், உங்கள் பிரச்சினையை பேசு என்றார்கள். அவைகளுக்கு வழமைபோல் நான் ஒன்றும் பேசவில்லை. இப்படியே இந்தத் தொகுதி கவனிக்கப்படாமல் போய்விட்டது. பேராசிரியர் நுஹ்மான் இந்நூலுக்கான முன்னுரையில், இருண்மைகளைத் தாண்டக்கூடிய போதுமான வெளிச்சம் எனது பிரதிகளில் இருப்பதாக கூறினார். நான் இனம், மதம், இடம் கடந்த எக்காலத்திற்கும் பொதுவான தமிழ்மொழி சார்ந்த குறிப்பான்- குறியீடுகளால் சிறுபான்மை-பெரும்பான்மை-பெரும்பான்மை-சிறுபான்மை பிரச்சினைகளின் மானிடநேயத்தைத்தான் பேசினேன் என்று விளங்க வைக்க எனக்கு அப்போது அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை. இவ்வாறான அறுவைச் சிகிச்சைகள், எப்போதாவது எனது பிரதிகள் பேசப்படலாம் என்ற சிறு நம்பிக்கையுடன் என்னை சிறுகதைகளை விட்டு ஒதுங்கவைத்தது.
தற்போது அச்சில் எனது நூல் ஒன்று உள்ளது. அதன் பெயர் பன்மைத்துவமும், இலக்கிய விமர்சனமும் என்றவாறு இருக்கலாம். பன்மைத்துவம் இல்லாவிட்டால் உயிர்கள் இல்லை. உலகம் இல்லை. இந்த உலகத்தினதும். அதன் உயிர்களினதும் நித்திய நிலவுகைக்கும் பன்மைத்துவம் மிக முக்கியமானது. அந்த வகையில் எல்லோரையும் ஆரம்ப நிலைகளில் அங்கீகரிக்க வேண்டும். தட்டிக் கொடுக்க வேண்டும். தூக்கிவிட வேண்டும். பின்னர் அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டிக் கொடுக்க வேண்டும். இந்த விடயங்கள் என்னில் இயல்பாகவே அமைந்திருந்திருக்கலாம். அதனால்தான் நான் அதிகமாக நிறைகளை காணுகிறேன் என்ற கருத்தும் நிலவலாம்.
எனது பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில், பேராசிரியர்கள் சி. மௌனகுரு, சித்ரலேகா மௌனகுரு, செ. யோகராசா போன்றவர்கள் ஒய்வு நிலை பெறும்வரை அவர்களுடனான தொடர்பும், உற்சாகமூட்டலும் எனக்கிருந்தது. தற்போது கலாநிதி ஜெயசங்கருடன் மட்டும்தான் அந்த தொடர்பு உள்ளது. பல்கலைக்கழகத்தில் ஒன்று, இரண்டுபேரைத் தவிர மற்றவர்களுக்கு நான் ஒரு ஆசிரியன் என்றும், ஆராய்ச்சியாளன் என்றும்தான் தெரியும். அவ்வாறுதான் அறியவும் படுகிறேன். எனது எழுத்தியக்கம் பற்றி என்னுடன் பணியாற்றுபவர்களுக்கே தெரியாது. அது ஒரு வகையில் சௌகரிகம்தான். பல்கலைக்கழகத்தில் இலக்கியச் செயற்பாடுகள் மந்தமாகத்தான் இருக்கின்றன. செயற்பாடுகள் இருந்தால்தானே பங்களிப்புக்களை செய்யலாம். எனது பங்களிப்புக்கள் எல்லாம் பல்கலைக்கழகத்திற்கு வெளியேதான்.
பல்கலைக்கழகத்திற்கு வரும்முன் அது பற்றி என்னிடம் ஒரு கருத்து இருந்தது. பல்கலைக்கழகத்திற்கு வெளியில்தான் திறமையானவர்கள் இருக்கிறார்கள். எனது இரு தசாப்பதங்களுக்கு மேற்பட்ட பல்கலைக்கழக வாழ்க்கையில் ஒவ்வொரு வருடமும் இந்தக் கருத்து என்னில் வலுப்பெற்று வந்துகொண்டே இருக்கின்றது.
08, உங்களது வெளியீட்டு முயற்சிகள் பற்றிக் கூறுங்கள்? இதுவரை நீங்கள் வெளியிட்டுள்ள உங்களது நூல்கள் எவை அதில் அதிககவனிப்பைப் பெற்ற நூலாக எதைக் கூறுவீர்?
