-ஏ.எம். றியாஸ் அகமட்
ஒரு ஓமானிக்கு இந்த மலையும் அதன் நிலங்களும் தாய். தண்ணீர் தந்தை.பேரீச்சை மரம் மனைவி. விலங்குகள் அவர்களின் பிள்ளைகள். பேரீச்சம்பழம் பேரக்குழந்தைகள்.
ஒரு ஓமானிக்கு இந்த மலையும் அதன் நிலங்களும் தங்களின் முன்னைய சந்ததிகளான பூட்டன், பாட்டன், பெற்றோர்களை ஊட்டி வளர்த்ததுபோல தங்களையும், தங்களது பிள்ளைகளையும், பேரக்குழந்தைகளையும் வளர்க்கிறது. தங்கள் எதிர்கால சந்ததிகளையும் இவ்வாறே வளர்த்துச் செல்லும்.
ஒரு ஓமானிக்கு பேரீச்சை வாழ்க்கைத் துணையாகும். பெண்ணில்லாமல் ஒரு ஆண் வாழ முடியாது. பேரீச்சை என்பது மனைவி. இவனின் மனைவியின் பிள்ளைகளான பூட்டன், பாட்டன், பெற்றோர்கள், பிள்ளைகள், பேரக்குழந்தைகள், அவர்களின் குழந்தைகள், விலங்குகள் எல்லோரையும் பேரீச்சை ஊட்டுகிறது. வயிறுகளை நிரப்புகிறது. வளர்க்கிறது. அதனால் தாயாகிறது. ஒரு ஆணின் முழு வாழ்வின் பரகசியமற்றவைகள் அவன் மனைவியுடன்தான் இருக்கும். அதுபோல ஓமானியின் நூறுசதவீத பரகசியமற்றவைகளும் பேரீச்சையுடன்தான் இருக்கும். பேரீச்சை இல்லாத ஒரு வாழ்வை ஒரு ஓமானியால் நினைத்துப்பார்க்ககூட முடியாது.
ஒரு ஓமானிக்கு பேரீச்சம் பழங்கள் இந்தப் பூமியின் பேரக்குழந்தைகளாகும். அவைகளும் ஊட்டி, நிரப்பி, தாயாகின்றன.
ஒரு ஓமானிக்கு மலையிலிருந்தும், மற்றையவையிலிருந்தும் உருகிவரும் தண்ணீர் தந்தையாகும். ஓரு ஓமானிக்கு தண்ணீர் இராட்சியத்தை பரிபாலிக்கும் மன்னன் போன்றது. அதனால் அவர்களின் தந்தை ஆட்சி செய்யும் ராஜா. அந்தத் தண்ணீர் உயிருள்ள பொருட்களையும், உயிரற்ற பொருட்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சூழற்றொகுதியான “உம்மா” வை (ஒரே சாகியம்) போசிக்கின்றது.
ஒரு ஓமானிக்கு இந்த மலைகள், நிலங்களிலுள்ள உயிருள்ளவையும், உயிரற்றவையும், மனிதர்களானவையும், மனிதர்களற்றவையும், வீட்டு விலங்குகளும், காட்டுப் பறவைகளும் ஒரே “உம்மா” (ஒரே சாகியம்) வாகும்.. இவைகளே, பூமியின் சொந்தங்கள். உயிரிகளின் சாராம்சமான உயிர்வலைகளை கவனமாகப் பின்னுகின்றன. அவைகளை கவனமாக, நிலைபேறான முறையில் பாதுகாப்பது “அமானா” (அமானிதம் நிறைவேற்றல்). இந்தக் கடமைகளை முன்னெடுப்பதில் ஒரு ஓமானி எப்போதும் பின்நிற்க மாட்டான். இந்த அமானா ஒரு ஓமானிக்கு உயிர்வலையின் அறப் பொறுப்புக்கள் பற்றிய ஆத்மீகப் பெறுமதியைக் கொடுக்கிறது.
