-ஏ.எம். றியாஸ் அகமட்
ஆடுகள்:
ஆடுகள் கப்றா ஹிறஸ் என்ற விலங்கியல் பெயரையுடையன. ஆசிய,ஆபிரிக்க பகுதிகளிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் வீட்டு வளர்ப்புப் பிராணிகளாகவும், கால்நடைகளாகவும் வளர்க்கப்படும் ஆடுகளானது, கி.மு 10000 வருடங்களுக்கு முன்பிருந்தே ஈரானின் சக்றொஸ் மலைப் பிராந்தியங்களிலும், இயுபிரட்டீஸ் பள்ளத்தாக்குகளிலும், தென்கிழக்கு அனற்றொலி பிரதேசங்களிலும் வளர்க்கப்பட்;டிருக்கின்றன. மிகவும் கடினமான சுற்றுச்சூழல் தன்மைகளைத் தாங்கும் இதன் இயல்புகள் காரணமாக, இவை சவானாக்கள், பாலைநிலங்கள், முள்பற்றை நிலங்கள், மலைவெளிகள் போன்ற அயனமண்டல, உலர் காலநிலை நிலவுகின்ற எல்லா சூழற்றொகுதிகளிலும் வாழுகின்றன.
செறிவுப் பண்ணைமுறை வளர்ப்பு (Intensive farming) தொடக்கம் நாடோடிக் குழுவளர்ப்பு முறை வரை இறைச்சி, பால், சீஸ், உரோமம், தோல், உரம் போன்றவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன.
ஓமானின் விவசாயப் பொருளாதாரத்தில் ஆடுகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அங்கு காணப்படுகின்ற 3.2 மில்லியன் மொத்தக் கால்நடைகளில் 2.1 மில்லியன் ஆடுகள் (64 சதவீதம்) முக்கிய பங்கினை வகிக்கின்றன (உலகில் மொத்தம் 860 மில்லியன் ஆடுகள் காணப்படுகின்றன). ஓமானில் ஜபல் அக்தர், பற்றினா, டோபார், அஸ்-ஷர்க்கியாஅறியப்பட்ட நான்கு வர்க்கங்களும் (breed), இன்னும் அறியப்படாத, விபரிக்கப்படாத பல உள்நாட்டு குடித்தொகைகளும் காணப்படுகின்றன. அத்துடன் அல் சைதி, அல் றாபி, அல் ஜமோதி, றம்லி, ஜபில், முசான்தம் ஆடுகள் போன்ற பல உள்ளுர் விகாரங்களும் (strain); காணப்படுகின்றன. இந்த வர்க்கங்கள் அவைகளுக்குரிய காலநிலை வலயங்களுக்கு நன்கு இசைவாக்கமடைந்துள்ளன.
ஓமானின் ஆடுகளின் வரலாறு கி.மு (6000 தொடக்கம் 7000) வருடங்களுக்குமுன்பிருந்தே தொடங்குகின்றன. புராதன கல்வெட்டுக்களும், குகை ஓவியங்களும் ஓமானின் பல நகரங்களில் இந்தக் காலப் பகுதிகளில் ஆடுகள் வளர்க்கப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன.
ஓமானின் கப்றா ஹிறஸ் என்ற வீட்டு வளர்ப்பு ஆடுகள், பெசோர் (கப்றா ஏகாக்றஸ்), மார்கொர் (கப்றா பெல்கொனெரி), இபெக்ஸ் (கப்றா இபெக்ஸ்) போன்ற வான் இனங்களின் (wild genus) நெருங்கிய உறவினர்களாகும். இந்த மூன்று வான் இனங்களும், இந்த வீட்டுவளரப்பு ஆடுகளின் பரம்பரையலகு குளத்திற்கு (gene pool) தங்களது பங்களிப்புக்களைச் செய்துள்ளன. தற்போது பெசோர் எனப்படுகின்ற (கப்றா ஏகாக்றஸ்) என்ற வான்வகை ஆடுகள்தான் வீட்டுவளர்ப்பு ஆடுகளின் மூதாதையர்களாகக் கருதப்படுகின்றன.
ஆடுகளும், காலநிலை மாற்றத்திற்கெதிரான போராட்டமும்:
உலகம் முழுக்க அரசுகளும், நிறுவனங்களும் காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் உணவுப் பாதுகாப்பு, போசணை பிரச்சினைகளை நிவர்த்திக்க் பல்வேறு நடவடிக்கைகளிலும், ஆயத்தங்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. ஓமானின் ஆடுகள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உணவுப் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினைகளில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. வகிக்கப்போகின்றன என பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
காலநிலை மாற்றம் காரணமாக கால்நடைகள் உணவாக உண்ணும்தாவரங்களினது வளர்ச்சியும், தீவனங்களினது உற்பத்தியும் பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கால்நடைகளின் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. கால்நடைகளின் வளர்ச்சியை சுற்றுச் சூழலின் வெப்பநிலை உயர்வு, வறட்சி போன்ற மோசமான சூழலியற் காரணிகள் மிகப் பாரியளவில் பாதித்து, கால்நடைகள் நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகி, அவற்றின் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டு, அவற்றிலிருந்து பெறப்படும் உணவுப் பொருட்களின் தரமும், அளவும் குறைவடைந்துள்ளன. இது கால்நடைகள் அங்கத்துவம் வகிக்கும் உணவுச் சங்கிலிகளை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
ஆனால் ஓமானின் ஆடுகள், காலநிலை மாற்றம் காரணமாக, அதிகரித்து வரும் வெப்பநிலையை தாங்கி, சிறப்பான இனப்பெருக்கத்தையும், வளர்ச்சியையும் காட்டியிருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணம், அவை கொண்டுள்ள பரம்பரை காரணிகளாகும். இந்த பரம்பரையலகு அமைப்புக்கள் உலகெங்கிலும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் கால்நடைகளை முகாமைத்துவம் செய்வதில் விஞ்ஞானிகளுக்கு அதிகளவு தகவல்களைக் கொடுக்கும் என நம்பப்படுகின்றது.
No comments:
Post a Comment