நான் 10க்கு மேற்பட்ட நாற்களை வெளியிட்டிருக்கிறேன். மூன்று நூற்கள் அச்சில் இருக்கின்றன.
அட்வான்ஸ் லெவல் ஈதோலொஜி-1 – 1996, அட்வான்ஸ் லெவல் அனிமல் பிஹேவியர் - 1997, விலங்கு நடத்தைகள் அல்லது விலங்குகள் தொகுதி ஒன்று (சிறுகதைத் தொகுதி) – 2001, ஊர்வனவற்றின் மதிப்பீடுகள் - 2003, மனிதத் தலையீடுகளால் இலங்கையின் முருகைக் கற்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் - 2008, இலங்கை மீன்பிடி முறைகள் - 2007, ஆற்றுவாழையைப் பயன்படுத்தி சேதனப்பசளை உற்பத்தி – 2007, கண்டல் காடுகள் - 2008, அனர்த்த முகாமைத்துவம் - 2008, உயிரினப் பல்வகைமையும் நாமும் - 2010, சூழலும் சுரண்டலும் ஏகாதிபத்தியமும் - 2016, விலங்கு நடத்தைகள் அல்லது விலங்குகள் தொகுதி ஒன்று (சிறுகதைத் தொகுதி, இரண்டாம பதிப்பு) (அச்சில்), மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (அச்சில்), இலக்கிய விமர்சனமும் பன்மைத்துவமும் (அச்சில்).
அத்துடன் கடந்த பதின்மூன்று வருடமாக மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டம் என்ற அமைப்பை கவிஞர்கள் ஜமீல், அலறி, குர்சித் போன்றவர்களுடன் சேர்ந்து செயற்பாட்டாளர்களாக இயக்கிவருகின்றோம். அதில் பலவேலைத்திட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. நடைபெறுகின்றன. அதில் ஒரு பகுதி புதுப்புனைவு பதிப்பகம். இதுவரை பல்வேறு எழுத்தாளர்களின் 15 இற்கு மேற்பட்ட நூற்களை வெளியிட்டிருக்கின்றோம். அத்துடன் அல்-மருதமுனை என்ற சஞ்சிகையின் உதவி ஆசிரியர்களுள் ஒருவராகவும் இருக்கின்றேன்.
நான் இதுவரை வெளியிட்ட நூற்களில் எதுவுமே அதிக கவனம் பெறவில்லை. என்றாலும் இணையத்தளம், சமூகவலைத்தளங்கள் (முகநால்) பாவனைகள் தீவிரமாகத் தொடங்கியபோது எனது சிறுகதைத் தொகுதியை சமார் 20 வருடங்களக்கு பிறகு நிறையப் பேர் கதைக்கத் தொடங்கியிருக்கிறார்கள் போலத் தெரிகிறது. சமீப காலங்களில் பல சஞ்சிகைகள் எனது தொகுதி சம்பந்தமாக பல குறிப்புக்களை வெளியிட்டிருக்கின்றன. இணையத்தளங்களிலும், முகநூலிலம் பல குறிப்புக்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது போல எனது சூழலும் சுரண்டலும் ஏகாதிபத்தியமும் பற்றி பல குறிப்புக்கள் உலா வருகின்றன. இவை இரண்டும்தான் அவதானங்களைப் பெற்றன. மற்றையவைகள் எல்லாம் அவதானங்களைப் பெறவில்லை. அதற்கு காரணம் நமது தமிழ் வாசிப்புச் சூழலின் சுற்றுச் சூழல் சார்ந்த வாசிப்பின் வறட்சி என்று கருதலாம் என நினைக்கிறேன்.
09. புதிதாக எழுதவரும் இளைய தலைமுறை சிறுகதையாளர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
தடம் மாறாதவாறு, உங்களைப் புரட்டிப் போடாதவாறு நிறைய வாசியுங்கள். உலக எழுத்துக்களுடன், புதுப் போக்குகளுடன் பரீட்சயத்தை ஏற்படுத்துங்கள். புத்தாக்க சிந்தனைகளுடன் படைப்புக்களை படைக்க முயலுங்கள். நேர்மை, வாய்மை, எளிமை போன்றவற்றை எந்த நேரமும் கடைப்பிடிக்க முயலுங்கள். புகழுக்கு மடங்காதீர்கள். நாளை நீங்கள்தான் புதிய உலகத்தை மலரச் செய்ய வேண்டும். அதற்காக அந்த உலகை உங்களை நோக்கி தேடிவரச் செய்யுங்கள்.
No comments:
Post a Comment