Tuesday, August 3, 2021

தொலைதலின் இனிமை – 38 (வரலாற்றெழுதியலில் மூலக்கூற்றுச் சூழலியல், குடித்தொகைப் பரம்பரையியல், பரிணாமவியல் துறைகளை உபயோகித்தல்: ஓமானிய ஆடுகளின் ஆய்வுகளை முன்வைத்து – i):

- ஏ.எம். றியாஸ் அகமட்

வரலாறு:

கடந்த கால நிகழ்வுகளின் ஒழுங்கு முறையை ஆய்வு செய்யவும், அவற்றைவிளக்கவும், அத்துடன் கடந்தகால நிகழ்வுகளுக்கான காரணங்களையும், விளைவுகளையும் உய்த்துணரவும் அவற்றை உறுதிப்படுத்தவும் வரலாறு பயன்படுகின்றது.

எழுத்தாவணம், புதைபொருள் ஆதாரங்கள் அல்லது ஆவணங்கள் போன்றவைகளோடு, வாய்மொழி மரபு, மக்களிடையே உள்ள பயில்நிலைச் சடங்குகள், வாழ்வியல் முறைகள் போன்றவைகளையும் கருத்திற்கொண்டே வரலாறுகள் எழுதப்படுகின்றன. இதற்கு ஆதாரமாக பழைய மரபுக் கதைகள், நேரடிக் கதைகள், வழக்காறுகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள், வாழ்க்கை முறைகள், குடிவழி சாதி ஆசாரங்கள், சமூக அமைப்பு, அவற்றிற்கிடையே காணப்படும் ஊடாட்டங்கள் என்பனவற்றிலிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

வரலாறானது அரசர்களின் ஆட்சி வரலாறு, போர் வெற்றி வரலாறு, மக்களின் வாழ்க்கை வரலாறு, முரண்பாட்டு வரலாறு. பெண்ணிய வரலாறு, மாற்று வரலாறு, அடித்தள மக்கள் வரலாறு, புதிய வரலாறு, வாய்மொழி வரலாறு என்று வரலாற்றெழுதியல் (Hisotoriography) பல்வேறு சிந்தனைப் பள்ளிகளைக் கொண்டமைந்து காணப்படுகின்றது.

வரலாறு என்பது கட்டமைக்கப்படுவது என்ற கருத்தும் உண்டு. கிடைக்கின்ற ஆவணங்களை கால, நேர, அரசியல், பொருளாதார, மெய்யியல், இன, மத, கலாசார, பிரதேச கொள்கை கோட்பாடுகள் கருதி தங்கள் நலனுக்கு ஏற்ப விளக்கம் தருபவர்ககளே வரலாற்றாசிரியர்கள் என்றும், வரலாறு உண்மை பேசுவதில்லை என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது. எனவே சமூகத்தைத் தெரிந்து கொள்ளவும், ஒவ்வொருவரையும் புரிந்தும், மதித்தும், அடக்கு முறையற்ற ஒரு உலகில் வாழ மனித குலத்தை இட்டுச் செல்லவும் வரலாறும், வரலாற்றெழுதியலும் முக்கியமானவையாகும்.

வரலாற்றெழுதியலில் மூலக்கூற்றுச் சூழலியல், குடித்தொகைப் பரம்பரையியல், பரிணாமவியல்:

வரலாற்றை எழுதுவதற்கு விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி ஆதாரங்களைப்பெற்றுக்கொள்வது வரலாற்றெழுதியலின் துல்லியத்தன்மையை அதிகரிக்கச் செய்யும். (உதாரணமாக காபன் தேதியிடல் மூலம் காலங்களையும், வயதுகளையும் கண்டு பிடிப்பது). அத்துடன் மூலக்கூற்றுச் சூழலியல், குடித்தொகைப் பரம்பரையியல், பரிணாமவியல் போன்றனவும் இந்த வகையில் முக்கியமான கருவிகளாகும். அவை மிகத் திருத்தமானதும் கூட.

இழைமணி டிஎன்ஏ (mtDNA):

இழைமணி டிஎன்ஏக்களை (mtDNA) ஆய்வுக்குட்படுத்தல் பரிணாமவியல், குடித்தொகைப் பரபம்பரையியல், மூலக்கூற்று சூழலிலியல் துறைகளில் முக்கியமான ஒரு ஆய்வுமுறையாகும்.

கலங்களிலுள்ள டீஎன்ஏ க்களை விட, இழைமணி டிஎன்ஏக்கள் (mtDNA) ஏன் ஆய்வுகளில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன? இழைமணியின் பிரதான தொழில் கலத்திற்கு சக்தியைக் ( ATP அடினோசின்றைபொஸ்பேட்) கொடுத்தலாகும். இந்த இழைமணிக்குள்ளே இழைமணி டீஎன்ஏ (DNA) காணப்படுகின்றது. (mtDNA) யில் செய்யப்படும் ஆய்வுகள் ஒரு உயிரியின் தாய்வழி மூதாதைதயர்கள் எங்கிருந்து வந்திருக்கின்றனர்? என்பதனையும், அந்த உயிரி எந்த தாய்வழித் தொடருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது? என்பதனையும் தெரிவிக்கின்றது.

மனிதர்களின் சாதாரண கலங்களின் கருவிலுள்ள டிஎன்ஏக்கள் நீளமானவையாகவும், தாய், தந்தை இருவரிடமிருந்து பெற்றவைகளாயும், 46 நிறமூர்த்தங்களிலும் காணப்படும், அத்துடன் இதன் இரண்டு பிரதிகளே காணப்படும். அதேவேளை (mtDNA) குறுகியவையாயும், தாயிலிருந்து மட்டுமே பெற்றவையாயும், ஒரேயொரு நிறமூர்த்தர்த்தில் (37 ஜீன்கள் காணப்படுகின்றன) மட்டுமே காணப்படும். அத்துடன் 100 தொடக்கம் 1000 பிரதிகள் ஒரு கலத்தில் காணப்படும்.

இந்த (mtDNA) வைத்து செய்யப்பட்ட ஆய்வுகளில் மனிதப் பெண் 150000 தொடக்கம் 200000 வருடங்களுக்கு முன் இந்தப் பூமியில் தோன்றினார் என்றும், ஆண் ஏறத்தாள 60000 வருடங்களுக்கு முன் தோன்றினார் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.

ஏன் (mtDNA) ஆய்வுகளுக்கு உபயோகப்படுகின்றது என்றால், அது தாயிலிருந்து மட்டுமே சந்ததிக்கு கடத்தப்படுகின்றது. தொடர்ச்சியாக பல சந்ததிகளுக்கு பல காலங்களுக்கு கடத்தப்பட்டாலும் பெரும்பாலும் இதன் DNA அமைப்புக்கள் மாறாதவையாகும். முலையூட்டிகளின் மொத்த டீஎன்ஏக்களில் ஒரு சதவீத DNA க்கள் மட்டுமே இழைமணிகளில் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த DNA க்களில் செய்யப்படும் சோதனை மூலம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த மூதாதையர்களைக் கூட கண்டு பிடிக்கலாம்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...