இந்த நிலங்களினதும், மலைகளினதும் உயிருள்ளனவும், உயிரற்றனவும், ஒவ்வொன்றும், ஒவ்வொன்றுடனும் இடைத்தொடர்புபட்டவைகள். இந்த மலைகளையும், இந்த நிலங்களையும் இழப்பது உன்னை இழப்பது போன்றதாகும். இந்த நிலங்களுடனும், மலைகளுடனும், பூமியுடனும் தாராளத் தன்மையுடன் இருந்தால், அவைகளும் உன்னுடன் தாராளத் தன்மையுடன் இருக்கும். இதுவே ஒரு ஓமானியின் மலைகளும், நிலங்களும், உயிர்களும், உயிரற்றவைகளும், விலங்குகளும், தாவரங்களும், உயிர் வலைகள் பற்றியதுமான நம்பிக்கைகளின் சாரம்.
இதுதான் ஒரு ஓமானியின் 4000 வருடங்களான, ஹபிட் கால (செம்புக் காலம்), உம்-அல்-நார் கால, வாடி சுக் கால (வெங்கல காலம்), சமட் கால (இஸ்லாத்திற்கு முன்னரான காலம்), பழக்கம். வழக்கம். கி.பி. 629யில், முகம்மது நபி (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்திய இஸ்லாமிய மதமும், அல்குர்ஆன் என்னும் இறை வேதமும், அல்ஹதீஸ் என்னும் நபிகளின் வாழ்க்கைமுறையும் அவர்களின் பல்நூற்றாண்டு கால “அல்-உம்மா”, “அல்-அமானா’ நம்பிக்கைகளில் மேலும் ஒரு கட்டிறுக்கத்தைக் கொடுத்தன.
ஓமானியரின் பாரம்பரிய இயற்கை விவசாய முறையும், கலாசாரமும் :
சொந்தங்களையும், உறவுகளையும், ஆத்மீகத்தையும் பேணும்,சுற்றுச்சூழலுடன் மேலான உறவைப் பேணும், உள்ளுர் அறிவை அடிப்படையாகக் கொண்ட ஓமானின் இயற்கை விவசாய முறை காலம் கடந்தது எனவும், பொருளாதாரத்திறத்கு சாத்தியமற்றது என பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நவதாராளவாத கைத்தொழில் சந்தையை மையமாகக் கொண்ட பொருளாதார முறை அதனை நிராகரித்தது.
ஓமானின் பாரம்பரிய விவசாயமுறை என்பது தனியே தங்களது வாழ்க்கையை கொண்டு நடத்தும் ஒரு தொழிலல்ல. தங்களது தோட்டத்தில் விளைந்த உணவுப் பொருட்களை மற்றவர்களுடன் பகிருதல், அறுவடைகளை உறவினர்கள், நண்பர்கள். அயலவர்களுடன் பகிர்ந்து நன்றியறிதலைத் தெரிவித்தல், வெற்றிகரமான அறுவடைகளைக் கொண்டாடுதல் போன்றவைகளுக்கு ஒரு வழியாக தங்களது பாரம்பரிய விவசாய முறைகளைக் கருதினார்கள். அதேவேளை தாங்கள், சேமித்த விதைகளை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதன் ஊடாக, மற்றவர்களின் நடுகைக்கு உதவி செய்ததோடு மட்டுமல்லாது, தங்கள் சமூக உறவுகளை அதிகரித்துக்கொண்டதுடன், அயலவர்களுடனான உறவுகளையும் உறுதிப்படுத்தினார்கள்.
1990களின் இறுதி வரை, பயிர்ச்செய்கையும், விலங்கு வளர்ப்பும் சேர்ந்த இந்தபாரம்பரிய விவசாயமானது அவர்களது குடும்பங்களுக்கு சுய தன்னிறைவு பொருளாதாரமாக இருந்தது. விவசாய நடவடிக்கைகளுக்கு தங்களது பாரம்பரிய அறிவுகளையே பயன்படுத்தினார்கள். பகல் வேளையில் சூரியனையும், இரவு வேளையில் சந்திரனையும் கணித்து, முழுக்கிராமத்து விவசாய பண்ணைகளையும் கருத்திற்கொண்டு, வெற்றிகரமான நீர்விநியோக முறை ஒன்றை வகுத்திருந்தார்கள். அத்துடன், சூரியனதும், நட்சத்திரங்களினதும் இயக்கத்;தை கருத்திற்கொண்டு, அவ்வக் காலங்களுக்குரிய பயிர்களையும் நடுகை செய்தார்கள். பண்ணைகளிலிருந்து கிடைத்த கழிவுகளையே மீண்டும் இயற்கை பசளையாகப் உபயோகித்து, விலங்குளை வளர்த்து, அவர்களின் தேவைகளையும் நிறைவு செய்துகொண்டார்கள்.
