- ஏ.எம். றியாஸ் அகமட்
இது ஓமானின் வடகிழக்கில் தலைநகர் மஸ்கட்டிலிருந்து சுமார் 160கிலோமீற்றர் தொலைவில் காணப்படுகின்றது. கிழக்கு அல்-ஹாஜர் மலைத் தொடர்களின், ஜபல் பானி ஜாபிர் மலைப் பகுதியின், உச்சியில், இயொசீன் யுகத்தின் சுண்ணாம்புக்கல் தோள் (shoulder) பகுதியில், 30 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் காணப்படுகின்றது. இது ஓரளவு சம தரையாக, தாவரங்கள் குறைவாகக் காணப்படும் கிறவல் பூமியாகும். ஜபல் பானி ஜாபிர் மலையானது கடல் மட்டத்திலிருந்து 2200 மீற்றர் உயரமானதாகையால் எந்த நேரமும் இந்த பீடபூமியை குளிராக வைத்திருக்கின்றது.
பல மில்லியன் வருடங்களாக யாரும் சென்றிராத பல இடங்கள் இங்கு காணப்படுகின்றன. நிலத்தின் கீழே காணப்படும் சிறந்த வலைப்பின்னல் சல்மா குகை அமைப்புக்கள் பல கிலோமீற்றர்களுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுக் காணப்படுகின்றன. பாரிய சல்மா குகைப் பின்னல்கள் சல்மா பீடபூமியில் புதைந்தும், மறைந்தும் கிடக்கின்றன.
இங்கு நிலவும் ஒரு தொன்மக் கதை,சல்மா என்னும் ஆடு மேய்க்கும் அழகான வீரமுள்ள பெண்ணை கௌரவிக்கும் முகமாக இறைவன் ஏழு நட்சத்திரங்களை இந்த பீடபூமியில் விழுத்தியதாகவும், அந்த ஏழு நட்சத்திரங்களும் தற்போது பீடபூமியில் காணப்படும் ஏழு நிலைக்குத்தான பூமியை நோக்கி கீழே செல்லும் சுரங்க வழிகளை உருவாக்கின என்றும் சொல்கின்றது.
அவற்றில் மூன்று சுரங்க வழிகள் உலகத்தில் இரண்டாவது மிகப்பெரிய நிலக்கீழ் சுரங்கமான மஜ்லிஷ் அல்-ஜின் (ஜின்கள் கூட்டம் கூடும் இடம்) என்ற சுரங்கத்திற்கு செல்கின்றது. மற்றைய நான்கு சுரங்க வழிகளும் இந்தப் பீடபூமியின் நில மட்டத்திலிருந்து 385 மீற்றர் ஆழத்தில், சுமார் 11.5 கிலோமீற்றர் நீளமான குகைத் தொகுதிகளுடன் தொடர்புபட்டுக் காணப்படுகின்றன. இந்த நான்கு வழிகளில் மூன்று சுரங்க வழிகள் அதி ஆழத்திற்கு நிலத்தின் கீழ் இறங்கி, சுமார் 12 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள நான்காவது வழியால் வெளியேற முடியும். அதாவது உள்நுழைவதற்கு மூன்று வழிகளும் (ஏழாவது துளை குகை), வெளியேறுவதற்கு ஒரு வழியும் (தாஹிரி குகை) காணப்படுகின்றன. இது மிக அற்புதமானது. இந்த வறள் வலயத்தில் இந்தக் குகைகளின் பரிமாணமும், நிலத்திற்கு கீழ் மிக ஆழத்தில் செங்குத்தாக உருவான விதமும் மிக அதிசயிக்கத்தக்க ஒன்றாகவே இருக்கின்றது. இதன் காரணமாக யுனஸ்கோ அமைப்பு இந்த சல்மா பீடபூமியின் சல்மா குகைத்தொகுதிகளை பாரம்பரிய மரபுரிமை இடமாக பிரகடனப்படுத்த எதிர்காலத்தில் அதிகவாய்ப்புகளுள்ளன.
நாங்கள் சல்மா பீடபூமியின் ஆரம்பங்களில் காணப்படும் குரன், செர், ஜய்லாகிராமங்களுக்கு அருகில் ஊர்ந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கிராமங்கள் அங்கு காணப்படும் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய தேன்கூட்டுக் கல்லறைகளுக்கு புகழ்பெற்றது. அதிலிருந்து சுமார் 13 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள வில்வளைவுக் குகையையும் (arch cave), அதிலிருந்து சுமார் 1 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஏழாவது துழை குகையையும் (seventh hole cave), அதிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் ஜின்கள் கூடும் குகையும் (மஜ்லிஷ் அல்-ஜின்), அங்கிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்தில் அல்-தாஹிரி குகையையும் செல்லும் வழிகளில் எங்களை வரவேற்க காத்திருக்கின்றன. இந்த சல்மாவின் பீடபூமி இன்னும் எத்தனை அதிசயங்களையும், வியப்புக்களையும் எங்களுக்காக மறைத்தும் ஒழித்தும் வைத்திருக்கிறதோ தெரியாது.
