Thursday, December 26, 2019

ஞானம் பாலச்சந்திரனின் சித்திரக் கவித்திரட்டு



 - அம்ரிதா ஏயெம்.


சித்திரக் கவிகள் புனைவு இலக்கியம் சார்ந்தவை அல்ல என்றும், அது ஒரு வகை புலைமை விளையாட்டு (Scholarly Language Play) சார்ந்தவை என்றும் கருதப்படுகின்றது. சொற்களும், எழுத்துக்களும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முறையில் வரும் வகையில் செய்யுள் யாப்பதும் ;அச்செய்யுளை ஒரு குறிப்பிட்ட சித்திர வடிவத்தில் தருவது சித்திரக் கவியின் அடிப்படையாகும். இவை படைப்பிலக்கியம் சார்ந்தவையல்லாவிடினும், தமிழில் இத்தகைய மொழி விளையாட்டுக்களை இலக்கிய வகையாக கருதும் மரபும் உண்டு.
ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பில் இழந்துவிட்டவைகள் ஏராளம். ஈழத்து அறிஞர்கள் சித்திரக் கவிக்கு வழங்கிய பாரிய பங்களிப்பு இந்நூலினூடாக கொண்டுவரப்பட்டுள்ளது. சித்திரக்கவி சார்ந்த ஆய்வுகள் முதிர்ச்சியடையாத நிலையில் சித்திரக் கவிக்கான ஈழத்தவரின் பங்களிப்புக்கள் - இன்னும் அறியப்படாமல் இருந்து வருகின்றபோது, இந்நூலானது ஈழத்துப் புலவர்களின் சித்திரக் கவிகளையும், சித்திரக் கவி நூல்களையும் திரட்டித் தந்துள்ளது.
இப் பெருநூல் எண்பதுக்கு மேற்பட்ட சித்திரக்கவி வகைகளையும், மற்றம் அவற்றுள் உள்ளடங்கும் அறுபதிற்கு மேற்பட்ட உப பிரிவுகளுக்கிடையே விரியும், தெளிவும் நிறைந்த உரையாடல்களை நிகழ்த்துகின்றது.
தமிழ் சூழலில் சித்திரக் கவிகளின் வரலாறு, தனித்துவம், அவற்றைப்பாடிய நூற்றுக்கும் மேற்பட்ட புலவர்களின் விபரங்கள், இருநூறுக்கும் மேற்பட்ட அரும்பத விளக்கங்கள், முந்நூறுக்கும் மேற்பட்ட மேற்கோள் பாடல்கள் மற்றும் சித்திரக்கவிகளுக்கு உருவத்தளப் படங்கள் முதலியவற்றை உள்ளடக்கி ஆயிரம் பக்கங்களுக்கு மேலாக இந்நூல் விரிந்துள்ளது.
ஞானம் சஞ்சிகையை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் தி. ஞானசேகரனின் ஞானம் பதிப்பகத்தின் வெளியீடாக 1022 பக்கங்களில், 1500 இலங்கை ரூபாய்கள் விலையில், அதிஉயர்ந்த செம்மையான தரத்தில் சித்திரக் கவித்திரட்டு என்னும் இந்த நுால் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் திரு. ஞானம் பாலச்சந்திரன். கணிணித்துறையில் உயர்பதவி வகிப்பவர், திரு. ஞானசேகரன் அவர்களின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழத்தின் புதையுண்டுபோயிருந்த பழந்தமிழை வெளிக்கொண்டு வருவதில் ஞானம் பாலச்சந்திரனின் சித்திரக்கவித் திரட்டு ஒரு முக்கியமான மைல் கல்லாகும். அதற்காக ஞானம் பதிப்பகமும், ஞானம் பாலச்சந்திரனும் பாராட்டி வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.

1 comment:

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...