பாரம்பரிய தன்னிறைவுப் பொருளாதாரம் இருந்த காலங்களில், கிராமங்களில், ஒவ்வொரு நாளும் உறவினர்கள் ஒன்று கூடுவார்கள். பெண்கள் பேரீச்சை நிழல்களின்கீழ் ஒன்று கூடுவார்கள். காலையில் “கஹ்வா” என்னும் அறேபியன் கோப்பியை அருந்துவார்கள். தங்தங்கள் வீட்டில் விளைந்த உணவுப் பொருட்களை (பேரீச்சை, வத்தை, அவரை, வத்தாளை போன்றவற்றை) தங்களுக்கிடையே பரிமாறுவார்கள். நாளாந்த வாழ்க்கையிலுள்ள விடயங்களை கலந்துரையாடுவார்கள். ஆடுகள், பசுக்கள், கால்நடைகள், ஒட்டகங்கள,; பறவைகள் போன்றவற்றின் நலன்கள், அதன் தேவைகள் பற்றி உரையாடுவார்கள்.
அதேவேளை ஆண்கள் லெம்கியுல் என்ற “சமுதாயவெளி”யில் ஒன்று கூடுவார்கள். அங்கு தங்களுக்கிடையே விவசாயம், நடுகை, அறுவடை, நீர்பாய்ச்சல் மற்றும் நாளாந்த வாழ்வின் பிரச்சினைகளை, தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கலந்துரையாடுவார்கள். தங்கள் அறிவுகளை பகிர்ந்துகொள்வார்கள். பொதுவாக இந்த “லெம்கியுல்”களானது ஒரு நீரோடை அருகிலுள்ள பாரிய மரத்தின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டுக் காணப்படும். இந்த “லெம்கியுலில்”, வெலைசெய்து அலுத்துக் களைத்த விவசாயிகள் சிறிது தூக்கத்தையும் எடுப்பார்கள்.
பலாஜ் என்ற நீரோடையானது, விவசாயிகளுக்கும், அவர்களது குடும்பத்தினர்ளுக்கும், அவர்களது கால்நடைகள், விலங்குகள், பயிர்கள் போன்றவைகளுக்கும் நீர் கொடுத்தது. அத்துடன் சமூக உறவுகளை விருத்தி செய்யும் இடங்களாகவும் இருந்தன. ஆண்கள் இந்த நீரோடைகளில் குளிக்கும்போது தங்களுக்குள் கதைகளையும், செய்திகளையும் பரிமாறிக் கொண்டார்கள். இதேபோல பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பெண்கள் குளிக்கும் போதும், தங்களுடைய பிள்ளைகள், ஆடைகள், பாத்திரங்கள் போன்றவைகளைக் கழுவும்போதும் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்துகொண்டும், செய்திகளைப் பரிமாறிக் கொண்டார்கள். இதன் காரணமாக பெண்கள் சமூகமயமாவதற்கு அவர்கள் வாழ்வில் ஒரு முக்கியமான இடத்தை இந்த சப்லாஜ் என்னும் நீலோடைகள் வாகித்தன. இவையெல்லாம் அபிவிருத்தி என்ற பெயரில், 1980களில் அரசாங்கம் நீர்விநியோகக் குழாய்களை அமைத்து வீடுகளுக்கு நீர் விநியோகத்தை ஏற்படுத்தியவுடன் மறைந்து போகத் தொடங்கின.
No comments:
Post a Comment