தேன்கூட்டு கல்லறைகள்:
1990களின் ஆரம்பங்களில், ஜோன் நெவெல் என்ற ஆய்வாளர், A day above Oman (ஓமானுக்கு மேலாக ஒரு நாள்) என்று ஒரு புத்தகத்தை வெளியிடுகிறார். அந்த புத்தகத்திற்காக ஓமானிற்கு மேல் விமானத்தில் பறந்து பல படங்களைப் பிடிக்கிறார். இதே காலப் பகுதியில் தொல்பொருளியல் ஆய்வாளர் போல் அலன் யுலெ இந்தப் புத்தகத்தை பார்க்கிறார். அந்த புத்தகத்திலுள்ள சிறு சிறு வட்டங்களைக் கொண்ட படம் அவரது சிந்தனையைக் கிளறுகிறது. அது என்னவென்று அறிந்துகொள்ளவும், ஆராய்ச்சி செய்யவும், அவரின் நண்பரான மற்றுமொரு தொல்பொருளியல் ஆய்வாளரான ஜோன் வெய்ஸ்பருடன், அப்போது போக்குவரத்து சரிவர இல்லாத அந்தப் பகுதிக்கு சென்று அவைகளை ஆராய்ந்து, தோண்டி, வரைபடங்களாக்கி விஞ்ஞானக் கட்டுரைகளாக்கிறார்.
மேற்கு ஹாஜர் மலைத்தொடலிருந்து, கிழக்கிற்குள் நுழையும்போது திடிரென நிலக்காட்சிகள் மாறுவதையும் வித்தியசாத்தையும் உணரலாம். சல்மா பீடபூமியின் ஆரம்பங்களில் குரன், செர், ஜய்லா கிராமங்களை; நெருங்கும்போது, ஹபிட் யுகத்தின், 5000 வருடப் பழமையான, அறேபியன் வெண்கலக் காலத்திற்குரிய (கி.மு. 3100 தொடக்கம் 2700 வரை), இந்த ஒதுக்குப் புறமான இடத்தில் வாழ்ந்த மக்களின் சுமார் தொண்ணூறுக்கும் மேற்பட்டமிகவும் நுணுக்கமாக கவனமாக மெல்லிய கருங்கற் பாளங்களினால் உளிகொண்டு கைகளினால் செதுக்கப்பட்டு கட்டப்பட்ட உருளை வடிவான, கூம்பு வடிவான கல்லறைகளைக் காணலாம். தேன்கூட்டு கல்லறைகள் என பொதுவாக ஆய்வாளர்களால் அழைக்கப்படுகின்றன. தெற்கு அஷ்-ஷர்க்கியா மாகாணத்தின், சுர் மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 1790 மீற்றர் உயரத்தில் காணப்படும் இந்த இடம், யுனஸ்கோவின் பாரம்பரிய இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாரிய பிரதேசங்களில் பரந்து காணப்படும் இந்தக் கல்லறைகளில், பெரும்பாலான கல்லறைகள் இலகுவில் அடைய முடியாத இடங்களில் காணப்படுகின்றன. ஆனால் எங்கிருந்த பார்த்தாலும் தூரத்தே தெரிவன. இந்தக் கல்லறைகள் பல வடிவங்களில் இரட்டைச் சுவர்கொண்டு 8 மீற்றர் உயரமும், 7 மீற்றர் விட்டமும் அளவில் காணப்படுகின்றன. இருந்தும் 3 தொடக்கம் 4 மீற்றர் உயரமும், 8 தொடக்கம் 9 மீற்றர் விட்டமும், 1.0 தொடக்கம் 2.5 மீற்றர் விட்டமுடைய செவ்வக அல்லது சரிவக வடிவுள்ள உழ்நுழைவதற்கான வாயில்களைக் கொண்ட தேன்கூட்டுக் கல்லறைகள் அல்லது ஓநாய்ப் பொறி கல்லறைகள் முக்கியத்தவமிக்கவையாக காணப்படுகின்றன. இதன் உட்பகுதிகள் இக்லு கட்டமைப்புக்களை ஒத்துக் காணப்படுகின்றன.
இந்தக் கல்லறைகள் இங்கே ஷார் அதாவது பேய்களின் கல்லறைகள் எனஉள்ளுர்வாசிகளால் அழைக்கப்படுகின்றன. கெபிர் கெப் என்ற ஜின்னினால் கட்டப்பட்டதாக இங்குள்ள உள்ளுர் மக்களின் தொன்மக் கதையொன்றும் கூறுகின்றது. 3000 வருடங்களாக நல்ல நிலையிலுள்ள இந்தக் கல்லறைகள் ஜின்களுடன் சம்பந்தப்படுத்தப்பட்டிருப்பதால், உள்ளுர்வாசிகளுக்கு இது சம்பந்தமாக ஒரு பயம் இருக்கின்றது. இந்த உருளை வடிவான கோபுரங்கள், இறப்பின் பின்னரான வாழ்வுக்காக அந்தக் காலத்தில் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த உம்-அன்-நார் மக்களினால் கட்டடப்பட்டிருக்கின்றன. பல கோட்பாடுகள் இந்தக் கல்லறைகள் கட்டப்பட்டதன் காரணங்களுக்காக முன்வைக்கப்பட்டாலும் இந்த அமைப்புக்கள் எதற்காக கட்டப்பட்டடன? இவைகளின் நோக்கங்கள் யாவை? என்ற விடைதெரியாத கேள்விகள் இங்கு இன்னும் இருந்து கொண்டேயிருக்கின்றன.
No comments:
Post a Comment